Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்ப்புரட்சி அரசியல், வெளிப்படையான அரசியல் தளத்தில் மட்டும் இன்று நிகழவில்லை. மாறாக திட்டமிட்ட வகையில், கூலி எழுத்தாளர்களால் முன்தள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை அரசுகளின் மிகவும் திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இதை இன்று அவர்கள் கையாளுகின்றனர். புலிக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை நடத்தும் அதேதளத்தில், மக்கள் அரசியல் மீதான ஒரு எதிர் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்;டுள்ளது.

 

 

மக்கள் அரசியலை விமர்சித்தல், மறுபுறத்தில் தாம் மக்கள் அரசியலை 'நடுநிலையாக" (புலி - அரசை நடுநிலையாக) வைத்தல் என்று, இரண்டு தளத்தில் இதைக் கையாளுகின்றனர்.

 

வெளிப்படையாக இது தேனீ இணையம் மற்றும் தேசம்நெற் இணையம் வாயிலாக இன்று இது அரசியல் அரங்கில் நுழைகின்றது. இவை அனைத்தும் பொதுவாக புனைபெயர்களின் ஊடாக இவை அரங்கேறுகின்றது. ஓரே நபர், பல புனைபெயர்களில் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப உலாவுகின்றனர். கருத்துகளில் புலி - அரசு நடுநிலை என்ற 'நடுநிலைத்" தன்மையை வெளிப்படுத்துவதன் மூலம், புரட்சிகர அரசியல் சீரழிவை திட்டமிட்டு புகுத்துகின்றனர்.

 

புனைபெயர் என்பது, பாதுகாப்பு சார்ந்த ஒன்றின் அடிப்படையில் மட்டும் தான், அது புரட்சிகர அரசியலுக்கு உதவக் கூடியது. மாறாக தம்மை தமது கடந்தகால நிகழ்கால எதிர்ப்புரட்சி அரசியல் நடைமுறையை மூடிமறைக்கவும், தம் கருத்தின் பின் உள்ள அரசியல் நோக்கத்தை மூடிமறைக்கவும், புனைபெயரைப் பயன்படுத்துவது எதிர்ப்புரட்சி அரசியலாகும். இன்று புனைபெயரிலான எதிர்ப்புரட்சி அரசியலே விரவிக்கிடக்கின்றது. இதை இனம் காண்பது என்பது, வெளிப்படையற்ற தன்மையால் கடினமாகி வருகின்றது. இது புரட்சிக்கும், எதிர்ப்புரட்சிக்கும் இடையிலும், தாம் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களின் மூலமும், தன்னை 'நடுநிலையாகி" விடுவது, எதிர்ப்புரட்சிகர சக்திகள் புரட்சிகர சக்திக்குள் ஊடுருவிடுவது நிகழ்கின்றது. கருத்துத்தளத்தில் எதிர்ப் புரட்சிக் கருத்து, புரட்சி வேஷம் போட்டு உலாவத் தொடங்குகின்றது.   

 

இப்படி இன்று புலிக்கும் அரசுக்கும் இடையில் 'நடுநிலைத்தன்மை"யுடன் வருகின்றனர். திட்டமிட்ட எதிர்ப்புரட்சிக்கான இந்த கூலி எழுத்தாளர்கள்;, இன்று தம் எழுத்துகளுடன் உலாவுகின்றனர். இதில் இவர்கள் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர்கள். 'நடுநிலை"யுடன் நிலைமையை ஆராய்வதாக காட்டிக்கொள்ளும் இந்த எதிர்ப்புரட்சிச் சக்திகள், அது பிரசுரமாகும் எதிர்ப்புரட்சி அரசியல் ஊடகம் ஊடாக, தம் 'நடுநிலை" வேஷத்தை எதிர்ப்புரட்சிக்கு தெளிவாக  பயன்படச் செய்கின்றனர். மிகவும் நுட்பமான திட்டமிட்ட எதிர்ப்புரட்சி அரசியல்.

 

'நடுநிலை வேஷமும்" புரட்சிகர அரசியலல்லாத எதிர்ப்புரட்சி ஊடகம் ஊடாக, எதிர்ப் புரட்சியை இன்று இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டு முன்தள்ளுகின்றது. வாசகர் மத்தியில், மயக்கத்தை உருவாக்கி, புரட்சிகர அரசியல் சிதைவை உருவாக்கும் பிரச்சாரம் முடுக்கிவிடப்படுகின்றது. இதுதான், இன்று இதன் அரசியல் குறிக்கோளாகும்.

 

பல புனைபெயர்களில் சிலர், இந்திய இலங்கை அரசுகளின் கூலி எழுத்தாளர்கள் (சம்பளம் பெற்றும் பெறாமலும்), தேசம்நெற், தேனீ போன்ற தளத்தில் வெளிப்படையாக புனைபெயர்களில் உலாவுகின்றனர். கருத்துச் சுதந்திரம், புனைபெயர் என்பதை பயன்படுத்திகொண்டு, இந்த எதிர்ப்புரட்சி சக்திகள் உலாவுவதுடன், தமது அரசியல் நோக்கத்தை முழுமையாகவே மூடிமறைத்துக் கொள்கின்றனர்.

 

வெளிப்படையற்ற தன்மை, இன்று எதிர்ப்புரட்சிக்கு உதவும் அரசியல் கூறாகி நிற்கின்றது. இது அரசியலில் மட்டுமின்றி, கடந்தகால நிகழ்கால செயல்பாட்டினை மூடிமறைக்க, தம்மை மூடிமறைப்பதிலும் கூட இந்த எதிர்ப்புரட்சி அரசியல் அரங்கில் நுழைகின்றது.

 

பி.இரயாகரன்
14.03.2009