இன்று தமிழ் மக்களின் தலைவிதி, தன் தொங்கல் சீலையை நீட்டி மடிப்பிச்சை கேட்கிறது. மக்கள் சக்தி என்னும் கோட்டையில் நம்பிக்கை இழந்த ஒரு போராட்டம், மக்கள் மட்டுமே வரலாற்றை உந்தித் தள்ளுபவர்கள் என்ற உண்மையை உதாசீனம் செய்தவர்கள் இன்று அவ் வரலாற்றாலேயே பரிதாபமாகத் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள்.

 

இந்தப் பரிதாப நிலைக்கு புலிகளை மட்டும் பொறுப்பாளி ஆக்கி விடுவது, சரியாகாது. இன்று புலி எதிர்ப்புப் பேசிக்கொண்டு, இன்றைய தமிழ் மக்களின் அவலநிலையில் இருந்து தமது வரலாற்றுக் கறைபடிந்த கைகளை புலியின் இரத்தத்தில் கழுவ நினைக்கின்ற இவர்கள் ஒரு முறை தமது வரலாற்றை நேர்மையாகத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

 

அன்று வீதி வீதியாகக் குண்டுகளைப் புதைத்து வைத்து வெடிக்கச் செய்து, இராணுவ வண்டிகளை புரட்டியவர்கள் புலிகள் மட்டுமல்ல, இன்றைய புலி எதிர்ப்பு இயக்கங்களும் தான்! இவ்வகையான இயக்கத் தாக்குதலில் ஈடுபடாதவர்களை  - உங்களால் இதைச் செய்யமுடியாதா? - எனக் கிண்டல் செய்தது இவர்களும் சேர்ந்துதான். இந்த வெற்று வீரசாகசப் பேச்சுக்கும், மக்களின் விடுதலை பற்றிய சரியான உணர்வுக்கும், அதன் நடைமுறைத் தெளிவுமற்ற பேதமைத்தனத்துக்கும் இன்று வெட்டவெளிச்சமான பதில் கிடைத்துள்ளது.

 

அன்று இவர்கள் எல்லோரும் இதன் மூலமாக இன்று எதைச் சாதித்துள்ளார்கள் என்பதற்கு, இன்று மக்கள் முன் பதில் சொல்லியே தீரவேண்டிய அவசியத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை, புலி எதிர்ப்பின் ஊடாக சுலபமாக இவர்களால் இதை மறைத்து விட முடியாது! அன்று கூட்டணியினர்  வாய்ப்பந்தல் மூலமாக மக்களை உசுப்பியதும், பின்னர் பதில் சொல்ல முடியாமல் உங்கள் முன் நின்றதும், மறந்துவிட முடியாத படிப்பினைகள். அதேபோல் இன்று நீங்கள் நிறுத்தப்பட்டுள்ளீர்கள்! என்பதுதான் உண்மை.

 

அன்று – கெரில்லா - தாக்குதல் என இவர்கள் செய்த தாக்குதல் எல்லாம், அன்று படுத்த பாய்களுடனும், உடுத்த உடுப்புடனும், கோயில்களிலும், பள்ளிக் கூடங்களிலும் அகதிகளாக்கியது. சொந்த மண்ணிலேயே அன்றே இந்த அவலம் அரங்கேறியது! அன்று வீதிக்குண்டு தாக்குதல் நடந்த இடங்களில் வீடுகள் எரிக்கப்பட்டும், சொத்துக்கள் அழிக்கப்பட்ட போதும், புலிகள் உட்பட இன்று சனநாயம் பேசும் எந்த புலி எதிர்ப்பு இயக்கமும் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் இந்தப் போராட்டம் மக்களது விடுதலைக்கான அவர்களது சொந்தப் போராட்டமாக அன்று தொடக்கம் இன்று வரை இருக்கவில்லை. அன்று படுத்த பாய்களுடனும், உடுத்த உடுப்புடனும், கோயில்களிலும், பள்ளிக்கூடங்களிலும் அகதிகளாக்கிய மக்களுக்கு இன்றுவரை எந்த சனநாயகமும், சமாதானமும் உருப்படியாக உதவவில்லை. இன்று வடக்கில் பறிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு விவசாய நிலங்கள் இன்று விளைச்சளைக் காணவில்லை. ஆனால் கிழக்கில் 30 வீதம் விளைச்சல் பற்றி பேசப்படுகிறது. ஆனால் இது எந்த களஞ்சியத்தில் திரண்டது என்பதும், ஏன் அரசின் உலக வங்கிக் கடன் கூடி வருகிறது என்றும் இவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். இதற்கும் அதற்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? என்று கேட்டால் - புலி எதிர்ப்பை மட்டும் பதிலாக இறுக்குவார்கள். இதுதான் அவர்களின் அரசியல்!

 

அன்று மதவுக்குள் மறைத்து வைத்த குண்டுகளை அகற்றும்படி  மக்கள்,  இயக்கங்களுடன் முரண்பட்ட போது, அவர்களை அடித்து நொருக்கவும், ஆயுத முனையில் தார் வீதியிலே கிடத்தி அழுத்தி சித்திரவதை செய்ததும் எமது சொந்த வரலாறு! இந்தக் குண்டு வெடிப்புக்கள் இராணுவத்திடம் தாம் ஆயுதத்தைக் கைப்பற்றும் தந்திரம் எனக் கூறி நடித்தவர்கள் தான் இவர்கள் எல்லோரும். ஆயினும் இத்தாக்குதல் எதற்கானது என்பதும், இவை தமிழீழப் போராட்டத்திற்கு  எந்தளவுக்கு உபயோகமானவை என்பதும் இன்று நடைமுறை என்னும் உரைகல்லில் தெளிவாகியுள்ளது. திக்குத் திசை தெரியாது அன்று ஓடத் தொடங்கிய மக்கள், இன்று ஓடவும் முடியாமல் வாழவும் முடியாமல் திண்டாடுகின்றனர். இவர்களின் மரணமும், வாழ்வும் - இனப் பெருமையிலும், புலி எதிர்ப்பிலும் கட்டி ஆடவிடப்பட்டுள்ளது.

 

வெண் நிலவே வெண் நிலவே விண்ணைத் தாண்டி வருவாயா ---

 

இது இன்று வன்னியில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல். பாதுகாப்பு பிரதேசத்திலிருந்து மக்களை வெளியே வரும்படி இராணுவம் ஒலிபெருக்கிக் கொண்டிருக்கும் பாடல் இது. இங்கே வேடிக்கை என்ன வென்றால் பாதுகாப்புப் பிரதேசம் என்று நம்பி அதற்குள் வந்தடைந்த மக்களின் நம்பிக்கை இன்று அர்த்தமற்றுப் போய்விட்டது. இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்புப் பிரதேசம் என்ன இலட்சணமாகப் பேணப்பட்டது என்பது இந்த யுத்தத்தின் இலட்சணத்தை மேலும் அம்மணமாக்கி விடவில்லையா? இந்த பாதுகாப்புப் பிரதேசத்தில் புலிகள் புகமுடியும் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியாதா? அப்படியாயின் இதற்கான மாற்று வடிவங்களை அரசு ஏன் முன்கூட்டிச் செய்யவில்லை. யுத்தத்தின் ஊடாகத்தான் பாதுகாப்புப் பிரதேசத்தில் தஞ்சமடைந்த மக்களையும் மீட்டெடுக்க வேண்டுமென்பதையும், அதன் அர்த்தசாத்திரத்தையும் ஏன் எங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

புலிகள் மக்களை யுத்தப்பிரதேசத்தில் இருந்து அகற்றி விடவேண்டுமென்றும், அதற்கான கோரிக்கையை தமிழர்கள் முன்வைக்க வேண்டுமென்றும் நாம் வலியுறுத்தி வந்தோம். இன்று பாதுகாப்புப் பிரதேசமே யுத்தப் பிரதேசமாக மாறி விட்டது. யுத்தத்தை விரும்பாத இந்த மக்களின் மீது யுத்தம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு -  புலிகளின் நிலையை எப்படிப் பார்ப்பது. இங்கே மக்களின் நலன் படிப்படியாகக் குறைக்கப்பட்டு யுத்தத்தின் தேவை அதைவிட மேலான ஒன்றாக உருவாக்கப்படுகிறது. புலிகளின் நிலைப்பாடும், அரசினது நிலைப்பாடும் மக்கள் நலன்களின் மீது தூவப்படுகிறது. எவ்வளவு அருமையான இந்த மக்களின் அவலமான மரணங்களிலும், அந்தப் பிணக்குவியலின் மீதும் அரசு - புலிகளின் நிலைப்பாடுகளும், வெற்றி - தோல்விகளும், வீரம், தியாகங்கள், துரோகங்கள் அனைத்தும் அலசப்படப் போகிறது. இந்த மக்களின் மனங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளில் வடிக்க முடியாத சோககீதங்களோ எந்த மனிதனின் காதிலும் ஒலிக்கவில்லை!

 

என்ன நடக்குது இங்கே

 

இன்று புலம் பெயர் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்கள் கொதித்துப் போய் உள்ளனர். எங்கும் உண்ணாவிரதங்களும், எதிர்ப்புமாக - ஏகாதிபத்தியங்கள் தலையிட்டு புலிகளையும் தமிழீழத்தையும் தமக்குத் பாதுகாத்துத் தரவேண்டுமென்று கோருகின்றனர். அரசுக்கு ஆதரவான போராட்டங்களும் தாராளமாகவே நடக்கிறது.  மறுபுறத்தே  - சமர் -  புலிகள் துரோகம் இழைக்காது போரிட்டு மடியவேண்டும் என்று கோரிவருகிறது. சுதேகு வின் அறிவுக்கு - சமர் - இன் கோரிக்கை சரியானதா? என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. அது சுதேகுவின் அறிவின் குறைபாடாகக் கூட இருக்கலாம். எதுவாக இருப்பினும் -சமரை- புலிகளாக முத்திரை குத்துவதையும் சுதேகுவால் ஏற்றுக்கொள்ள முடியாது. சுதேகுவைப் போட்டு அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இதுதான்.

 

1. புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும்?

 

2. வன்னி மக்களின் நலனா? அல்லது ஏகாதிபத்தியத்துக்கு - அரசுக்கு எதிரான புலிகளின் நிலைப்பாடு, இதில் எதை முதன்மைப்படுத்துவது?

 

முதலில் இரண்டாவது கேள்வி தொடர்பாக கொஞ்சம் பேசவேண்டும். இன்று வன்னிக்குள் எஞ்சியிருக்கும் மக்கள் அனைவரும் இந்த யுத்தத்திலிருந்து பாதுகாப்புத் தேடி, பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் வந்தவர்களே! இவர்கள் யுத்தத்தை விரும்பவில்லை. இதை மனச்சாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசும் கூட இம்மக்களின் வரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதற்குள் புலிகள் இருக்கிறார்கள் என்பதற்காக, அரசின் வார்த்தைகளை நம்பி - பாதுகாப்புப் பிரதேசம் என்று - நம்பி வந்த இம்மக்களின் நம்பிக்கை மீது, மண்தூவும் விதமாக - ஒரு குண்டைக்கூட - அம்மக்கள் மீது அரசு ஏவக் கூடாது. இதைப் புலி எதிர்ப்;பாளர்கள் கூட ஆதரிக்கக் கூடாது!

 

புலிகள் யுத்தத்தை விரும்பாத இம்மக்களுக்குள் ஊடுருவி இருப்பது அதர்மத்தனம். இப்படி ஊடுருவி மக்கள் விரும்பாத நிலையில், இவர்கள் துவக்குத் தூக்குவதை ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையாகிலும் சுதேகுவால் இதைச் சரியென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புலிகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்குமான முரண்பாடு, தமிழ் தரகு முதலாளித்துவத்தில் புலிகளின் ஏகபோக பங்குக்கும் அதை நிராகரிக்கும் சிங்களத் தரகு முதலாளித்துவத்தின் உள் முரண்பாட்டின் - ஏகாதிபத்தியத்தின்- சார்புத்தன்மைக்குமான வெளிப்பாடு என்றே சுதேகு கருதுகிறான். ஏனெனில் புலிகள் வெளிநாட்டுப் புலிகளை வைத்தே ஏகாதிபத்தியத்திடம் தம்மைக் காப்பாற்றும் படி, வெளிநாடுகளில் போராடுகின்றனர். இவ் எதிர்மறை எவ்வாறு சாத்தியப்படும். இந்த 30 வருட காலத்தில் புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தேசிய மூலதன யுத்தத்தை புலிகள் என்றும் நடத்தி இருக்கவுமில்லை.

 

புலிகள் ஏகாதிபத்தியத்துடன் இணைந்து இனியும் துரோகம் இளைக்காது, போரிட்டு மடிவதே சிறந்தது என - சமர்- வாதிடுகிறது. இது சரியோ பிழையோ என சுதேகுவுக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த யுத்தத்தை விரும்பாத மக்களுக்குள் இது நடப்பது மட்டும் சுதேகுவுக்குச் சரியாகப் படவில்லை. புலிகள் இவ்வாறு செய்யாது விட்டால், 30 வருடத்துக்கு இத் துரோகம் தொடரும் என்று - சமர் - கூறுகிறது. புலிகள் செத்து மடிவதால் இவ்வர்க்கம் அழிந்து போகாது. அவ்வாறானால் இதன் எதிர்மறை எவ்வாறு அமையும்?

 

புலிகளின் மரணங்கள் - துரோகத்தால் - கொச்சைப்படுத்த முடியாதது உண்மைதான். இதேபோல ஏனைய விடுதலை இயக்கத்தினரதும், இராணுவத்தின் மரணங்களும் கொச்சைப்படுத்த முடியாதவை! ஆனாலும் இவ்விரு அதிகார யுத்தத்தில் பலியாகிப் போன அனைத்து இலங்கை மக்களும், அங்கவீனமான, விதவைகளான, மனநோயாகிகளான, அநாதைகளான, கால்நடைகள் அழிந்து போன, சூழல் மாசுபட்ட, இயற்கையுடன் அன்னியப்பட்டுப் போன, அகதிகளாக்கப்பட்ட, இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்குமான பாதிப்புக்கள் உட்பட ....... அனைத்துக்கும் இவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இவ்விரு அதிகார வர்க்கத்தினரின் மரணங்கள் பூசிப்பதற்கோ, போற்றுதற்கோ, வணக்கத்துக்குரியதோ அல்ல. இது முழு இலங்கை மக்களினதும் எதிர்காலப் பாடத்துக்குரியது மட்டுமே. ஏனெனில் மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்கும் சக்திகள். மக்கள் தமது வரலாற்றை மக்கள் நலன்களில் மட்டுமே ஏற்றுக் கொள்வர்.

 

சரி, இனி புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தால், என்ன நடக்கும். இது ஒரு வில்லங்கமான கேள்விதான். ஏனெனில் இது நடப்பதற்கான சாத்தியங்கள் இந்த நிமிடம் வரை அரிதான சாத்தியங்களையே கொண்டுள்ளது. எவ்வாறு புலிகள் இறுதிவரை போரிட்டு மடிவதும், அல்லது ஆயுதத்தை கீழே வைப்பதும் உறுதியாகச் சாதியப்பாடற்ற சொல்ல முடியாத ஒன்று என்பதே சுதேகுவின் நிலை. புலிகளின் வர்க்க நிலை ஊசலாடும் நிலை என்பதால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இருப்பினும், புலிகள் வன்னி மக்களை யுத்தப் பிரதேசத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் சுதேகுவின் கருத்தும், சமரின் கருத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது. இந்தக் கோரிக்கையை சர்வதேசங்கள் வலியுறுத்திய போதும், எமது கருத்து மக்கள் நலனில் எழுப்பப்பட்டது. இதேபோல இப்போ, புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பது நல்லது என்பது, சுதேகுவின் வன்னி மக்களின் நலன் சார்ந்த கோரிக்கை. இதுவே ஏகாதிபத்தியங்களின் கோரிக்கையும் ஆக இருக்கிறது.  - சமரின் - கோரிக்கை மாறுபடுகிறது. (சமர் வேறு ஒரு கோணத்தில் சிந்திக்கிறது.) முன்பு மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில், சமாந்தரமாக வந்த சமர், ஏகாதிபத்தியத்துக்கு ஏதிரான முடிவு இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்கிறது.

 

புலிகள் மக்களை அகற்றி விட்டு, இறுதிவரை போரிட்டு மடிய வேண்டும் என்பதைத் தான் - சமர் -கோரியது. இதற்கு மாறாக புலிகள் இன்று வன்னி மக்கள் தம் பாதுகாப்பை தேடிய இடத்துக்குள் புலிகள் ஊடுருவி உள்ளனர். இந்த நிதர்சனத்தில், புலிகள் போரிட்டு மடிய வேண்டும் என்பது சரியானதா என்பது சுதேகுவுக்குப் புரியவில்லை. ஏனெனில் இதனால் வன்னி மக்களின் பேரழிவை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

 

நடக்க முடியாத ஒன்றுதான், ஆனால் புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தால் எவ்வளவோ மனித அவலத்தைத் தடுக்கலாம். ஏனெனில் இது எமது மக்கள். குறிப்பாக சிறுபான்மை மக்கள். இந்த மக்களின் அழிவு எண்ணிக்கையில் குறைந்தளவாக இருந்தாலும், சிறுபான்மை மக்களின் சுய அரசியல் சமத்துவக் கோரிக்கையில் பேரழிவாகவே கணக்கிடப்படவேண்டும்! சுதேகு அதிகளவில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. சுதேகு அழுத்திக் கூற விரும்புவது: புலிகள் விட்டுக் கொடுக்காது இவ் யுத்தத்தில் இறுதிவரை போரிட்டு மடிவதால் கிட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை? விடவும், சிங்கள மக்களின் சிந்தனையில் மூழும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு சக்தி வாய்ந்ததும், சிறுபான்மை மக்களின் பேராயுதம் என்பதும் சுதேகுவின் தாழ்மையான கருத்து.

 

இன்று இந்த வன்னி யுத்தத்தில் இருந்து தப்பி வரும் மக்களின் மன நிலை, மற்றும் உடல் ரீதியான ஆறாத வடுக்கள்... எல்லாம் அரச எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்குமா? என்றும் அதற்கான அரசியல் விழிப்புணர்வை இவர்கள் பெற்றிருக்கிறார்களா என்பதும் சந்தேகமானதே. ஏனெனில் இதற்கு முன்னர் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட யாழ் மற்றும் கிழக்கு மக்களின் மனநிலையும், உணர்வுகளும் அரசுக்குச் சாதகமாவும், புலிகளுக்கு எதிராகவும் தான் யதார்த்தத்தில் அமைந்திருந்தது. இதற்கு இராணுவத்தின் புதிய அணுகுமுறையும் பிரதான காரணம் என்பதை நாம் நிராகரிக்க முடியாது. இவ்வாறான புதிய வடிவத்துக்கு காலனித்துவத்தின் மிக மிலேச்சத்தனமான அடக்குமுறையின் புதிய மூடு திரைகளே இவைகளாகும். இன்றைய யுத்தத்தில் விடுவிக்கப்படும் வன்னி மக்கள் மிக நீண்ட காலமாக புலிகளின் பாசிச கெடுபிடிகளுக்குள்ளும், அதன் அடக்கு முறைக்குள்ளும் வாழ்ந்து வந்ததால், இவர்களின் உணர்வும் அரசு எதிர்ப்பைத் தான் கொண்டிருக்கும் என்று அறுதியிட்டு கூறிவிடமுடியுமா என்பது தெரியவில்லை.

 

-- தனி நபர்களைப் பழிவாங்கும் நோக்கம் புரட்சி நடவடிக்கைகளின் அம்சமாகாது. ஏகாதிபத்திய இராணுவத்தின் சிப்பாய்கள்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள். அவர்கள் மனித இயந்திரங்கள். எவ்வித ஈவிரக்கமும் இன்றி - கட்டுப்பாடாகக் - கொலை செய்வதற்கு மட்டுமே கற்பிக்கப்பட்டவர்கள் அவர்கள். நாங்கள் மனிதனை மதிக்கிறோம். மனித உயிர்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நேசிக்கிறோம்--

 

 நன்றி: பகத்சிங்கின் நீதிமன்ற உரையிலிருந்து ..


சுதேகு
11.04.09