மார்க்ஸியத்திற்கு முன்பு இருந்த சித்தாந்தங்களும், மார்க்ஸியத்திற்குள் இருக்கும் போலி மார்க்ஸியவாதிகளின் மார்க்ஸியத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் பற்றி "அரசாங்கமும் புரட்சியும்" என்ற புத்தகத்தில் லெனின் எழுதுகிறார்:

 

"வர்க்கப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ளும்பொழுது தொழிலாளி வர்க்கத்தின் ´சர்வாதிகாரம்´ என்ற கொள்ளையையும் ஏற்றுக்கொள்பவனே மார்க்ஸிஸ்ட். இந்த கருத்தோடுதான் ஒரு மார்க்ஸிஸ்டுக்கும், நடுத்தரவர்க்கத்தினருக்கும் இடையே இருக்கும் ஆழமான வித்தியாசங்கள். நாம் எப்போதும் இந்த கருத்துக்களுடனே மார்க்ஸிஸ்ட்டுக்களை சோதிக்க வேண்டும்."

 

தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்னும் கொள்கைதான்


´மார்க்ஸியத்தின் நேரடி - மறைமுக விரோதிகளுக்கு´ பெரிய தடையாக இருந்தது. இதற்கு உதாரணமாக தொழிற்சங்க விமர்சகர்களின் மார்க்ஸ் குறித்த விவாதங்கள் சில எடுத்துக்காட்டலாம்.

 

1899-இல் எட்வர்ட் பெர்ன்ஸ்டீன் "சோஷியலிசத்தின் முன்தேவைகள்" என்ற புத்தகத்தை எழுதினார். நவீன சோஷியல் டெமாக்ரஸியின் வேத புத்தகமாக கருதப்பட்ட அதில் தொழில் ஜனநாயகம் சமூக சீர்திருத்தங்கள் மூலம் சோஷியலிஸத்தை முன்னெடுப்பது மற்றும் தொழிற்சங்கங்கள் மூலமாக தொழிலை ஜனநாயகப்படுத்துவது பற்றியும் பெர்ன்ஸ்டீன் எழுதியிருக்கிறார். அப்புத்தகத்தை எழுதுவதற்கு தொழிற்சங்கங்களின் உதவியை கோரிய போது மார்க்ஸியத்திற்கு எதிராக இருந்தவர்களும், மார்க்ஸியத்தில் இருந்து பிரிந்த தொழிற்சங்கங்களும் பெர்ன்ஸ்டீனை தலைவராகவும், தத்துவகர்த்தாவாகவும் பகீரங்கமான அங்கீகரித்தன.

 

மார்க்ஸியத்திற்கு எதிரான தங்களுடைய கொள்கை வித்தியாசங்களை இரகசியமாய் வைத்திருந்த போலி மார்க்ஸியலிஸ்ட் பெர்ன்ஸ்டீனை உபயோகித்துக் கொண்டனர். சோஷியலிசத்தின் முன்தேவைகள் புத்தகம் வெளியான பின் மார்க்ஸியத்தை ஜெர்மனைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இப்புதகத்தை முன்கோலிட்டு மார்க்ஸியத்தை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். இவர்கள் (தொழிற்சங்கங்கள்) கொள்கை அடிப்படையில் எதையும் விவாதிப்பதில்லை. மார்க்ஸிய போதனைகள் நடைமுறையில் திருத்தம் செய்ய முயன்றார்கள். முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை மார்க்ஸிய சித்தாந்தத்திற்கு எதிராக தலைக்கீழாக புரட்டி போட்டார்கள். சில திரிபுவாதங்களை இங்கே சுட்டிக்காட்டலாம்.

 

1. வர்க்கப்போராட்ட தத்துவம் :

 

தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்தபின் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டபின் வர்க்கப் போராட்டத் தத்துவம் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது.

 

2. புரட்சி :

 

இன்றைய நிலைக்கு (1899) தேவையில்லாதது புரட்சி என்பது. சமூக வளர்ச்சியின் தாழ்ந்த மட்டத்திற்கு வேண்டுமானால் அது தேவைப்படலாம். ஆனால், ஜனநாய அரசாங்கம் புரட்சிகளையும் புரட்சிகரமான போராட்டத்தையும் விலக்கி விடுகிறது.

 

3. தொழிலாளி வர்க்கம் :

 

சமாதானமாக அமைதியான முறையிலேயே முதலாளித்துவத்திலிருந்து சோஷியலிஸத்தை அடைய ஜனநாயகம் உத்திரவாதம் அளிக்கிறது. எனவே தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது இன்றை கோஷமாக இல்லை. அது தேவையும் இல்லை. அப்படி இருக்கவும் கூடாது.

 

4. தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி :

 

தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கி நடத்த வேண்டுமென்பது ஒருவேளை மார்க்ஸ் சகாப்தத்தில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இன்று தொழிற்சங்கங்கள் பயன்படத்தக்க முறையில் வளர்ச்சியடைய தொழிற்சங்கம் கட்சி அரசியலைப்பற்றி நடுநிலைமை வகிப்பதே நல்லது. அதன்மூலமே தொழிற்சங்கங்கள் வளர முடியும்.

 

இப்படி மார்க்ஸிய சித்தாந்தத்தில் இருந்து பல கொள்கை சார்ந்த கருத்துக்களை போலி மார்க்ஸியவாதிகள் திரிபுவாதம் செய்தனர்.

 

"போராடு அப்பொழுதுதான் ஏதாவது வெற்றியடைய முடியும்!" என்னும் மார்க்ஸியத்தின் வார்த்தைகளுக்கு நேர்மாறாக இன்றைய நவீன கொள்கை சொல்கிறது... "போராடாதே, காத்திரு, பொறு, தேவையானவை நமக்கு கிடைக்கும். அது ஜனநாயகத்தின் பெயரால் கிடைக்கும். அதற்கான உரிமைகள் நமக்கிருக்கிறது காத்திரு..."

 

இது எப்படி இருக்கிறது?

 

சரித்திரத்தில் விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட தலைவர்களுடைய கொள்கைகளும், புரட்சி சிந்தனைகளையும், போதனைகளையும் எப்படி ஜனநாயகத்தின் பெயரால் தந்திரமாக தகர்க்க முற்படுகிறது. பொய்ப்பிரசாரங்கள், அவதூறுகள், கருத்து திரிபுவாதங்கள் மூலமாகவே ஒடுக்கப்பட்டவர்களுக்கு திருப்தியளிக்கும் விதத்தில் புரட்சி கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும், அதனுள் ஊடுருவி கருத்துக்களின் வீரியத்தை காயடிக்கும் வேளையில் அடியைப் பிடிக்கும் போலிகளால் சமூகத்திற்கு மக்கள் நலன்சார்ந்தவைகளுக்கு என்ன செய்துவிடக் கூடும்?

 

போலிகளைப்பற்றி லெனின் சொல்கிறார் :

 

"மகத்தான புரட்சி வீரர்களின் வாழ்நாட்களில் அடக்கும் வர்க்கம் அவர்களை ஈவு இரக்கமின்றி கண்டிக்கிறது. அவர்களுடைய போதனைகளை சமூகத்திற்கு விரோதமானது என்கிறது. ஆத்திரத்தால் துவேஷிக்கிறது. கருத்து திரிபுவாதம் செய்ய பொய்ப் பிரசாரம் செய்ய முற்படுகிறது. அவதூறு செய்வதற்காக இயக்கங்கள் நடத்துகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு திருப்தியளிக்கும் பொருட்டு, ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றும் பொருட்டு, புரட்சி வீரர்கள் இறந்த பின் அவர்களை பூஜிக்கத்தக்க விக்கிரகங்களாக்கி, அவர்கள் பெயரிலேயே புனிப்படுத்தப்படும் கருத்து திரிபுவாதகளை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் புரட்சிகரமான சித்தாந்தங்களின் உண்மையான கொள்கைகளின் கூர்முனையை மழுங்கடித்து, ஆண்மையை அழித்து கொச்சைப்படுத்துகின்றனர். நிகழ்காலத்தில் மார்க்ஸியத்தை களங்கப்படுத்தி இழிபடுத்தும் வேளையில் பூர்ஷீவா வர்க்கமும், தொழிலாளி இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் சேர்ந்து முனைந்திருக்கின்றனர். மார்க்ஸிஸ்ட் போதனைகளின் புரட்சிகரமான அம்சத்தையும், புரட்சிகரமான ஜீவனையும் போலிகள் புறக்கணிக்கின்றனர், திரித்துவிடுகின்றனர். பூர்ஷீவா வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடியதாய் இருப்பதை அல்லது ஒப்புக்கொள்ளக் கூடியதாய் தோன்றுவதை அவர்கள் முன்னணிக்கு கொண்டு வந்து போற்றிப் புகழ்கின்றனர். பின்புறமோ அவர்களுக்கு குழிபறிக்கின்றனர்."


தமிழச்சி
03.04.2009