Language Selection

எதிரியின் இன அழிப்பு அரசியல், எம்மிடம் இன அழிவு அரசியலாகியது. இப்படி எம்மினத்தை நாமும் சேர்ந்து அழித்த பெருமையே, எம் வீர வரலாறாகும். ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் இளம் இரத்தத்தைக் கொண்டு, தமிழினத்தை சுடுகாட்டில் நிறுத்திய பெருமை எம்மைச் சேரும். எம் விடிவையே, மறுத்தவர்கள் நாம்.

 

நாம் மானிடப் பண்பை இழந்தோம். மானிட இருப்பையும், வாழ்வையும் இழந்தோம். பகுத்தறிவை இழந்தோம். உண்மைகளை இழந்தோம். மனித நேசிப்பையே இழந்தோம். எம் வாழ்வில், எதைத்தான் நாம் இழக்கவில்லை. சொல்லுங்கள். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். ஒரு மானிடனாக வாழும், மனிதத் தகுதியைக் கூட நாம் இழந்துவிட்டோம். உலக மக்கள் எம்மை கண்டுகொள்ளாத வகையில், நாம் எல்லா மனிதத் தகுதியையும் நாமே மறுத்தோம். நாம் வாழ்வதற்காக, மற்றவர்களுடன் சேர்ந்து போராடக் கற்றுக்கொள்ளவில்லை.

 

நாம் இழந்து போனவைகள், இருந்ததை இழந்து போனவைகள் என்று, எம்மை எம் வாழ்வை திரும்பிப் பார்ப்பது அவசியம். இதை நாம் சுயவிமர்சனமாக கொள்வதன் மூலம், வாழ்வதற்காக போராடக் கற்றுக் கொள்ளமுடியும்;. நாம் இன்று போராடும் சுதந்திரத்தையே எம்மால் நாம் எமக்குள்ளேயே இழந்துள்ளோம். இதனால் இன்று மனிதனாக வாழ்வதற்கான சுதந்திரமே, இன்று மறுக்கப்படுகின்றது.

 

இலங்கையில் தமிழ்மக்கள் என்று மொழிரீதியான அடையாளம், அவர்களின் உரிமைகள்  மறுப்புக்கான காரணமாகியது. அதாவது இலங்கையில் ஒரு இனத்தின் உரிமையை, மற்றய இனத்துக்கு எதிராக முன்னிறுத்தியதன் மூலம் (இங்கு பௌத்தமும் சிங்களமும் ஒன்றாக காட்டப்பட்டது) ஒரு இனவொடுக்குமுறை வித்திடப்பட்டது. சிங்கள மொழியும், பௌத்த மதமும் இலங்கையில் தனிச்சலுகை பெற்றதன் மூலம், இலங்கையில் இன முரண்பாடு முன்னிலைக்கு வந்தது.

 

இதன் விளைவால்

1. திட்டமிட்ட இனவிரோத குடியேற்றமாக மாறியது


2. மலையக மக்களின் பிரஜா உரிமை பறிப்பாக, மறுப்பாக மாறியது.


3. திட்டமிட்ட வகையில், இன அடிப்படையிலான வேலைவாய்ப்பாக மாறியது'


4. உயர் கல்வியில் இன அடிப்படையில் தரப்படுத்தலையும், பிரதேசவாதத்தையும் அடிப்படையாக கொண்ட ஒன்றாக மாறியது


5. தமிழ் பகுதியில் பொருளாதார வளர்ச்சி மறுக்கப்பட்டு, இனப் புறக்கணிப்பாக மாறியது.


6. கல்வியில் இனவாதமும், இனப் பெருமையும் புகுத்தப்பட்டது.

 
7. யுத்தத்தின் மூலம், இன அழிப்பாக மாறியது


8. உரிமை மறுப்பாக மாறியுள்ளது.

 

இப்படிப் பல. இதனடிப்படையில் உருவான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. உரிமைகள் பயங்கரவாதமாக முத்திரை குத்தப்பட்டது. 

 

1. மிதவாத வலதுசாரிய தலைமைகள் செய்து கொள்ளமுனைந்த எந்த ஒரு ஓப்பந்தத்தையும், தம் பெருந்தேசிய இனவாதம் மூலம் மறுதலிக்கப்பட்டது.


2. தாமே செய்து கொண்ட ஓப்பந்தங்கள், அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது.


3. இதனால் இது ஆயுதப்போராட்டமாக, அது இனவழிப்பாக மாறியது.


4. எந்த ஒரு அரசியல் தீர்வையும் கூட, இனவாதம் வழங்கத் தயாராகவில்லை.


5. இன்று இன அழிப்பாக, இன வடிகட்டலாக, இனச் சுத்திகரிப்பாக மாறியுள்ளது.


6. தமிழரின் உரிமையைக் கோருவது கூட, இனப் பயங்கரவாதமாக்கப்பட்டுள்ளது.

 

இப்படி எம்மைச் சுற்றி பேரினவாதம் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கின்ற இனவழிப்பு, எமக்கு எதிரான வரலாறாகும். ஒரு இனத்தின் உரிமைகள் வழங்கப்படமாட்டாது என்பதும், தமிழினத்தின் சிதைவுமே ஒரு இனத்தின் வரலாறாக மாறிவருகின்றது. பேரினவாதம் இன்று இதைத்தான், செய்து முடிக்கின்றது. இதை எல்லாம் எமக்கு எதிராக அவன், மிக இலகுவாக எப்படிச் செய்ய முடிந்தது? 

 

1. ஒரு இனத்தினை எப்படி சீரழிக்கவும், அழிக்கவும் முடிந்தது?


2. ஒரு இனத்தின் உரிமையை எப்படி பயங்கரவாதமாக காட்டவும் கட்டமைக்கவும் முடிந்தது?


3. சர்வதேச ரீதியாக ஒரு இனத்தை எப்படி அவர்கள் தனிமைப்படுத்த முடிந்தது?

 

இதற்கான பதிலை நாம் தான் அளிக்க வேண்டும். எம்மைச் சுற்றிய நிகழ்வுகளில் இருந்தே தான், இதற்கான விடையையும் நாம் தேடவேண்டும். வேறு எங்கிருந்தும் இதற்கான பதிலை தேட முடியாது, வேறு யாரும் பதிலையும் தரவும் மாட்டார்கள். இதை நாம் கண்டறிய முனைவது, நாம் வாழவும், போராடவும் கற்றுக்கொள்வதற்குத் தான்.

 

இல்லை, எல்லாம் நன்றாகவே நடக்கின்றது, தமிழன் உரிமையுடன் வாழ்கின்றான் என்று யாராவது கருதினால், அதைச் சொல்லவேண்டும். தமிழ் இனம் முற்றாக ஒடுக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு, சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. அதற்கு இனி விடிவில்லை என்பதே  இன்றைய நிலை. இந்த நிலைக்கு, ஏன் எம்மை நாம் இட்டு வந்தோம்?

 

1. உம்மினம் தனக்காக தான் போராடவில்லையே! ஏன்?


2. எம்மினம் தனக்குள் உள்ள சமூக முரண்பாடுகளை களைய மறுத்தது! ஏன்?


3. எம்மினம் மற்றைய இன மக்களை ஏன் தனக்கு எதிராக நிறுத்தியது?


4. இந்திய ஆளும் வர்க்கத்தை நம்பிய எம்மினம், என் இந்திய மக்களை நம்ப மறுத்தது?


5. சர்வதேச ரீதியாக மக்களுடன் இணைந்து நிற்கவும், அவர்களுக்காக போராட மறுத்ததும் ஏன்?


6. எம்மினத்தின் உள் ஒடுக்குமுறைகளை அங்கீகரித்தது ஏன்? 


7. சக இனத்தின் மேலான ஒடுக்குமுறையை ஆதரித்தது ஏன்?


8. ஒரு இனத்தின் (சுய) உரிமைகளை மறுத்து, அதை ஒடுக்கியது ஏன்?


9. எம் இனத்திற்குள்ளான சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை எல்லாம் மறுத்தது ஏன்? 


10. ஒரு இனத்திற்குள் படுகொலைகளை அரசியலாக அனுமதித்தது எப்படி?

 

இப்படி பல கேள்விகள் எம்முன் உள்ளது. இது இனவாதிகளின் சதியல்ல. ஒரு இனத்தின் ஐக்கியத்தை மறுத்து, போராடும் ஆற்றலை சிதைத்து, ஒரு இனத்தினைப் பிளந்து, சிதைத்தது எப்படி சாத்தியமானது? பதிலளிக்க வேண்டியவர்கள் நாங்கள்.

 

1. எம்மினத்தின் பெரும்பான்மையை நாட்டைவிட்டு விரட்டியவர்கள் நாம்.


2. மண்ணில் வாழ முடியாத வகையில் எதிரியின் பிரதேசத்தில் பெரும்பான்மை தமிழ் மக்களை வாழும் வண்ணம், எம்சொந்த ப+மிக்கு வெளியில் விரட்டியவர்கள் நாம்.


3. எதிரிக்கு எதிராக ஐக்கியத்தை முன்வைக்கத் தவறி, நாமல்லாத அனைவரையும் எதிரியாக்கி எம்மினத்தைக் கொண்ட எதிரியை பலப்படுத்தியவர்கள் நாம்.


4. எம் தேச பொருளாதாரத்தை சுடுகாடாக்கி சிதைத்தவர்கள் நாம்.


5. எம்மினத்தை அச்சம், பீதிக்குள் உறையவைத்து, எதிரிக்கு கீழ் அடிமைப்படுத்தியவர்கள் நாம்.


6. ஒரு இனத்தின் சுயநிர்ணயத்தை மறுத்தவர்கள் நாம்.


7.  முஸ்லீம் மக்களை எம்மண்ணில் இருந்து விரட்டியவர்கள் நாம்.


8. கிராமங்கள், கோயில்கள் முதல், மாற்று இன அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தவர்கள் நாம்.


9. எம்மினத்ததை பணயம் வைத்து யுத்தம் செய்பவர்கள் நாம்.


10. எம்மினம் எம்மிடமிருந்து தப்பிச்சென்றால், அவர்களை சுட்டுக்கொல்வபவர்களும் நாம் தான்.

 

இப்படி பல கேள்விகள் பதிலளிக்க வேண்டியது நாமல்ல, நீங்கள். தமிழினம் மீது அக்கறையுள்ள, மனிதத்தன்மையுள்ள, தொடர்ந்து போராட விரும்பும் ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டும். எம்மினத்தை அழித்த அரசியலை பெருமையாக பறைசாற்றப் போகின்றீர்களா? அல்லது அதை காப்பாற்றும் வண்ணம் நாம் எம்மினத்துக்கு எதிராக உருவாக்கிய அழிவு அரசியலை மறுத்து போராடப் போகின்றீர்களா?

 

எம்மினத்தை அழிக்கும் அழிவு அரசியலை மறுத்து வாழ்வதற்காக போராடுவதுதான், எம்மினத்துக்காக போராடக் கூடிய வகையில் எஞ்;சியுள்ள ஓரேயொரு அரசியல் மார்க்கம்.

 

பி.இரயாகரன்
22.03.2009
 
;