போருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. பட்டினி, வறுமை என்பவை பழைய வசயங்களாகி விட்டன. ஏழைகளே இல்லாத ஒரே நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.

இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி இறங்கியது. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத்தொடங்கினார்.

ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார்.

ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.

சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். இரசாயனங்களின் உதவியுடன் ஒரு கண்ணாடி பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சமீபத்தில் தான் அகற்றப்பட்டது. வியர்வை சிந்தி உழைக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை லெனினது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்கிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அணி திரள்வோம் மார்க்சிய -லெனினிய - மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நம் நாட்டிலும் ஒரு புரட்சியை நடத்தி முடிப்போம். சமூக மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம்! நவம்பர் -7 புரட்சி தினத்தில் உறுதியேற்போம்.

நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி