மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.
மக்கள் சமாதானத்துக்காகவும் அமைதிக்காகவும் ரணிலுக்கு வாக்களிப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட புலிகள், தமிழ்மக்களின் இந்த விருப்பத்தை குழிபறிக்கவே, மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றனர். இப்படி புலிகள் யுத்தத்தை விரும்பித்தான், தம்மை தூக்கில் போடும் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். முந்திக்கொண்டே யாழ்குடாவில் கிளைமோர் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தினர். இப்படி புலிகளே யுத்தத்தை தொடங்கினர். மறுபக்கத்தில் மகிந்த அரசை தேர்ந்தெடுக்கவும், மக்களை வாக்களிக்கவிடாது தடுக்கவும், மகிந்த புலிகளுக்கு கையூட்டும் வழங்கினார். இப்படித்தான் தமிழ் மக்களைக் கொல்லும் கொலைகார பாசிட்டுக்கள், புலிகளின் துணையுடன் அதிகாரத்துக்கு வந்தனர்.
தான் இந்த அதிகாரத்துக்கு வர, மகிந்த போட்ட வேடமோ அப்பாவி வேஷம். கையெடுத்து கும்பிட்டும், இரந்தும், நடித்தும், இந்த பாசிட் அதிகாரத்தை கைப்பற்றினான். இதற்கு முன் பிரதமர் பதவியில் இருந்த போது, சாதுவைப் போல் வேஷம் போட்டு, அதிகாரத்தை கைப்பற்றவே தன்னை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டான். இந்த அதிகாரத்துக்கு வர ஜே.வி.பியின் உதவி தேவை என்பதை புரிந்து, அவர்களின் அதிகாரக் கனவுகளை தன் மூலம் அடையமுடியும் என்ற ஆசைகாட்டியே அவர்களை கவிட்டுப்போட்டான்;. இப்படி ஒரு பாசிட் தன்னை வெளிப்படையாக இனம்காணாத வண்ணம் மூடிமறைத்துக் கொண்டு, புலிகள் முதல் ஜே.வி.பி வரை முற்றாக மண் கவ்வச் செய்தான். அதிகாரத்தைக் கையெடுத்தவுடன், அவன் தன் முழு சுயவுருவில் வெளிவருகின்றான்.
பாசிசத்தை தன் குடும்ப சர்வாதிகாரமாக்கி, சமூகம் மீது கொலைவெறியுடன் கடித்துக் குதறுகின்றது. இதற்கு ஏற்ப பாசிசம் கொப்பளிகக் உறுமும் கொலை வெறி பிடித்த தம்பி கோத்தபாய என்ற கொலைகாரன், நாட்டின் சட்ட திட்டங்களை எல்லாம் தன் காலில் போட்டு மிதித்த வண்ணம் கொக்கரிக்கின்றான்.
ஒரு இன அழிப்பை, இனச் சுத்திகரிப்பை, இன வடிகட்டலை, தன் இன மேலாதிக்க பாசிச வழிகளில், தமிழ் இனத்தின் மேல் நடத்துகின்றான்;. மறுபுறத்தில் சிங்கள மக்கள் மேல், அதன் சுதந்திர உணர்வுகள் மேல், தன் படுகொலை பாசிசத்தை கட்டவிழ்த்துவிடுகின்றான். நாட்டை விற்கவும், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கவும், யுத்தத்தை வெல்வது அவசியம் என்று கொக்கரிக்கின்றான். இதை அம்பலம் செய்யும் எந்த சுதந்திரத்தையும், வழங்க முடியாது என்கின்றான்.
இந்த பாசிட் இதற்காக எதை மூடிமறைக்கவில்லை. அவன் கூறுகின்றான் 'சுதந்திரமான செயற்பாடு, ஊடக சுதந்திரம் என்பது, மிக அழகான வார்த்தைகள். இவை எல்லாம் சிட்னிக்குப் பொருந்தும். பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்குப் பொருந்தாது." என்கின்றான் இந்த பாசிட்டான பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ. பிரபாகரன் இவைகளை தம்மை அரசியல் அனாதையாக்கும் கோரிக்கை என்றான். இங்கும் இதைத்தான், பாதுகாப்புப் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ புலியழிப்பில் பொருந்தாது என்று கூறுகின்றான். 'சுதந்திரமான செயற்பாடு, ஊடக சுதந்திரம்" யாருக்கும் இந்த நாட்டில் கிடையாது என்கின்றான். இலங்கைச் சட்டமோ இதை அங்கீகரிக்கின்றது. இதை மறுக்கின்ற மிகப்பெரிய பயங்கரவாதிதான், இந்த பாதுகாப்புச் செயலாளர். ஆனால் நாட்டை ஆளுகின்ற, நாட்டைக் கொள்ளையடிக்கின்ற, நாட்டு மக்களை கொன்றுகுவிக்கின்ற சர்வாதிகாரப் பதவியில் இருந்து கொண்டு, இது தான் இதற்குள் தான் நாட்டின் ஜனநாயகம் என்கின்றான்.
அனைத்தையும் புலி ஒழிப்பின் பெயரில் அரங்கேற்றுகின்றனர். சிங்கள மக்களை அடக்கி யொடுக்க, தாம் மேலும் மக்களை ஒடுக்கப்போவது மக்களுக்கு தெரியாது இருக்க, புலியை முன்னிறுத்துகின்றான்.
புலிகள் என்ன செய்கின்றனர். இதற்கு தாராளமாக உதவுகின்றனர். ஆட்சிக்கு கொண்டு வந்தது முதல், தமிழ் மக்களை கொன்று குவிக்க மட்டும் உதவவில்லை. மேலும் மகிந்தா பாசிசம் மொத்த தமிழ் சிங்கள மக்கள் மேல் பாயும் வண்ணம், உதவுகின்றனர்.
மகிந்த பாசிச அரசு இன அழிப்பை, இனச் சுத்திகரிப்பை, இனக் களையெடுப்பை மட்டும் நடத்தவில்லை. மாறாக சிங்கள தமிழ் மக்கள் மேல், மக்களை ஒட்டச் சுரண்ட தன் பாசிசத்ததை கட்டவிழ்த்து வருகின்றது. இதற்கு அமைய 'சுதந்திரமான செயற்பாடு, ஊடக சுதந்திரம்" எதுவும், நாட்டு மக்களுக்கு கிடையாது என்கின்றான்.
இந்த உண்மையின் அடிப்படையில் பரந்துபட்ட தமிழ்-சிங்கள மக்களை ஒன்றுபடுத்தி போராட்டத்ததை நடத்த, புலிகளும், புலிப் பினாமிகள் தயாராகவில்லை. தம்மை பாதுகாத்துக் கொள்ள, பாசிச வழிகளில் தமிழ் மக்களை மகிந்தவின் பாசிசம் கொன்று குவிக்க உதவுவதுடன், தம் பங்குக்கும் இதைச் செய்கின்றனர்.
அத்துடன் மகிந்த பாசிச அரசு கட்டவித்துவிட்டுள்ள இன அழிப்புக்கு எதிரான போராட்டத்தை, வலதுசாரி எல்லைக்குள் மூழ்கடித்து வருகின்றனர். தமிழ் இனத்தின் அறியாமைக்குள், மகிந்தாவை பொத்திப் பாதுகாக்கின்றனர். இரண்டு வலதுசாரிய பாசிசத்தின் இருப்பு சார்ந்த ஏக்கம், ஒன்றையொன்று அரசியல் ரீதியாக பாதுகாத்து மூடிமறைக்கின்றது.
புலிப் பாசிசமோ மகிந்தாவின் பாசிசத்தை, தமிழின அழிப்பாக மட்டும் காட்டமுனைகின்றது. மகிந்தா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள பாசிசத்துக்கு பல முகங்கள் உண்டு. அதை தமிழ் மக்களுக்கு மூடிமறைக்க புலிகள் செய்யும் பிரயத்தனம் என்பது, தமது சொந்த வலதுசாரிய மக்கள் விரோத அரசியல் அடிப்படையில்தான். இதை திசை திருப்பத்தான், பல வலதுசாரிய போராட்டங்கள். இதில் ஒன்று 'வணங்கா முடி" என்ற கப்பலில் தமிழன் செல்வதன் மூலம், நாட்டில் விடிவு வரும் என்று காட்டி மகிந்தாவை மூடிமறைக்க முனைகின்றனர். இதன் பின் இருப்பது, இஸ்ரேல் நாட்டை உருவாக்க யூத வலதுசாரிய பாசிட்டுகள் நடத்திய சதியுடன் கூடிய அதே வக்கிரம்தான்.
1942 இல் 'ஸ்டுர்மா" என்ற கப்பல் மூலம் கருங்கடல் வழியாக பலஸ்தீனத்துக்கு அழைத்து வந்த 760 யூதர்களை, தமது பிரச்சாரத்துக்காக குண்டு வைத்து தகர்த்து படுகொலை செய்தனர் யூத பாசிட்டுகள். இதேபோல் 1940 இல் 'பேட்ரியா" என்ற கப்பலில் ஏற்றி வந்த 252 யூதர்களை குண்டு வைத்து தகர்த்து படுகொலை செய்தனர். இந்தச் செயலை செய்வித்த முக்கிய தலைவர்களில் ஒருவரும், பின் இஸ்ரேலிய பிரதமராக இருந்த மோசே ஷரிட் இதை நியாயப்படுத்தினாhன். அவன் 'பலரைக் காப்பாற்ற சிலரை தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது" என்றான். இப்படி வலதுசாரிய யூத பாசிச வழியில்தான், தமிழ் பாசிசமும் சிந்திக்கின்றது, பயணிக்கின்றது.
தமிழ் மக்கள் மகிந்தாவின் பாசிசத்தை புரிந்து கொள்ளாத வண்ணம், வெறும் இனவொடுக்கு முறைக்குள்ளாக வலதுசாரிய கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கும் வண்ணம் அதை முடக்கவே புலி விரும்புகின்றது. இந்த எல்லைக்குள் போராட்டங்கள், நடைமுறைகள். இப்படி மகிந்தாவின் வலதுசாரி பாசிசத்தை பாதுகாக்கவே, புலி வலதுசாரியம் அரசியல் ரீதியாக விரும்புகின்றது. தன் சொந்த அழிவில் கூட, வலது கண்ணோட்டத்தை விதைக்கும் வக்கிரம் அரங்கேறுகின்றது. அதை மகிந்தாவிடம் தாரைவார்க்கும் பாசிச சித்தாந்தமே, புலியிசமாக இன்று அரங்கேறுகின்றது.
பி.இரயாகரன்
19.03.2009