மனிதம் 20 இல் சிவகுமாரன் எழுதிய கட்டுரையை, நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்க முன்பு, நாம் மனிதம் ஆசிரியர் குழுவுடனும், வாசகர்களுடனும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். முன்பு மனிதம் தொடர்பான எமது கருத்தை முன்வைத்தபோது திரிபுவாதம் எனக் குறிப்பிட்டோம். இது தொடர்பாக மீண்டும் சமர் 7 இல் விவாதித்தோம்.
மனிதம் மீதும் கட்டுரை தொடர்பாக திரிபுவாதம் என சொன்னதென்பது, மனிதம் 13 ஆசிரியர் தலையங்கத்தை அடிப்படையாக வைத்தே. அதில் மனிதம் தமது பத்திரிகை தாங்கி வரும் கருத்துக்கு கட்டுரையாளரை மட்டும் பொறுப்பு எனச் சொல்லி நழுவி விடும் தன்மை தமக்கில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் மனிதம் பொறுப்பேற்கும் நிலையிருந்தது. அதிலிருந்தே விமர்சனம் உங்கள் மீதும், இனிமேல் கருத்துக்கள் மீது பொறுப்பில்லை என மனிதம் சொல்லின் மனிதம் மீதும் விமர்சனம் வைப்பதை விட்டுவிடுகிறோம். இல்லாத வரை எமது விமர்சனம் (மனிதம் கருத்துக்கள் மீது கருத்துக்கூறாவிடின்) உங்கள் மீதுமானதே.
இதே கருத்துப்பட இறுதியாக வந்த சக்தி இதழில் ஒரு வாசகர் கருத்தை சுட்டிக்காட்டுகிறோம். இன்னுமோர் குறை மற்றைய பல சஞ்சிகைகளைப் போல் ஆக்கங்களின் பொறுப்பை ஆக்கியோர் மேலேயே சுமத்துவது. நான் அறிந்தவரையில் மனிதம் மட்டும் தான் அவ்வாறில்லை. இக்கூற்றை மனிதம் 18 இல் விமர்சனமா, தாக்குதலா? என்ற ஆ குழுவின் விளக்கத்துடன் மறுத்துள்ளீர்கள். இது ஏன்? அக்கட்டுரை கரிகாலனின் ஆக்கங்களே எனச் சொன்னது என்பது மனிதம் 13 மற்றும் சக்தி வாசகர் கூற்றை நிராகரிப்பதே. மனிதம் 13 ஆசிரியர் தலையங்கம், தூண்டில் போன்ற சஞ்சிகைகளை சுட்டிக்காட்ட முனைந்தபோது அவ் விடயத்துக்கும் பொருந்தும். என்பதை ஏன் கவனிக்கத்தவறியது. திரிபுவாதம் என்பதை முத்திரை குத்தலாக காட்டமுனைவது திரிபுவாதத்தை பாதுகாப்பதில் இட்டுச் செல்லும், திரிபுவாதம் என்பது மார்க்சியத்தை திரித்து முன் வைக்கும் ஒரு கோட்பாடு.
இது தொடர்பான ஒரு நீண்ட விவாதம் நடைபெற முடியும். நாம் எப்படி திரிபாக உள்ளதென விளங்கப்படுத்தி முன்வைத்த கருத்துக்களைப் பற்றி விமர்சிக்காமல் ஒற்றை வரிகளில் இது முத்திரை குத்தலென சொல்லியுள்ளீர்கள். மற்றும் இங்கு கருத்தாடல் நடைபெறவில்லை. ஒரு குறித்த பிரச்சனையை ஒட்டிய விவாதம் என்பது முந்தைய விவாதத்தை எடுத்து அது எப்படி சரி, பிழையாக இருக்கிறதென்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே கருத்தாடல். சிவகுமார், தூண்டில், சமர், உயிர்ப்பு முன்வைத்த எக்கருத்தையும், நாம் வைத்த ஆதாரங்களையும் விமர்சிக்கத்தவறி, தமது கருத்தை திணிக்க முயன்றுள்ளார். அவர் கருத்தாடல் நிராகரிப்பை இப்படிச் சொல்கின்றார். இங்கு இனி நாம் நிகழ்த்த வேண்டிய விவாதம் புலிகள் தேசியசக்தியா? இல்லையா? என்பதல்ல. மாறாக புலிகளின் போரினால் கிடைக்கப் போகும் நன்மை என்ன என்பதே. இதற்குப் பெயர் கருத்தாடல். கருத்துக்களை திணிப்பதை கைவிடக்கோரும் அதேநேரம் மாற்றுக் கருத்துக்களை எடுத்து விமர்சித்து கருத்தை நிலைநாட்ட கோருகிறோம்.
இல்லாமல் ஒற்றைவரியில் சொல்லுவது என்பது புலிகள் முதல் அனைத்து இயக்கமும் கருத்தை எதிர்கொள்ளத் தகுதியிழந்து ஒற்றைவரியில் துரோகி, கள்ளன் எனச் சொல்லி கொன்றொழிப்பதும் ஒன்றே. இதற்கு மாறாக கருத்தை எடுத்து விளக்கி கூறவேண்டும். மனிதம் தொடர்பாக எமக்கு ஒரு பார்வையுண்டு. உங்கள் பற்றிய தகவல்கள் மனிதம் சஞ்சிகை தாங்கி வரும் கருத்துக்களைக் கொண்டு நாம் மதிப்பிடுகின்றோம். மனிதம் புலிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளின் கூட்டே. இது புளட் கடந்த 85 க்கு முன்னிருந்த நிலையை எமக்கு தெளிவுபடுத்தியது. புளட் 85 வரை செய்த நடவடிக்கையினை அதற்குள்ளிருந்த முற்போக்கு பிரிவினர் கூட ஏற்;க முன்வராமல் நியாயப்படுத்தினர். அது போன்றே இன்று மனிதம் நாம் சொல்ல வரும் கருத்துக்களை கவனிக்கத்தவறி நியாயப்படுத்த (பாதுகாக்க) முனைகின்றனர். கொஞ்சம் நிதானமாக எமது கருத்துக்களைப் பார்க்கவும். பிழையெனில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து எப்படியென புரியவைத்து எம்மை ஏற்கச் செய்யவும். இதுவே விமர்சன ஒழுங்கு.
திரிபுவாதம் இன்று உருவானதல்ல. மார்க்சியம் உருவான நாள் முதலே திரிபுவாதம் மாhக்சியத்துக்கு எதிராக இன்று வரை குழிபறிக்க முயற்சிக்கின்றது. இதற்கு எதிராக மார்க்சியர்கள் காலம் காலமாக போராடிவருகின்றனர். ஏன் சோவியத் முதல் சீனா வரை பின்னிருந்தே திரிபுவாதம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஏன் நாம் திரிபுவாதத்துக்கு எதிராக போராடக் கூடாதா? ஆரோக்கியமான இவ் விவாதம் நடப்பதில்லை என்ற வாதத்தில் ஆரோக்கியம் என்றால் என்ன? நாம் திரிபுவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பதையா? இது மாற்றுக் கருத்தை மறுக்கும் வாதமே. கட்டுரையாளர் கரிகாலன் லெனினிசக் கட்சிக் கோட்பாடுகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். யாருமே இதை மறுக்கவில்லையே. கரிகாலன் எழுதிய கட்டுரைகளில் லெனினிசக் கோட்பாட்டை எங்கே விமர்சித்துள்ளார்? மார்க்சியத்தை வரிக்குவரி எடுத்தே விமர்சித்து தமது கருத்தை வைக்க வேண்டும். இதை விடுத்து மார்க்சியத்துக்கு மாற்றான தமது கருத்தை வைக்கவேண்டும். இதை விடுத்து மார்க்சிசத்தை உச்சரித்தபடி அதைத் திரித்து திணிப்பது இயங்கியல் அணுகுமுறை அல்ல. அதாவது கரிகாலன் தனது விமர்சனத்தில் இயங்கியலுடன் ஏதாவது விமர்சித்துள்ளாரா? அப்படியாயின் எது? இது தொடர்பாக கரிகாலன் கட்டுரை மீதும் கேள்வி எழுப்பினோம்.
இவைகளையெல்லாம் சிவகுமாரன் கவனிக்காதது போல் நடித்து கரிகாலனின் கருத்தை வேறாரு வடிவில் திணிக்க முயல்கின்றார். லெனினிச கோட்பாடுகளை விமர்சனத்திற்குள்ளாக்க வேண்டும் என சொன்னபடி நவமார்க்சியத்தை பின்பக்க கதவுகள் மூலம் திணிக்க நினைப்பது கருத்தின் பலவீனத்தினாலேயே. மார்க்சியத்துக்கு அப்பால் உள்ள தத்துவங்கள் சுரண்டும் வர்க்க கோட்பாடுகளே. அவை மார்க்சியத்தை சொல்லிப் பிழைப்பதில்லை. மார்க்சியத்தை இயங்கியலுடன் நிராகரிக்க தகுதியிழந்து மார்க்சியத்தை சொல்லி புதிய கருத்தை திணிப்பதென்பது திரிபுவாதமே. இவர்கள் மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரிக்கின்றனர். ஏன் இயங்கியலையே நிராகரிக்கின்றனர். புலிகள் யாருடைய பிரதிநிதிகளும் இல்லை என்கிறார். இதை சமரால் பொறுக்கமுடியவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கு கருத்துக்களால் முகம் கொடுக்கும் பண்பை மறந்து ஒருவித தாக்குதலுக்குள் இறங்கி விடுகின்றனர். இங்குள்ள பிரச்சனை என்னவெனில் மார்க்சியத்தை இயங்கியல் விதிக்கமைய விமர்சிப்பதையோ கேள்விக்கு உட்படுத்துவதையோ சமர் விரும்பவில்லை என்பது தான். மார்க்சிசத்தை விமர்சித்தாலும் பரவாயில்லை என்ற தொனி இதைத்தானா வெளிப்படுத்துகிறது.
மார்க்சியத்தை விமர்சித்தாலும் பரவாயில்லை என்ற தொனி எனக் குறிப்பிடுவதன் ஊடாக சிவகுமாரனின் ஏற்றுக்கொள்ளுகின்றார். கரிகாலன் மார்க்சியத்தை விமர்சிக்கவில்லை என்பதை மார்க்சியத்தை விமர்சிக்காமல் மார்க்சியம் பழமைவாதம் எனச் சொல்லும் கரிகாலன், ஏன் சிவகுமாரனின் வாதமும் திரிபை திணிப்பதே. இப்படிக் கூறியவர்கள் மார்க்சியத்தை இயங்கியல் விதிக்கமைய விமர்சிப்பதையோ, கேள்விக்குட்படுத்துவதையோ சமர் விரும்பவில்லை எனக்கூறி தனது முரண்பாட்டையே புரிந்து கொள்ளவில்லை. அதாவது மார்க்சியத்தை விமர்சிக்கவில்லை என்பதை மார்க்சியத்தை விமர்சித்தாலும் பரவாயில்லை என்னும் கூற்றுக்கூடாக ஏற்றவர்கள் பின் மார்க்சியத்தை இயங்கியலுடன் விமர்சித்ததாக கூறி தமது திணிப்பை நிலைநாட்ட முயல்கின்றனர். மார்க்சியத்தை இயங்கியலுடன் கேள்விக்குட்படுத்தியவர்கள் எனின் எங்கே?
மாற்றுக்கருத்துக்களுக்கு கருத்துக்களால் முகம் கொடுக்க முடியவில்லை என்ற வாதம் சுத்த அயோக்கியத்தனமானது. நாம் நீங்கள் வைத்த அனைத்துக் கருத்தையும் வரிக்குவரி(ஒருவரியும் விடாமல்)எடுத்து விமர்சித்து எமது கருத்தை அதன் மீது வைத்தோம். இப்படி விமர்சிக்கவில்லை என்றும் கருத்துக்கு முகம் கொடுக்கமுடியாதவர்கள் என்றும் முழுபூசணிக்காயை சோற்றுக்குள் அழுத்திவிட நினைக்கும் உங்கள் வாதம் அப்பட்டமான பொய்.
எம் கருத்தை ஒவ்வொருவரியாக எடுத்து விமர்சித்து உங்கள் கருத்தை நிலைநாட்ட தகுதியிழந்து திரிபை திணித்து நிலைநாட்ட முனையும் உங்கள் நிலையை எமக்கு சொல்லி தப்பித்துச் செல்ல முனைய வேண்டாம். இப்படியான நிலையில் நின்று கொண்டு எம்மை ஒரு வித தாக்குதல் நடத்துவதாக சொன்னது பிரச்சனையை திசைதிருப்பவே. எப்படி என்ன மாதிரியான தாக்குதல் என அரசியலுடன் புரியவைக்கமுடியாத இவரின் ஒற்றைவரி ஒரு அரசியலாகவோ, தாக்குதலை எப்படியெனவும் புரியவைத்து விடமுடியாது. கரிகாலன் சமர் மீது நடத்திய விமர்சனப் பண்பை தவறு எனச் சொன்னவர் எம்மைப்பற்றி சுட்டிக்காட்டும்போது விவாதம் நடத்தும் சக்தி யார்? என்பதை மறந்து மாற்றுக் கருத்துக்களை திரிபுகளாக்கி தனது இறுகிய போக்கை இனம் காட்டுகின்றது. நாம் விவாதங்கள் நடத்தும் சக்திகள் யார் என்பதை வெளிவரும் கருத்துக்கள் மூலம் அறிகிறோம். அவைகளிலிருந்தே நாம் எமது கருத்தை முன்வைகின்றோம். புலிகள் மட்டும் எமது எதிரிகள்(நீங்கள் பார்ப்பது போல் நாம் பார்க்கவில்லை) புலிகள் நேருக்கு நேரான எதிரி. அதிலிருந்தே விவாதம் நடத்தும் சக்தி யார் என உங்கள் வாதமும். போராட்டத்தை பின்னிருந்து அழிக்க முனையும் (திரிபுவாதிகள்,பிழைப்புவாதிகள்......) சக்திகளும் எமது எதிரிகளே. அந்தவகையில் இவர்கள் கருத்துக்களை நாம் அம்பலப்படுத்த முனைகிறோம். புலிகளுக்கு எதிரான அனைவரையும் உள்ளடக்கிய ஜக்கிய முன்னணி(விமர்சனமின்றி) கோரின் புதிய ஒரு புலியையே உருவாக்கும்.
இதை எமது கடந்தகாலப் போராட்டத்தின் இயஙகியலுடன் மிகத்தெளிவாகத் கூறுகின்றோம். சமர் இல் இது தொடர்பாக நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். மாற்றுக்கருத்துக்களை திரிபாக்கி என்பது நாம் மாற்றுக்கருத்துகள் அனைத்தையும் திரிபு எனச் சொல்வதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை திணிக்க முயன்றுள்ளனர். நாம் கரிகாலன் கட்டுரையை மாற்றுக்கருத்தாகப் பார்த்து அது திரிபாகவும், திணிப்பாகவும் இருந்ததை தெளிவாக விவாதித்து முன்வைத்தோம். அதே நேரம் தூண்டில், உயிர்ப்பில் வெளிவந்த கருத்துக்களை மாற்றுக் கருத்த்தாகப் பார்த்து அவைகளைத் திரிபெனச் சொல்லவில்லை. இன்று நாம் பல பக்கங்களிலும் எதிர்நோக்கும் அனைத்துக் கருத்தையும் மாற்றுக்கருத்தாய் பார்க்கிறோம், விமர்சிக்கிறோம். நாம் சமர் 7 இல் வைத்த திட்டம் மற்றும் கருத்துக்களை மீதான எனது விமர்சனங்கள் இவரின் வாதமான மாற்றுக் கருத்துக்களை திரிபுகளாக்கி என்ற வாதத்தை விடுகிறது. சமர் நிலையான ஒன்றல்ல அது இயங்கிக்(இங்கு கருதைக் குறிப்பிடுகிறோம்) கொண்டிருப்பதால் சரி பிழைகளை சந்திக்கின்றது. முற்போக்கு சக்திகள் தமக்கிடையில் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களுக்கூடாக ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வந்தடைய வேண்டும். என்று பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே இப்படிக் கூறிக்கொண்டே போவதை நாம் எப்படிப் பார்பது? என்ற வாதம் சமர் தனது கருத்தைக் வைவிட்டு திரிபுவாதிகளுடனும், பிழைப்புவாதிகளுடனும் கைகோர்க்கக் கோருவதே. தவறான கருத்துக்கள் கொண்டவர்களுடன் விமர்சனமின்றி ஜக்கியப்படும் படி(எமது கருத்தைக் கைவிட்டு)கோருவதே.
இது புளட் இல் உமாமகேஸ்வரன், சந்ததியார் ஜக்கியப்பட்டது போல. இது இறுதியில் எதைச் சாதித்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். நாம் கருத்தில் தவறு இழைக்கும் போது அதை சுயவிமர்சனத்துடன் திருத்திக்கொள்ள தயாராவேயுள்ளோhம். எமது கருத்துப் பிழையென இயங்கியலுடன் சுட்டிக்காட்டாமல் யாரும் எம் கருத்தை கைவிடும்படி கோரமுடியாது. மார்க்சியத்தை இயங்கியல் விதிக்கமைய விமர்சிப்பதோ கேள்விக்குட்படுத்துவதோ சரியா என்னும் சர்ச்சை மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து காலம் காலமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மார்க்சிசத்தை இயங்கியல் விதிக்கமைய விமர்சிப்பதையோ கேளிவிக்குட்படுத்துவதையோ திரிபுவாதம் என்கிறார்கள் என சிவகுமாரன் மார்க்சியத்தை திரித்துப் புரட்டியபடி தானும் கரிகாலனும் இயங்கியலுடன் விமர்சித்ததாகச் சொல்லி அப்பட்டமான பொய்யைச் சொல்லியுள்ளனர். மார்க்சியத்துக்கும் இயங்கியலுக்கும் தொடர்பில்லை என தனது திரிபை மார்க்சியம் மீது சொல்லி தனது தனது கருத்தை திணிக்க முயலுகின்றார். இயங்கியலின்றி மார்க்சியம் இல்லை. மார்க்சியம் நிலையானது எனச் சொல்லி கருத்துமுதல்வாதக் கோட்பாட்டை உயர்த்திப்பிடிக்கின்றார். மார்க்சிசம் தோற்றதென சொல்ல வரும் இவர் கூட கருத்துமுதல்வாதப் போக்கில் நின்று இயங்கியலை நிராகரித்து முதலாளித்துவக் கோட்பாட்டை உயாத்திபிடிக்கின்றார். மார்க்சியத்தை இயங்கியல் விதிக்கமைய விமர்சிப்பதை சரியா என்னும் சர்ச்சையை மார்க்சிசம் உருவான நாள் முதல் உள்ளது எனின் யார் சொன்னது? நீங்கள் இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றீர்களா?
மார்க்சியத்தை நிராகரித்து கருத்துமுதல்வாதிகள் (மதபீடம், முதலாளித்துவ தத்துவவாதிகள்) இயங்கியலை நிராகரிகின்றனர். இதில் நீங்கள் இணைந்தது ஒன்றும் ஈழப்போராட்டத்தில் முற்போக்குக்குள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதில்லை. கடந்த 15 வருட போராட்டத்தில் இப்படி பலரை எம்மால் பார்க்கமுடிந்தது. மார்சியத்தை இயங்கியலுடன் விமர்சித்தால் திரிபுவாதம் என சொன்னாதாகச் சொல்லி அப்பட்டமான பொய்யைச் சொல்லியுள்ளீர்கள். கரிகாலனோ சிவகுமாரனோ இயங்கியலுடன் மார்சியத்தை விமர்சிக்கவில்லை. அப்படி விமர்சித்ததாகச் சொன்னபடி தமது திரிபை திணிக்க முயன்றுள்ளனர். மீண்டும் கேட்கிறோம் மார்சியத்தை இயங்கியலுடன் விமர்சித்தால் யாரும் திரிபெனச் சொல்லப்போவதில்லை. ஆனால் இயங்கியலை(நீங்கள் கூறுவது போல்) கைவிட்டு மார்சியத்தை திரிப்பதை யாரும் திரிபென்றே கூறுவர். மார்க்சியம் புரட்சிகரமானதாக இருப்பதால் அதுவே எல்லாக் காலத்துக்கும் தோன்றும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாகிவிடும் என்று கருதுவோமாயின் மார்க்சியத்தை தவறாகப் புரிந்திருக்கிறோம் என்பது தான் பொருள்.வரலாற்றுப் போக்கில் ஸ்தூலமான நிலைமைகளில் மார்க்சிசம் இன்னும் பல பல கேள்விகளை தன்னுள்ளே எழுப்பிக்கொண்டே தான் இருக்கிறது என்கிறார் சிவகுமாரன்.
மார்க்சிசம் புரட்சிகரமானது என தனது புரட்டலை முதல் சொன்ன பந்தியுடன் நிகழ்;;த்துகின்றார். இயங்கியலையும் மார்க்சிசத்தையும் கேள்விக்குள்ளாக்கியவர் அடுத்தவரியில் புரட்சிகரமாதெனச் சொல்லி திரித்துப் புரட்டுகின்றார். அனைத்துப்பிரச்சனையையும் மார்க்சிசம் தீர்க்காதெனச் சொன்னவர் அப்படியாயின் நீர் கருதும் முதலாளித்துவக் கோட்பாடு தீர்க்குமா? மார்க்சிசம் அனைத்து பிரச்சனையையும் தீர்க்காதென நீங்கள் வாதிடுவது இயங்கியலை நிராகரித்துக்கொண்டே. மார்க்சிசம் இயங்கியலுடன் வளர்வது மட்டும் அன்றி எதிர்காலத்தில் எழும் அனைத்துப் பிரச்சனைகளையும் இயங்கியலுடன் மார்க்சியம் தீர்வைப் பெறும். பொருள்முதல்வாத நோக்கில் உருவான மார்க்சியம் தீர்க்கமுடியாத எப்பிரச்சனையையும் கருத்துமுதல்வாதம் தீர்த்துவிடப்போவதில்லை.
மார்க்சியத்தை இயங்கியலுடன் புரியாத நீங்கள் மார்க்சியத்தை தவறாகப் புரிந்துள்ளதாக குற்றம் சாட்டி திரிபை திணிப்பதை கைவிடக்கோரும் அதேநேரம் உங்கள் இயங்கியலை நிராகரித்த கருத்துமுதல்வாதக் கோட்பாட்டை மார்க்சியத்துக்கு வெளியில் நின்று வைக்கக் கோருகின்றோம். அலட்சியமும், இறுகியபோக்கு என்பவற்றை கைவிட்டு ஆரோக்கியமான விவாதத்தை நடத்தக்கோரியவர் மேலும் மூலவர்களோடு இறுகிப்போயிருக்கவில்லை. அவர்களின் பின்னால் மறைந்தும், மறைக்கப்பட்ட தத்துவ மேதைகளால் வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். அலட்சியப்போக்கு என எம் போன்றவர்கள் மீது வைத்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். உங்களை விட நாம் மிக அவதானமாக உங்கள் கருத்துக்களை கற்று அது திரிபாக இருப்பதை அம்பலப்படுத்துவதில் முழுக்கவனம் செலுத்துகின்றோம். நீங்களே அலட்சியமாக எமது கருத்துக்களை விமர்சிக்க முன்வராமையுடன் மார்சியத்தை இயங்கியலுடன் விமர்சிக்கத்தவறி அலட்சியமாக ஒற்றைவரிகளில் கருத்துக்களை திணிக்க முயல்கின்றீர்கள். இறுகிய போக்கென்பது நாம் அடிப்படை மார்க்சியத்தை உயர்த்தி பிடிப்பதை தான். அதைக் கைவிடடு வருவதை ஆரோக்கியமெனச் சொல்லி கருத்துச் சுதந்திரத்துக்கு முழுக்குப் போட முயல்கின்றார்.
எமது கருத்துகளை விமர்சித்து தமது கருத்தை நிலைநாட்ட முடியாத நிலையில் நின்று கொண்டு இறுகிய போக்கை கைவிடுங்கள் எனக் கூறிக்கொண்டு விவாதத்தை கைவிடக்கோரியதுடன், நடக்கும் போராட்டத்தில் புலிகளால் கிடைக்கும் நன்மைகளை ஆராய வரும்படி கருத்துப்பலம் இன்றி திணிப்பை நிகழ்த்தியபடி கோருகின்றார். மூலவர்களோடு இறுகிப் போய்விடவில்லை எனச் சொல்லும் இவர் இயங்கியலை கேள்விக்குள்ளாக்கியவர் எப்படிக் கூறமுடியும். மூலவர்கள் மார்க்சியத்தை உருவாக்கியவர்களல்ல. இயங்கியலை ஏற்காத இவருக்கு தெரிய நியாயமில்லை. மார்க்சியம் இச் சமூகவிஞ்ஞானத்தின் தோற்றத்துடன் உருவானது. அதைக் கற்றுக் கொண்ட மூலவர்கள் அதை ஒழுங்குபடுத்தி சரியான வகையில் முன்வைத்ததுடன் திரிபுகள், வரட்டுவாதிகள்.... இடமிருந்து மார்சிசத்தை காப்பாற்றி உயர்த்தி வைத்தனர். மார்க்சிசம் இயங்கியலுடன் இயங்கும் பண்பே மார்க்ஸ்சிசம் தொடர்ந்து வளர்ந்து செல்கின்றது. இங்கு இவர் இயங்கியல் இல்லாமல் மார்க்சிசத்தை திரித்த நபர் பற்றி குறிப்பிடுகிறார் என நாம் கருதுகின்றோம். அதுவும் தான் மறைந்தும், மறக்கப்பட்ட தத்துவாதிகள் பற்றி குறிப்பிடுகின்றார்.
ஒரு தத்துவத்தை யாரும் மறைத்துவிட முடியாது தத்துவம் சரியாக இல்லாத போது அங்கு அது மறைந்து விடுகின்றது. மார்க்சியம் உருவான நாள் முதல் எத்தனைபேர் அதைத் தாக்கினர். இன்று அவர்களின் தத்துவம் அழிந்து போனதுடன் மட்டுமின்றி, சிலர் அதில் ஒரு பகுதியை எடுத்து புதிய தீர்வை புகுத்த முயல்கின்றனர். சமுக இயக்கத்தின் தோற்றதN;தாடும் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளுடனும் உருவான மார்க்சியத்தை மூலவர்கள் எனச்சொல்லி தனிநபர்கள் மட்டத்தில் மார்க்சியத்தை குறுக்கி திணிக்க முயல்வதுடன், மக்கள் போராட்டத்தை கேலி செய்வதுமாகும். ஒரு பயனுடைய விவாதத்தை நிகழ்த்தும் நாம் எழுந்தமானமாக முற்போக்கு, பிற்போக்கு, திரிபு முத்திரை குத்தாமல் கருத்தின் பலத்தை காணன்பதே ஆரோக்கியமான அணுகுமுறை எனக் கூறியுள்ளார். பயன் உடைய விவாவத்தை நிகழ்த்தவென ஒரு ஆலோசனையை சொன்னவர் கட்டுரையின் தொடர்ச்சியில் புலிகள் தேசிய சக்தியா? இல்லையா? என்ற விவாதத்தை கைவிடக்கோரியும் உள்ளார். இங்கு பயனற்றது எனச் சொல்லி புலிகளின் போராட்டத்தில் நன்மை தொடர்பாக கதைத்து, புலிகளை தேசிய சக்தியென குரல் கொடுத்துள்ளார். எம்மை கருத்தின் பலத்தில் நின்று விவாதிக்க கோரியவர் நாம் கருத்துப்பலம் அற்றவர்கள் என வாதிட்டுள்ளார். எமது விவாதம் உங்கள் அனைத்து வரிகள் மீதும் தெளிவாகவும், உறுதியாகவும் கருத்தை முன்வைத்தே எமது கருத்தை சொல்கிறோம். அதேநேரம் நீங்கள் கருத்துப் பலமின்றி எம் கருத்துக்களை விமர்சிக்க முன்வராமல் கருத்துக்களை ஒற்றைவரியில் சொல்லி திணிக்க முயன்றுள்ளீர்கள்.
முற்போக்கு, பிற்போக்கு, திரிபு... என்பன வெளிவரும் கருத்துகள் மீதானதே. புலிகளை தேசபக்தர்கள் என கடைசி வரியில் குறிப்பிட்டு எழுந்தமானமாக விவாதத்தை நிராகரித்து திரித்து திணிப்பை முத்திரை குத்தலாக நிகழ்த்தியுள்ளீர்கள். ஒரு தொடர்பாக முற்போக்கு, பிற்போக்கு... எனச் சொல்லமுடியும். நீங்களே கருத்துக்களை (விவாதத்துள்ளதை) எடுத்து விவாதிக்க தயாரின்றி முத்திரை குத்தல் போல் கருத்துக்களை திரித்து திணித்துள்ளீர்கள். தேசிய விடுதலைப் போராட்டமா? ஜக்கியப்பட்ட புரட்சியா? என்ற விவாதம் அவசியம் என குறிப்பிட்டார். இது தொடர்பாக மனிதத்தின் கருத்தை ஒட்டி தூண்டில் ஒரு விமர்சனத்தை முன்வைத்தது. அதுவே எமது கருத்தும். இன்று வரை அதை விமர்சிக்க முன்வராலாமே ஏன்? தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகளை மதிப்பிடுவது தொடர்பாக விவாதிக்கவேண்டாம் எனக் கோரியவர். கட்டுரையின் இறுதியில் தேசிய சக்தி தொடர்பாக விவாதத்தை விவாதிக்க தேவiயில்லையெனச் சொல்லி தனது திரிபை திணிக்க முயன்றுள்ளார். தொடர்ந்து சிவகுமாரன் இதுவரை நடந்த விவாதங்களை தொகுப்பாக்கிய உயிர்ப்பு புலிகள் தேசியசக்திகள் தான் ஆயினும் பிற்போக்கு தேசியசக்திகள் என்ற பதத்தை வந்தடைகிறது.
சி.சிவசேகரம் இந்த கருத்தையே முன்வைக்கிறார். இது கூட ஒரு விவாதத்தின் இயங்கியல் நிலையில் நின்று சொல்லவில்லை. உயிர்ப்பு எந்த நிலையிலும் புலிகள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியவர்கள் ஒருமுடிவை சொன்னதில்லை. சிவசேகரம் தேசிய சக்தி தொடர்பாக எந்தக்கருத்தையும் சொல்லவில்லை. மாறாக சொற்பிரயோகம் தொடர்பாகவே விவாதித்தார். அது அல்லது இது என இரட்டைத்தன்மையில் கருத்தை வெளிப்படுத்தினார். உயிர்ப்போ, சிவசேகரமோ நாம் வைத்த கருத்துக்களை எடுத்து விவாதித்து ஒரு கருத்தை முன்வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தேசியம், தேசியரசு போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் விடுதலை போன்ற கருத்தாக்கங்கள் போலவே கடந்த 200 ஆண்டுகளாக பிரான்ஸ், ஆங்கிலேய சமூகங்களிலிருந்து உலகுக்கு பரப்பப்பட்ட கருத்துக்களே. இவ்விவாதம் தவறானது. விடுதலை, சுதந்திரம் போன்ற கருதாக்கங்களை பிரான்ஸ், ஆங்கிலேய சமூகத்திலிருந்து பெறவில்லை. சமுதாயம் உருவான நாள் முதல் போராட்டங்கள் இருந்தன. அங்கு, விடுதலை, சுதந்திரம் என்ற கோசங்கள் எழுந்தன. இதுவே இயங்கியல். மனிதசமுதாயம் பல தியாகங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது இதை நிராகரித்த பிரான்ஸ், ஆங்கிலேய சமுகத்திலிருந்து உருவானது எனச்சொல்லி திரிவுக்கு வளம் சேர்க்கமுயன்றுள்ளார். தேசியம் தேசங்களின் உருவாக்கத்துடன் அரங்குக்கு வந்தது. அதாவது முதாலாளித்துவ வளர்ச்சியுடன் தேசங்கள் மையப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் சந்தைப்பொருளாதாரம் கோரி நின்றது. இதன் வெளிப்பாடாக தேசம் உருவானது. இதிலிருந்து தேசிய எழுச்சிகள் வெளிப்பட்டன. உறக்க நிலையில் இருக்கும் பழைய ஆற்றல் விழித்துக்கொள்ளுவதில்லை. ஆனால் அது அப்படித்தான் நிகழ்கின்றது என்ற வாதத்தில் உறக்க நிலையில் இருப்பதில்லை எனச்சொல்லி "ஆனால"; போட்டு அப்படித்தான் என திரித்துள்ளனர். தமிழ் தேசியம் உறக்கநிலையில் இருப்பதில்லை. இதுபோன்ற அனைத்துப் பிரச்சனையும். எழுகின்ற முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே தேசிய இன முரண்பாடு முன்னிலைக்கு வருகின்றது. பிரதான முரண்பாட்டுக்கு அப்பால் பல முரண்பாடுகள் இருக்கலாம். அவை முன்னிலைக்கு வரமுடியும். சில பிரதான முரண்பாட்டின் அழிவுடன் அழிந்துவிடும். உறக்கநிலை என்பது கற்பனையானது. சமூகம் இயங்கிக்கொண்டிருக்கும் போது ஏற்படும் முரண்பாடுகள் சமூகத்தின் முன் புதிய முரண்பாடுகளை முன்தள்ளும். இதைப் போன்றே தமிழ்த்தேசியமும். தமிழ்தேசியத்தின் விடுதலைக்கான போரில் ஈடுபடும் சக்திகள் அனைத்துமே தேசிய சக்திகள்தான்.ஈழமோ தமிழீழமோ தமிழ் தேசியத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கான அரசியல் வரையறையாகும் என சிவகுமாரன் வாதிட்டுள்ளார்.
இப்படிப் பார்த்தால் ஜெர்மனிய தேசத்தை உயர்த்திப் பிடித்த கிட்லரும் தேசியவாதியே. ஈராக்கின் தேசியத்தை உயர்த்தி பிடித்த சதாமும் தேசிய வாதியே. இந்திய தேசியத்தை உயர்த்திப்பிடித்த காங்கிரஸ்சாரும்; தேசிய வாதிகளே. சிஙகளத்தேசியத்தை உயர்த்திப் பிடித்த பிரேமதாசாவும் தேசியவாதியே. ஒரு தேசவிடுதலைப் போராட்டத்தை ஏகாதிபத்தியமும் முன்னெடுக்கமுடியும். ஆப்கானிஸ்தான் போராட்டத்தை அமெரிக்காவே பின்னிருந்து நடாத்தியது. இது தொடர்பாக நீண்ட கருத்துக்களை நாம் முன்பே வைத்துள்ளோம். தேசியத்தை ஒருவன் சொன்னால் அவன் தேசியவாதியல்ல. அவனின் போக்கு தான் தேசியத்தை பிரதிபலிக்கின்றதா இல்லையா என வைத்து ஆராய முடியும். காலனி ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் மட்டும் முற்போக்கு பாத்திரத்தை ஆற்றமுடியும் என்றும் கருதியது. காலனி ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமற்ற இன்றைய இலங்கை போன்ற தேசங்களில் நிகழும் போராட்டங்கள் பிற்போக்கானதாகவே கருதப்படுகின்றது. இது தான் மரபார்ந்த மார்க்சியர்களின் பார்வையாகவும் இருக்கின்றது. இதையே தேசிய நிகழ்வுப்போக்கை புரிந்து கொள்வதில் மார்க்சியம் மாபெரும் தோல்வியைத் தழுவி விட்டதாக இன்றைய மார்க்சிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். யார் குறிப்பிட்டனர்? நீங்கள் உட்படத்தான் இவ்விவாதத்தில் தனது திரிபை மீண்டும் திணிக்கமுயல்கிறார்.
இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய காலனி எதிர்ப்புப் போராட்டம் இல்லையெனச் சொல்லி பிற்போக்கானது என மார்க்சியர்கள் சொல்லுவதாக வாதிட்டு மாhக்சிசம் மாபெரும் தோல்வியை அடைந்ததாக திரித்து விடுகின்றனர். இனறைய போராட்டம் ஏகாதிபத்தியம் தரகுமுதலாளித்துவத்துக்கும் எதிரானது. அந்தவகையில் சுதந்திரத்தின் பின் காலனியாக இருந்த இலங்கை நவகாலனி வடிவத்தை அடைந்துள்ளது. இன்றைய போராட்டம் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது. இதை இல்லையென திரித்து மார்க்சியம் தோற்றுவிட்டதென உண்மைக்குப் புறம்பாக திணிக்க முயல்கின்றார். நடக்கும் யுத்தம் யாருக்கு எதிராக? வெறும் சிங்கள மக்களுக்கு எதிராகவா? சிங்கள அதிகாரபீடத்துக்கு எதிராகவா? அப்படியான அதிகாரபீடம் ஏகாதிபத்திய சார்பில்லையா? இன்று இலங்கை ஏகாதிபத்திய சார்பாக நவகாலனி பிடிக்குள் இல்லையெனில் 1948 இல் பெற்ற சுதந்திரம் உண்மையான விடுதலையா? மரபார்ந்த மார்க்சியர்களின் பார்வையானது இப்போராட்டம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இல்லை எனப் பார்ப்பதாக யார் பற்றியோ இவர் கற்பனையில் சொல்லி அவர்களை மார்க்சியவாதிகள் என குறிப்பிட்டும் மார்க்சியம் தோற்றுவிடடதாக மார்க்சிய ஆய்வாளர்கள் (திரிபுவாதிகள்) கூறியதாகச் சொல்லி திரிபை திணிப்பாக நிகழ்த்தியுள்ளார். மாhக்சியம் தேசியப்போக்கை விளக்குவதிலும் சரியாகவுள்ளது.
இன்று இத்தேசிய போக்கை புரிந்துகொண்ட பிலிப்பைன்ஸ், சோவியத்..... கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வீறுநடை போடுகின்றனர். சோவியத், யூகோஸ்லாவியா தேசிய இனப்போராட்டங்கள் தீவிரமடைய 1953 இன் பின் ஆட்சி ஏறிய திரிபுவாதிகளின் வேலைத்திட்டமே தேசிய இனமுரண்பாட்டை முன்தள்ளியது. இவை காரணமாக இருக்க மாhக்சியம் இறந்துவிட்டது என வெற்றுக் கூச்சல் எழுப்பி திரிபை திணிக்கமுயல்கின்றனர். இனி நாம் நிகழ்த்தவேண்டிய விவாதம் புலிகள் தேசிய சக்தியா? இல்லையா? என்பதல்ல மாறாக புலிகளின் போரினால் கிடைக்கப்போகும் நன்மை என்ன என்பதே. இக்கட்டுரைக்குப் பேர் கருத்தாடல். தலைப்பு தேசிய சக்தியும் பாசிசசக்தியும். இருந்தும் இதை இத்துடன் விமர்சிக்கவேண்டாம் எனக் கேட்டு தனது திரிபை திணிக்கமுயன்றும் உள்ளார். கருத்தியல் ரீதியில் எம் கருத்துக்கள் மீது (ஒன்றுகூட)எதையும் வைக்கமுடியாத இவரின் விவாதம் ஒற்றைவரியில் சரி பிழைகளைச் சொல்லி மாhக்;சியம் இறந்துவிட்டதெனச் சொல்லி தனது திரிபை பின்பக்கக் கதவுகள் மூலம் திணிக்கமுயன்றுள்ளார். நாம் வைத்த கருத்துக்கு யாரும் இயங்கியலுடன் மறுக்காத இன்றைய நிலையிலும் எமது கருத்தை முடிந்த முடிபாகவைத்து இவ்விவாதத்தை நிறுத்தக்கோரவில்லை. மாறாக கருத்தை முன்வைக்கக் கோரும் நாம் அதை விவாதிக்கின்றோம். இவர் இவ்விவாதத்தை நிறுத்தக் கோரியவர் புலிகளினால் கிடைக்கும் நன்மை தொடர்பாக விவாதிக்க கோருகின்றனர். ஏன் புலிகளின் ஆதரவாளர்கள் கூட இதைத் தான் கோருகின்றனர். இவருக்கும் அவர்களுக்கும் என்ன தான் வேறுபாடுண்டு. புலிகளின் போராட்டத்தினால் எந்த நன்மையையும் நாம் பெற்றுவிடப்போவதில்லை. இது கடந்த போராட்டம் எமக்கு தெளிவாக உணர்த்துகிறது. தமிழ் மக்கள் சுதந்திரமான வாழ்வை விரும்புவதால் புலிகளின் போராட்டத்தால் அது கிடைக்கும் எவ்வளவு வேடிக்கை தமிழ்மக்களுக்கு இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன தமிழ் மக்கள் சுதந்திரத்தை வென்றுவிடப்போவதில்லை. இவரின் விவாதப்படி இன்று புலிகள் விடுதலை செய்த பிரதேசத்தில் தமிழ்மக்கள் சுதந்திரமாக (முன்பிருந்ததைவிட) வாழ்வதாக உண்மைக்குப் புறம்பாக் கூறி தனது திரிபுக்கு ஆதாரம் தேடப்புறப்பட்டுள்ளார். இதற்கு அப்பால் நம்பிக்கை கொள்ளும் வகையில் எந்த வழிமுறையும தெரியவில்லை. ஆம் உண்மைதான் அதற்காக புலிகளை ஆதரிக்க கோருகின்றார். இதறகு எதிராக புதிய அமைப்பை உருவாக்குவதே ஒரேவழி இதற்கு திரிபுகளை கைவிட்டு புலிகளை விமர்சித்து மூன்றாவது அணியை உருவாக்க கோருகின்றோம்.
இதுவே தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரு தீர்வாகும். முற்போக்கு சக்திகள் ஜக்கிய இலங்கை வர்க்கப்பார்வை போன்றவற்றில் மூழ்கி கொண்டு இருந்தபோது தமிழ் மக்களின் ஜனரஞ்சக ஜனநாயகக் கருத்துப்பரப்பை கைப்பற்றி விட்டார்கள். முற்போக்கு சக்திகளின் ஒரு பகுதியே ஜக்கிய இலங்கையென்பதை இன்று போராட்ட விரக்தியில் முன்வைக்கின்றனர். இவை கூட சரியான விளக்கங்களுடன் அல்ல. ஈழப்போராட்டம் தீவிரமான காலகட்டத்தில் ஜக்கிய இலங்கையென மற்றோர் சொல்லியதால் புலிகள் தமிழ்மக்களை வென்றுவிடவில்லை. வர்க்கப் பார்வையின்று போராட்டத் தோல்வியுடன் சரியாக ஆய்வுசெய்து உயர்த்திபிடித்துள்ளனர். போராட்டம் தீவிரமான காலகட்டத்தில் வர்க்கப் பார்வையை யாரும் தீவிரமாக உயர்த்திப் பிடிக்கவில்லை. அப்படி சரியாக உயர்த்திப் பிடித்திருப்பின் இன்று புலிகள் அரங்கில் வந்திருக்கமுடியாது. போராட்டத்தின் தோல்வி வர்க்கப் பார்வையை உயர்த்தியதால் அல்ல. அனைத்து இயக்கங்களின் வரலாற்றில் எங்கே வர்க்கப்போராட்டத்தை ஜக்கிய இலங்கையை உயர்த்திப் புலிகளை வளரவிட்டனர். புலிகள் ஜனரஞ்சக ஜனநாயக கருத்துப்பரப்பை கைப்பற்றியதாக கூறி புலிகளை நியாயப்படுத்தியுள்ளனர். புலிகள் ஜனநாயகம் வழங்கி மக்கள் விருப்பும் புலிகள் விருப்பும்; ஒன்றாகவுள்ளதாக புலம்பி புலிகளுக்கு வக்காலத்து வாங்கியுள்ளனர். புலிகள் இன்று மக்களுக்கு ஜனநாயகம் வழங்கி மக்கள் கருத்துப்பரப்பை புலிகள் வென்றனர் என்பதை புலிகளே ஏற்க மாட்டார்கள். துப்பாக்கி மூலம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்தும் புலிகள் மக்களின் ஜனரஞ்சக ஜனநாயகத்தை வென்றுவிடவில்லை. புலிகள் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்திய விசுவாசிகளான தரகு முதலாளித்துவ பிரிவினரே. புலிகளின் போராட்டம் தமிழமக்களின் நலன்களை தனது நோக்கில் உயர்த்திப்பிடித்தபடி மக்களை அடக்கியொடுககு;கின்றனர். தலைமை வேறு ஊழியர் வேறென பார்க்கமுடியாது. புலிகளைப் பார்க்கும் போது புலிகளின் வர்க்க நலனையே பார்க்கவேண்டும். கீழ்ப்பட்ட உறுப்பினர்கள் உண்மையான விடுதலையை நேசிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் செயற்பாடு தேசவிடுதலைக்கு எதிரான இவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துவிடப்போவதில்லை. கருத்துக்களை விவாத ஒழுங்குகளை கடைப்பிடித்து எமது கருத்தின் மீது கருத்துக்களை வைத்து உங்கள் கருத்தை வைக்குமாறும் மீண்டும் மீண்டும் கோருகின்றோம்.