ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த மனித உடலின் வயிற்றுப் பக்கத்தில் பெருத்து ஊதிப்போய் கிடக்கிறது. சில நாட்களாகவே ஆற்றில் கிடந்திருக்க வேண்டும். சற்று தூரத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆற்றின் ஓரங்களில் அரையும் குறையுமாக வெந்தும் வேகாத நிலையில் இருக்கும் பிணங்களை நாய்கள் கடித்து தின்றுக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் உலகில் வேறு எங்கும் பார்த்துவிட முடியாது. இந்து மதத்தின் புனிதத்தலமாகிய காசியில் தான் இவற்றையெல்லாம் பார்க்கும் பாக்கியம் நமக்குண்டு.

 

மக்கள் அந்த தண்ணீரை புனித நீராக அள்ளி அள்ளி குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள், கும்மாளமடிக்கிறார்கள், பக்தி பரவசத்தின் உச்சத்தை அடைகிறார்கள். அந்த தண்ணீரை புனித நீராக எது அடையாளப்படுத்துகிறது இவர்களுக்கு? வீட்டில் குடிக்கும் நீரில் சிறு பூச்சி கிடந்தாலும் தண்ணீரை ஒதுக்கும் நாம் காசியில் பிணங்கள் மிதக்கும் தண்ணீரை வயிற்றுக்குள் அனுப்ப எந்த சிந்தனை உந்துகிறது?

 

உலகில் உள்ள மோசமான சுகாதாரமற்ற நதிகளில் கங்கை நதியை முதலிடத்தில் வைத்திருக்கிறது அறிவியல். மதமோ அதே நதியை புனிதம் என்கிறது. மக்களோ கண்ணுக்கு தெரியும் அகோரக்காட்சிகளைக் கண்டாலும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு மனிதத்தை தொலைத்து இருக்கிறார்கள் காசியில். அப்படினால் மதம் எதை சொல்கிறது காசியில்?

 

புனிதங்களை பற்றி காசியில் பேசுகிறோமா? நம் சுயநலத்தை முன்னிருத்தி செயலாற்றுகிறோமா? சட்ட விரோதமாக நடைப்பெறும் செயல்கள் இங்கு மிக அதிகம். மதத்தின் பெயரால் அதை செய்வதால் அரசாங்கம்

அங்கீகரிக்கின்றதா? ஊழல் எங்கு பார்த்தாலும் கபோதிகளின் அட்டகாசங்கள். அதுவும் சாமியார்கள் வடிவில். காசியில் பல வகைகளில் சாமியார்கள் இருக்கிறார்கள்.

 

மொட்டையடித்த சாமியார்கள், நீண்ட முடிகளை சடைகள் சடைகளாக கட்டி தொங்கவிட்டிருக்கும் சடைசாமியார்கள், பிச்சைக்கார சாமிகள், கருப்பு சட்டை போடும் அகோரிகள்; இவர்கள் காளியை கும்பிடுகிறார்கள். பிணங்களை சாப்பிடுவதும், இறந்த உடலுடன் கலவி செய்வதும் இவர்களின் சாதாரண செயல். இன்னொரு சாமியார் வகையினர் 'நாகா பாபாக்கள்' இவர்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பவர்கள். உடல் முழுவதும் பிணத்தின் சாம்பலை பூசிக் கொண்டு திரிவார்கள். இந்த சாமியார்களுக்கு சட்டென கோபம் கொள்ளும் சுபாவம் உண்டு. நாகரிகமாக 'உக்கிர சாமியார்கள்' என்பார்கள். போதை சாமியார்கள் அதிகமாக இங்கு இருக்கிறார்கள். காசியில் இருக்கும் சந்து பொந்து நகரங்களில் மற்றும் பாழடைந்த குகைக்குள்ளும் இவர்கள் இருக்கிறார்கள்.

 

காசி முழுவதும் போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. அதனால் தான் இந்த போதை நகரத்தை ‘ஆனந்தகானனம்’ என்றும் சொல்கிறார்கள். கஞ்சா குடிக்க உபயோகப்படுத்தும் 'சிலும்பி' என்னும் பொருளை காசி முழுவதும் விற்பதை பார்க்கலாம். ஊசி மூலம் உபயோகிக்கும் மார்பின், எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் பிரவுன்சுகர், தழைகள் மூலம் உபயோகப்படுத்தும் போதை பொருட்கள் என அத்தனை போதைகளும் இங்கே சர்வசாதாரணமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் போதை பொருட்கள் ஆபத்தானதும், சட்ட விரோதமாகவும், சமூகத்திற்கு தீங்கு தரக்கூடியதுமாக கருதிக் கொண்டிருக்க இந்தியாவின் புனிதத்தலத்தில் மட்டும் இது புனிதமானதா? வேறு எந்த மதத்தின் புனித தளங்களும் இந்தளவுக்கு கேவலமான காரியங்கள் நடக்காதது ஏன்?

 

போதை பொருட்கள் அதிகமாக காசியில் கிடைப்பதாலோ என்னவோ உலகில் பல பகுதிகளில் இருந்தும் ஹிப்பிகள், தறுதலைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் இங்கே வருகிறார்கள். போதைகளில் பகல் இரவு பார்க்காமல் கலவிகள் சாதாரணமாகவே குகைகளில் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆண் உறைகளுக்கெல்லாம் அங்கே நிதானம் இல்லை. அதை உபயோகிக்கும் அளவுக்கு அவர்களும் மனித தன்மையில் இல்லை. காசியின் வாழ்க்கை முரணானது. அதனாலே அது புனிதமாகிறதா?

 

இவை எல்லாவற்றையும் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் இந்தியாவில் பல பாகங்கில் இருந்தும் புனிததலத்தை நோக்கி தினமும் கூட்டங்கூட்டமாக வந்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் 5000-ஆண்டுகளுக்கு முன் சிவனால் உருவாக்கப்பட்டது காசி நகரம். காசி என்றால் 'ஒளி நகரம்' என்று அர்த்தம். காசியில் எந்த உயிர் இறந்தாலும் (பறவை, எறும்பு, கொசு, மனிதன் மற்றும் அனைத்து வகை உயிர்களும்....)இறக்கும் கடைசி நேரத்தில் அவற்றின் காதுகளில் 'ராமநாம'த்தை சிவனே வந்து சொல்வாராம். காசியில் யார் செத்தாலும் நேராக சொர்க்கம் தானாம்.

 

1777-இல் காசி விஸ்வநாதர் கோயிலை இந்தூர் ராணி அகல்யாபாய் கட்டினார். மிகச் சிறிய கோயில்தான். இந்த கோயிலில் பார்ப்பனர்கள் இல்லை. கடவுளுக்கும், மக்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் இல்லை. பக்தர்களே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். இது ஒன்று தான் காசியில் இருக்கும் சிறப்பு. மற்றபடி மக்கள் வருவதெல்லாம் காசியை தரிசித்தால் தனக்கும் சொர்க்கம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும், தங்களுடைய உறவினர்களின் இறுதிச் சடங்கை காசியில் நடத்தும் ஆர்வம் பிணங்களை படாத பாடுபடுத்திவிடுகிறது. ஒன்றா, இரண்டா பிணங்கள் பிணங்களாக வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. அதை உருப்படியாக எரித்தோமா என்ற கண்காணிப்பு கூட இல்லாமல் பிணங்களை திண்டாட வைத்துவிடுகிறார்கள். அனாதைப்பிணங்களை எடுத்து சிதையில் போட ஆளின்றி மிருகங்கள் குதறி கொண்டிருப்பதையெல்லாம் இந்த மக்கள் எவன் பிணம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்றே அலட்சியப்படுத்தி செல்கிறார்கள். அதாவது பரவாயில்லை, "காசியில் வந்த இவன் பிணம் இந்த பாடுபடுகிறதென்றால் இவன் எப்பேர்பட்ட அயோக்கியனாக இருப்பான்" என்று குருர மனத்தோடு வேதாந்தம் பேசுகிறார்கள்.

 

சிவன் இந்த பிணத்தின் காதில் ராமநாமத்தை சொல்லித் தொலைக்கவில்லையா மிருகங்களிடம் இந்த பாடுபடுகிறதே. காசியை தவீர்த்து வேறு இடத்தில் இறந்திருந்தால் கூட மாநகராட்சி ஏதாவது செய்திருக்கும். "அந்த பிணம் கொடுத்து வைத்தது அவ்வளவு" தான் என்று நம்மால் அலட்சியமாகவும் சொல்ல முடியவில்லை.

 

இந்த காசி தான் சிதை எரிவது அணையாத ஒளி நகரமாக பேரை வைத்துக் கொண்டு மனிதத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தமிழச்சி

31.03.09