விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துவரும் இலங்கை அரசு, தன்னுடைய சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா மூலம் ஓர் உண்மையை வெளிப்படையாக
ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்திய மருத்துவர் குழு இலங்கை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு விளக்கம் கூறுமுகமாக அமைச்சர் அதை அறிவித்திருக்கிறார். “இந்தியாவை குறை கூறாதீர்கள். அவர்களுடைய உதவி இல்லையென்றால் விடுதலைப்புலிகளை இந்த அளவிற்கு வெற்றி கொண்டிருக்க முடியாது”
தமிழகத்திலுள்ள ஓட்டுக்கட்சிகளுக்கு, குறிப்பாக ஆளும் கூட்டணிக்கு இலங்கை இனப்படுகொலையை எத்யிர்த்து குரல் கொடுத்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, பதவி விலகல் என்று நாடகமாடினார்கள். கொட்டும் மழையில் மக்களை நிற்கவைத்து மனிதச்சங்கிலி என்ற பெயரில் மழை நீரில் இன உணர்வு கரைந்து போய்விடாதா என்று எதிர்பார்த்தார்கள். அப்போது சொல்லப்பட்டதென்ன? இலங்கையின் இயலாமையில் நாம் தலையிட இயலாது. இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இந்திய ஆளும் கும்பல் பதில் கூற முன்வருமா? அன்றைய இலங்கை போராளிகளைக்கொண்டு மாலத்தீவு ஆட்சியை கவிழ்க்க சதிக்கலகம் செய்துவிட்டு குட்டு வெளிப்படவிருந்த நேரத்தில் படையை அனுப்பி வெளிவராமல் தடுத்தவர்களல்லவா? ஆனாலும் தேர்தல் வந்துவிட்டதல்லவா? எனவே மொன்னைத்தனமான ஒரு பதிலை தயாரித்துக்கொண்டிருக்கலாம்.
தமிழர்களை கொல்வதற்கு தமிழகம் வழியாகவே கவசவாகனங்கள் சென்றன. தமிழக கோமாளிகள் பிரணாப்பை இலங்கை அனுப்பினாலே இலங்கையில் அமைதி திரும்பிவிடும் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்து கொண்டிருந்த போது நேரமில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சருக்கு, இலங்கை அழைத்தவுடன் நன்றாக கொல்கிறீர்கள் என்று இலங்கை சென்று பாராட்டுப்பத்திரம் வாசித்து பரிசும் கொடுத்துத்திரும்பிவர போதுமான நேரம் கிடைத்தது. அப்போது சட்டமன்றத்தில் மேசையைத்தட்டி ஆரவாரம் செய்த கைகளுக்கு இப்போது கும்பிடும் வேலை. தேர்தல் வந்துவிட்டதல்லவா?
முத்துக்குமார் உள்ளிட்ட சிலர் இலங்கை சொந்தங்களுக்காக தங்களையே தீப்பந்தமாக ஆக்கிக்கொண்டபோது, மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஆட்சியை கவிழ்க்க சதி என்று ஆரோகணம் பாடிக்கொண்டிருந்தவர்கள், இப்போது கேப்டன்களிடமும், டாக்டர்களிடமும் அவரோகணம் இசைத்துக்கொண்டிருக்கிறார்கள் கூட்டணிக்காக.
போர் என்று வந்துவிட்டால் மக்கள் மடிவது இயல்பு தான் என்று பாடம் நடத்தியவர்களுக்கு இன்று கிளிசரின் இல்லாமலேயே உண்ணாவிரதக்கண்ணீர் வருகிறது.
இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு உணர்வு ரீதியாக தொடர்ச்சியாக போராடியவர்கள் மாணவர்களும் வழக்குறைஞர்களும். அதற்க்காகத்தான் மாணவர்களை பிணையில் வரமுடியாமல் தளைப்படுத்தியிருக்கிறது அரசு. எழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்ததால்தான் வழக்குறைஞர்களை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே மண்டையை உடைத்து குருதியில் குளிப்பாட்டியிருக்கிறது போலீசு.
இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் இது மக்களாட்சி என்று……….? இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் இது ஜனநாயகம் என்று………?
எழுந்து வாருங்கள் ‘புதிய ஜனநாயகம்’ படைப்பதற்கு.