இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏற்பட்டது.
..
1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் தலைமையில் ஒரு படைப்பிரிவு கூட்டத்தைக் சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக் கொன்றது. நாடெங்கும் மக்கள் கோபத்தால் பழிவாங்கத் துடித்தனர். ஆனால் எவருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. ஒரு (11 வயதுடைய) சிறுவன் மட்டும் ரத்த சேறான மைதானத்திற்கு சென்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வீட்டில் வைத்தான். தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணின் மீது ஆங்கிலேயர்களை பழிவாங்குவதாக சபதம் செய்தான். அச்சிறுவனின் பெயர் தான் பகத்சிங்.
..
நாட்டின் விடுதலையை தன் இலட்சியமாக ஏற்றுக் கொண்டான். அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினான். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பிறகு ஏராளமான புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் இருந்து, ரஷ்ய நாட்டில் 1917 சோசலிச புரட்சிக்குப் பின்னர் அனைத்து மக்களும் அனைத்து வளங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டு செழிப்பாக வாழ்வதைப் பற்றி அறிகிறார்.
..
அதற்கு காரணமான தலைவர் லெனினைப் பற்றியும் அறிகிறார். சோசலிசத் தத்துவத்தை தன் இலட்சியமாக ஏற்கிறார். காந்தியின் அகிம்சையால் இந்தியா விடுதலை அடைய முடியாது என அவருக்கு புரிகிறது. வெள்ளையர்களுக்கு துணையாக இந்தியாவிலுள்ள பண்ணையார்களும், முதலாளிகளும் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க போலீசும், இராணுவமும் உள்ளது. இவற்றை ஒழித்துக்கட்டி சுதந்திர இந்தியாவை உருவாக்க மக்கள் ஆயுதம் ஏந்தி புரட்சியில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார்.
..
1925-ஆம் ஆண்டு தன்னைப் போன்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி என்ற புரட்சிகர அமைப்பைத் தொடங்குகிறார். விவசாயிகள், தொழிலாளிகளிடையே பிரச்சாரம் செய்து, அவர்களை ஒன்று திரட்டுகிறார். ஆயிதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே அக்கட்சியின் திட்டம்.
..
1928 ஆம் ஆண்டு தேசத் தலைவர் லாலாபஜபதிராயை போலீசார் அடித்து கொன்றனர். நாளுக்கு நாள் வெள்ளையரின் அட்டூழியம் அதிகரித்தது. காந்தியின் அகிம்சையால் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியவில்லை. மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். பத்திரிக்கையோ, பணபலமோ இல்லாததால் பகத்சிங்கால் மக்களிடைய பரவலாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை.
..
இந்திய மக்கள் அனைவருக்கும் தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கு எதுவாக கைதாகி நீதிமன்றத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தின் எவரும் இல்லாத வெற்றிடத்த்தில் குண்டு வீசி பகத்சிங்கும், பதுகேஷ்வர் தத்-தும் கைதாகினர்.
..
எதிர்பார்த்தபடியே பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றி ஏராளமாக எழுதின. நீதிமன்றத்தில் பகத்சிங் பேசிய பேச்சுக்களால் மக்கள் விழிப்படைந்தனர். சிறையிலும் தங்கள் உரிமைகளை பாதுகாக்க பகத்சிங்கும் இதர தோழர்களும் போராடினர். நாடு முழுவதும் சுதந்திர தாகம் கொண்ட இளைஞ்ர்கள் பகத்சிங்கின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டனர். ஒருசில நாட்களிலேயே பகத்சிங் காந்தியை விடப் பெரிய தலைவராக உயர்ந்தார். பகத்சிங்கை விடுதலை செய்யக் கோரி நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதைக் கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பயந்து நடுங்கியது. பகதிங்கால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் ஈடுபட்டால் இந்தியா விடுதலையாவதை எவராலும் தடுக்க முடியாது என உணர்ந்தது. அதைத் தடுக்க பகத்சிங்கை கொலை செய்ய முடிவு செய்தது. 1931 மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவை தூக்கிலிட்டு கொன்றது. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர் பட்டாளம் தொடர்ந்து போராடியது. ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. 1947 ஆக 15இல் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். இதற்கு காரணமான தோழர் பகத்சிங்கை நாம் ஒருபோதும் மறக்கலாகாது..
வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை