Language Selection

தமிழ் தேசியம் இந்தளவுக்கு முன்னேறியுள்ளது. உயிர்வாழ முனைந்தால் தண்டனை. பேரினவாத குண்டடியில் நீயாக தப்ப முனைந்தால், நீ தேசத் துரோகி. இந்த குண்டடியில் இருந்து தப்பிப் பிழைக்கும் 10, 12 வயது குழந்தைகளைக் கூட, யுத்தம் செய்யவென்று தம் யுத்தமுனைக்கு கடந்திச் செல்லுகின்றனர் தேசிய மீட்பாளர்கள்.

 

இவர்களிடம் இருந்தும், குண்டடியில் இருந்தும் தப்பி வந்தவர்களை, திறந்தவெளிச் சிறை கூடங்களில்; அடைத்து வைக்கப்படுகின்றனர். இப்படிச் சமூகத்தை மீட்கின்ற மீட்பாளர்கள் தம் சொந்த பாசிச சகதிக்குள், தமிழினத்தை புதைக்கின்றனர்.  

 

எம்மைச் சுற்றியுள்ள மாயைகள், நம்பிக்கைகள், தீர்வுகள் எல்லாம் பாசிசத்தன்மை வாய்ந்தவை. இங்கு பகுத்தறிவுக்கு இடமில்லை. மனிதாபிமானம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எல்லாம் சர்வாதிகாரம். இணங்குதல், இணங்கியதாக நடித்தல் என்று, பாசிச அரசியல் அசை போடப்படுகின்றது. 

 

இப்படி புலிப் பாசிசத்தின் தெரிவு எதுவோ, அதுவே தான் தமிழரின் சிந்தனை, செயல் என அனைத்தும். இப்படித்தான் தமிழன் வாழமுடியும் என்பது, வாழவேண்டும் என்பது, எழுதாத அரசியல் விதி. இதை மீறினால் தண்டனை. இது அச்சத்தின் ஒரு சின்னமாக, ஒவ்வொரு தமிழன் நெற்றியிலும் இது செதுக்கப்பட்டுள்ளது. இதற்குள் தான் எல்லாம் பாசிசமயமாகி இயங்குகின்றது, இயக்கப்படுகின்றது.

 

தமிழனை தன் துப்பாக்கி முனையில் பலியாடாக சிங்கள இராணுவத்தின் முன்  நிறுத்தியுள்ளது புலிப் பாசிசம். இங்கு தமிழன் கொல்லப்படுவது, அதை வைத்து பிரச்சாரம் செய்வதும்தான், இன்றைய தமிழன் அரசியல். இப்படி கொல்லப்படுவதில் இருந்து தமிழன் தன்னை தற்காப்பதும், தப்புவதும் தேசவிரோத குற்றம். இதை மீறினால், புலிகள் இன்று சுட்டுக்கொல்லுகின்றனர். தமிழ் மக்கள் தாம் யாரிடம் அடிபட்டு சாவது என்று தெரியாது, அரசியல் அihதைகளாகியுள்ளனர்.

 

புலம்பெயர் தமிழன் இந்த புலியை காப்பாற்ற நடத்தும் பிரச்சாரத்துக்கு, அங்கே தமிழ் மக்கள் சாகடிப்படுகின்றனர். வேடிக்கை காட்டும் பாசிச அரசியல். ஏகாதிபத்திய எஜமான்களும், அவர்களின் தொண்டர் அமைப்புகளும், புலிகளுக்கு உயிர் பிச்சை போட தமிழனையே கொல்லுகின்ற அரசியல்;. இப்படி புலம்பெயர் மோட்டுத் தமிழன் புலியைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தை நிறுத்தினால், அங்கே அன்றாடம் கொல்லக் கொடுப்பது அர்த்தமற்றதாகிவிடும். அங்கு தமிழன் சாவதற்கும், புலம்பெயர் தமிழன் புலியை பாதுகாக்கும் பிரச்சாரத்துக்கும் நேரடியாக தொடர்பு உண்டு. இப்படி அங்கே தமிழனை கொல்ல, புலம்பெயர் தமிழன் தூண்டுதலாக உள்ளான்.

 

இந்தப் படுகொலை, பலி அரசியலைத்தான் புலி நடத்துகின்றது. பலி கொடுத்தால் வாழ்வு கிடைக்கும் என்ற மத மூட நம்பிக்கை, இங்கு தம் மீட்சிக்கான பாதையாக புலிகள் தேர்தெடுத்துள்ளனர். இப்படி தமிழனை பலியெடு என்று பேரினவாதத்திடம் கோரும் புலி, இதில் இருந்து அவர்கள் தப்பினால் தானே பலியெடுக்கின்றது. பின் கூட்டல் கழித்தல் விதி, அரசியல்  எண்ணிக்கையாகின்றது. 


 
தமிழரை பாதுகாக்கும் ஒரு 'விடுதலை" இயக்கமாக காட்டப்படும் புலிகள் இதைச் செய்கின்றனர். ஒரு பாசிச மாபியா கும்பலாக இருந்தபடி, தமிழினத்தின் விடிவைப் பற்றி கொக்கரித்துக் கொண்டு இப்படி கொட்டமடிக்கின்றனர்.

 

எம்மினமோ துயரம் நிறைந்த, ஒரு தேசிய இனம். அடிமைகளாக இருக்கும் தேசிய இனம். அப்படி அடிமையாக இருப்பதற்காக, போராடும் தேசியஇனம். எம்மைச் சுற்றிய நிகழ்வுகள், கோரிக்கைள் எல்லாம் இவைதான். தன் சொந்த விடுதலைக்கான தேசிய இனமாக இருக்க முடியாது, யாரிடமாவது அடிமையாக வாழ போராடும்; தேசிய இனம். 

 

இன்று யுத்த முனையில் மக்களை அடிமையாக, புலிக்காக மரணிக்க கோருகின்றது. மக்கள் தாம், தம் சொந்த உயிர் வாழ்வதற்காக முனைவது கூட இன்று குற்றம். இதை மீறினால், புலிகளால் தண்டனை வழங்கப்படுகின்றது. தமிழ் மக்கள் தாம் சுயமாக உயிர்வாழ முனைவது கூட,  தமக்கு எதிரானதாக கூறி புலிகள் தண்டிக்கின்றனர். புலிகள் இன்று தமக்காக, தமிழ் மக்களை மடியக்கோருகின்றனர்.  

 

தமிழன் கொல்லப்பட்டால் அதைக்காட்டி பணம் சேர்க்கலாம், சொத்துச் சேர்க்கலாம். வியாபாரம் செய்யலாம். தாம் உயிர் வாழலாம். இது புலி மற்றும் புலிப் பினாமித் தத்துவம். சுனாமி முதல் 'வணங்கா மண்" நிதி வரை, மக்களுக்காக அவை திரட்டப்படவில்லை, திரட்டப்பட போவதுமில்லை. மக்கள் இதனால் நன்மை பெற்றனர் என்று சொல்லக் கூடிய, எம் சொந்த வரலாறும், அனுபவமும் என எதுவும் எம் மக்களுக்கு முன் கிடையாது. இந்த புலம் பெயர்ந்தவன் பணம், தமிழ் மக்களை மேலும் கொல்லத்தான் உதவியது, உதவுகின்றது. இதற்கு வெளியில் தமிழ்மக்களுக்கு என்று எதையும், இந்த புலம்பெயர் சமூகம் செய்துவிடவில்லை. சுனாமியில் தமிழன் சாக, அவன் பெயரால் திரட்டிய பணம் மேலும் தமிழனை கொல்லத்தான் உதவியது, உதவுகின்றது. இதற்குள் சிலர் சம்பாதித்துக் கொள்ளுகின்றனர்.

 

எம் மண்ணில் குறைந்தது ஒரு இலட்சம் தமிழ் விதவைகள். அவர்கள் ஒரு நேரம் உண்ணவும்,  உடுக்கவும் கூட வழி கிடையாது. புலம்பெயர்ந்த தமிழன், அவர்களுக்காக என்னத்தைக் கிழித்தான். சொல்லுங்கள். மேலும் விதவைகளை உற்பத்தி செய்யவே, அள்ளிக் கொடுக்கிறான். வாழ்வுகல்ல, அழிவுக்குத்தான் உதவினான். இந்த தமிழச்சிகளின் உணர்வுகள், உணர்ச்சிகள், உளவியல் சிக்கல்களை, பொருளாதார நெருக்கடிகளை எந்த சமூக எதார்த்தம் புரிந்திருக்கின்றது. அவர்களிள் பாலியல் உணர்ச்சிகளைக் கூட நலமடிக்கும் தமிழ் ஆணாதிக்கம். சமூகம் என்று சொல்ல கூடிய எந்த அருகதையுமற்ற, பாசிச உணர்வு உணர்ச்சி கொண்ட சிந்தனை முறை. ஒரு இனத்தையே இது நலமடிக்கின்றது.

 

தாய் தந்தையை இழந்த அனாதைகள், அவர்களின் ஒரு பகுதியை யுத்தமுனையில் கொன்று குவிக்கும் அநியாயங்கள். இன்று அங்கவீனராகும் குழந்தைகளின் எதிர்காலம். எதைத்தான்,  இந்த சமூக எதார்த்தத்துடன் அணுகுகின்றது. 

 

இதை உற்பத்தி செய்கின்ற அடியாளாக, அடிமைகளாக நின்று இதை ஊக்குவிக்கின்றனர்.  அதையே விடுதலை என்கின்றனர். மக்கள் தன் சொந்த விடுதலைக்காக போராடுவதை மறுத்து நிற்பதை, விடுதலைப் போராட்டம் என்று வருணிப்பதும் பாசிசத்தின் உச்சம். இன்று தமிழ் மக்கள் தாம் உயிருடன் வாழ முனைவது குற்றம். தமிழ் மக்கள் புலிக்காக மரணிப்பதே தான், தமிழ் மக்களின் போராட்டம் என்கின்றனர். இதை வைத்து பிரச்சாரம் செய்து பிழைக்கும்  கூட்டம்;. இப்படி எம் பாசிச அரசியல், தமிழன் இரத்தத்தில் தமிழீழமாக பூத்து குலுங்குகின்றது.

 

பி.இரயாகரன்
30.03.2009