மும்பை மாணவிகளின் செருப்படியும், நியாயமான ஆவேசங்களும்...

மும்பையைச் சேர்ந்த பாஸ்கோ இசைக் கல்லூரி. பெருமளவு வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மூலம் இயங்கிக் கொண்டிருக்கும் இக்கல்லூரியின் நிர்வாகத்தினர் நன்கொடை வருமானத்தில் முறைக்கேடாக பயன்படுத்திக்

 கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த அநீதிக்கு எதிராக அக்கல்லூரியில் ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவிகள் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சரியான ஆதராங்களுடன் குற்றங்கள் நிருபிக்கப்பட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லையென்பது இங்கே நாம் கவனத்திற் கொள்ளப்படத்தக்க ஒன்றாகும்.

 

பொது மக்களின் வழக்குகளை கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுக்கும் நீதிமன்றம் தன் நடுநிலையை தவறி சென்றுக் கொண்டிருப்பது கண்டு நாம் அதிர்ச்சி அடையவில்லை. வழக்கம் போல் நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் அதை அலட்சியப்படுத்த முடியாது தங்களுக்கு சட்டபடி நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதைப்போன்ற உணர்வுகளுடன் தான் மும்பை மாணவிகளும் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய பவித்ரா முரளி என்ற மாணவி முயன்றிருக்கிறார். அங்கும் ஏதாவது ஓர் காரணம் சொல்லப்பட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலதாமதம் செய்திருக்கின்றனர். இப்படி பத்துமுறைகளுக்கு மேலாக நடந்திருக்கின்றது. 10 முறைக்கு மேலும் வழக்கை ஏற்றுக்கொள்ள அனுமதி மறுத்தும், விடாபிடியாக மாணவிகள் தொடர்ந்து தங்கள் தரப்பு நியாயங்களை விசாரிக்க கோரி மீண்டும் மீண்டும் வழக்கை தாக்கல் செய்ய முற்பட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர மாணவிகள் மீது அடக்குமுறையை கையாண்டு இருக்கிறார்கள்.

 

இதை எதிர்த்து நீதிபதிகள் மீதும், கல்லூரியில் நடைப்பெறும் முறைகேடுகளுக்கு எதிராகவும் மீண்டும் பவித்ரா முரளி, லீலா டேவிட், சரிதா பாரீக், என்னட் கோட்டியான் - என்னும் நான்கு மாணவிகள் வழக்கு தாக்கல் செய்ய முற்பட்டனர். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அரிசித் பசாயத், ஏ.கே.கங்குலி முன் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இசைக்கல்லூரியில் நடைப்பெறும் முறைக்கேடுகளை ஆதாரத்துடன் நிருபிக்கும் வகையில் 700- பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை நீதிபதிகள் முன்பு மாணவிகள் சமர்ப்பித்தனர். ஆனால் நீதிபதி அரிசித் பசாயத் 700- பக்கங்கள் அடங்கிய ஆவணத்தை படிக்க நேரமில்லை என்றும், இந்த ஆவணத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மாணவிகளுக்கும், நீதிபதி அரிசித் பசாயத் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 

நீதிபதிக்கும், மாணவிகளுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை தினநாளிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில் 700- பக்க அளவில் ஆவணங்கள் இருப்பதற்கு காரணம்...

 

"அவ்வளவு ஊழல்களும் அதற்கான சாட்சிகளுமே இருக்கும் நிலையில் அதை சுருக்கியெடுத்து எப்படி விளக்க முடியும்" என்ற கேள்வியை மாணவிகள் எழுப்பி இருக்கின்றனர்.

 

இதனையடுத்தே நீதிபதி அரிசித் பசாயத், "நீங்கள் சொல்வதை நான் கேட்க வேண்டும் அவசியம் இல்லை" என்றிருக்கிறார்.

 

மேலும், "நீதிபதியான எனக்கு நீங்கள் கட்டளை இடக்கூடாது" என்று கோபமாக சொல்லியதை அடுத்து மாணவிகள்,

 

"நீதிபதிகள் என்பவர்கள் மக்களாகிய எங்களுடைய கோரிக்கைகளை விசாரிக்கத்தான் இருக்கிறீர்கள்" என்று கூறி இருக்கின்றனர்.

 

ஆனாலும் நீதிபதி, "எங்களை பதவியில் அமர்த்தியவர்கள் நீங்கள் இல்லை; எங்களுக்கு கட்டளை இடத்தேவையில்லை" என்றிருக்கிறார்.

 

மாணவிகள், "நாங்கள் இந்திய குடிமக்கள். நாங்கள் தான் உங்களை பதவியில் அமர்த்தும் அதிகாரம் பெற்றவர்கள். எங்களது வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது" என்று கூறியிருக்கின்றனர்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி அரிசித் பசாயத், மாணவிகள் 4- பேரையும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற்ற காவல்துறையினரையும், உச்ச நீதிமன்றப் பதிவாளரையும் அழைத்தார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி பவித்ரா முரளி, "கீழ் மன்றத்தில் இருக்கும் ஊழல்களைப்போல உச்சநீதி மன்றத்திலும் ஊழல் மலிந்துவிட்டது" என்று சொல்லியபடி தன் காலில் இருந்த செருப்பை கழற்றி நீதிபதி அரிசித் பசாயத் மீது வீசி இருக்கிறார்.

 

அதிர்ச்சி அடைந்த நீதிபதி சற்று விலகிக் கொண்டதால் செருப்பு அவர் மீது விழவில்லை. நீதிபதியின் மீது செருப்பு வீசப்பட்டதால் அங்கிருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

 

நீதிபதி அரிசித் பசாயத் தன் மீது செருப்பு வீசியதற்காகவும், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததற்காகவும் 4- மாணவிகளுக்கும் ஒரு மாணவியின் தந்தைக்கும் ஆக மொத்தம் 5- பேர்களுக்கும் 3- மாதம் சிறை தண்டனை அளிப்பதாக தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து 5- பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்நிகழ்ச்சியை பார்க்கும் போது மாணவிகளின் நேர்மையான கோரிக்கைகளை எத்தனை முறை அலட்சியப்படுத்தப்பட்டதுடன் இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றும்படி காவலர்களுக்கு நீதிபதி ஆணை பிறப்பித்து மாணவிகளின் கோபத்தை தூண்டுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதையும், இறுதியில் வழக்கம் போல் அரசாங்கம் பொது மக்கள் மீது குற்றம் சுமத்தி தந்திரமாக தப்பித்துக் கொண்டது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். படிக்கும் மாணவிகள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் வந்தது தவறா? இந்நிகழ்ச்சியை பொது மக்கள் எக்கோணத்தில் அணுகிறார்கள். படிக்கும் மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி சிறைக்குள் அனுப்பி இருக்கும் நீதிபதி அரிசித் பசாயத்தின் செயல்பாடுகள் எப்படி நேர்மையாக இருந்துவிட முடியும்? ஊழல் வழக்கை விசாரிக்கத் தகுதியற்ற நீதிபதியின் செயற்பாடுகள் ஊழல் செய்பவர்களுக்கு துணைப்போகவே முயன்றிருக்கிறாரே தவீர நேர்மையான முறையில் சட்டங்களை உபயோகிக்க முற்படவில்லை. இந்நிகழ்ச்சியை பொது மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

 

ஒர் வலைபூவில் இந்நிகழ்ச்சி குறித்து ஒரு பதிவர் கருத்து சொல்கிறார்: "சபாஷ், சரியான போட்டி! சில திமிர் பிடித்த பெண்களை ஆதரித்து தட்டிக்கொடுத்து வளர்க்கும் சட்டங்களுக்கு கிடைத்த சரியான பரிசு."

 

திமீர் என்ற அடையாளமொழி இந்த மாணவிகளுக்கு எதற்காக? அநீதிக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் முன்னெடுத்து செல்ல முயன்றது மாணவிகளின் திமீர்தனமா? அப்படியானால் ஊழல் செய்தவர்களின் திமீர்தனத்தையும், நீதிபதியின் திமீர்தனத்தையும் ஏன் கணக்கில் சேர்க்க முயலவில்லை?

 

இப்பதிவரின் நோக்கம் என்ன? வலைப்பூவின் முழுவதும் பெண்களை கடுமையாக சாடும் இப்பதிவர் தொடர்ச்சியாக பெண்கள் என்பவர்களை எந்த அடையாளத்துடன் விமர்சிக்க முற்படுகிறார்? இவரிடம் இருந்து வெளிப்படுவது பெண்கள் மீதிருக்கும் காழ்ப்புணர்வே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பெண்களை விமர்சிக்க கூடாது என்று இங்கே குறிப்பிட வரவில்லை. நேர்மையாக விமர்சனங்களை முன்வையுங்கள் என்றுதான் நாம் சொல்கிறோம்.

 

ஒரு பெண் லேசில் காவல் நிலைத்திற்குள் சென்று புகார் கூட செய்துவிட முடியாத சமூகக் கட்டமைப்பு உடையது இந்துத்துவம். துணிந்து காவல் நிலையத்திற்குள் செல்லும் அப்படிப்பட்ட மனப்பக்குவமும் அதிக பெண்களிடம் இருப்பதில்லை. மும்பை மாணவிகளின் செயல் ஜனாநாயகத்தின் பேரால் நடக்கும் ரவுடீசத்திற்கு எதிராக எழுந்த போர்குரல். அவற்றை ஒற்றை வரியில் ´திமீர்´ பிடித்த பெண்கள் என்று அவதூறு செய்வதை எம்மால் அனுமதிக்க முடியாது.

 

இச்சமூகம் முழுவதும் அனேகமாக இப்பதிவரின் கண்ணோட்டத்தோடு இந்நிகழ்ச்சியை அணுகுமானால் அதன் அறியாமை மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டவே நாம் முனைகிறோம்.

 

இப்பதிவுக்கு தொடர்புள்ள இணைப்பு :

http://tamil498a.blogspot.com/2009/03/blog-post_21.html

தமிழச்சி
23.03.2009