04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

புலிக்கும் - அரசுக்கும் பின்னால், சலசலக்கும் 'மாற்று" அரசியல்

மக்களுக்காக போராட மறுப்பதுதான், இன்று 'மாற்று" அரசியல். அரசுக்கு பின்னால் அல்லது புலிக்கு பின்னால் நிற்பதற்காக, இது தன்னைத்தான் மூடிமறைக்கின்றது. அரசுக்கு பின்னால் நிற்க 'ஜனநாயகத்தையும்", புலிக்கு பின்னால் நிற்க 'சுயநிர்ணயத்தையும்" பயன்படுத்துகின்றது.

 

 

இப்படி மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசங்களையும் ஆதரிக்க, இவர்கள் தமக்குத்தாமே போடும் வேசம் தமிழ் மக்களின் உரிமைகளான 'ஜனநாயகம்" மற்றும் 'சுயநிர்ணயம்" மாகும். இவர்களின் இந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தை நாம் இலகுவாக இனம் காணமுடியும். இவர்கள் இவ் இரண்டு உரிமைகளையும், ஒரே நேரத்தில் கோரமாட்டார்கள். ஒன்றை மட்டும் கோரி, மற்றதன் எதிரியாக தம்மைத்தாம் முன்னிறுத்துகின்றவர்கள் தான் இவர்கள். இவர்களின் இரண்டாவது அடையாளம் ஒன்று உண்டு. இவர்கள் உரிமையில் ஒன்றைக் கோரும் போது அதை வெறும் கோசமாக மட்டும் வைப்பார்கள். இவர்கள் அந்தக் கோசத்தின் அரசியல்  உள்ளடக்கத்தை மறுப்பார்கள். அதை விரித்துச் சொல்லவும் மறுப்பார்கள்.

 

இதை நாம் அனைத்து மக்கள் விரோத அரசியல் தளத்திலும் தெளிவாக இனம் காணமுடியும். மக்களுக்கு எதிராக இருத்தல், செயற்படுதல் தான், இதன் அரசியல் அடிப்படை.  அண்மையில் புலியாகி வெளிவந்த கனடாத் தேடகம், தான் போட்டுள்ள புலிவேசத்தை மறைக்க 'சுயநிர்ணயம்" என்கின்றனர். சரி உங்கள் 'சுயநிர்ணயம்" என்ன என்று கேட்டால், புலிக்கு வால் பிடிக்கும் எல்லைக்கு அப்பால் அதை அவர்களால் விளக்க முடிவதில்லை. அதாவது புலி வைக்கும் 'சுயநிர்ணயம்" தான், இவர்களின் 'சுயநிர்ணயமும்". இதுதான் இன்றைய தேடகத்தின் பின், மூடிமறைக்கப்பட்ட பாசிசமாகும். இதை மூடிமறைக்க கடந்த 10, 15 வருடத்துக்கு முன் புலிக்கு 'மாற்று" என்று தம்மைத்தாம் அடையாளப்படுத்தியதை, இன்று முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு தான் 'சுயநிர்ணயம்" என்ற சதி அரசியலை அரங்கேற்றுகின்றனர். இப்படி தமிழ்மக்களின் 'சுயநிர்ணய"த்துக்கு எதிராக, புலிகளுடன் சேர்ந்து இன்று குழிபறிக்கின்றனர்.

 

தமிழ் மக்கள் தாம் சுயநிர்ணயத்தை தீர்மானிக்க முடியாத வகையில், புலிகளின் பாசிசத்தின் பிடியில் சிக்கிகிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் இனத்தின் சுயநிர்ணத்ததை, புலியாக காட்டி விடுக்கின்ற தேடகத்தின் சதி அரசியல், செத்துப்போகும் புலிப் பாசிசத்தை தூக்கி நிறுத்துவதுதான். இதற்கு மாறாக தமிழ் மக்களுக்காக, அவர்களின் சுயநிர்ணயத்துக்காக அரசியல் ரீதியாக போராட மாட்டார்களாம். மாறாக புலிக்காக, புலியின் எல்லைக்குள் தான் கோடு போட்டு போராடுவார்களாம். இப்படி தேடகம் முதல் பல புலிப் பாசிட்டுகள், அரச எடுபிடிகளும் இன்று அரசியல் அரங்கில் தம் சொந்த பாசிச அரசியலை முன்வைத்தபடி வெளிவருகின்றனர்.   

             

கடந்தகாலத்தில் எம் இனத்தை அழித்து இந்த இழிநிலைக்கு கொண்டு வந்தவர்கள் பின்னால், நடக்கும் சலசலப்பை 'மாற்று" அரசியலாக காட்டுகின்ற இறுதி முயற்சிகள் இவை. சிங்களப் பேரினவாதமும், புலிக் குறுந்தேசியமும், எம்மினத்தின் மேல் நடத்திய கொடுமையான கொடூரமான வன்முறையும், பாசிசத்தன்மையும் தான், எம் இனத்தின் அழிவை பிரகடனம் செய்தது. மண்ணில் உயிர்ப்புக்குரிய அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தொழித்து விட, அதில் தப்பிய கூறுகள்தான், புலம்பெயர் நாடுகளில் தமிழினத்தின் சொந்த அழிவுக்கு எதிராக குரல்கொடுத்தது. அதுவும் தன் சொந்த பூர்சுவா இயல்பால் சீரழிய, அரச சார்பு குழுக்கள் இதற்குள் தங்கிக்கொள்ள, மொத்தத்தில் இவை குறுகி வெறும் 'ஜனநாயகம்" என்று தன்னை சுருக்கிக் கொண்டது. படிப்படியாக அது தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுத்தது.

 

இப்படி அது மக்களில் இருந்து விலகி, ஒரு குறுகிய வெறும் கோசத்துக்குள் முடங்கியது. மொத்தத்தில் மக்களுக்காக நிற்றல், போராடுதல் என்பது, அரசியல் ரீதியாக மறுப்புக்குள்ளாகியது. இதன் விளைவு அரசுக்கு சார்பாக அல்லது புலிக்கு சார்பாக மாறி, மக்களை ஒடுக்குவதற்கு துணைபோகத் தொடங்கியது.

 

இன்று புலிகளின் தோல்வி, அரசின் வெற்றி என்பது தெளிவான ஒரு நிலையில், ஒன்றில் புலிக்கு பின்னால் செல்வது அல்லது அரசுக்கு பின்னால் செல்வது என்ற நிகழ்ச்சிப் போக்கு எங்கும் அரங்கேறி வருகின்றது. மக்களின் துன்ப துயரங்கள் பற்றி, யாருக்கும் அக்கறையற்ற அரசியலும், அரசியல் நடத்தைகளும் அரங்கேறுகின்றது.

 

இன்று அரசு சார்பு புலியெதிர்ப்பும், புலி சார்பு அரசு எதிர்ப்பும் என்று, புலம்பெயர் 'மாற்றுத்தளம்" சலசலக்கின்றது. மக்கள் சார்பு அரசியல் என்பது, அரசை ஆதரித்தல் அல்லது புலியை ஆதரித்தல் என்ற கூறுமளவுக்கு, இவை புளுத்துவிட்டது.

 

இதில் ஒருபகுதி தம்மை மூடிமறைத்துக் கொள்ள, தாம் சுயாதீனமாக செயற்படுவதாகவும் கூறுகின்றனர். புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்கின்றது, அரசு எதிர்ப்பு சுயநிர்ணயம் என்கின்றது. இப்படி அரசின் பின்னும், புலியின் பின்னும் பினாமிகளாகி, மக்கள் விரோத நிலையெடுத்து  நிற்கின்றனர்.

 

இதில் கடைசியாக தன் கோவணத்துடன் வந்து நிற்கின்றது, கனடாத் தேடகம். கடந்த 10, 15 வருடமாக ஆழ்ந்த நித்திரைக்கு போனவர்களில் சிலர், புலியாகியவுடன், தம் தூசைத் தட்டியபடி தேடக லேபலின் பெயரில் புலிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுகின்றனர். தாம் சுயாதீனமாகவே இதை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு, புலிப்பாசிசத்தை மறைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக அரசை மட்டும் முன்னிறுத்துகின்றனர். புலி ஊடகங்கள், இதற்கு விளம்பரம் செய்கின்றது.

 

இப்படி புலிக்கு கோசம் போடும் தேடகம் 'தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்கின்றது. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசு வரை, புலித்  தடையைப் போட்டபோது, அதன் அரசியல் நோக்கமோ மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். ஆனால் ஏகாதிபத்தியம் புலியை தடைசெய்யும் போது, தன் மக்கள் விரோதத்தை மூடிமறைக்க, புலிகளின் மக்கள் விரோதத்தை முன்னிறுத்தி அதை காரணமாக காட்டியே தடைசெய்தது. புலி மீதான தடையை நாங்கள் நீக்கக் கோரும் போது, புலிகளின் மக்கள் விரோதத்தை களையக் கோருவது அவசியமானது. இந்த தடை இதன் பெயரில் தான் செய்யப்பட்டது. மக்கள் விரோதத்தை களையக் கோருவது, தடையை நீக்குவதற்கு மட்டுமல்ல, அது மக்களின் நலனுடன் தொடர்புடையது. எம் மக்களின் சுயநிர்ணயத்துடன் தொடர்புடையது. ஆனால் தேடகம் அப்படி கோர மறுக்கின்றது. இதன் மூலம் தொடரும் புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளை ஆதரிக்கின்றது.  

 

இப்படித்தான் இவர்களின் அனைத்து கோரிக்கைகளும். புலியின் பாசிசமயமாக்கல்  கோரிக்கைகளை, தமது கோரிக்கைகளாக காட்டுகின்ற, வில்லங்கமான முயற்சிதான் இது. இப்படி இவர்கள் புலிப் பினாமிகளாகி, அதுவே இவர்களின் அரசியல் பிழைப்பாகின்றது.

 

பி.இரயாகரன்
13.03.2009
 

 


பி.இரயாகரன் - சமர்