ரெண்டு நாலாகி
நாலு பதினாறாகி
நாலா புறம் சிதறுதம்மா…

 

நெஞ்சை பிளக்குமந்த
நஞ்சு குண்டுகளெல்லாம்
இளம் பெண்டுகளை
தேடித்தேடிக் கொல்லுதம்மா…

ஓடி ஒளிய
வழியேதுமில்லையம்மா…
பாம்பு பட்சிகளோடு- எங்க
பொழுதும் கழியுதம்மா..
பொட்டல் காடே விதியென்று
வாழ்க்கை நகருதம்மா…
நாதியற்று
நரகத்திலே வாழுறம்மா…
சர்வதேச சமூகமே
கண்சாட்சி சொல்லுமம்மா…

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா… என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா…

தட்டில் சோறில்லை
நெஞ்சில் பாலில்லை-இருக்கும்
நிலாவையும் காட்ட முடியவில்லை
வாணூர்தி வண்டுகளாய்
வட்டமடிக்குதம்மா…
இளமொட்டுகளை
இரக்கமின்றி கருக்கதம்மா…

உசுரத்தவிர
உடம்பில் வேறேதும்
இல்லையம்மா-அட
என்னாத்துக்கு
என்னிணத்தை
கருவருக்கத் துடிக்குதம்மா…

சுயநிர்ணய உரிமையென்றால்
சுர்ர்ரென்று ஏறிடிடுதே…

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா… என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா…

அறிவியல் யுகமென்றீர்
பாஸ்பரஸ் குண்டு வீசி
பொசிக்கிடவா?
சாட்டிலைட்டை பறக்கவிட்டீர்
எம்மைக் கொத்தித் தின்றிடவா?

காட்டுமிராண்டிக் கூட்டங்களா
கண்ணைக் கட்டிக் கொண்டீங்களா?
கண்சாட்சி சொல்லிடத்தான்
சர்வதேச சமூகங்களா?

இனவெறிக் கூட்டங்களா
இரையாக மாட்டோமடா
உயிர்பிச்சை கேட்கவில்லை
சுயநிர்ணய உரிமைகேட்டு சாகிறோமடா…

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா… என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா…

சிங்களவன் வார்த்தைக்கும்-உங்க
மன்மோகன் வார்த்தைக்கும்
வேறுபாடு தெரியலியே
எல்லாமும் ஒன்னுபோலத்தானே
எமக்கும் கேட்டிடுதே…

எம்மைக் கொல்லும்
ஆயுதத்திலே-உன்
வேர்வைத்துளி கண்டேனம்மா…

மூச்சுவிட மனம்
மறுத்திடுதம்மா..
வேவு பார்த்திடுதே
ரேடாரென்று… இதை
கண்டும் காணாது
முகம் திருப்பி செல்லுறியே
‘‘அப்பாவித் தமிழனைக்
கொல்லாதேனு’’
கொலைகாரனிடம்
கெஞ்சுறியே!

இனி என்ன
சொல்வதம்மா…
இரக்கமில்லா
உன்னை கண்டு…

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா… என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா…

உன் கண்ணீர்த் துளி
தேவையில்லை…
காசுபணம்
கேட்கவில்லை…
கொலைகார கூட்டமெல்லாம்
இலங்கையில் மட்டுமில்லை…

மன்மோகன்… முகர்ஜியின்னு
பலபேரில் திரியுமந்த
சதிகார கூட்டங்களை
சந்திக்கு இழுத்து வந்து

‘‘பாசிச சிங்களனுக்கு
பங்காளியாக கூட நின்னு
மேலாதிக்கம் செய்திடுதே
இந்திய அரசென்று’’

உரக்கக் குரலெழுப்பிடம்மா… அவன்
குரல்வளையைப் பிடித்திடம்மா.

-இளங்கதிர்.