தாய்நாடு - சேய்நாடு என்கிற மயக்கம் மலையகத் தமிழர் நடுவே ஒரு காலத்தில் மிக வலுவாக இருந்தது. இலங்கை நேரடியான கொலனி ஆட்சியினின்று விடுபடுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே அவர்கள் நடுவே இந்திய விசுவாசத்தை உருவாக்குகின்ற விதமான முயற்சியில் நேரு உட்பட சிலர் தீவிரமாயிருந்தனர்.

 இலங்கை - இந்திய காங்கிரஸ் என்கிற அமைப்பில் அவர்களை இணையுமாறு நேரு கேட்டுக்கொண்டார். ஆனால் அதே மக்களது குடியுரிமை 1948இல் பறித்தெடுக்கப்பட்டபோது இந்தியா என்ன செ ய் தது? தனக்கு உரிமை இல்லாத காஷ்மீரில் சர்வசனவாக்கெடுப்பை நடத்துவதைத் தவிர்த்துக் காஷ்மீரின் வளமான பகுதியைத் தனது அதிகாரத்தில் வைத்திருந்த இந்தியாவுக்கு இலங்கைத் தமிழர் தொடர்பாக இருந்திருக்க வேண்டிய அக்கறையைவிட அதிக அக்கறை இருக்க ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில், அவர்கள் இந்தியர்கள் என்று கூறியே அவர்களை நாடற்றோராக்கியது பேரினவாத யூ.என்.பி.ஆட்சி. அதில் பண்டாரநாயக்கவும் இருந்தார். அதனுடன் இலங்கைத் தமிழர் தேசியவாதத் தலைவர்கள் எனப்பட்டவர்களிற் கணிசமானோர் ஒத்துழைத்தனர். இடதுசாரிகள் மட்டுமே முழுமையாக அந்தக் கொடுமைக்கு எதிராக வாக்களித்தனர். இவை நாம் மறக்கக்கூடாத உண்மைகள்.

 

1964இல் சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கை மூலம் மலையகத் தமிழில் பெரும்பான்மையோரை இந்தியா ஏற்கும் எனவும் சிறுபான்மையானோருக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் எனவும் ஏற்கப்பட்டது. இம்முடிவை எடுக்கும் போது மலையகத் தமிழரின் விருப்பு வெறுப்புகள் கணிப்பில் எடுக்கப்படவில்லை. ஒப்பந்தம் நடைமுறைக்கு வரச் சில ஆண்டுகள் சென்றன. அப்போது இடதுசாரிகள் மாறிவிட்டனர். பாராளுமன்ற இடதுசாரிகள் சிங்கள முதலாளியக் கட்சி ஒன்றின் கூட்டாளிகளாகிவிட்டனர். எனினும் மாக்ஸிஸ லெனினிஸவாதிகள் அந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் மலையகத் தோட்டத் தலைமைகளோ தமிழ்த் தேசியவாதிகளோ அதை ஒரு போராட்டமாக முன்னெடுக்க விரும்பவில்லை. பலவாறான அரசியல் வரவு, செலவுக் கணக்குகள் அதில் உள்ளடக்கியிருந்தன. எனினும், தா ய் நாடு எவ்வளவு பாசத்துடன் நடந்துகொண்டது என்பது 1970களில் தெரியவந்தது. அதன் பின்பு மலையகத் தமிழரிடையே "இந்திய" என்கிற அடையாளம் பற்றிய விருப்பமின்மையும் தம்மை மலையகத் தமிழர் என்று அடையாளப்படுத்தும் முனைப்பும் வேகமாக வலுப்பெற்றன. இன்று தோட்டத் தொழிலாளருடன் தம்மை அடையாளப்படுத்தக் கூசுகிற சிலரும் இந்திய அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்கிற சிலருமே இந்திய வம்சாவழி என்ற அடையாளத்தை மீள நிலைநிறுத்த முற்படுகின்றனர்.

 

அதேவேளை, இந்திய வம்சாவழியினர் பற்றி எதுவிதமான அக்கறையுமே காட்டி வந்திராத இந்திய ஆட்சியாளர்கள் இப்போது மதம், பண்பாடு என்கிற பலவாறான மூடுதிரைகளின் பின்னால் ஒரு இந்திய வம்சாவழி அடையாளத்தை உலகளாவிய முறையில் முன்னெடுக்கின்றனர். வசதிபடைத்த இந்திய வம்சாவழியினரும் அரசியல் சந்தர்ப்பவாதிகளும் அதற்கு ஒத்துழைக்கின்றனர். இந்தியா இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் தளத்திற்கு விரிவுபடுத்த முற்படுகிறபோது அவை இந்திய மேலாதிக்க நோக்கங்கட்கு உதவுகிற அளவுக்கு ஒடுக்கப்பட்ட "இந்திய வம்சாவழி" மக்களுக்கு உதவுவதில்லை. மலேசியாவில் அண்மைக் காலங்களில் மலாய்ப் பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தியபோது தமிழகத்திற் சிறிது சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது. இந்திய அரசு ஒருவிதமான அக்கறையுங் காட்டவில்லை. வசதிபடைத்த ஒரு இந்திய வம்சாவழி வணிகச் சமூகம், ஃபிஜியில் தனது அதிகாரத்தை அங்குள்ள உழைக்கும் பெரும்பான்மையினரின் வாக்கு வலிமையுடன் விரிவுபடுத்த முயன்றபோது, அங்கு இனவாத அரசியல் சனநாயகத்துக்கு ஆப்பு வைத்தது. சனநாயகம் பற்றிய அக்கறையாலன்றி இந்திய மேலாதிக்க நலன்களை மனதிற்கொண்டு இந்தியா மிரட்டுகிற தொனியில் உறுமிப்பார்த்தது. ஆனால் அது எடுபடவில்லை.

 

இந்திய வம்சாவழியினர் இந்தியாவை நீங்கி இரு நூறாண்டுகளாகின்றன. இன்று இந்தியாவுடனான "தொப்புள் கொடி உறவு" பற்றிப் பேசுவது வெறும் ஏமாற்று வேலை. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா என்று பல நாடுகளிற் குடியேறிய வெள்ளையர்கள் தொப்புள் கொடி இல்லாமற் பிறந்தவர்களல்ல. ஆனால் அவர்கள் புகுந்த பிரதேசங்களில் தமக்கான இடங்களில் தமக்கான அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். அமெரிக்காவின் தொப்புள்கொடி உறவுகள் எல்லாம் தம்மை வெளிப்படுத்தத் தொடங்கினால் அந்த நாடு என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். தென் அமெரிக்காவிலோ மத்திய அமெரிக்காவிலோ வசதிபடைத்த ஒரு சிறுபான்மையைவிட யாருமே ஸ்பெயினுடனான உறவை முதன்மைப்படுத்தவோ வலியுறுத்தவோ முற்படுவதில்லை. அவர்கள் லத்தீன் அமெரிக்காவுக்கான இன வேறுபாடு கடந்த ஒரு அடையாளத்தை நோக்கி முன்னேறுகின்றனர். உரிமைகள் பறிக்கப்பட்டு ஐநூறு ஆண்டுகால அடிமை வாழ்வை நிராகரித்துப் போராட முன்வந்துள்ள பழங்குடியினர் அதிற் பங்காளிகளாக இணைகின்றனர்.

 

இந்தியாவின் அதிகார வர்க்கத்திற்கும் உலகம் பரந்து வாழும் இந்திய வம்சாவழியினர் எனப்படுவோருக்குமிடையே உள்ள உறவு தொப்புள் கொடி உறவல்ல. அது தூண்டிற் கயிற்று உறவு. தூண்டில் உறுதியாக ஒரு அதிகார வர்க்கத்தின் கையில் இருக்கிறது.

 

இலங்கைத் தமிழ்த் தேசியத் தலைவர்கள் எனப்பட்டோருக்கும் சிங்களத் தேசியவாதிகளில் முக்கியமான பகுதியினருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிலருக்குங்கூட ஒரு தொப்புள் கொடி உறவு இருந்தது. அது பிரித்தானிய எசமானர்களுடனான உறவாக இருந்தது. அது பிறகு உருமாறி ஏகாதிபத்திய விசுவாசமாகிவிட்டது. இன்னமும் அந்த விதமான எதிர்பார்ப்புக்களிலிருந்து நாம் விடுபடவில்லை. 

 

இந்தியா பற்றிய மயக்கம் கலைகிறது. ஆனால் அதன் இடத்தைத் தமிழகத்தின் அரசியல் கூத்தாடிகள் பற்றிய மயக்கம் பிடித்துக் கொள்ளப்பார்க்கிறது. தமிழக அரசியலின் நாற்றம் சென்னையில் உள்ள கூவம், வக்கிங்ஹாம் கால்வா ய் களைத் தூக்கிப் போடக் கூடியதாகவே இருந்து வந்துள்ளது. கருணாநிதியா ஜெயலலிதாவா கோபாலசாமியா ராமதாசா என்று கணக்குப் பார்த்து ஏமாறுகிறதை விடத் தெருவில் வைத்து மூன்று சீட்டு விளையாட்டுக் காட்டுகிறவனிடம் நம் அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்கலாம்.

 

தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் நிலை பற்றிய கொதிப்புணர்வு உள்ளது. ஆனால், உண்மையான நிலைமை என்ன என்றோ தம்மால் என்ன செ ய் ய இயலும் என்றோ எந்தவிதமான நடவடிக்கைகள் தேவை என்றோ தெளிவில்லை. கருவாட்டுக் கடைக்கு எதிர்க்கடை வைக்கிற மாதிரி ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரவைகளை உருவாக்கிக் குட்டை குழம்புகிறார்களே ஒழியத் திட்டமிட்டு எதையுமே செ ய் கிறதாகத் தெரியவில்லை. ஏப்ரல், மே அளவில் இந்த அக்கறைகள் எல்லாம் போவிடும். இந்திய மேலாதிக்கவாதிகள் ஏற்கனவே புல்மோட்டையில் கால்பதித்துள்ளனர். அவர்களுடைய "மனிதாபிமானச் செயற்பாடுகள்" தான் இலங்கைத் தமிழருக்காகத் தமிழகத் தலைமைகள் வென்றெடுத்தவையாகக் கூறப்படும்.

 

இதை நான் ஆதாரமில்லாமற் கூறவில்லை. சில வாரங்கள் முன்பு விடுதலைப் புலிகள் மக்களை விடுவிக்க வேண்டுமென்று வற்புறுத்தி இலங்கை அரசாங்கம் 72 மணி நேரக் காலக்கெடு விதித்ததைப் போர் நிறுத்தம் என்று சட்டசபையில் வலியுறுத்திப் பேசியவர் யாருமல்ல. தி.மு.க.வின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன்தான்.

 

தமிழ் அகதிகட்கான "பாதுகாப்பு வலயங்கள்" அமைக்கப்படுகிற போது அவற்றையெல்லாம் மனிதாபிமானச் செயற்பாடுகள் என்று மெச்சி ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசு தயங்காது. எனவேதான் இவை அனைத்திற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். இந்திய ஆட்சியாளர்களின் ஆட்டத்தில் அடுத்த கட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. 

 

தமிழகத்தில் தீக்குளித்துத் தங்கள் நல்ல பயனுள்ள வாழ்வை முடித்துக் கொண்டவர்கள் மூலம் பயன்பெறப் போகிறவர்கள், தமிழகத்தின் அரசியல் கூத்தாடிகள் தான். அது தமிழக மக்களுக்கு எதிரான ஒரு துரோகமும் மோசடியுமாகும். எனவேதான் இலங்கைத் தமிழரின் அரசியற் பிரச்சினைகள் என்ன, எதிர்பார்ப்புகள் என்ன, இலங்கையின் தேசியப் பிரச்சினையின் தீர்வுக்கான அடிப்படைகள் என்ன என்பனவற்றை முதலிற் தெளிவுபடுத்த தமிழக மக்களது போராட்டங்களைச் சிலரது குறுகிய இலாபநட்டக் கணக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.

 

அதைச் செய வேண்டுமாயின், நாங்கள் எங்களுக்குள்ளேயே நெஞ்சறியப் பொய்யுரைக்கிற பழக்கத்திற்கு முடிவுகட்ட வேண்டும். பத்திரிகைகள் பொய் யர்களை ஊக்குவிக்கலாகாது.