Language Selection

சமர் - 9 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதே இதழில் மார்க்சிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை வெளியிட்டு அது தொடர்பாக தமது கருத்தை முன்வைக்காது ஜரோப்பாவில் வரும் பத்தோடு பதினொன்றாக தாமும் மாற முயன்றுள்ளனர்.

 

மார்க்கிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை நாம் அடுத்த சமர் 10 விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். அடிப்படை மார்க்சியத்தை உயத்துவதை வரட்டுவாதம் எனவும், நாம் வைத்த திட்டம் தன்னியல்பானது எனவும், சீரழிந்த பிரமுகர் புத்திஜீவிகளுக்காக வக்காலத்து வாங்கியும், திரிபுவாதத்துக்கு வக்காலத்து வாங்கியும், தமது விமர்சனத்தை செய்தவர்கள் இவைகளை கருத்தியல் ரீதியில் புரியவைக்க முடியாது தமது முகங்களை இனங்காட்டியுள்ளனர்.

 

நாம் தவறு இழைக்கும் பட்சத்தில் அதை தத்துவார்த்த விளக்கங்களுடன் புரிய வைக்கவேண்டும் எம் மீதான சொற்களுடன் மட்டும் அமைந்த விமர்சனத்துக்கு பதில் முக்கியமானதும், தீர்க்கமானதுமான தத்துவார்த்த விவாதத்துக்குரிய இவ் விடயத்தை, வெறும் சொற்களுக்கு அப்பால் நகர்த்த முடியாது போயுள்ளனர். இதன் பின் கோட்பாட்டு விவாதம் முக்கியத்துவம் எனக் கோரின் அது நகைப்புக்குரியதே. இது மனிதத்திடமிருந்து வாந்தியெடுத்து தம்மை அவர்கள் உடன் இணைத்ததற்கு அப்பால் ஒரு அடியைக் கூட முன்வைக்கவில்லை.

 

தேசிய சக்திகள் தொடர்பான விவாதங்களின் விளைவுகளை இன்று திரும்பிப் பார்க்கும் எவருமே திருப்தியுற முடியாது என தமது அங்கலாய்ப்பபை உயிர்ப்பு வெளிப்படுத்தியுள்ளனர். விவாதங்களின் விளைவுகள் உஙகளுக்கும் மார்க்சிய விரோதிகளும் திருப்தியுறுவதாக எப்போதும் அமையவேண்டும் என்பது கருத்தியல் மறுப்பே.

 

புலிகள் தரகுமுதலாளித்துவ பிரிவா, தேசியமுதலாளித்துவ பிரிவா, உதிரிமுதலாளிகளா, வர்க்கம் அற்ற குழுவா....... எனத் தொடர்ந்த விவாதம் ஒருமித்த முடிவை வந்தடைய முடியாது. அப்படி எதிர்பார்ப்பது வர்க்க இருப்பை மறுப்பதே. இக் கருத்தை விவாதத்துக்கு அப்பால் அதனடிப்படையில் இன்று முன்வைக்கின்றனர். இவர்களுடனான உறவென்பது ஒரு கட்சியாக அமையாது. அவர்களுடனான உறவு மேலிருந்து கட்டும் ஜக்கிய முன்னணியில் மட்டும் ஜக்கியப்பட முடியும். இவ் விவாதம் அதிகம் முன்னேற முடியாது போனது என்பது புலிகள் தரகு முதலாளித்துவம் இல்லையென விவாதிக்க முற்பட்டவர் தமது கருத்துக்களை வாதிட தர்க்கபலம் இன்றி மவுனமாகியுள்ளனர். ஆனால் அவர்கள் தத்தம் கருத்தில் செயல்படுகின்றனர். ஜக்கியத்தைக் கோரியவர்கள் தமக்குள் வேறுபாடுகளை அதிகரித்து செல்வதாகவும், தேக்கத்தை உடைக்கக் கோரியவர்கள் தேக்கத்தை அடையும் அவலம் நிலவுவதாக அவலப்பட்டபடி கூறியுள்ளனர்.

 

ஜக்கியமென்பது அடிப்படை மார்க்சியத்தின் மீது மட்டுமே, இதை வேண்டுமெனில் உயிர்ப்பு வரட்டுவாதம் என கூறட்டும். இதை வரட்டுவாதம் என கூறின் கடந்தகால இயக்கங்களின் விளைவுகளை மீண்டும் மார்க்சியத்தை கூறியபடி பெறுவர். இதில் சமர் உறுதிப்பட கூறி நிற்கின்றது. தேக்கத்தை உடைக்க முனைந்தவர்கள் தேக்கத்துக்குள்ளானார் என்பதற்கு சமரின் நடைமுறையே உங்களுக்குப் பதிலளிக்கும்.

 

நாம் தேக்கத்தை உடைப்பதில் முன்னேறியுள்ளோம். அது போல் ஜக்கியப்படுவதிலும் முன்னேறியுள்ளோம். இவை உண்மையில் தேசத்தின் மீது அக்கறையுள்ள அனைத்துத் தரப்பின் முன்முயற்சியுடன் மேலும் வளர்த்து எடுக்கப்பட வேண்டும் அவ்வளவே. இன்று கோட்பாடு விவாதம் வெறுமனே தர்கத்திலும் சாதாரண பொதுப்புத்தி மட்டத்திலும், விவாதங்களின் பழைய கருத்தும் சாதாரண தகவல்களுமே மாறி மாறி ஒருவித சொற்களின் விளையாட்டே நடைபெறுகின்றது.


முடியாதபோது உரத்த குரலில் பேசுவதன் மூலம் இது ஈடுசெய்யப்படுகிறது. அதுவும் போதாதபோது கிண்டல், கேலி, முத்திரைகுத்தல், சேறுபூசுதல் என்று போய் நேரடித்தாக்குதலாக இது மாறிவிடுகின்றது என உயிர்ப்பு எந்த அரசியல் விளக்கமும் இன்றி பிற்போக்கு அரசியலையும், கருத்தையும், நியாயப்படுத்த தம்மால் முடிந்தளவு வெறும் சொற்களுடாக உடைக்க முயன்றுள்ளனர். வெறும் சொற்களாக விளக்கமற்ற விமர்சனத்தை சமர் இலகுவாக அம்பலப்படுத்திவிடமுடீயும். தர்க்கப்பலம் என்பது என்ன? தர்க்கம் என்பது ஒரு கருத்தின் மீதான விவாதமே. தர்க்கம் என்பது கோட்பாட்டுடன் கூடிய கருத்துக்களே. எக்கருத்தையும் விவாதத்துக்கு ஊடாகவே வெற்றி கொள்ள வேண்டும் . நாம் தர்க்கப் பலம் மூலம் எமது கருத்தை நிலைநாட்டுவதை ஏற்ற உயிர்ப்பு தொடர்ந்து கிண்டல், கேலி, முத்திரைகுத்தல், சேறுபூசுதல, தாக்குதல் என சொல்ல வருவது அர்த்தமற்ற முரண்பாட்டுடன் கூடிய வெறும் சொற்களே. தர்க்கபலம் மூலம் கருத்தை நிலைநாட்டுவதை நிராகரிப்பதென்பது கருத்தியல் மறுப்பாகும.; பொதுப்புத்தி மட்டத்தில் கருத்துக் கூறுவதென புத்திஜீவியாக நின்று கேலி செய்துள்ளனர். ஒரு மனிதன் தனது அறிவில் இருந்தே கருத்து கூற முடியும். அதுவே அவனது கருத்துச்சுதந்திரம.; அதை வெறும் பொதுப் புத்திமட்டம் எனக் கூறி கேலி செய்து விமர்சிக்க மறுப்பது என்பதென்பதும் தம் போன்ற புத்திஜீவிகள் கருத்துக்கூற மற்றவர்களை கைகட்டி கேட்க கோரும் கருத்தியல் மறுப்பே. உங்கள் கருத்துக்களை சமரின் பொதுப் புத்திமட்டம்( நீங்கள் கருதும் ) விளங்கப்படுத்தி தர்க்கப் பலம் மூலம் மேவியுள்ளது. இதையே தர்க்கப்பலம் மூலம் கருத்தை சொல்வதாக அவலப்பட்டுள்ளார்கள். நாம் கருத்தை கருத்துக்கள் மூலம் வெல்ல தர்க்கப்பலத்தை சார்ந்தே நிற்போம். இதற்கு மாறாக கருத்தை எதிர்கொள்ள தர்க்கப்பலத்தை நிராகரித்து கடந்தகால தங்கள் இயக்க அனுபவத்தை வைத்து ஆயுதம் மூலம் பதில் சொல்ல சமரையும் கோருவதை நிராகரிக்கின்றோம்.

 

விவாதத்தில் பழைய கருத்தும், சாதாரண தகவல்களுமே மாறி மாறி ஒருவித சொற்களின் விளையாட்டே நடைபெறுகின்றது என உயிர்ப்பு கூறியுள்னர். எமது அடிப்படை மார்க்சிசம் பழையகருத்து எனின், அதையே எல்லா விடயங்களிலும் பயன்படுத்துவதை நீங்கள் நிராகரிக்க கோரின் உங்கள் புதிய கருத்தை, தத்துவத்தை முன்வைக்க சமர் கோருகின்றது. அதைவிடுத்து மார்க்சியத்தை பழையகருத்து என்றென மனிதத்துடன் சேர்ந்தும், மார்க்சிய விரோதிகளுடனும் சேர்ந்தும் ஒப்பாரி வைப்பதிலும் எந்த அர்த்தமும் கிடையாது. நாம் சாதாரண தகவல்களை வைக்கிறோம் எனில் அதைவிட முன்னேறி முக்கிய தகவல்களை முதலில் முன்வையுங்கள். அதன் பின்பே எம் கருத்தை சாதாரண கருத்து எனச் சொல்லமுடியும். எமக்குத் தெரிந்த கருத்தையே நாம் சொல்ல முடீயும். இதை வெறும் சாதாரண கருத்து என கேலி செய்வது கருத்தியல் மறுப்பே. உங்கள் முக்கிய கருத்தை முன்வைத்து எமது சாதாரண தர்க்கப்பலம் உள்ள கருத்தை தவுடு பொடியாக்குங்கள். அதை விடுத்து சொற்களுடன் கூடிய விவாதம் நடத்துவதில் எவ்விதப் பயனும் கிடையாது. ஒரு வித சொற்களை நாம் திரும்பத் திரும்பத் பயன்படுத்துகின்றோம் என்பது அடிப்படை மார்க்சிசத்தையே. இதைப் பயன்படுத்துவதை முடியாதபோது இதை உயர்த்திப் பேசுகின்றோம். எமது சாதாரண கருத்து பொதுப்புத்தி என்பன மற்றவர்களின் கருத்தை தர்க்கரீதியில் முறியடித்து விடுவதால் அதை உயர்த்தி பேசுவதன் மூலம் சாதித்தாகவும், இதை கிண்டல், கேலி, முத்திரைகுத்தல், சேறுபூசுதல் என்பனவூடாகவும் சாதித்ததாகவும், தர்க்கப்பலமின்றி, கோட்பாடு விவாதமின்றி அவலப்பட்டுள்ளனர்.

 

பல்வேறுபட்ட பலதரப்பட்ட கோட்பாடுப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகண்டு அனைத்து தரப்பினரையும் மேவிச் செல்லக்கூடிய சித்தாந்த மேலாண்மையை உருவாக்குவதன் மூலமே முன்னேறிய பிரிவினரின் இணைவு எனும் பிரச்சனை தீர்க்கப்பட முடியும். என்ற உயிர்ப்பின் வாதம் சமரசவாதமே. கடந்த காலங்களில் புரட்சி வெற்றி பெற்ற நாடுகளில் கூட புரட்சிக்கு முன் இது சாத்தியமாக இருந்ததில்லை. அப்படி செய்ய எண்ணிய நாடுகள் கட்சிகள் சமரசவாத அழிவையே நாடி போராட்டத்தை அழித்தனர். சமூக முரண்பாடுகளை மறுக்கும் இவ் விவாதம் மூலம், முன்னேறிய பிரிவினர் எல்லோரையும் ஒரு வர்க்க அடிப்படையாக இனம் காணப் புறப்பட்டு உள்ளனர். உண்மையில் அப்படியல்ல. மாறாக பல்வேறுபட்ட வர்க்கம் சார்ந்தே முன்னேறிய பிரிவினர் உள்ளனர். அனைத்து தரப்பினரையும் மேவிச்செல்லும் சித்தாந்தம் என்பது சந்தர்ப்பவாத சித்தாந்தமே. ஏன் எனின் அவர் அவர்களின் கருத்துக்களுக்கு தீர்வுகண்ட சித்தாந்தம் என்பதால் இவர்கள் ஒரு கட்சியாக பரிணமிக்க முடியாது. இது இரண்டு வகையான ஜக்கிய முன்னணிக்குள் மட்டும் ஜக்கியப்பட கூடியவர்களாக இருப்பர்.

 

இன்று கோட்பாட்டுப் பிரச்சனை என்பது பல வர்க்க கருத்துக் கொண்டது. மார்க்சியத்தை ஏற்பவர்கள் திரிபு என்ற கோட்பாடு உள்ளதையும் ஏற்பதையும் அதற்கு எதிராகப் போராடவும் வேண்டும். இதை ஏற்க மறுப்பவர்கள் மீண்டும் ஒரு புலியை உருவாக்குவார்கள். இதை மறுக்க உயிர்ப்புக்கு முடியுமா?

 

உயிர்ப்பு எமது நடவடிக்கைகளை தன்னியல்பானது என்கின்றனர். அது நாம் வைத்த திட்டத்தையே மையமாக வைத்து எழுந்த அவலக்குரலே. இது மக்களுக்கு பிரயோசனமாக இருந்தாலும் பிரயோசனமற்றது. ஏன் எனின் கோட்பாட்டுப் பிரச்சனையே முக்கியமானது எனக் கூறியுள்ளனர். கோட்பாட்டு விவாதம் முக்கியமானது எனக் கூறியவர்கள் எம் மீதான விமர்சனத்தை கோட்பாட்டு ரீதியில் நிகழ்த்த முடியாது போயுள்ளனர். கோட்பாடு எவ்வளவு முககியமானதோ அதே போல் ஒரு திட்டமும் முக்கியமாது. நீங்கள் கோட்பாட்டு வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின் நிற்கின்றீர்கள் என்பதால் நாம் திட்டத்தை வைக்கக் கூடாது என்பது அர்த்தமற்றது. புரட்சிகர அடித்தளத்தை விட ஒரு திட்டம் அவசியமானது. திட்டம் ஒன்றின் மீதும் கோட்பாட்டு விவாதம் நடைபெற முடியும். திட்டம் ஜரோப்பாவுக்கு ஆனது அல்ல என்ற போதும் ஜரோப்பாவில் உள்ள முற்போக்கு பிரிவினரை அணிதிரட்ட இத்திட்டம் வழியமைக்கிறது. ஜரோப்பாவில் முன்னேறிய பிரிவினர் என கூறிக்கொள்வோரில், இன்று ஆதிக்கத்தில் உள்ள பம்மாத்து பிழைப்புவாத அரசியலை நடத்தும் இன்றைய நிலையில், உண்மையில் புரட்சியை நேசிக்கும் புரட்சிகர குரல்கள் அடக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் இத்திட்டம் அவர்களை ஸ்தாபனப்படுத்தி பிழைப்புக்களை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் சரியான அரசியலை எடுத்துச் செல்ல இத்திட்டம் மிக அவசியமானது.

 

இத்திட்டத்தின் அடிப்படையில் உடன்படக் கூடிய சக்திகளை இத்திட்டம் ஒன்றிணைப்பின் அதை தன்னியல்பானது எனக் கூறி ஜக்கியத்துக்கு எதிராகவும், தேக்கத்தை பேணவும் உயிர்ப்பு குரல் கொடுக்க முனைந்துள்ளனர். இதற்கு மாறாக சித்தாந்த மேலாண்மை பெற்ற எல்லோரையும் அணிதிரட்ட முனையும் இலக்கியச் சந்திப்பாகவுள்ள புகழ்பாடும் வடிவத்தையும், பிழைப்புவாத பிரமுகர்களையும் காப்பாற்ற முனைந்துள்ளனர். உயிர்ப்பு குறிப்பிட்ட தன்னியல்பு தொடர்பாக பொதுவாகப் பார்ப்போம். ஒரு அடிப்படைத் திட்டம், கோட்பாடு இன்றி வெளிவரும் கருத்துக்கள், நடவடிக்கைகள், அனைத்தும் தன்னியல்பானதே. இந்த வகையில் கடந்தகால எம் போராட்டத்தின் நடவடிக்கைகள் தன்னியல்பானதே. இதில் என்-எல்-எவ்-டி, பி-எல்-எவ்-டி மட்டும் சரியானதோ, பிழையானதோ ஒரு திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டவர்கள். இன்று திட்டம் இல்லாத நிலையில் நடைபெறும் ஒவ்வொரு போராட்டமும் ஆதரிக்கப்பட வேண்டியவை.

 

இவைகளில் இருந்தே முன்னணி சக்திகள் உருவாகுவார்கள். மக்களின் தன்னியல்பான போராட்டங்களே ஒரு கட்சியின் தேவையை பறை சாற்றி நிற்கும். கட்சி உருவாகும் வரை தன்னியல்பான போராட்டங்களை நிறுத்தக் கோரின் சுரண்டுபவர்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் துணை போவதே. தன்னியல்புப் போராட்டத்தின் ஊடாகவே சமாந்தரமாகவே கட்சி உருவாக முடியும். இன்று வெளிவரும் அனைத்து சஞ்சிகைகளும் தன்னியல்பானதே. இது உயிர்ப்புக்கும் பொருந்தும். ஏன் எனில் எந்த அரசியல் மீதும், ஒரு திட்டத்தின் மீதும் ஒரு வரைபை கொண்டிராத தன்னியல்பான எல்லா விவாத கருத்தினையும் கூறுபவர்களே. சமர் மட்டும் ஒரு குறித்த திட்டத்தின் அடிப்படையில், கோட்பாட்டு அடிப்படையில் தன்னியல்பை முறித்துக் கொண்ட சஞ்சிகை. இது ஜரோப்பாவில் உள்ளதே வேதனையானது. இது மண்ணில் காலை வைக்கும் போது நடைமுறையில் கடசியாக மாறும்.

 

புத்திஜீவிகள் மீதான காட்டுத்தனமான தாக்குதல்கள் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது என்ற உயிர்ப்பு மார்க்சியத்தின் மீதும், அதை உயர்த்துபவர்கள் மீதும் இப்புத்திஜீவிகள் நடத்தும் தாக்குதலை கண் மூடியபடி எம் மீது சேறடிப்பு நடத்துவதன் ஊடாக அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டபடி உள்ளனர். பிழைப்புவாத புத்திஜீவிகளின் தவறுகள் இருந்தபோதும் அவர்களைப் பயன்படுத்திய ஸ்தாபனங்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் ஊடாக யாரோ சில புத்திஜீவிகளையும் ஒப்பிட்டுள்ளனர். இதன் ஊடாக யாரோ சில புத்திஜீவிகளை எதிர்காலத்தில் காப்பாற்ற, தலைமைக்கு கொண்டுவர முயலும் வாதமே. இப் புத்திஜீவிகளை இயக்கங்கள் பயன்படுதத் முனைந்து தவறு இழைத்தனரோ அல்லது மாறாக இப்பிழைப்புவாத புத்திஜீவிகள் அவர்களைப் பயன்படுத்தினரா என்பது உயிர்ப்புக்கும் எமக்கும் இடையிலுள்ள கருத்தின் அடிப்படைப் பிரச்சனையாகும். இப் பிழைப்புவாதப் பிரமுகர்கள் கடந்தகால இயக்கங்களைப் பயன்படுத்தி அவ்வியக்கங்களின் செயற்பாட்டுக்கு தத்துவ மூலாம் பூசி, தாம் பிழைத்துக் கொண்டவர்களே. ஒருவன் திருந்த மாட்டான் என்று சமர் வாதிடவில்லை. ஒருவன் திருந்தும் போது கடந்தகால தனது நடவடிக்கைகள் மீது விமர்சனத்தை செய்ய வேண்டும். இல்லாதபோது மீண்டும் முற்போக்கை சீர்குலைக்க முனையும் ஒரு செயற்ப்பாடே. அதுவே இன்று நிகழ்கிறது. புத்திஜீவிகள் முதல் யாரை அணிதிரட்டுவது எனினும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம். அணிதிரட்டலுக்கு வர மறுக்கும் புத்திஜீவிகளை பயன்படுத்த வேண்டின் அவர்கள் மார்க்சியத்தின் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கவேண்டும். இதை மறுப்பின் பாலசிங்கம், நித்தி, வாசுதேவன், சிவராம், சுரேஸ்(ஈ-பி) ஜெயபாலன், சிவசேகரம், சூரியதீபன்...... எனத் தொடரும் பிழைப்புவாத சீரழிவுப் பிரமுகர்களே அமைப்பை பயன்படுத்தி போராட்டத்தை சீரழிப்பர். இப் பிழைப்புவாத சீரழிவுப் பிரமுகர்களே இன்று ஜரோப்பாவில் உயிரோட்டம் உள்ள உண்மைப் புரட்சியாளர்களின் குரல்களை அடக்க அவர்களை தமது மாணவர் ஆக்க முனைவது இன்று பலருக்கு புரிய வந்துள்ளது. இது உயிர்ப்புக்கு புரியாமல் போனதல்ல. மாறாக அவர்களின் அரசியல் இதைக் கோருகின்றது. தமிழீழப் போராட்டத்தை பொறுத்தவரை கோட்பாட்டு ரீதியில் பல பத்தாண்டுகள் பின்தங்கி நிற்பதாகவும், தேசியவாதம் தொடர்பாக 70 ஆண்டுகள் பின்தங்கி நிற்பதாக தமது அவலத்தை உண்மைக்கு மாறக கூறியுள்ளனர். இன்று கோட்பாட்டுப் பிரச்சனை மேலும் செழுமைப்படுத்தப்படும் தேவையுடன் மட்டும் தமிழ்ப்புரட்சியாளர்களின் கோட்பாட்டு வளர்ச்சியுள்ளது. இதை மறுக்க முனைவது ஏன் எனில் அடிப்படை மார்க்சியத்தை குழிதோன்டி புதைக்க முனையும் நோக்கிலேயே.

 

தேசியவாதம் 70 வருடங்கள் பின்தங்கி நிற்கிறோம் என்ற வாதம் லெனினின் அடிப்படை மார்க்சியம் மீது சேறடிப்பை நிகழ்த்த எழும் வாதமே. அது தான் இவ் உயிர்ப்பில் உள்ள கட்டுரைகளில் தேசியவாதம், பொருளாதாரம் இல்லையாம், மார்க்சியம் தேசியவாதத்தை கவனிக்கத் தவறிவிட்டதாம்------ என்ற இக் கருத்துக்களை காப்பாற்ற 70 வருட வளர்ச்சி இல்லை என அவலப்பட்டுள்ளனர். எமது விமர்சனம் தவறான வழியில் போகிறது எனின் அதைக் கோட்பாட்டிற்கு உட்பட்டு விவாதிக்க கோருகிறோம். அதை விடுத்து வெறும் சொற்கள் ஊடாக விமர்சிப்பின் எம்மால் தவறை இனம் கண்டுவிட முடியாது. அடிப்படை மார்க்சியத்தை வினாக்கள் இன்றி நிராகரிப்பின், வரட்டு வாதம் என வாதிடின் சமர் அதற்காக போராடும்.

 

மார்க்சியத்தை எந்தக் கோணத்தில் எந்த வர்க்கம் சார்ந்து எப்படிப் பயன்படுத்தினாலும் அதை அதன் ஊடாக சமர் அம்பலப்படுத்தும். கட்சி, முன்னணி, வெகுஜன ஸ்தாபன அமைப்பு வடிவங்கள் தொடர்பாகவும், அவைகளுக்கு இடையிலான உறவு தொடர்பாகவும், அவைகளுக்கு இடையிலான உறவு தொடர்பாக சமர் ஒரு கருத்தை கொண்டுள்ளது. இவ் அமைப்பு வடிவங்கள், கருத்துக்கள், விமர்சனங்கள், வீச்சுக்கள் என அனைத்தும் மாறுபட்டது என்பதை சமர் ஏற்றுக்கொண்டுள்ளது.

 

வர்க்கமற்ற குழு, பொருளாதாரவாதமற்ற தேசியவாதம், தேசியத்தை மார்க்சியம் விளக்கவில்லை (அதாவது நிராகரிக்கின்றது) எனத் தொடரும் மார்க்சிய விரோத கருத்துக்களை மார்க்சியத்தின் வளர்ச்சியான கருத்து என உயிர்ப்பு வாதிட முடியுமா என சமர் கோருகின்றது. இங்கு நாம் கருத்தையே கோருகின்றோம். இம் முற்போக்குள் உள்ள விமர்சனங்களை ஸ்தாபனமாக இணைய முடியாத கருத்துப்போக்கில் எப்படி விமர்சிப்பது. விமர்சிக்கக் கூடாது என்பது எந்த அரசியல்?.