01272023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

சிறுமி வர்ஷாவின் படுகொலைக்கான அரசியல் எது?

எம்மினத்தின் பெயரில் உருவான 'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியல் என்ன? அதன் நடைமுறைகள்தான் என்ன? இதுதான் சிறுமி வர்ஷாவின் படுகொலையை வழிகாட்டுகின்றது. இது தொடக்கமுமல்ல முடிவுமல்ல, மாறாகத் தொடரும்.


'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியலோ, முற்றிலும் மக்கள் விரோதமாகும். இதையொட்டிய நடைமுறைகள், மனித வெறுப்பை அடிப்படையாக கொண்டது. இதுவோ ஈவு ஈரக்கமற்றது. மனிதப் பண்பற்றது. லும்பன்தனமான அரசியல் வக்கிரத்தால், பூசி மெழுகப்பட்டது.


இதன் நடைமுறை சார்ந்த அதிகாரம் என்ன? அது எப்படி எதார்த்தத்தில் உள்ளது? படுகொலை, கடத்தல், கற்பழிப்பு, கப்பம், மிரட்டல், சித்திரவதை, சூது, சதி, பொய்யும் புரட்டலும், பித்தலாட்டம், மோசடித்தனம் லஞ்சம் என்று, இதன் பின்னணியில் தான் 'தேசியம்", 'ஜனநாயகம்" அதிகாரம் கொண்டு உயிர்வாழ்கின்றது. மக்களை மிரட்டி அடிபணியவைக்கவும், மக்களை சூறையாடவும், இந்;த நடைமுறைகள் ஊடாகத்தான் இவர்கள் அணுகுகின்றனர்.


இதற்கு வெளியில் மக்களை நேசித்து, அவர்களின் வாழ்வுக்காக அவர்களுடன் சேர்ந்து இவர்கள் போராடிவிடவில்லை. மக்களுடன் அன்பாகவும், பண்பாகவும், ஆதரவாகவும் இவர்கள் என்றும் அணுகியது கிடையாது. இதற்கான மக்கள் அரசியல் எதையும், இவர்கள் கொண்டிருக்கவில்லை. அதை முன்னெடுக்கவுமில்லை. இவர்கள் கொண்டுள்ள மக்கள் விரோத அரசியலோ, மக்களை வேண்;டாவெறுப்பாக அணுகியது, அணுகுகின்றது. அதிகாரத் தோரணையில், அடங்கிப்போகக் கோருகின்றது. தம் தேவைகள பூர்த்தி செய்யும் வண்ணம், அடங்கியொடுங்கி வாழக் கோருகின்றது.


இதற்கு அமைய அரசியல். இந்த அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்ய துப்பாக்கி முனையில் தமக்கு வாக்கு போடு அல்லது வாக்கு போடாதே என்று உத்தரவு இடுவது முதல் மக்கள் யுத்த முனையில் இருந்து தப்பி ஒடினால் சுட்டுக்கொல்வது வரையான மனித விரோத எல்லைக்குள்தான் 'தேசியம்", 'ஜனநாயகம்" என்ற எல்லாம் உயிர் வாழ்கின்றது.


மக்கள் உழைப்பைத் திருடவும், அபகரிக்கவும், பெண்ணின் உடலை மிரட்டி நுகரவும் தெரிந்து கொண்ட 'தேசியமும்", 'ஜனநாயகமும்", மக்களுடன் சேர்ந்து உழைத்து வாழத் தெரிந்திருக்கவில்லை. மக்களின் உழைப்பை மட்டும் புடுங்கத் தெரிந்திருந்தது. இப்படி மக்களில் இருந்து அன்னியமான லும்பன் வாழ்வில் வக்கரிக்கின்ற போது, சிறுமி வர்ஷா போன்றோர் பலியாகின்றனர். பாரிசில் சிறுமி நிதர்சினி கற்பழிக்கப்பட்டு படுகொலைக்கு பலியானார். இப்படி பற்பல சம்பவங்கள். இதன் பின்னணியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் யார்? ஒன்றில் 'தேசியம்", 'ஜனநாயகம்" பேசும் இயக்கங்கள் அல்லது அந்த இயக்கத்தில் இருந்தவர்கள்.

 
எந்த ஈவிரக்கமற்ற வகையில் மனித விரோதத்தையே செய்யும் வண்ணம், இயக்கம் இவைகளையே கற்றுக் கொடுத்தன. எந்த மனிதப் பண்பாடுகளுமற்ற காட்டுமிராண்டித்தனம் 'தேசியம்", 'ஜனநாயகம்" என்ற பெயரில் சமூகத்தில் திணிக்கப்பட்டது. இன்றைய இளம் தலைமுறை மனிதனாக கதைக்கவும் பழகவும் கூடத் தெரியாத, காட்டுமிராண்டித்தனமாக உறுமுவதையே தம் பண்பாடாக்கியுள்ளனர். மனித உறவுகளில் மிரட்டல், உருட்டல், அதிகாரம் கோலோச்சி, அந்த அணுகுமுறையே இன்று தமிழன் நடைமுறையாகி பண்பாடாகியுள்ளது.


இதன் ஒரு அங்கம் தான் சிறுமி வர்ஷா கடத்தல், பாலியல் வன்முறை, படுகொலை என்ற எல்லாம். 'தேசியம்", 'ஜனநாயகம்" (இயக்கம்) கற்றுக் கொடுக்காதவையல்ல இவை. ஒரு இயக்க உறுப்பினராக இருந்தவன் இதை செய்கின்றான் என்றால், இதற்கு 'தேசியம்", 'ஜனநாயகம்" பொறுப்பேற்க வேண்டும். முதல் குற்றவாளிகளே நீங்களே ஒழிய, அவர்கள் அல்ல. இதைச் செய்கின்ற எந்த மனிதனும், இந்த மனவக்கிரத்தை சொந்த தாயின் கீழ் வாழ்ந்து கற்று இருக்க முடியாது. சமூகத்தில் இருந்து குழந்தைகளை பிரித்தெடுத்து, மக்கள் விரோதத்ததை 'தேசியம்", 'ஜனநாயகம்" பெயரில் ஊட்டுகின்ற 'தேசியம்", 'ஜனநாயகம்" நஞ்சுகள் தான், இப்படி மிதமிஞ்சி வெளிப்படுகின்றது.


இந்த இழிவான சமூக பாத்திரத்தை தொடர்ந்து செய்யவே, மக்கள் விரோத அரசியலை முன்வைக்கின்றனர். இதற்கமைய பேரினவாதத்திடம் புலித் 'தேசியத்தையும்", புலிகளிடம் புலியெதிர்ப்பு 'ஜனநாயகத்தையும்" கோரும் மக்கள் விரோத அரசியல் மோசடியைச் செய்கின்றனர். வாழ்வை மனித உழைப்பில் இருந்து அன்னியப்படுத்தி, உழைப்பை புடுங்கித் தின்னும் கூட்டம், தமிழ் மக்களின் தலைவிதியை துப்பாக்கி முனையில் வழிநடத்த முனைகின்றனர்.


சிறுமி வர்ஷாவின் கடத்தல், பாலியல் வன்முறை, படுகொலை தொடர்பை மூடிமறைக்க, தன் சகாக்களையே கொன்ற பிள்ளையான்
குற்றவாளிகளில் ஓருவர் சுட்டுக்கொல்லப்படுகின்றார். ஒருவர் சயனைட் குடித்து மரணித்ததாக கூறப்படுகின்றது. இதை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரி, இடம் மாற்றம் செய்யப்படுகின்றார்.


இந்தப் பின்னணியில் மக்கள் விரோத அரசியல் இருப்பது தெளிவாகின்றது. அரசுக்கு தொடர்பு இருப்பது வெட்டவெளிச்சமாகின்றது. சட்டம், நீதி, ஜனநாயகம் எல்லாம், நடுச்சந்தியில் நிர்வாணமாகின்றது. இங்கு அரசியல் பேரங்கள், கவிழ்ப்புக்கள், சூழ்ச்சிகள் இதன் பின்னணியில் கோலோச்சுகின்றது. இதில் தான் பிள்ளையான் தலைவிரி கோலமாக உருவெடுத்து ஆடுகின்றான்.


ரவுடியாக, கொலைகாரனாக, கைக்கூலியாக மாறி, அரசியலுக்கு வந்தவன் தான் பின்ளையான். வெள்ளைவெட்டியும் கோட்டும் ரையும் கட்டத் தொடங்கியவுடன், அரசியல் நடிப்பும் மோசடியும் சேர்ந்து விடுகின்றது.


இந்தக் கும்பலால் கடத்தல், கப்பம், படுகொலையின்றி அரசியலே செய்யமுடியாது என்பதே, அவர்களின் அரசியல். வெள்ளைவேட்டித்தனமும், ரவுடிசமும் சேர்ந்து, இதை உளற வைக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக, ரவுடி பிள்ளiயான் கட்சியோ, தமக்கு இதில் தொடர்பில்லை என்று அறிக்கை விடுகின்றது. ஒருவரை ஆதரவாளர் என்றது. ரவுடி பிள்ளையானோ பிபிசியில், அவர் தேர்தலில் தமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் என்கின்றது. இப்படி இதை சொல்லி ரவுடிச 'ஜனநாயகத்தை", கொலைவெறித்தனத்துடன்  பறைசாற்றவே முனைகின்றனர். இதன் பின்னணியில் பொதிந்துள்ள உண்மைகள் என்ன?


இந்த கடத்தல் படுகொலையுடன் தமக்கு இருந்த தொடர்பை, பிள்ளையான் மறுக்கின்றான் என்பது தான். அதை உருவாக்கி வளர்த்த தன் அரசியல் நடத்தையை நியாயப்படுத்த, அதை மூடிமறைப்பது அவசியமாகின்றது. அவர் தன் ஆதரவாளர் என்றால், அக் கட்சி பொறுக்கிகளையும், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் கொண்ட கொள்ளைக் கட்சி என்பதையும், கூலிக் கட்சி என்பதை மூடிமறைக்க முனைகின்றான்.


இதில் உள்ள சில கேள்விகள்?


1. ஆதரவாளரின் அரசியல் அடிப்படை என்ன? இதைச் செய்யும் தகுதியா, அரசியல்?


2. அவனின் தாய் தன்னைவிட்டு பிரிந்து 3 வருடமாகின்றது என்றால், அந்த பொறுக்கி தின்றது பிள்ளையானிடம் தானே? தின்றது மட்டுமா, இல்லை இதை செய்யக் கற்றுகொண்டதும் அங்குதான்.


3. ஆதரவாளரிடம் எப்படி ஆயுதம் இருந்தது?


4. இது நடக்க ஒரு வாரத்துக்கு முன்னம் தான், தங்கள் ஆயுதங்களை எல்லாம் ஒப்படைத்ததாக ரவுடி பிள்ளையான் நாடகமாடினான். இந்த ஆயுதத்தை எப்படி பிள்ளையானுக்குத் தெரியாமல் ஆதரவாளன் ஓளித்து வைத்தான்?


5. கடத்தப்பட்ட சிறுமி, பிள்ளையானின் கட்சி அலுவலகத்தில் தான், அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். எப்படி இது சாத்தியம்?


6. எப்படி ஒரு ஆதரவாளர், இதை செய்யமுடியும்?


7. கட்சி அலுவலகத்தில் இருந்த மற்றவர்கள் ஏன் அதைக் கண்டு கொள்ளவில்லை? இவை வழமையான பிள்ளையானின் அரசியல் நடைமுறைகள் என்பதாலா?


8. பொலிஸ் இராணுவ பாதுகாப்பில் உள்ள இந்த கூலி முகாங்களுக்கு, எப்படி குழந்தையை எடுத்துச்செல்ல முடிந்தது. இதற்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?


9. கட்சி அலுவலகத்தில் அடைத்து வைக்க, கட்சி அல்லாதவர்களால் இது எப்படி முடிந்தது?


10. கட்சியைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டது ஏன்? எப்படி சயனைட் கிடைத்தது? புலியின் சயனைட், புலி அரசியல், புலியின் சில நடைமுறை எல்லாம் எப்படி சாத்தியமானது?


இப்படி பல கேள்விகள் உண்டு. பாசிச கோத்தபாயவின் கூலிக் கும்பலை பாதுகாக்க, அதை மூடிமறைக்க இங்கு அறிக்கைகள் முதல் குற்றவாளிகளின் மரணங்கள், இடமாற்றல்கள். இங்கு முதல் குற்றவாளியே பிள்ளையான் தான். தன் குற்றத்தை மறைக்க ஆட்களையே, இல்லாதாக்கிய, மற்றொரு குற்றம். ரவுடி அரசியலின் மொத்த வடிவமும் இது. இவரைக் காப்பாற்ற பிள்ளையானை கிழக்கு 'விடிவெளி" என்று கூறி, பெண்ணியம் பேசும் ராஜேஸ்வரி தான் ஒடோடி வரவேண்டும். பிள்ளையானுக்கு 'ஜனநாயக" உபதேசம் செய்த 'எக்சில் - உயிர்நிழல்" ஞானம் தான், அறிக்கை விடவேண்டும்;. அரசியல் கள்ளத்தனங்கள், கள்ளக் கூட்டங்களும் இவர்கள். இவர்களின் உதவியின்றி, இந்த மனித விரோதங்கள் எவையும் இந்த மண்ணில் அரங்கேறவில்லை.


புலிகளில் பாலசிங்கம் எப்படி புலிகளின் அனைத்துக்கும் உதவியாக, உடந்தையாக இருந்தாரோ, அதுபோல் தான் கிழக்கு 'விடிவெள்ளிகளும்". 'ஜனநாயக"த்தின் பெயரில் சமூக விரோதிகள், 'விடிவெள்ளி" கொடிபிடித்து கிழக்கு மக்களுக்கே ஆப்பு வைத்தவர்கள் தான் இவர்கள்.


பிள்ளையான் கருணா என்று கொலைகாரக் கோஸ்டிகள் எல்லாம் இந்த அரசியல் பின்னணியில் தான் இயங்குகின்றது. இரு வாரங்களுக்கு முன்னம், இருவரும் ஓரே கோஸ்டி. இந்த மாதிரியான செயல்கள், கருணாவினால் வளர்க்கப்பட்ட அரசியல் தளத்தில் இருந்து உருவானது. இதற்கு புலி அரசியல் ஆதி மூலமாக இருந்தது. மொத்தத்தில் இயக்கங்களின் அரசியலே இதுதான்.


இந்த அடிப்படையில் இதை அம்பலப்படுத்த தயாரற்ற அரச சார்பு புலியெதிர்ப்பு தமிழ் கூலிக் குழுக்கள். இதை விமர்சிக்க தயாரற்ற 'ஜனநாயக" சாக்கடைகள். இதற்குள் புரளும் அனைவரும், இது 'புலிக்கு சாதகமானதாக" கூறி இதற்கு உடந்தையாக நிற்கும் 'ஜனநாயக"க் காட்சிகள். கிழக்கில் இருந்து வடக்கு வரை, மக்கள் விரோத அரசியல் செய்யும் அனைத்துக் கும்பலும், இது போன்ற கடத்தல்களை, படுகொலைகளை செய்கின்றனர். இதனால் இதை கள்ள மௌனத்துடன் பார்க்கின்றனர். மெதுவாக கண்டிக்கின்றனர் அல்லது வெறும் செய்தியாக இதைப் போடுகின்றனர். பக்காக் கிரிமினல்கள்; இவர்கள். புளாட், ஈ.பி.;டி.பி முதல் அனைத்தும் இதுபோன்ற மனித விரோத செயலைத்தான், தம் அரசியலாகச் செய்கின்றனர். பாவம் ரவுடி பிள்ளையான். வெள்ளை வேட்டியை கட்டிய பின் இதை வெளிப்படையாக வழி நடத்த முடியவில்லை, மறுபக்கத்தில் துப்பாக்கியுடன் கருணா கும்பல் அலைவதால் இதை மூடிமறைக்கவும் முடியவில்லை.

 

1.  தொலைபேசி மூலம் பாலியல் ரீதியாக பெண்களை இழிவுபடுத்தல்


2. இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும்இ இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்

 

பி.இரயாகரன்
21.03.2009