• எப்பவோ கேட்ட குரல்
தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு முற்றட்ட 30 வருட காலமாக, வகுப்புவாத தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் கட்சிகள் என்ன சொன்னார்கள்: பாராளுமன்ற அரசியல் மூலம் எல்லவற்றையும் "கேட்டுப் பெறலாம்" என்றார்கள்.
தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட 30 வருட காலமான இன்று, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து விட்டதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்ற அரசியல் கட்சிகள் என்ன சொல்கிறார்கள்: "சோறும், சுதந்திரமும் பேசித்தான் பெறவேண்டிய நிலை" என்கிறார்கள்.
முன்னவர் கூறியதில் (கேட்டுப் பெற-லாம்) ஒரு நம்பிக்கை தொனி இருந்தது. பின்னவர் கூறுவதில், (பேசித்-தான்) ஒரு இழுவை இருக்கிறது. இதற்குள் இன்னொரு அரசியல் தொக்க வைக்கப்பட்டுள்ளது. அதுதான் - இவை அனைத்துக்கும் காரணம் புலி என்கின்ற அரசியல்.
கேட்டுப் பெறலாம் என்பது சரிவராது என்றுதான் பின்னவர்கள் ஆயுதம் துாக்கினார்கள். மீண்டும் அதே கதிரைகளுக்கு இவர்கள் வரும்போது, காரணம் சொல்ல, புலிகளை இதற்குள் வலுக்கட்டாயமாக இழுக்கிறார்கள். இப்பினும் இடைக்காலகட்டத்தில் இவர்கள் நடத்தியது "சுதந்திர விடுதலைப் போராட்டமாம்". உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?
இதில் ஏதாவது உப்புச்சப்பு இருக்கிறதா?
சுதந்திரப் போராட்டத்தை நடத்துபவர்கள் ஏன், பாராளுமன்றக் கதிரைக்கு கால் கொதிக்க ஓடவேண்டும். புலிகள் குறுக்கே வந்து அழித்தார்கள் என்றால்: உங்கள் சுதந்திர விடுதபை் போராட்டத்தில் மக்கள் இணைந்திருந்தார்களா. அவ்வாறானால், அம்மக்கள் எந்தப்பக்கம் ஓடினார்கள். மக்களே இல்லாத ஒரு போராட்டம் எப்படிச் சுதந்திரப் போராட்டமாகும்?
அன்று அடுக்கு மொழியில் அரசியல் நடத்தினார்கள். இன்று மக்களின் அவலத்தை வைத்து, அரிசி, பருப்பு, அபிவிருத்தியில் அரசியல் நடத்துகிறார்கள். சும்மா சொல்லக் கூடாது, பாராளுமன்ற அரசியலை நடத்துவதற்கும், ஒரு கைவந்த கலை தேவைதான்!
இவர்கள் இதுமட்டம் சொல்லவில்லை, இதற்கு மேலேயும் சொல்கிறார்கள். "தருவதை வாங்கிக் கொண்டு".. மேலே ஏதோ செய்யவேண்டுமாம். பேசித்-தான் தீர்க்கவேண்டும் என்பவர்கள், தருவதைப் பெற்றக்கொண்டு என்று, பிறங்கையை திருப்பித்திருப்பிக் காட்டுகின்றார்கள். இதைப்பற்றி கேட்டுப்பாருங்கள், அரசியலில் இதெல்லாம் சகசம் என்று சினிமாத்தனமாக "ரீல்" விடுவார்கள்.
இதைவிட வேடிக்கை என்னவென்றால்: தாம் பேச வேண்டியவர்களோடு தானாம், இதைப்பற்றி பேசி வருகிறார்களாம். இவ்வளவு காலமும் பாராளுமன்ற அரசியல்வாதிகள் வேறு யாரோடு போசினார்கள்? சொந்த மக்களோடா? என்ன சம்மந்த சம்மந்தமில்லாமல் இவர்கள் பிதற்றுகிறார்கள். பராளுமன்ற அரசியல்வாதிகள் என்றால் நின்ற இடத்தில் நிக்கவிட்டுச் சுத்துவார்களோ.
இல்லையென்றால் இவைகள் எல்லாம் எப்படி நடக்குது. அன்று ஜெ.ஆரை ஆசியாவின் மிகச்சிறந்த ஜனநாயகவாதி என்று, தமிழீழத்துக்காக வாக்களித்த மக்களின் காதுகளில் பூச்சுத்தும் அளவுக்கு அமீர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சை வாய் கூசாசம் ஆற்றவில்லையைா? அன்று 60,000 மக்களுக்கு மேல் படுகொலை செய்த பிரேமதாசாவை இவர்கள் ஏற்றிப் போற்றவில்லையா? போகிற போக்கில் புலிகளை அழித்தால், இனி தமிழர்களுக்கு என்ன பிரச்சனையிருக்கிறது என்று கேட்டாலும் கேட்பார்கள்.
என்ன கேட்டாலும் கேட்பார்கள்.. அந்தப் பதத்திலை தானே இவர்கள் அரசியல் நடத்தி வருகிறார்கள். அடிக்கடி இவர்கள் தாங்கள் ஆயுதம் தூக்கிய "சுதந்நிரப் போராட்டத்தை" எடுத்து விடும் போதெல்லாம், ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது....
கேள்வி: சார் ரெஜிஸ் டெப்ரே டெல்லியில் பேசியுள்ளதைப் பற்றி.....
பதில்: சே குவேராவுடன் உடனிருந்து மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் ஏழை நாடுகளுக்கு "சே" வழிகாட்டி என்று பேசிய "டுப்ரே" யார் சார் இது? இந்திரா அம்மையார் தான் உலகைக் காக்க வழி என்று ஊர்ழுபுஆ மாநாட்டில் கூறியுள்ளாரே.... சும்மாவா? சிறையிலும் காடுகளிலும் வாசம் செய்த ரெஜிஸ் டெப்ரே இப்போது பிரான்ஸ் அதிபர் மிற்றரான்டின் அயல் விவகார அமைச்சர்!
நன்றி: "பிருந்தாவனம்" (மாணவர் இதழ் - 6) - இலக்கு இதழ் -3 இல் இருந்து எடுக்கப்பட்டது -
இது டெப்ரெக்கு மட்டும்தானா? அல்லது...
• சொல்லுக்குள் நடக்கும் சூதாட்டம்
ஐரோப்பாவில் இருந்து மக்கள் நலனில் வெளிவரும் கருத்துக்கள், பூஞ்சனம் பிடித்த பழயவைகள் என்றும், மக்களிடம் கற்றுக்கொள்ளாத உதுகளெல்லாம் ஒரு சத்துக்கும் பிரியோசனமில்லாத வெட்டிப் பேச்சுக்களென்றும் தமிழ் பாராளுமன்ற வாதிகள் சொல்லி வருகிறார்கள்.
கடந்த காலங்களில் சோசலிசம், மக்கள் போராட்டம், மக்கள் யுத்தம் என்ற சொற்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் மக்களிடம் கற்றுக்கொள்ளுதல் என்ற வார்த்தைக்கும் நடக்கிறது. கிட்லர் முதல் சிறீமா முதற்கொண்டு ஜே.ஆர் வரைக்கும் சோசலிசத்தை உச்சரிக்கவில்லையா? சோசலிசம், மக்கள் போராட்டம் என்று புலிகள் வார்த்தை ஜாலம் காட்டவில்லையா? வழக்கத்திலிருக்கும் இப்புரட்சிகரமான சொற்களை இவர்கள் தத்தமது நோக்கங்களுக்காக சொல்லிவிட்டுப் போவதை இன்று மக்கள் தமது சொந்த அனுபவரீதியாக இனங்கண்டு வருகிறார்கள்.
இன்று தமிழ் பாராளுமன்ற வாதிகள் தாம் மக்களைச் சந்தித்து, சுகம் விசாரித்து, குறை நிறைகளைக் கேட்டறியும் நாற்காலி அரசியலை "மக்களிடம் கற்றுக்கொள்ளுவதாக" பிரச்சாரம் செய்து வருகிறார்கள். (ஒரு புரட்சியாளன் மக்களின் பிரச்சனையைக் கண்டறிந்து, அந்த மக்களுடன் மக்களாக இந்தப் பிரச்சினைக்காகப் அவன் போராடிக் கற்பதே - மக்களிடம் கற்றுக்கொள்ளுதல்- என்ற சொல்லின் அடிப்படை அர்த்தமாகும்.) பாராளுமன்ற பஜெற்றுக்கு இசைவாக இந்த விசாரிப்புக்களின் மீது அள்ளித் தெளிக்கும் அரசியலுக்கு இந்தச் சோடனை ஏன் தேவைப்படுகிறது? சிந்தியுங்கள், மக்களின் புரச்சிகரமான சிந்தனைகளை மழுங்கடிக்கவும், தமது பிழைப்புவாத அரசியல் வாழ்வுக்காக மக்களை மருட்டி வைத்திருக்க நடத்தப்படும் எதிர்ப்புரட்சி அரசியல் நிலையாகும்.
இன்று வரை இந்த கொடிய யுத்தத்தால், நொந்து நூலாகிப்போன மகக்களின் அவலங்களுக்கு, அரசிடம் பெற்று இவர்கள் செய்யும் - சமூகசேவை உதவிகளை- நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் இவைகளையே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையின் சமூகத் தீர்வாக இவர்கள் காட்டி, தமது அரசியல் நீட்சியை தக்கவைப்பதற்கும், தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற சந்தர்ப்பவாத தலைமையை புதிய பரினாமத்தில் நிலைநிறுத்த முனையும் தமது சுயநலத்தையும் நாம் அனுமதிக்கவே முடியாது.
இன்று பாராளு மன்றத்தினூடாக பல மாற்றங்களைக் கொண்டு வந்த உலக வரலாற்றுப் பாடங்கள் இருப்பினும்: இலங்கைப் பாராளுமன்றம், பாராளுமன்ற ஜனநாயக்தையே படுகொலை செய்த எதேச்சாதிகார பாராளுமன்றம் என்பதே யதார்த்தமாகும். இதற்குள் மாற்றங்கள் எதையும் எதிர்பார்பது முட்டாள் தனமாகும். இதற்குள் இருக்கும் பிரதிநிதிகள் இதற்கெதிராகப் போராடாத வரை, இவர்களை ஜனநாயகவாதிகளாக ஏற்றுக்கொள்ளவே முடியாது! என்பதே மக்கள் ஜனநாயகத்தின் திடமான நம்பிக்கையாகும்.
இன்று புலி எதிர்ப்பாளர்கள் மக்களின் கண்களைக் கட்டி, அரசியல் செய்யும் அசிங்கத்தைச் செய்து வருகிறார்கள். இலங்கைளின் மொத்த மக்களையும் சோனகிரியாக்கும் இவர்களின் உழுத்த அரசியலைப் புட்டு வைப்பது இன்றய வரலாற்றுக் கடமையாகும். "தமிழ் மக்களுக்கு நிம்மதியை கொண்டுவந்த ‘சிங்கள பேரினவாத’ ஜனநாயகம்!" என்று பல்லாக்குத் தூக்குகிறார்கள். ஒற்றை உலக ஒழுங்கமைப்புக்கு (92)முன்னதான 15 வருட காலத்தில், சுதந்திரக் கட்சியால் பாராளுமன்றப் பக்கமே தலைவைத்தும் படுக்க முடியவில்லை. சிறீமாவின் குடியுரிமையைப் பறித்த போது, இந்தப் பாராளுமன்றத்தால் ஒரு சுண்டுவிரலைக் கூட அசைக்க முடியவில்லை. இதற்கெதிராக தும்முவது மட்டுமென்ன, முனுமுனுப்பதே சாத்திய மில்லாத நிலையில்தான் இவர்களின் ஜனநாயகம் தொலைந்த இடம் தெரியாமல் இருந்தது!
பாராளுமன்றத்துக்குள் பண்டாரநாயக்காவால் சிங்களத் தேசிய எழுச்சி கொண்டு வரப்பட்டதை நாம் மறுக்கவில்லை. ஒற்றைத் தேசிய இனமல்லாத அரசு சமூகமான இலங்கையில்: தனித்துச் சிங்கள தேசிய எழுச்சியை கொண்டுவந்ததே, சிங்கள பௌத்த இனவாதத்தின் துணைகொண்டே அல்லாது, இலங்கையில் இருக்கும் அனைத்து தேசிய இனம் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் சமச்சீரான வளர்ச்சியைக் கணக்கில் கொண்ட இணைவில் அல்ல! (இது அப்பட்டமான சிங்களப் பேரினவாதம் தான்!!) தமிழ் தேசியவாதம் (மொழி- இனம்) பண்டரநாயக்காவின் ஏகாதிபத்திய எதிர்பு நிலையில் இணையாது, பொது நிலைப்பாட்டை எடுக்காது துரோமிழைத்தது என்பதும் உண்மைதான். ஆனால் தமழ் மக்களின் வெகுஜனப் போராட்டமான (1961)சத்தியாக் கிரகத்தை, சிங்கள இடதுசாரிகள் பலரும் மற்றம் ஜனநாயக வாதிகளும் இணைந்து எதிர்த்து, அதற்கிணையாக துரோகத்தை புரியவில்லையா?
பாரளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டு அடிதடியையும், யுத்தங்களையும், அவசரகாலச் சட்டங்களையும் அமுல்படுத்தும் இவ் அரசாங்கம், இத் தமிழ் கட்சிகளையும் மீறி தமிழ் மக்களுக்கு ஏன் எவற்றையும் செய்யமுடியாமல் போனது? இதற்கு இவர்களால் ஏதாவது பதிலைச் சொல்ல முடியுமா? யுத்தத்தை தவிர, இவர்கள் ஏற்றிப் போற்றும் சுதந்திரக் கட்சி எந்த ஜனநாயகத் தீர்வை இதுவரை தமிழ் மக்களின் நலன்களைப் பிரதிபலிக்காத, தமிழ் தலைமைகளை எதிர்த்து முன்வைத்தது! ஏன் முன்வைக்கவில்லை? புலி எதிர்ப்பாளர்கள் கூறுகின்ற இன்றைய கண்கெட்ட "ஜனநாயக" யுத்தத்தைப்போல.. யுத்தங்களை செய்ய முடிகிற அவர்களுக்கு, ஏன் பாராளுமன்றத்துக்குள் இதுவரை நியாயமான தீர்வைக் கொண்டுவர முடியவில்லை. ஆருக்கு விடுகிறார்கள் விடுகை!
இலங்கையில், பிரிட்டீசாரால் கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற முறைக்குள், பல விசித்திரங்கள் நடந்தது என்பது என்னவோ உண்மைதான். (பெண்களுக்கான வாக்குரிமை - அரசியல் உரிமை தொடக்கம், பண்டரநாயக்காவின் சிங்கள தேசிய எழுச்சி வரை). ஆனால் யூ.என்.பி யின் புத்தொழுச்சியானது, பண்டாரநாக்காவின் கொலையின் பின்னர், சுதந்திரக் கட்சியால் ஈடுகொடுக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. 77ல் தமிழர் பிரிந்துபோதலை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட போதிலும், தமது பிரச்சினை பற்றியும், அவற்றின் சாராம்சம் பற்றியதுமான பிரஞ்ஞை பூர்வமான அறிவு மக்களிடம் சமச்சீரற்றதாவே காணப்பட்டது. இந்த நிலையை பூர்த்தி செய்ய விரும்பாத, அரசியல் அநாதைகளான தமிழ் இயக்கங்களின் நிலையும், புதிய யூ.என்.பி பற்றியதுமான சரியான அரசியல் நெறிப்படுத்தலும் இன்றிய தன்மையுமே, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தடம்புரண்டு போவதற்கு வழிவத்த பகுதிக் காரணங்களில் ஒன்று என்பது மிகையாகாது.
77ல் தேர்தலுக்கு நின்ற யூ.என்.பி அரசானது இலங்கையில் இருந்த எந்த அரசையும் விட வலுவானதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. பண்டரநாயக்காவால் திரட்டப்பட்ட தேசிய மூலதனம் (சிங்கள தேசிய). இவ் உள்நாட்டு மூலதனம் தோன்றுவதை இவர்களால் தடுக்க முடியாது போனாலும், இதை தமது முற்றுகைப் பொருளாதாரத்துக்கு (ஏகாதிபத்திய மூலதனத்துக்கு) சேவை புரிகின்ற மூலதனமாக ஆக்குவதக்காக, இவர்கள் எதையும் செய்யத் தயாரானார்கள். இதற்காகவே இவர்கள் "புதிய கொள்கையை" வரலாறு காணாத வெற்றியாக முன்வைத்தனர். இந்தத் தேன் தடவிய நஞ்சைத்தான் அன்று ஆசியாவின் தலைசிறந்த ஜனநாயகமாக அமீர் கொக்கரித்துக் கொண்டார்!
தேர்தல் வெற்றியின் பின்னர், முற்றுகைப் பொருளாதாரத்துக்கான தமது புதிய கொள்கைகளை அமுல்படுத்த, பாண்டாரநாயக்கா முதற் கொண்டு 77வரை இடப்பட்ட அடித்தம் ஓரளவு பலமாக இருந்ததாலும், இவ்வரசு மூலதனத்தின் மேல் தமது முற்றுகை மூலதனத்தை துரிதமாக இருத்தி அழிப்பதற்கு, இருப்பிலிருந்த பிரிட்டீசாரின் பாராளுமன்ற முறை தடையாக இருக்கவே, இதை சர்வாதிகார அரசு நிர்வாகமாக மாற்றி அமைத்தான் ஜே.ஆர். என்னும் அயோக்கியத் தனம் கொண்ட பாசிட். தன்னைத்தானே ஜனதிபதியாகப் பிரகடனப்படுத்திய இந்த புத்திசாலித்தனமான பாசிட், வெகு தந்தரமாக பாராளுமன்றத்தையும் அதன் அதிகாரத்தையும் செல்லாக் காசாக்கினான். பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்டே இவற்றைச் செய்து, தனது மூதாயர்களுக்கும் வழிகாட்டியான பாசிட்டாக தன்னை "ஜனநாயக" முகமூடி போட்டுக் கொண்டே நிலை நிறுத்திக் கொண்டான்.
ஜே.ஆர் அமைத்து வைத்த மேடையில் தான், இன்று மகிந்தாவும், அவர்களின் சோடிகளும் "ஜனநாயக" மாலைகளை மாற்றி மாற்றிச் சூடிக்கொண்டு, தேன் நிலவு நடத்துகிறார்கள். சீறிமாவின் குடியுரமையைப் பறித்த, சம்மந்தனின் குடியுரிமையை பறிப்பதாக மிரட்டுகின்ற, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் குடியுரிமையைப் பறித்துவி்டக் கூடிய நாக்கு வளிக்கக்கூட உதவாத இந்தப் பாராளுமன்றத்துக்குள் தான், தமிழ் மக்களுக்கு -சிறுபான்மையினருக்கு - பாலும் தேனும் சுரக்குமாம். இந்தப் பாராளுமன்ற சாக்கடைச் சேற்றுக்குள் புரண்டெழும்புகின்ற "ஜனநாயக" அக்கினிக் குஞ்சுகள், இந்தப் பாரளுமன்றத்தையே சீரமைக்க முடியாத வெறும் பஞ்சு மிட்டாய் ஜனநாயகத்தை பெரும் தம்பிடித்துத் தூக்கிக் காட்டுகிறார்கள்.
ஒரு துருவ உலக ஒழுங்கமைப்புக்குள், 94முதல் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவித்து வருவதாக ஜனநாயகத் தம்பட்டமடிக்கும் புலி எதிர்ப்புப் புரட்சியாளர்கள்? ஒன்றைக் கவணித்துக் கொள்ள வேண்டும். யூ.என்.பி முழு இலங்கைக்கும் முற்றுகைப் பொருளாதாரத்தை கொண்டுவர விரும்பியதாலேயே, புலிகளுடன் அதிகளவு இணைந்து போக விரும்பியது. ஆனால், சிங்களத் தேசியவாதிகளின் ஆதரவைக் கொண்டிருக்கும் சுதந்திரக் கட்சி, முற்றுகைப் பொருளாதாரத்தை தெற்கிலே கட்டுப்படுத்தி, வட,கிழக்கில் அதை முற்றாகத் திறந்து விடத் துடிக்கிறது. இதற்காக புலிகளிடம் நிலப்பறிப்பை செய்து, அதை "ஜனநாயக" வடிவில் அரிதாம் பூசிக் கொண்டு, புதிய குடியமைப்பு என்ற அபிவிருத்திப் போர்வைக்குள், தமிழ் மக்களின் பாராம்பரிய பிரதேசங்களையும் - அதன் மீதான பிரஞ்ஞை பூவமான தேசிய வாழ்வையும் - சிதைத்து சின்னா பின்னமாக்கி, அவர்களை சிறுபான்மை இனமாக்கி அவர்களின் தேசிய தன்மையை இல்லாது ஒழிக்கும் நயவஞ்சகத்தனமான அரசியலே இதுவாகும்.
இந்தக் குழிதோண்டும் அரசியலுக்காகத் தான், தமிழ் பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகள் மக்களிடம் மினைக்கெட்டு எதையோ கற்றுவருகிறார்களாம்! எந்த நேரமும் மரணம் வரலாம் என்ற நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டு இருப்பது இன்று நேற்று அல்ல. இராணுவப் பலங்கொண்டு தமிழ் மக்களின் பரம்பரிய நிலங்களைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பறித்து, அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் செய்த நாள் முதலாய் இன்றுவரை இதுவே சிறுபான்மை மக்களின் தலையெழுத்தாகத் தொடர்ந்து வருகிறது. இன்று சிறுபான்மை மக்களின் மொத்த நிலங்களையும் வல்லசுப் பேய்களுக்கும், பிற நாடுகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கின்ற அடகுக் கடைக்காரராக இந்தத் தமிழ் பாராளுமன்ற சந்தர்ப்ப வாதிகள் மாறியிருப்பதை தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாது. புலிகளை வைத்து, தமிழ் மக்களின் மரணங்களில் சேதாரக் கணக்குப் பேசுகின்ற இந்தப் போக்கிரிகளுக்கு அனைத்துச் சிறுபான்மை மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். பாராளுமன்றத்துக்குள் ஜனநாயகத்தையே நிலைநிறுத்த முடியாத எந்தப் பேடி அரசியல் வாதியும், தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கவருவதை செருப்பாலே அடிக்கத் தயாராக வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியை, அவரின் குடியுரிமையைப் பறித்து வாக்களித்த அந்தமக்களின் "வாக்குரிமையை" ஏளனம் செய்து கசக்கிப் போடும் இந்தப் பாராளுமன்றத்தை, இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்தை தட்டிக் கேட்காத இந்தப் பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகளை, இவர்களிடம் எமது தலைவிதியை ஒப்படைக்கும் எமது அறியாமயை, இந்தச் செல்லாக் காசான "ஜனநாய"கத்தை இனியும் என்ன செய்யப் போகிறீர்கள்?
• புரட்சிகர அரசியல் முதன்மை பெற...
• தன்னுடைய குறைபாடுகள் தன் கண் முன் எடுத்துக் காட்டப்படுவதைப் பார்த்து பயப்படாமல் இருக்குமேயானால், தன்னுடைய தவறுகளையும் குறைபாடுகளையும் தானே எடுத்துக் கூறி விமர்சனம் செய்வதற்கு அஞ்சாமல் முன் வருமேயானால், அந்தக் கட்சியை எவராலும் அசைக்க முடியாது: தன் தவறுகளையும் வேலையில் காணும் குறைபாடுகளையும் அது தன் கண்களை மூடிக்கொள்ளாமல் தெளிவாகப் பார்க்குமேயானால் கட்சி வேலையில் காணும் குற்றங் குறைகளில் இருந்து அது படிப்பினைகளைக் கற்று தன் ஊழியர்களுக்கு அப்படிப்பினைகளை எடுத்துக் காட்டிப் போதிக்குமேயானால், தன் தவறுகளை காலம் கடப்பதற்குள் எப்படி நிவர்த்தி செய்வது என்று அது வழி தெரிந்து கொண்டிருக்குமேயானால், அந்தக் கட்சியை எந்த சக்தியாலும் வெல்ல முயாது. ஒரு கட்சி தன்னுடைய சொந்த தவறுகளை மறைக்குமேயானால்,கடினமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதென்று தன் கண்களைப் பொத்திக் கொள்ளுமேயானால், "எல்லாம் சரியாகவே இருக்கின்றன!" என்று பாசாங்கு செய்வதன் மூலம் தன் குறைபாடுகளை மழுப்புமேயானால், தன்னுடைய குறைபாடுகளை எடுத்துக் காட்டுவதைப் பார்த்து பொறுமையிழந்து ஆத்திரப்படுமேயானால், தன் குறைபாடுகளை தானே எடுத்துக் கூறி விமர்சனம் செய்வதைத் தொல்லையாகக் கருதி கைவிடுமேயானால், தன்னைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொண்டு திருப்தி மனப்பான்மை கொள்ளுமேயானால், தன்னுடைய வீண் பெருமைகளைப் பற்றி பேசுவதில் மனம் மகிழுமேயானால் தனக்குக் கிடைத்த வெற்றிகளைப் பார்த்து சந்தோசப்பட்டு குறட்டை விடுமேயானால், அந்தக் கட்சி நிட்சயம் அழிந்துபோகும். ..... நன்றி: - "போல்"ஷவிக் கட்சியின் சரித்திரம்"
காகம் சமன் கரும்பலகை!
காகமும் கருப்பு: கரும்பலகையும் கருப்பு, ஆகவே, காகம் சமன் கரும்பலகை என்று சிலர் "லொயிக்"கலாக விவாதம் புரிய முன்வருகின்றனர். சரி, வந்திட்டுப் போகட்டும்...
இன்று ஏட்டிக்குப் போட்டியாக கருத்துக்கள் மோதத் தொடங்கியுள்ளன. அவரவர் தம் வர்க்க நலனுக்கு ஏற்ப தமது கருத்துக்களைத் தக்க வைப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்து வருவது, வரலாறு என்றும் நிரவி நிற்கிற ஒன்றுதான்..
83ல் இருந்து , தமிழ் தேசிய விடுதலைக்கு போராட முற்பட்ட 40 க்கு மேற்பட்ட விடுதலை இயக்கங்களில்- பல காணமல் போயின. பெரிய இயக்கங்களான 5 இயக்கங்கள் (தாம் ஒற்றுமையாக காட்டிக் கொண்ட போது ) ஏனைய சமூதாயப் போக்குக்களை தமது " வேர் இயக்கங்கள்" என்ற மதமையில் தான் பிரித்திருந்தனவே ஒழிய, சமூதாயத்தின் வர்க்கப் பிரிவின் விளைவாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த எல்லைக்குள் டக்கஸ் தேவனந்தாவும் தப்பிக் கொள்ள முடியாது!
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில் .... முளைவிட்ட இந்த பெரிய 5 விடுதலை இயக்கத்துக்கு முதலும், பல ஜனநாய இயக்கங்கள் போராடின. தமிழீழ போராட்டத்தை 83 இனக்கலரம் வரையும் நிராகரித்த வரலாறும் உண்டு. இனக்கலவரத்தால் ஆயுதப் போராட்ட எழுச்சியில் (இந்தியாவின் உதவியுடன்) முற்றி வெடித்த இயக்கங்களின் நடுவே.. தேசிய விடுதலையை சரியான திசைவழியே நகர்த்த, தமிழீழ விடுதலையை நிராகரித்த ஜனநாய இயக்கங்களே இதை முன்னெடுக்க தயாராகின.
இதற்கு, ஒரே ஒரு காரணம். அதுதான் இன முரண்பாட்டுக்கு வெளியே, தேசிய இன முரண்பாட்டை (காலனித்துவத்தில் வர்கவிடுதலையின் வெளிப்பாடாக) தமது கையில் எடுக்கும் போராட்டமே அது! அதற்காகவே தம்மை ஆயுதபாணியாக்க அவைகள் தயாராகின. இதன் வெளிப்பாடே என்.எல்.எவ் .ரீ.
என்.எல்.எவ்.ரீ தன்னை ஆயுதபாணியாக்க வேண்டிய தேவையைக் கொண்டிருந்தது. இதை ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஊடாக பூர்த்திசெய்ய முற்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் அவை நடைபெறவில்லை.
சுந்தரம் படுகொலை முதல், புத்தூர் நிலப் பிரச்சினை வரைக்கும்- நடைமுறையில் இருந்த "கூட்டு முன்னணிக்குள்" நாபாவும் - விசுவும் இணைந்திருந்தனர். (புளட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழீழ விடுதலை அணி, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, மற்றும் சில வெகுஜன ஸ்தாபனங்கள்..) இதன் தொடர்ச்சியில் நாபாவின் தனிப்பட்ட தெரிவே என்.எல்.எவ்.ரீக்கான பயிற்சி உடன்பாடாகும். (ஈபிக்கும் - புளட்டுக்கும் சிறை மீட்புத் தொடர்பாக பிரச்சனைகள் தொடங்கியிருந்தன!) ஈ.பி.ஆர். எல்.எவ் போராளிகள் என்ற போர்வையிலேயே இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இது ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஏனைய போராளிகளுக்குத் தெரியாத விடயமும் கூட. எவ்வாறு தழிழீழத்தை ஆதரிக்காத விசு சார்ந்தவர்களுடன் 83 வரை இணைந்து வேலைசெய்ய முற்றபாட்டர்களோ, அதே போல இந்தியாவை ஆதரிக்காத விசுவின் நிலைப்பாட்டுடன் உடன்பட்ட தோழமை ரீதியில் நாபா இதைச் செய்திருந்தார்.
என்.எல்.எவ்.ரீ யின் தத்துவாத்த இதழான "இலக்கு" இதழ் -3 , அச்சில் இருக்கம் வரை: இது எந்த அமைப்புக்குச் சொந்தமானது என்பது "ரோவுக்கு" தொரியாமல் இருந்தது. புளட்டின் தேனீ காம்பில் இது புளட்டின் பத்திரிகையாக கொடுக்கப்பட்டும் இருந்தது! இது என்.எல்.எவ்.ரீ க்குச் சொந்தமானது எனக் காட்டிக் கொடுத்ததே ஈ.பி.ஆர்.எல்.எவ் தான்.
"இலக்கு" இதழ் -2 இல் வெளியான "கொந்தளிக்கும் பஞ்சாப்" கட்டுரையே "ரோவுக்கு" நெருடலாக இருந்தது. இதைத் தொடர்ந்து என்.எல்.எவ்.ரீக்கு நெருக்குதலாகவே இருந்தது. இந்த "ரோ" வின் நெருக்குதலின் போது கூட, இந்த பயிற்சி பற்றிய விசயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.(இந்த நெருக்குதலின் போது என்.எல்.எவ்.ரீ போன்ற ஒரு சரியான அமைப்புக்கு தாம் ஆயுதப் பயிற்சி தர தயாராக இருப்பதாக - ரோ - கூறியது. இந்திய பயிற்சி என்.எல்.எவ்.ரீ யை தேடி வந்ததே உண்மை. இதை அவர்கள் அன்று ஆசைப்படவில்லை.) இது நடக்கும் போது, என்.எல்.எவ்.ரீ யினர் பயிற்சியை முடித்து வெளியேறும் தருவாயில் இருந்தனர். இவர்கள் வெளியேறும் போது, இக் காம்பிலிருந்த ஈ.பி.ஆர். எல்.எவ் போராளிகளில் இருவரில் ஒருவர் என்.எல்.எவ்.ரீ ஆக வெளியேறி இருந்தார். இதை நாபா மனப்பூர்வமாக அங்கீகரித்தது, அவரை உண்மையான போராளியாக உயர்த்திவைக்கிறது.
இதன் பின்னர் "ஒளிரும் பாதை" யினரிடம் இருந்து என்.எல்.எவ்.ரீ க்கு கிடைக்கப் பெற்ற ஆயுத பயிற்சித் தொடர்புகள், நாபாவுடன் பகிரப்பட்டதா என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இதுவரை இல்லை. இக்கால கட்டத்தில் என்.எல்.எவ்.ரீ க்குள் இதற்கான பொளாதார வசதிகள் இருந்திருக்கவில்லை. இதன் பின்னர் உட்கட்சிப் போராட்டம் கூர்மையடைந்தும் இருந்ததுடன், அமைப்பு இரண்டாக உடைந்தது...
ஒரு போராளி ஆயுதத்தையும் அதை இயக்கும் திறனையும் - எங்கிருந்து பெறுகிறான் என்பதை விடவும், அதை எந்த அரசியலுக்காக, யாருக்கு எதிராகப் பயன்படுத்துகிறான் என்பதே மிக முக்கியமானது!
பி.கு:
முதல் முயற்சி பல குறைபாடுகளைக் கொண்டிருந்ததுடன், "ரோவு"க்கும் தெரியவந்தும் இருந்தது. பின்னர் நாபா இதைச் சீர் செய்ததுடன் மிகவும் இரகசியமாவும் கையாளப்பட்டது.
சுதேகு
080309