04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

புலிகள் இன்னமும் தன் வர்க்கத்துக்கு துரோகம் செய்யவில்லை

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

 

அரசியலற்ற எம் சமூகத்தில், தனிமனித முனைப்புகள் அகவயமான முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. அகவயமான, மானசீகமான விருப்பத்தை, சமூகத்தின் பொதுக்கருத்தாக கருதி முடிவுகளை எடுக்கின்றனர். இவை குறுகிய தன் அரசியல் எல்லைக்குள் முடங்கி, வெம்பி வெளிப்படுகின்றது. இதையொட்டிய பல்வேறு விடையங்கள் மீதான அரசியல் கேள்விகள், விவாதங்கள், அவதூறுகள் மேலான தத்துவார்த்த விவாதம் இது.

 

புலி-புலியெதிர்ப்பு அரசியல் அடித்தளத்தில் மக்களை கொல்லுவதன் மூலம், புலியை பாதுகாத்தல் - புலியை அழித்தல் என்ற நிகழ்ச்சி நிரல் அரசியல் நெருக்கடியாகவில்லை.  புலி-புலியெதிர்ப்பு வெளிப்படையாக இல்லாத பொதுத்தளத்தில், அரசியல் நெருக்கடிகளை இது உருவாக்குகின்றது. பொதுவாக இது

 

1. புலிகளின் இறுதி முடிவு எப்படி அமையும்


2. புலியல்லாத சூழல் மீதான அரசியல் எதிர்காலம்


3. பலியிடவுள்ள மக்கள் மேலான தீர்வுகள்

 

நாம் இதை இனி ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

 

1.புலிகளின் இறுதி முடிவு எப்படி அமையும்

 

1. புலிகள் துரோகத்தை செய்வார்களா, சரணடைவார்களா?


2. புலிகள் போராடி மடிவார்களா?


3 புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா? 

 

இந்த கேள்விக்கு பதிலளிக்காது ஓடிமேய்கின்ற அரசியல் பம்மாத்துகள். வர்க்கம் என்று சொல்லி, முத்திரையை குத்தி விவாதத்தை தவிர்ப்பது. ஆனால் இவை ஒவ்வொன்றும், ஒரே விதமான அரசியல் விளைவை சமூகத்தில் ஏற்படுத்தாது.

 

இவைகளை தனித்தும் பிரித்தும் பார்க்காத வரை, இதை ஒன்றாக்கி குழைத்துப் பார்ப்பதில் ஏற்படும் அரைகுறை புரிதல், பல முரண்பாடுகளை உருவாக்குகின்றது. போராட்டத்தில் இருந்து அன்னியமான சூழலில், எழுத்து என்ற நிலைக்குள் வாசகர் என்ற எல்லைக்குள் நின்று அணுகுகின்ற மானசீகவாதம், குறுகிய குட்டையில் இறங்கி சேறடிக்க வைக்கின்றது. இதுவே மற்றொரு முரண்பாட்டின் அரசியல் துருவமாகின்றது.

 

1.1.புலிகள் துரோகம், சரணடைவு ஏற்படின் அரசியல் விளைவு என்ன? 

 

இதற்கு யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை. இதை விவாதிக்கும் அரசியல் துப்பு யாருக்கும் கிடையாது. நடந்த பின் அதை துரோகம் என்று சொல்லி தூற்றும், குதர்க்க அரசியல் மட்டும் எம்மிடம் உண்டு. இது சமூகத்துக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்று விவாதிப்பது, இன்று பிடிக்காத விடையமாக உள்ளது. கற்றல் கற்றுக்கொள்வதை மறுக்கின்றது. 

 

இங்கு நாம் துரோகம் என்று கூறும் போது, முன்பே துரோகியாக துரோகம் செய்த வண்ணம்  இருக்கவில்லையா என்கின்றனர். இப்படி விடையத்தை திரித்துக் காட்டவும், பார்க்கவும் விரும்புகின்ற குண்டுச்சட்டி அரசியலும்;, அறியாமையும். இது அரசியல் நிகழ்ச்சிகளை வேறுபடுத்தி பார்ப்பதை இது முற்றாக மறுக்கின்றது.

 

புலிகள் முன்பே தேசியத்துக்கு துரோகம் செய்த துரோகிகள்தான். இது எமது வர்க்க அரசியல் அடிப்படையிலான, மக்களின் நலனை முன்னிறுத்திய அரசியல் நிலை. ஆனால் புலிகள் தம் வர்க்க அடிப்படையில், மக்களை நலனை மறுத்தலித்த தேசியத்தையே முன்வைத்தனர். இதை அவர்கள் பாசிச மாபியா வழியில், முழு சமூகத்தின் மேலும் திணித்து, சமூகத்தை தமக்கு அடிமைப்படுத்தினர்.

 

இங்கு நாம் துரோகம் என்று சொல்வது, எமது வர்க்கக் கண்ணோட்டத்தில், பரந்துபட்ட மக்களின் தேசியத்தை மறுத்து நிற்பதைத்தான். ஆனால் புலிகளின் வலதுசாரிய பாசிச வர்க்க கண்ணோட்டத்தின் அடிப்படையில், அது இன்னமும் அந்த வர்க்கத்திடம் துரோகமாகவில்லை. இதை புரியாத மாங்காய் மடையர்களாய் இருந்து கொண்டு, அரசியலில் தத்திப்பிழைக்க எண்ணுவது தகுமோ! இன்று வலதுசாரிய தேசிய வர்க்க கண்ணோட்டம் தான், பரந்துபட்ட மக்களின் மேல் செல்வாக்கு செலுத்துகின்றது. அது இன்னமும் பரந்துபட்ட மக்களுக்கு துரோகம் செய்து, புலிகள் தன்னை அம்பலமாகவில்லை. எமது வர்க்க நிலைக்கு முன் அம்பலமானது, பரந்துபட்ட மக்களின் வர்க்க நிலைக்கு முன் அம்பலமாகவில்லை. இதை புரியாது நாம் அரசியல் கற்றுக் குட்டிகளாய், மார்க்சிய சொற்களை வைத்து அரசியல் செய்யமுடியாது.

 

எமது வர்க்கக் கண்ணோட்டம் என்பது பரந்துபட்ட மக்களின் தேசியத்துக்கு துரோகம் செய்வதை அடிப்படையாக கொண்டது. அது ஒரு அறிவுத்துறை சார்ந்த எல்லைக்குள், மீள முடியாது முடங்கிக் கிடக்கின்றது. வலதுசாரிய துரோகத்தை துரோகமாக, பரந்துபட்ட மக்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. எமது உண்மையை, கற்பனையாக சமூகம் ஏற்பதாக நாம் என்றும் கற்பிக்க முடியாது. அது உண்மை சார்ந்த, மானசீகவாதமாகும்.

 

எமது உண்மையை பரந்துபட்ட மக்கள் புலிகளின் துரோகமாக உணர்ந்து கொள்ள,

 

1. வர்க்க அரசியல் ரீதியாக அவர்களை நாம் வெல்ல வேண்டும்.

 

2. எதை தமிழ்மக்கள் தேசியமென்று இன்னமும் நம்பிக்கொண்டு நிற்கின்றனரோ, அதற்கு புலிகள் துரோகம் செய்ய வேண்டும். (இதை மறுப்பதா பாட்டாளி வர்க்க அரசியல்)

 

ஆகவே புலிகள் மக்களுக்கு துரோகம் செய்ய, மக்கள் நம்புகின்ற விடையங்கள் புலிகளிடம் உண்டு. இதை மறுப்பது, திரிப்பது மார்க்சியமல்ல. இன்று துரோகம் செய்து வாழ்வதா அல்லது தியாகத்துக்காக மடிவதா என்ற கேள்வி புலிக்கு முன்னுள்ளது. இதை பற்றி நாங்கள் என்ன நினைக்கி;ன்றோம்? பதில் சொல்ல, எந்த நாய் கூட கிடையாது. சரி, இந்த தியாகம் அல்லது துரோகம் அந்த வர்க்கத்துக்குதான். இதை யாரும் எமக்கு அரசியல் வகுப்பு எடுத்து, மீள சொல்லவேண்டாம். 

 

புலிகள் இந்த நெருக்கடியில் இருந்து மீள, அவர்கள் சரணடைவையோ துரோகத்தையோ செய்தால், தேசியம் மீதான சொந்த வலதுசாரிய பிரமை ஒரு பகுதி மக்கள் மத்தியில் இநருந்து களையப்படும். இப்படி இது அந்த மக்கள் முன் துரோகமாக மாறும். எமக்கு இது அப்படி இருக்காது என்று கூறுவது, நாங்கள் அந்த மக்களுடன் நிற்கின்றோமா இல்லையா என்பதைப்  பொறுத்தது. இதன் மறுபக்கத்தில் துரோகம் வலதுசாரியமாக, அதுவே குறைந்தது அடுத்த 30 வருடத்துக்கு விடுதலையாக காட்டப்படும். இது எம் மக்களை புதிய வலதுசாரி அரசியல் பிரமைக்குள் இட்டுச்செல்லும்.

 

இந்த இடத்தில் நாம் புலிகள் செய்யக் கூடிய துரோகத்தையும் சரணடைவையும் எதிர்க்கிறோம். மாறாக போராடி மடியும்படி கோருகின்றோம். புலியை பாதுகாக்க உள்ள ஒருவழியை (துரோக வழியை), அவர்களின் வலதுசாரிய தியாக அரசியல் வழி ஊடாகவே அடைக்கின்றோம். அதுதான் போராடி மடியுங்கள் என்று கோருகின்றோம். பரந்துபட்ட வலதுசாரி மக்கள் முன், புலி தன்னை பாதுகாக்க செய்யும் எந்த துரோகத்தையும், ஒரு துரோகமாக அம்பலப்படுத்துவோம். இப்படித்தான் மக்களை வலதுசாரிய பக்கத்தில் இருந்து, சரியான பக்கத்துக்கொண்டு வரமுடியும்.  

 

1.2.புலிகள் இறுதிவரை போராடி மடிவார்கள் என்றால்!

 

மக்கள் எதை விடுதலை என்று நம்புகின்ற வலதுசாரியதுக்கு துரோகம் செய்யாது மடிந்தால், அது தமிழ் மக்களுக்கு சாதகமானது. புலியில்லாத இந்த அரசியல் நிலை, பேரினவாதம் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வெல்ல முடியாத சூழலை உருவாக்கும். இந்த அபாயத்தை அரசும், ஏகாதிபத்தியமும் தெளிவாக உணருகின்றது.

 

இன்று ஏகாதிபத்தியம் முதல் அரசு வரை, புலியை அல்லது புலிக்குள் ஒரு துரோகக் கும்பலை எப்படி உருவாக்குவது என்ற அடிப்படையில் தான் அணுகுகின்றது. இப்படி புலி அல்லது புலிக்குள் துரோகம் செய்ய வைப்;பது, உலகமயமாக்கல் அரசியல் நிகழ்ச்சி நிரலில் அவசியமானதாக உள்ளது. இப்படி துரோகம் ஒன்று உண்டு. இதைச் செய்யாது போராடி மடிவதா, இல்லையா என்பதுதான் புலிக்குள் உள்ள அடிப்படையான முரண்பாடு. எப்படி துரோகத்தை செய்வது என்பதில், ஒரு இணக்கத்தை தாம் அல்லாத தரப்புடன் ஏற்படுத்த முடியவில்லை. இங்கு புலிக்கு அரசியல் மாற்றாக, துரோகத்துக்கு இணக்கம் காணமுடியாது போராடி மடிவதே அவர்கள் முன்னுள்ள தீர்வாகின்றது.

 

நாம் இந்த இடத்தில் அதன் துரோகத்தை எதிர்த்து, போராடக் கோருகின்றோம். இதுதான் போராடி மடியும் கோரிக்கையாகின்றது. இங்கு அரசும் ஏகாதிபத்தியமும் துரோகம் செய்து சரணடையக் கோரும் அரசியலை, நாம் சரியாக இனம் காணவேண்டும். நீண்டகால நோக்கில், தமிழ் மக்களை தம் வலதுசாரி அரசியல் எல்லைக்குள் வைத்திருக்க, இவர்களுக்கு இந்த அரசியல் துரோகம் அவசியமானது. இதற்கு புலித்தலைமை உடன்பட மறுத்தால், தமிழ் மக்களை தனது வலதுசாரி அரசியல் அடிப்படையில் வெல்ல முடியாது. இந்த வகையில் இதை நாம் இனம் காண வேண்டும். புலியின் துரோகத்துக்கு பதில், போராடி மடி என்ற அரசியல் கோசத்தை இதனடிப்படையில் நாம் முன்வைக்கிறோம்.

 

பி.இரயாகரன்

13.04.2009

 


பி.இரயாகரன் - சமர்