தமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி  புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்"  உச்சரிக்கப்படுகின்றது.

 

 

சிங்களப் பேரினவாதமும், இதைச் சார்ந்த புலியெதிர்ப்புவாதிகளும், எப்போதும் புலிகளை முன்னிறுத்தி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த 'ஜனநாயகத்தை" வழங்கப்போவதாக கூறினர், கூறுகின்றனர். சரி அந்த 'ஜனநாயகம்" தான் என்ன? என்று கேட்டால், ஆளைக் காணோம் பதிலையும் காணோம் என்று ஓடுகின்றனர்.

 

சரி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த ஜனநாயகம் என்ன? தமிழ்மக்கள் தமக்காக தாம் போராடக் கூடாது என்பதைத்தான் புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்தனர். சிங்களப் பேரினவாதத்தை கூட, யாரும் எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான், புலியின் அடிப்படையான ஜனநாயக மறுப்பாக இருந்தது. புலியல்லாத யாரும், எதையும் செய்யக் கூடாது, போராடக் கூடாது என்பது, அதன் ஜனநாயக மறுப்புச் சித்தாந்தம்.

 

இதற்கெதிரான போராட்டம் ஒருபுறம். மறுபுறத்தில் அரசும், அரசு சார்பு புலியெதிர்ப்பும், தாம் தமிழ்மக்கள் 'ஜனநாயகத்தை" மீட்கப் போராடுவதாக கூறுகின்றனர். சரி, இவர்களின் இந்த 'ஜனநாயகம்" தமிழ் மக்கள் தமக்காக போராடுவதை அனுமதிக்குமா!? இல்லை என்பதே மிகத் தெளிவான பதில். இதற்கு பதிலளிக்க அவர்கள் யாரும் தயாராகவில்லை. இவர்களின் இந்த 'ஜனநாயகம்" தமிழ்மக்கள் போராடுவதற்கு அனுமதிக்காது. ஆகவே புலிகள் எதைச் செய்தனரோ, அதைத்தான் இந்த 'ஜனநாயகமும்" செய்கின்றது. தமிழ் மக்களின் சுயமான, சுயேட்சையான எந்த அரசியலையும் நிலைப்பாட்டையும் இந்த 'ஜனநாயகம்" தமிழ் மக்களுக்கு ஒருக்காலும் வழங்காது. மாறாக அதை ஒடுக்கும்.

 

அதை ஒடுக்குவதற்கு ஏற்ற கூலிக்கும்பல்களின் செயல்பாடுகள் தான் 'ஜனநாயகமாக" இருக்கின்றது. இவர்கள் தம்மைத்தாம் தெரிவு செய்துகொள்ளும் உரிமையைத்தான், 'ஜனநாயகம்" என்கின்றனர். தமக்கு மக்கள் வாக்குப் போடுவதைத்தான் இவர்கள், உயர்ந்தபட்சம் 'ஜனநாயக" நடைமுறை என்கின்றனர்.

 

தமிழ் மக்கள் தம்மீதான இனவொடுக்குமுறை பற்றி வாய்திறந்து சொல்லவும், போராடவும் ஜனநாயகம் இருக்காது. புலிகள் எதை மறுத்தனரோ, அதுதான் இங்கு 'ஜனநாயகம்" என்ற பெயரில் மீளவும் ஆப்பாகி வருகின்றது. இன்று புலியின் ஜனநாயக மீறலை நியாயப்படுத்தும் புலி ஊடகங்கள் முதல் புலி வன்முறையும் எதைச் செய்ததோ, அதையே அரசுசார்பு புலியெதிர்ப்பு கும்பலும் செய்கின்றது.

 

தமிழ்மக்களின் சொந்த விருப்பைக் கேட்காத 'ஜனநாயகம்" என்பது, தமிழ்மக்கள் தாம் எப்படி வாழப்போகின்றோம் என்ற ஜனநாயக உரிமையை மறுப்பதாகும். ஒரு பிரச்சனைக்கு ஜனநாயகமற்ற தீர்வு என எதுவும், சுதந்திரமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க முடியாது. ஜனநாயக தீர்வு என்பது, அதற்கேயுரிய அமைப்பு வடிவம் சார்ந்தது. தமிழ் மக்களை பலாத்காரமாக தம்முடன் பிடித்து வைத்திருக்க, சிங்கள பேரினவாதம் தருவது எதுவாக இருந்தாலும் அது ஜனநாயகமல்ல. அது ஒரு இனத்தின் மேலான அடக்குமுறையே. வடகிழக்கு மக்கள், முஸ்லீம்மக்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயக பூர்வமாக தாம் எப்படி வாழ்வது என்பதை தீர்மானிக்கும் உரிமையும், உரித்துமுடையவராக இருக்கவேண்டும். அதுதான் ஜனநாயகம். இதை தீர்மானிக்கும் உரிமையற்ற எந்த நடைமுறையும், ஜனநாயகமல்ல.   

 

பேரினவாத இன யுத்தமும், புலிகளின் குறுந்தேசிய யுத்தமும் எம் மக்களை சிதைத்துள்ளது, சீரழித்துள்ளது. சொல்லொணாத் துன்பதையும் துயரத்தையும் வாழ்வாக கொண்ட மக்கள் மேல், திணிக்கின்ற 'ஜனநாயகம்", 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த" கதைதான். ஆம், இதை அரசுடன் சேர்ந்து செய்ய, அரசும் அரசுசார்பு புலியெதிர்ப்புக் கும்பலும் முனைகின்றது.

 

தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்க, புலியை துணைக்கு வைத்துக்கொண்டு செய்யும் வாதங்கள் கடைந்தெடுத்த பொறுக்கிகளுக்கே உரிய பித்தலாட்ட அரசியலாகும்;. அதைத்தான் இவர்கள் 'ஜனநாயகம்" என்கின்றனர்.

 

பி.இரயாகரன்
10.03.2009