தமிழ்மக்களின் பெயரில், தமிழ் மக்களிள் உரிமைப்போரை கொச்சைப்படுத்தி நடத்திய சுயவிளம்பரப் போராட்டம். ஏதோ வன்முறையாம்! அதுவும் இலங்கையில்! சரி உங்களில் யாருக்காவது தெரியுமா! இப்படி தெரியாத சிலதுகள், சுயவிளம்பரத்துக்காக நடத்திய போராட்டம்; தான் பாரிஸ் போராட்டம். தடிக்கும்  நோகாது, பாம்பை அடிக்கும் சுயவிளம்பரக் கோசங்கள்.  

 

தமிழ்மக்கள் சாவா, வாழ்வா என்ற எல்லைக்குள் நாதியற்று கிடக்க, புளட்டின் 'சதி" அரசியலை, மீண்டும் புளட் அல்லாத தளத்தில் அசோக் என்பவர் மேடையேற்ற முனைந்தார்.

 

இதற்கு சுழியோடிப் பிடித்த நபர் தான் றமணன். றமணன் இங்கு உள்ள அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகளுடன் கொண்டிருந்த செயல்பாட்டை பயன்படுத்தி, தன் சொந்த சதிக்கூத்தை அதற்குள் அசோக் அரங்கேற்ற முனைந்தார்.

 

இதற்கு அமைய பயன்படுத்தப்பட்ட அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகள் கூட, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதில்லை. இப்படி பேரினவாத தேசியத்துக்கு உதவும் அவர்களின் சொந்த அரசியல் மனப்பாங்கை, தம் சொந்த சதி மனப்பாங்குடன் இணைத்து, அரங்கேற்றிய நாடகம் தான் இந்த அர்த்தமற்ற பாரிஸ் போராட்டம்.

 

தமிழ் மக்களை இன்று சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்கின்றது. ஒரு இன அழிப்பாக, இனச் சுத்திகரிப்பாக, இனக்களையெடுப்பாக, அதைச் செய்து வருகின்றது. இதற்கு புலிகள் துணை நிற்கின்றனர். இதற்குள் மக்கள் சந்திக்கின்ற துயரங்கள், வரைமுறையற்றது. இப்படி எம் எதார்த்தமான பொதுநிலைமை இருக்கின்றது. இதற்குள் போராட்டத்தை நடத்துவதை மறுப்பது, கண்டு கொள்ளாது விடுவது என்பது மறைமுகமாக இதற்கு உதவுவது தானே. குறிப்பானதை கைவிட்டு, பொதுவான வன்முறைபற்றி கதைப்பது, அதற்குள் போராடுவதாக கூறுவது, அதற்குள் கோசத்தை வைப்பது, அரசியல் மனப்பிறழ்சியுடன் கூடிய சதி மட்டுமின்றி அது வெட்கக்கேடானதுமாகும்.

 

புலிகள் இதை குழப்ப முனைந்தது, அவர்களின் வழமையான பாசிச அரசியல். புலிகள் தோற்பதாலும், இவ்வளவு காலமும் தமிழ் மக்களை ஆட்டிப்படைத்த அதிகார வெறிகொண்ட அலுக்கோசுகள், தாம் அல்லாத எதையும் குழப்புவது அவர்களின் சொந்த நலனுடன் தொடர்புடையது. இதனால் இந்த போராட்டம் நியாயமாகிவிடாது. புலிகளைக் காட்டி கும்மியடித்த கூத்துகள் எல்லாம், மக்களுக்கானவையல்ல. மக்களுக்கு எதிரானவையாக இருந்துள்ளது. இங்கு புலிகள் குழப்பினார்கள் என்பதால், அது மக்களுக்கானவை என்றாகிவிடாது.

 

மக்கள் சந்திக்கின்ற வாழ்வியலை, சாம்பாராக்கி குழைத்து ஊட்டுவது பழைய இயக்க அரசியல் மட்டுமின்றி, அரசியலற்ற புலம்பெயர் இலக்கிய சந்திப்புகளும் அது போன்ற  கூத்துகளும் தான். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்காது இருத்தல் தான், பேரினவாத அரசுக்கும் அதன் பெரும் தேசியத்துக்கும் செய்யும் அரசியல் சேவை.

 

நாம் இதை அம்பலப்படுத்தினால், ஐயோ ஐக்கியத்துக்கு எதிரானது, மாற்றுக் கருத்துக்கு பாதகமானது என்று, இணையங்களில் புலம்பி அழுகின்றனர். 

 

இந்தச் சதியை முன்னின்று நடத்திய அசோக்கின் அரசியல் என்ன? யாருக்காவது தெரிந்தால், அதை முதலில் சொல்;லுங்கள். அரசின் பின் குலைக்கும் கூலிக் குழு இயங்கங்களை, அரசு சார்பு புலியெதிர்ப்பு புலம்பெயர் கும்பல்களை எல்லாம், எப்படி இவர் அரசியல் ரீதியாக அணுகுகின்றார். எங்கேயாவது அதை அவர் வெளிப்படையாக முன்வைக்கின்றாரா? நேரத்துக்கும், முகத்துக்கும் ஏற்ப அரசியல் செய்யும் போது, சதிதான் எப்போதும் காய் நகர்த்தலாகின்றது. 

 

இந்த அசோக் அனைத்து மக்கள் விரோதிகளினதும் தோழர். டக்கிளஸ் முதல் எல்லா மனித விரோதிகளினதும், நேசத்துக்குரிய மனிதர். கொல்லப்பட்ட புலிப்பினாமியும் கொலைகாரனுமான சிவராம், முதல் டக்கிளஸ் வரை இவருக்கு தோழர்கள், நண்பர்கள்.

 

தனக்கொன்று இதுவரை ஒரு அரசியலை வைத்தது கிடையாது. இதனடிப்படையில் செயல்பட்டது கிடையாது. இன்று றமணன் நாளை டக்கிளஸ்சாகவும் இருக்கும். தனக்கென்ற ஒரு கொள்கை கோட்பாடின்றி, சதிகள் மூலம் சம்பாறுக்குள் மிதக்க முனைந்தவர்.

 

இவர் வழங்கிய பேட்டி ஒன்றும், அசோகிஸ்ட்டுகளின் பின்னோட்டமும், அவதூறு செய்தே விளம்பரமான தேசம்நெற்றில், அவதூறு மன்னன் ஜெயபாலன் எடுத்து வெளியிட்டுள்ளார். இப்படி தேசம்நெற்றில் மலிவான விளம்பர பிழைப்பு. 

 

அதில் 'வன்னி மக்களின் மனித அவலம் மிகமோசமடைந்த நிலையிலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய குழுவாத அரசியலில் இருந்து விடுபடாதவர்களாகவே உள்ளனர்" என்று அசோக் கூறியதாக, ஜெயபாலன் கூறுகின்றார்.

 

முதலில் அசோக்கையே எடுங்களேன், அவரே முதல்தரமான குழுவாதி. இவர் குறிப்பிடும் 'இன்னும் சில ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ பேசும் சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதாக" கூறும், எத்தனை பேரிடம் தன் குழுவாதத்தைக் கடந்து இதை பற்றிப் பேசினார். இந்த சதி அரசியல் கோசத்தை வைக்குமுன், எத்தனை பேருடன் இதையொட்டி கலந்துரையாடினார். ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ என்பது எல்லாம் விளம்பரத்துக்குத்தான் உதவுகின்றது. இவருடன் இல்லாத றமணனை வலை வீசி பிடித்து அசோக் என்ற தனிநபர், அரங்கேற்றிய சதிதான் இந்தப் போராட்டம்.

 

இதற்கு பின்னால் அசோக்கின் நடத்தைகள் என்பது, குதர்க்கங்கள், சதிகள், முடிச்சு போடுதல், முத்திரை குத்தல் தொடங்கி, அரசுடன் நிற்கும் டக்கிஸ்சை நக்குவது வரை அடங்கும். புலிகளின் ஐpரிஎன் இணையத்தை நடத்தும் குருபரன் வரை, இவருக்கு அவர்கள் நண்பர்கள், தோழர்கள். இந்த அசோக் நடத்தும் இனி இணையம், புலியின் ஐpரிஎன் இணையத்தில், தொடுப்பு கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு இடையில் தோழமை. புலியை ஒழிக்க அரசை ஆதரிக்கும் திரோக்கிய தமிழரசன் கட்டுரைகள் இவர்களின் இனி தளத்தில். இந்திய போலிக் கம்யூனிஸ்டுகள், இந்த தளத்தில் பவனி வருகின்றனர். இப்படி பல. இப்படி அரசியல் விபச்சாரத்தில் பெயர் போனவர்கள்.

 

இந்த அரசியல் கூத்தாடிகளை அம்பலப்படுத்தினால், உடனே 'Keyboard' புரட்சியாளர்களைத் தாண்டி இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக காலகட்டம் இது." என்கின்றார். தமது இந்த சாம்பாறு அரசியலை முன்னெடுப்பது அவசியம் என்கின்றனர். இதை நியாயப்படுத்த, நாதனின் கருத்தை இதற்குள் பொருத்தி ஜெயபாலன் ஊடகவியல் அரசியல் செய்கின்றார். சதி அரசியலின் நீட்சிகள் தான் இவை. 

 

கீ-போட் புரட்சி என்று இவர்கள் எமக்கு கூற, 'நாலு சுவருக்குள் கம்யூட்டர் புரட்சி" என்று கூறும் டக்கிளஸ் கும்பல், யாழ்ப்பாணத்தில் வந்து போராடக் கோருகின்றனர். இப்படி நாலு சுவருக்குள் கம்யூட்டர் புரட்சி என்கின்றனர். இதைத்தான் புலிகளும் கூறுகின்றனர். புலிகள் வன்னியில் வந்து போராடக் கோருகின்றனர்.

 

எதற்கும் உதவாத கீபோட் புரட்சி என்கின்றீர்கள். சரி இருக்கட்டும், இதைத் தாண்டி போராடக் கோரும் நீங்கள், எதற்காக போராடக் கோருகின்றீர்கள். மக்களுக்காகவா! சரி எப்படி? முதலில் அதைச் சொல்லுங்கள்! (அவதூறு மன்னன் ஜெபாலனையும் சேர்த்து தான் கூறுகின்றோம். ஊடகவியல் பின்னால் ஒளித்து நின்று கல்லெறிவதை விடுத்து, மக்களுக்கு நேர்மையாக இருக்க முனையுங்கள்.)  

 

அரசியல் நிகழ்ச்சிகள் மேல் ஒரு எழுத்தைத் தன்னும் வெளிப்படையாக நேர்மையாக முன்வைக்க முடியாது போகும் இவர்கள், இனந்தெரியாத அசோகிஸ்டுகளாக மாறி அவதூறை பொங்கி எழுத முடிகின்றது. தேசம்நெற் என்ற அவதூறு இணையத்தில், அசொகிஸ்டுகள் போன்றவர்கள் தம் சதிகளுடன் உலாவுகின்றனர்.

 

அப்படி எழுதப்பட்டதைப் பாருங்கள் 'இந்த ஊர்வலத்தை ரயாகரன் “அவியல்-துவையல்”என்று விமர்சிக்கிறார். இது, இலங்கைக்குச் சார்பானதென்றும் புலிகள் பாணியில் விளக்குகிறார். உண்மையில் ரயா இடதுசாரியா? அல்லது புலிகளின் உளவு…? இது கஷ்டமான கேள்வி. ரயா குறித்துப் புலம்பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மிகக் கவனமாகக் காரியமாற்ற வேண்டியுள்ளது. தோழரென நம்புவதா அல்லது புலிகளின் இன்போமர் என எண்ணுவதாவெனக் குழப்பம். அவர் புலிகளது கடையில் வேலைசெய்கிறார். அவருக்கு அந்த வேலையிடம் தொடர்ந்து இருக்கிறது. நாமோ புலியை விமர்சித்த அடுத்த நிமிடம் புலிகளால் துரோகியாக்கப்பட்டு அடித்து வெருட்டப்படுகிறோம்.

………………………………நமக்கு உள்ளே இருந்து கருவறுக்கும் தோழரா ரயா? இது பகிரங்கமாக விவாதிக்கப்படவேண்டும்.

ரயா அனைத்தையும் உடைக்கிறார். தான் மட்டுமே மக்களது நலனில் அக்கறையுள்ளவராகக் காட்டுகிறார். இது வேடிக்கையில்லையா? அணிச் சேர்க்கையை உடைத்துப் புரட்சியைக் காட்டிக்கொடுக்கும் ரயா உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட்டு இல்லை. இவரது மார்க்சீயம் குறித்து நிறைய ஐயம் உண்டு. புலம்பெயர் சூழலில் இவர் எவரையுமே மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாக ஏற்கவில்லை. இவருக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் எவர்?

கேள்வி-கேள்வி-கேள்வி! ரயாவைக் குறித்துச் சரியான மதிப்பீடின்றிச் செயற்படுவது ஆபத்து. இவரால் இடதுசாரியக் கருத்துள்ளவர்கள் ஒரு அணிக்குள் திரட்சியடைய முடியவில்லை. இவர் பெரும்பாலும் புலிகளின் சேவகர் என்பதே எனது கருத்து………….."

இப்படி புனைபெயர் அசோகிஸ்டுகள், எம்மைப்பற்றி கண்டு கொள்ளும் உண்மைகளாம்! மறுபக்கத்தில் புலிகள் எம்மை கண்டுகொண்டு சொல்லும் உண்மைகள், மகிந்தாவின் ஏஜண்டாம், றோவாம். இப்படிப் பல. இப்படி மக்களின் எதிரிகள், தம்மை மறைத்துக்கொள்ள எம்மைப்பற்றி பல உண்மைகளை கண்டுபிடிக்கின்றனர். வாழ்க! வளர்க!

 

இவை எல்லாம் எமது அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்க வக்கற்றவர்களின் கண்டுபிடிப்புகள். 'இவரால் இடதுசாரியக் கருத்துள்ளவர்கள் ஒரு அணிக்குள் திரட்சியடைய முடியவில்லை"யாம். நாங்கள் என்ன உங்களை இழுத்துப் பிடித்த வைத்துள்ளோம். ஒரு அணியாக டக்கிளஸ் முதல் அசோக்கிஸ்டுகள் வரை அணிதிரளவேண்டியது தானே. இதை நாம் தடுக்கின்றோம் என்றால், ஆம் நாம் சரியானதை செய்கின்றோம் என்று தான் அர்த்தம்.

 

அரசியலற்ற இலக்கியச் சந்திப்பு முதல் ஆனந்தசங்கரி வரை கூடி கூத்தாடியும், குடித்தும் கும்மாளமடித்தும் நடத்திய 'இடதுசாரி" 'ஜனநாயக" அவியல் அரசியல் இன்று, பேரினவாத அரசின் பின் நக்குகின்றது. நீங்கள் ஆடி முடித்ததன் விளைவு அது. இங்கு நீங்கள் ஒரு அணிக்குள் திரட்சி அடைந்து, அரசுக்காக கும்மியடித்த அரசியல் மேதை சிவலிங்கம் முதல் பெண்ணை பெண்ணியத்தின் பெயரில்  நுகர்ந்த போதெல்லாம், அணிதிரண்டு தான் செய்தீர்கள்.  

 

இப்படி கொள்கை கோட்பாடற்ற எத்தனை செயல்கள். இன்றும், எந்தக் கொள்கையும் கிடையாது. இந்த நிலையில் நீங்கள் 'நமக்கு உள்ளே இருந்து கருவறுக்கும் தோழரா ரயா?" என்கின்றீர்கள். வேடிக்கையாக இருக்கின்றது. உங்களுடன் இல்லாத எமக்கு, கருத்துச் சுதந்திரத்தை மறுத்துவிட்ட நீங்கள், இதை இன்று சொல்வது நகைச்சுவைதான். நாங்கள் என்றும் உங்களை தோழராக சொல்லவில்லையே. நாங்கள் உங்களை தோழராக எப்போதாவது கருதிகொள்ள, நீங்கள் எந்த அரசியல் கொள்கையை வைத்தீர்கள்!? சொல்லுங்கள் பார்ப்போம்.

 

பி.இரயாகரன்
09.03.2009