காதல், தியாகம், தற்கொலை, மரணம் ஆகியவை குறித்து பகத்சிங் கொண்டிருந்த கருத்துக்களை அவர் சுகதேவுக்கும், படுகேஸ்வர் தத்துக்கும் எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. புரட்சியாளர்கள் எனப்படுவோர் ‘உணர்ச்சியற்ற எந்திரங்கள்’ என்ற அவதூறையும், ‘உணர்ச்சி வேகத்தில் அறிவிழந்த இளைஞர்கள்’ என்ற பித்ற்றலையும் ஒருங்கே முறியடிக்கின்றன இக்கடிதங்கள்.
சுகதேவும், பகத்சிங்கும் மிகவும் நெருங்கிய தோழர்கள், வெடிகுண்டு வீசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றை தீர்த்துவைக்கும் நோக்கத்துடன் பகத்சிங், சுகதேவிற்குக் கடிதம் எழுதினார். ஏப்ரல் மாதம் 11-ம் தேதியன்று சுகதேவ் கைது செய்யப்பட்ட சமயத்தில், இக்கடிதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. அதன்பின் அது வழக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகிவிட்டது. அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள்:
அன்புள்ள சகோதரருக்கு,
இந்தக் கடிதம் கைக்குக் கிடைப்பதற்குள் நான் எனது இலட்சியம் நோக்கிய திசையிலே வெகுதூரம் சென்றிருப்பேன். என்னை நம்பு; இப்பொழுதெல்லாம், நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறுதிப் பயணத்திற்குத் தயாராகிவிட்டேன்….. நானும் வாழ்க்கையின் ஆசைகளும் அபிலாஷைகளும் நிறைந்தவன் தான் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்; இருந்தாலும் வேண்டி வந்தால் எல்லாவற்றையும் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிறேன். மெய்யாகவே தியாகம் செய்வேன். மனிதன் உண்மையான மனிதனாக இருக்கும் பட்சத்தில், இவை இடையூறாக இருக்கவே முடியாது. இதற்கான சான்று உனக்கு விரைவிலேயே கிடைக்கும்.
ஒரு மனிதனின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விசயம் காதல் ஒரு மனிதனுக்கு, எங்காவது உதவியாக இருந்திருக்கிறதா என்பதுதான். இதற்கான பதில் — ஆம், இருந்திருக்கிறது என்பதுதான். ஆம், அவர்தான் மாஜினி. தமது முதல் புரட்சியின் தோல்வியையும், தமது கடுமையான தோல்வியின் வேதனையையும், இறந்துவிட்ட தமது சகாக்களின் நெஞ்சைப் பிழியவைக்கும் நினைவுகளையும், அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தன என்று படித்திருப்பாய். ஆனால், அவருடைய அன்புக் காதலியிடமிருந்தான ஒரு கடிதம் மட்டும் வராமல் இருந்தால், அவருக்குப் பைத்தியமே பிடித்திருக்கலாம்; அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இந்தக் கடிதம்தான், அவரை மற்றவர்களைப் போலவே வலிமையுள்ளவராக ஆக்கியது. சொல்லப்போனால் மற்றவைகளைவிட மிக வலிமையானவராகச் செய்தது.
காதலின் தார்மீக ரீதியான நிலையைப் பொறுத்தமட்டில், காதல் என்பது மனக்கிள்ர்ச்சி. அதாவது உணர்ச்சி வேகத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்றுதான் நான் கூறுவேன். அது ஒரு மிருக இயல்புணர்ச்சி அல்ல; ஆனால், இனியதோர் மனிதாபிமான மனக்கிளர்ச்சி. காதல் காதலாகவே இருக்கும் பட்சத்தில், மனித குணாதிசயங்களை, அது எப்போதுமே மேலான நிலக்கு உயர்த்துகிறது; கீழே சரிவதற்கு ஒரு போதுமே அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களைப் பைத்தியம் என்று ஒருபோதுமே கூறமுடியாது. நாம் திரைப்படங்களில் பார்க்கிறோமே - அங்கே அவர்கள் எப்போதுமே, மிருக இயல்புணர்ச்சியின் கரங்களில் தான் விளையாடுகிறார்கள்.
மெய்யான காதலை ஒருபோதுமே உருவாக்கிட முடியாது; அது தானாகவே வளருகிறது. எப்போது என்று யாருமே சொல்ல முடியாது.
இளம் ஆண்களும் பெண்களும், ஒருவரையொருவர் காதலிக்கலாம். காதலின் துணையோடு அவர்கள் தங்கள் காமவெறிகளுக்கு உயரே உன்னதமான ஒரு நிலையை எட்டலாம்; தங்கள் நேர்மையையும் தூய்மையையும், மாசுபடாமல் வைத்திருக்கலாம் என்று நான் கூறுவேன்….
கடமையுணர்வின் அடிப்படையில் ஒரு மனிதன் முடிவெடுக்கும் போது காதலையும், வெறுப்பையும், வேறு எல்லா மன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மிக உயரிய, இலட்சியப்பூர்வமான ஒரு மனநிலையாக அமையும்.
ஒரு தனிநபருக்கு, இன்னொரு தனி நபரின்பால் ஏற்படும் காதலை, அதுவும் கூட, இலட்சியப்பூர்வமான செயல்பாடுகளைக் கோருகின்ற நிலைமைகள் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற காதலைத்தான் நான் கண்டனம் செய்துள்ளேன். ஒரு மனிதன், ஆழ்ந்த காதல் உணர்வு கொண்டிருக்க வேண்டும்; அது, ஒரு தனி மனிதரிடம் மட்டுமே காட்டப்படாமல், உலகனைத்துக்குமே உரியதாய் அமைந்திட வேண்டும்.
அன்புள்ள சகோதரா,
உன் கடித்தத்தை, நான் மிகுந்த கவனத்துடன் திரும்பத் திரும்பப் படித்தேன். மாறியுள்ள சூழ்நிலைகள் நம்மை வெவ்வேறான விதத்தில் ஈர்த்திருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். நீ சிறைக்கு வெளியே இருந்த காலத்தில் வெறுத்து ஒதுக்கிய விசயங்கள் இப்பொழுது உனக்கு இன்றியமையாதவை ஆகியுள்ளன.
அதுபோல, நான் சிறைக்கு வெளியே இருந்தபோது ஆதரித்துவந்த விசயங்கள் இப்பொழுது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரியவில்லை. உதாரணமாக, இதற்கு முன்னர், தனிமனிதரின் காதலுக்கு நான் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தேன்; ஆனால் இப்போதோ, அந்த காதலுக்கு, என் இதயத்திலும் மனதிலும் குறிப்பிட்ட இடம் எதுவுமே இல்லை.
வெளியில், நீ அதை வன்மையாக எதிர்த்தாய், ஆனால் இப்போதோ, இதுபற்றிய உன் கருத்துக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன; மானுட வாழ்க்கையில், காதல் இன்றியமையாத பகுதி என்றும் இப்போது நீ கருதுகிறாய். இந்த அனுபவம் உனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
தற்கொலையைப்பற்றி நான் ஒருநாள் உன்னிடம் பேசியது, உனக்கு நினைவிருக்கலாம். குறிப்பிட்ட ஒருசில சந்தர்ப்பச் சூழ்நிலைகளில், அது சரியாகவே இருந்திருக்கலாம் என்று நான் அப்போது கூறினேன். ஆனால், நீ எனது கருத்துக்களை எதிர்த்தாய்…
இத்தகைய கோழைத்தனமான செயலை, நியாயமானது என்று கருதவே முடியாது என்று நீ பரிகாசமாக கூறினாய். ஆனால், இந்த விஷயத்தைப் பற்றியதான உன் கருத்துக்களும்கூட, இப்பொழுது முழுக்க முழுக்க மாறிவிட்டன என்பதை நான் உணருகிறேன். இப்போது, குறிப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் கீழ், அது நியாயமானது மட்டுமல்ல இன்றியமையாதது என்றும் நீ கருதுகிறாய்.
ஆனால், தற்கொலை என்பது முற்றிலும் கோழைத்தனமான, வெறுக்கத்தக்க குற்றம் என்றும் நீ முன்னர் கூறிய அதே கருத்துக்களை ஒத்தவையாகவே எனது கருத்துகளும் இன்று அமைந்துள்ளன. எந்த ஒரு மனிதனுமே, அதனை நியாயமானதாகக் கருதமுடியாது. அப்படியிருக்க, புரட்சியாளர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?….
இதுதவிர, தங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்றே நம்மில் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் விசயத்தில், மரண தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் பின்னர், மரண தண்டனையும் நிறைவேற்றப்படும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அது ஒரு அழகான இனிய சாவாகவும் இருக்கும்.
ஆனால், தற்கொலை செய்து கொள்வது என்பது, குறிப்பிட்ட சில இன்னல்களையும் துன்பங்களையும் விட்டுத் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை விடும் கோழைத்தனம். இன்னல்கள், ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்பதை நான் உனக்குக் கூற விரும்புகிறேன். நானோ- நீயோ - நம்மில் யாருமே இன்னும் இன்னல்களை அனுபவிக்கவில்லை; நமது வாழ்க்கைகளின் இந்தப் பகுதி இப்பொழுதுதான் தொடங்குகிறது….
“புரட்சியாளர்களாக” இருந்து வருவதில், பெருமைகொள்ளும் நம் போன்ற மக்கள், தாங்களாகவே தொடங்கியுள்ள போராட்டங்கள் வாயிலாக வரவழைத்துக் கொண்டிருக்கும், இன்னல்களையும் இடர்பாடுகளையும், வேதனையையும், துன்பங்களையும் பொறுத்துக் கொள்வத்ற்குத் தயாராகவே இருக்க வேண்டும்….
சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் வரை துன்பங்களை அனுபவித்த ஒரு மனிதர், அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்னர் கொண்டிருந்த அதே கருத்துக்களையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்று நீ எழுதுகிறாய். சிறைச்சாலைச் சூழ்நிலைகள், அவரது சிந்தனைகள் அனைத்தையும் நொறுக்கி பொடியாக்கிவிடும் என்றும் காரணம் காட்டுகிறாய்.
சிறைக்கு வெளியே நிலவும் சூழ்நிலை, நமது கருத்துக்களுக்கு இசைவானதாக இருக்கிறதா என்று நான் கேட்கட்டுமா? தோல்விகளின் காரணமாக, நாம் அவற்றைக் கைவிட்டிருக்க முடிந்திருக்குமா? இந்தத் துறையில் நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்!
கம்யூனிசத்தின் படைப்பாளியான கார்ல் மார்க்ஸ், இந்தச் சிந்தனையை உருவாக்கிடவில்லை என்றும் நான் கூறுவேன். குறிப்பிட்ட சில சிந்தனையாளர்களை உருவாக்கியதே ஐரோப்பாவில் தோன்றிய தொழில்துறைப் புரட்சிதான்! அவர்களில் கார்ல் மார்க்ஸும் ஒருவராக இருந்தார். காலச்சக்கரத்துக்கு, ஓரளவிற்கு, குறிப்பிட்ட ஒரு உந்துதலை அளிப்பதில் கார்ல் மார்க்ஸ் தம் சொந்த முறையிலே மிகவும் உதவியாக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த நாட்டில், கம்யூனிசம் மற்றும் பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு, நான் (ஏன் நீயும் கூட) உயிர் கொடுக்கவில்லை. மாறாக, நமது காலங்கள் மற்றும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள், நம்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவுதான் அது. இந்தக் கருத்துக்களை எங்கும் பரப்பிடச் செய்வதில் நாமும் எளிமையான அளவில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இந்தப் பொறுப்பான பணியின் சுமையை நாம் நம்மீது சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதால், அப்பணியைத் தொடர்ந்து நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று நான் கூறுகிறேன். கஷ்டங்களைத் தவிர்பதற்காக தற்கொலை செய்து கொள்வது என்பது மக்களுக்கு நல்வழி காட்டாது; மாறாக, அது ஒரு பிற்போக்குச் செயலாகவே அமையும்….
வாழ்வு, மரணம் போன்ற விசயங்களிலும் நாம் முற்றிலும் உலகாயத முறையிலேயே சிந்திக்க வேண்டும். ஒருமுறை, நான் தில்லியிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்ட போது, உணவு இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், இந்த விசயத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள். எந்த ஒரு ரகசியத்தையும் வெளியிட நான் தயாராக இல்லாத்தாலும், என் உயிரைக் காப்பதில் நாட்டம் காட்டாததாலும், நான் வாழ்க்கையில்விரக்தி அடைந்து விட்டேன் என்பதை அது நிரூபித்து விட்டதாக அவர்கள் கூறினார்கள். என் மரணம் ஒரு தற்கொலைக்கு ஒப்பாகவே இருக்கும் என்பது அவர்களின் தர்க்கம்.
அதற்கு நான் சொன்ன பதில்: “என் போன்று திடமான நம்பிக்கையும் எண்ணங்களும் கொண்ட ஒருவன், வீணாக இறந்துபோவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டான். வாழ்க்கையை அதிக அளவு பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். முடிந்தவரை மானுட நல்ன்களுக்குத் தொண்டு செய்வதே எங்கள் நோக்கம். குறிப்பாக, துயரமோ கவலையோ இன்றி வாழும் மனிதன், தற்கொலையைப் பற்றி சிந்திப்பதே முறையற்றது என்றுதான் கருதுவான். அப்படியிருக்க, அச்செயலில் எப்படி இறங்குவான்?” அவர்களுக்குச் சொன்ன அதே பதிலைத்தான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன்.
உன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறாயா? எனக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை; இதுவிசயத்தில், தண்டனைக் குறைப்போ அல்லது முழு அளவிற்கான மன்னிப்போ அளிக்கப்படும் என்பதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை இல்லை. அப்படியே பூரண மன்னிப்பு அளிக்கப்பட்டாலும்கூட, அது அனைவருக்கும் அளிக்கப்படமாட்டாது. அதிலும் எனக்கு மன்னிப்பு கிடைக்காது; இருந்தும்கூட நமக்கு விடுதலையளிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மக்கள் கிளர்ச்சியாக நமது இயக்கம் மலர்ந்து உச்சகட்டத்தை அடையும் சமயத்தில் நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்வது என்பது விருப்பம்.
படுகேஸ்வர் தத்திற்கு எழுதிய கடிதம்
அன்புள்ள சகோதரருக்கு,
எனக்கு தண்டனை விதிக்கப்பட்டு விட்டது- தூக்குத் தண்டனை. என்னைத்தவிர, தூக்குத்தண்டனைக்காகக் காத்திருக்கும் பல குற்றவாளிகள் உள்ளனர். தூக்கு மேடையிலிருந்து எப்படியாவது தப்புவதற்காக அவர்கள் இறைவனிடம் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்களிடையே நான் ஒருவந்தான் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தூக்குமரத்தில் தொங்கும் பாக்கியத்திற்காக, அந்த நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஒரு புரட்சியாளர், தன் உயிரை தியாகம் செய்ய முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தூக்கு மேடையேறுவதன் மூலம் நான் உலகிற்கு எடுத்துக் காட்டுவேன்.
எனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது; ஆனால் உனக்கோ ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. புரட்சியாளர்கள், தங்களின் இலட்சியங்களுக்காகச் சாவது மட்டுமல்ல; அவர்கள் உயிருடன் இருக்கும் போது பல கஷ்டங்களையும் எதிர்த்திட முடியும் என்பதை, நீ உயிருடன் இருந்து உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
மரணம் என்பது உலகப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு வழியாக ஆகிவிடக்கூடாது; மாறாக, தற்செயலாகத் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய புரட்சியாளர்கள் தூக்கு மேடை ஏறவும் அஞ்சாமல் இருப்பது மட்டுமின்றி, சிறைச்சாலையின் குறுகிய இருண்ட அறைகளில் அடைக்கப்பட்ட நிலையிலும், படுகேவலமான அநியாயங்களையும் அட்டூழியங்களையும் பொறுத்துக் கொள்ள முடியும் என்பதையும், உன் சொந்த வாழ்க்கை மூலமாகவே உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
உன்
பகத்சிங்.தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள், சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது. கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார். தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.
தோழர்களே!
உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே. நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டோ, இருப்பதை விரும்பவில்லை.
என்னுடைய பெயர். இந்தியப் புரட்சிக் கட்சி (இந்துஸ்தானி இன்கலாப் பார்ட்டி)யின் ஒரு சின்னமாகிவிட்டது. புரட்சிக்கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.
இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்.
ஆனாலும் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருக்கும்.
இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை. ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.
உங்கள் தோழன்,
பகத்சிங்.
காதல், தியாகம், மரணம்:பகத்சிங்கின் பார்வை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode