ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஐந்தாண்டுகளுக்கு முன் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும், இதற்காக இட ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்படும் என்றும் தனது பொது வேலைத்திட்டத்தில் சொல்லியிருந்தது.  இப்போது அடுத்த தேர்தலும் நெருங்கி விட்டது.   தனியார் துறை இடஒதுக்கீட்டுக்காக  ஐ.மு.கூட்டணி அரசு சிறு துரும்பைக்கூட அசைக்காதது மட்டுமன்றி, ஏற்கெனவே சட்டப்பூர்வமாக இருந்துவந்த இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்டும் அயோக்கியத்தனத்தில் இறங்கி உள்ளது.


கடந்த டிசம்பர் 23ஆம் நாள் மத்திய அரசின் ""அலுவலர்கள் மற்றும் பயிற்சித்துறை'' கொண்டுவந்த ""தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் பணியிடங்களில் இட ஒதுக்கீடு மசோதா 2008'' மாநிலங்கள் அவையில் எந்த விவாதமும் இன்றி  இரண்டே நிமிட அவகாசத்தில் நிறைவேறி உள்ளது. நடப்புக் கூட்டத் தொடரில் அதே மசோதாவை மக்களவையிலும் விவாதத்திற்கு வைக்கும் சடங்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.


மத்திய அரசு ""இடஒதுக்கீட்டுக்கு சட்டரீதியான தகுதி வழங்கவும், தாழ்த்தப்பட்டோரிடையேயும் பழங்குடியினரிடையேயும் தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும்'' இம்மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்கிறது. ஆனால் இம்மசோதாவின் உள்ளடக்கமோ, அரசுப் பணிகளில் பார்ப்பனஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தைக் கேள்விக்கிடமின்றி நிலைநாட்டுவதையும், ஏற்கெனவே சுருக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசு வேலைவாய்ப்பைக் கூட தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு மறுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

 

45 நாட்களுக்குள் செய்து முடிக்கும் வேலைகளுக்கும், அவசர காலங்களில் ஏற்படும் பணி நியமனங்களுக்கும், அறிவியல்தொழில்நுட்பம் சார்ந்த பதவிகளில் அதுவும் கடைமட்ட "ஏ'பிரிவுக்கு மேலே வரும் அனைத்து வேலைகளுக்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 47 கல்வி நிறுனங்களுக்கும் இடஒதுக்கீட்டை இம்மசோதா தடை செய்கிறது.


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக நாடெங்கிலும் உள்ள  7 ஐ.ஐ.டி.கள், 7 ஐ.ஐ.எம்.கள், 10 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள்,  புதுச்சேரியின் ஜிப்மர், தில்லியில் உள்ள ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., அலிகர், அலகாபாத், தில்லி, விசுவபாரதி பல்கலைக் கழகங்கள், வாரணாசி இந்து பல்கலைக் கழகம் போன்றவற்றை இம்மசோதா  பட்டியலிட்டுள்ளது. இந்நிறுவனங்களின் பட்டியலை அரசு விருப்பம் போல விரிவுபடுத்திக் கொள்ளலாம்.


அறிவியல்தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் குறைந்தபட்சக் கல்வித்தகுதியான பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., பி.டெக், எம்.டெக் போன்ற பட்டங்களைப் படித்து வரும் அனைத்து தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினரும் ஆதிக்கசாதி மேட்டுக்குடிப் பட்டதாரிகளுடன் பொதுப்போட்டியில் இனி போட்டியிட வேண்டும் என்கிறது இம்மசோதா.


இம்மசோதாவின் 18ஆவது பிரிவு, ""தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நிராகரிக்கும் அதிகாரிகளுக்கு துறை மாற்றம் தவிர வேறு தண்டனை எதுவும் வழங்கக்கூடாது'' என்கிறது. அதிலும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதில் "உள்நோக்கம்' இருப்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த மாபெரும் தண்டனையும் தரப்படுமாம்.


உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர், விரிவுரையாளர் போன்ற வேலைகளுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தப் போவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். ஆனால்  ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் இட ஒதுக்கீட்டினால் "திறமை' பாதிக்கப்படும் எனத் தொடர்ந்து ஊளையிட்டு வந்தனர். சிலமாதங்களுக்கு முன்பு கௌகாத்தி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய மன்மோகன் சிங்கே "இவர்களின் கவலையை அரசு அனுதாபத்துடன் பரிசீலிக்கும்' என்று சொல்லியிருந்தார். அரசு, அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியுள்ளது.  இம்மசோதா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கோ, தாழ்த்தப்பட்டோர்பழங்குடியினர் மேம்பாட்டுத்துறைக்கோ ஆலோசனை கேட்டு அனுப்பப்படவில்லை.

 

இம்மசோதாவைத் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிசனுக்கும் அரசு கொண்டு செல்லவில்லை.

 

இம்மசோதா வருவதற்கு முன்னர் ஒடுக்கப்பட்டோருக்கெல்லாம் ஏதோ  பொற்காலம் இருந்ததாகக் கற்பனை செய்யவேண்டாம்.   தில்லி பல்கலைக்கழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், அங்குள்ள மொத்த ஆசிரியர்கள் 6500.  சட்டப்படி அதில் 1500 ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்டோர்பழங்குடி வகுப்பைச் சேர்ந்தோராக இருந்திருக்க வேண்டும். ஆனால் 2001ஆம் ஆண்டுக் கணக்குப்படி வெறும் 100 பேருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.
 வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் ஒடுக்கப்பட்டோர் ஒருவர் கூட பேராசிரியராக இருந்ததில்லை. விரிவுரையாளரோ ஒருவர் மட்டுமே.  தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் இருந்த 183 பேராசிரியர்களில் தாழ்த்தப்பட்டபழங்குடியினர் இரண்டே இரண்டு பேர்கள்தான். மேற்கு வங்கத்தின் விசுவபாரதி பல்கலைகழகத்திலோ 148 பேரில் ஒருவர் மட்டுமே இப்பிரிவை சேர்ந்தவர். அலிகார் பல்கலைக்கழகத்தின்  521 விரிவுரையாளர்களில் ஒருவர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். தில்லி ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தில்  216 பேருக்கு ஒருவர் மட்டுமே இப்பிரிவை சேர்ந்தவர். பழங்குடியினருக்கு நாடெங்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் 75 ஆயிரம். அதில் பாதிகூட நிரப்பப்படவில்லை.  மறு பாதியிலோ கணிசமானவர்கள்  போலிச் சாதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு இடஒதுக்கீட்டையே ஏய்த்திருந்தனர்.

 

சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீடு, நடைமுறையில் பெயரளவுக்குக் கூடப் பின்பற்றப்படவில்லை. அதனையும் ஒழித்துக் கட்டி இடஒதுக்கீட்டைக் குழிதோண்டிப் புதைக்கத்தான்  ஐ.மு.கூட்டணி இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கின்றது.

 

இட ஒதுக்கீடு ஒன்று மட்டுமே ""சமூகநீதி'' எனப்பேசி வரும் தி.மு.க., பா.ம.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற "சமூகநீதிக் கட்சிகள்' எவையும் இம்மசோதாவுக்கு மாநிலங்களவையிலோ, அமைச்சரவையிலோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் "கிரீமி லேயரை' அகற்றக்கோரி அவ்வப்போது போராடும் திராவிட இயக்கங்களும் இதைக் கண்டிக்கவில்லை.  அப்படியானால் பிற்படுத்தப்பட்டோருக்காகப் போராடுவது மட்டும்தான் சமூகநீதியா?

 

தனியார்மய, தாராளமயக் கொள்கையின் விளைவாக பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டதாலும், அரசுத்துறைகளிலும் ஆட்குறைப்பு தொடர்ச்சியாக நடந்து வருவதாலும் இடஒதுக்கீட்டின் பயன் ஒன்றுமில்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த நாசகாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல்,   "தனியார் துறையில் இடஒதுக்கீடு கேட்போம்' என்று தலித் அமைப்புகளும், "இடஒதுக்கீடுசமூகநீதி' பேசும் திராவிட இயக்கங்களும் பம்மாத்து பண்ணிக்கொண்டு இருக்கின்றன. இப்போதோ, இருக்கும் கொஞ்சநஞ்ச அரசு வேலைவாய்ப்பையும் மறுத்து சட்டம் போடுகின்றது அரசு. இதற்கும் "சமூகநீதிக் காவலர்'களிடமிருந்து அடையாள எதிர்ப்பைத் தவிர வேறு எதுவுமில்லை. இந்த வாய்ச்சவடால் பேர்வழிகளை நம்பிக்கொண்டு சமூக நீதியைக் காப்பாற்ற முடியாது. அரசு வேலைவாய்ப்புகளை தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை முறியடிக்க  ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராடுவதைத் தவிர, இனி வேறு வழியும் கிடையாது.


• கதிர்