அரசுசார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், தமிழ் மக்களை அரசு கொல்வதன் மூலம் தான், தாம் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கமுடியும் என்கின்றனர். இதை நாம் தேனீ இணையம் முதல் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி அரசியலின் பின்னும் காணமுடியும்;. இதற்கு மாற்றாக இவர்கள் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கவும், புலியை ஒழிக்கவும், வேறு எந்த மாற்று அரசியல் வடிவமும் இவர்களிடம் கிடையாது.

 

 

தமிழ்மக்களை கொல்வதன் மூலம், 'ஜனநாயகத்தை" தமிழ்மக்களுக்கு அல்ல தமக்கு பெற்றுக் கொள்ளல் தான், அரசு சார்பான புலியெதிர்ப்பு அரிசியலாகும். இதைத்தான் இவர்கள் எப்படி எழுதினாலும். எப்படி நியாயப்படுத்தினாலும், நடைமுறையில் புலிக்கு மாறாக வைக்கும் மாற்று அரசியல் வழியாகும்;. அரசின் இன அழிப்பு, இனக் களையெடுப்புத் திட்டத்துக்கு வெளியில், இவர்களுக்கு என்று எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது. அரசு செய்வதை ஆதரிப்பது தான், இவர்களின் ஆய்வுகள், அறிக்கைகள் முதல் வெள்ளை வேட்டி அரசியல் வரை அரங்கேறுகின்றது.

 

இவர்களுக்கு இடையில் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது. அரசை மையப்படுத்தி இயங்கும் இவர்கள், அரசுக்கு பின்னால் இயங்குகின்றனர். கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவையும், அதை புலியின் குற்றமாக காட்ட வேண்டிய தேவையும் தான்,  இவர்களுக்கு அரசு வழங்;கும் சுதந்திரத்தின் அளவுகோல். 

   

அரசு தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு, போராடக் கூட வக்கற்ற, வெறும் கூலிக் கும்பல்கள் தான் இவை. அரசு சார்பாக புலியெதிர்ப்பு, புலி ஒழிப்பு என்ற எல்லைக்குள், ஒரு இன அழிப்பையும், இனச் சுத்திகரிப்பையும், இனக் களையெடுப்பையும் ஆதரிக்கின்றனர். இன்று பேரினவாத அரசு செய்வது, இதைத்தான். ஆனால் அரசு சார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், இதைத்தான் 'ஜனநாயகம்" என்கின்றனர். இன அழிப்பையும், இனக் களையெடுப்பையும் 'ஜனநாயக"த்துக்கான திறவுகோல் என்கின்றனர்.     

 

இப்படி இவர்களைப் பொறுத்த வரையில், குவியல் குவியலாக தமிழ்மக்கள் கொல்லப்படுவது 'ஜனநாயகத்தை" மீட்பதற்கான போரட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று என்கின்றனர். இதுதான் அரசு சார்பு புலியெதிர்ப்பாளர்களின் 'ஜனநாயக" நிலை. இவர்கள் இதற்கு எதிராக வைக்கும் வாதம், புலிகள் மக்களை விடுவிக்க மறுக்கின்றனர் என்பதால், இது மேலும் தவிர்க்க முடியாதது என்கின்றனர். ஆகவே கொல்லும் உரிமை அரசுக்குண்டு என்கின்றனர்! யுத்தத்தில் மக்களை பணயம் வைத்திருப்பவர்கள் தான் இதற்கு பொறுப்பு, தாங்கள் அல்ல என்கின்றனர். இப்படி கொல்லும் உரிமை பற்றியும், குற்றத்தின் தன்மை பற்றியும் இந்த 'ஜனநாயக"வாதிகள் நியாயம் கற்பித்து 'ஜனநாயகம்" பேசுகின்றனர்.

 

இங்கு கொல்பவன் அரசு , கொல்லத் துணை போகின்றவர்கள் தான் புலிகள். அத்துடன் கொல்பவனை ஆதரிப்பவர்களும் கொலைக்கு உடந்தை தானே. இது புலிக்கு நிகரான குற்றம் தான், அரசு சார்பு புலியெதிர்ப்புகளின் நியாயப்படுத்தல்கள்.

 

இப்படி அரசின் படுகொலையை ஆதரித்து, இதுவே 'ஜனநாயக"த்துக்கான மாற்றுப் பாதை என்கின்றனர். சிங்கள பேரினவாதத்தை விட புலிகளை மிக மோசமான எதிரியாக சித்தரித்து, இதை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு மாறானது எதார்த்த உண்மைகள்.

 

அமைதியும் சமாதானமும் நிலவிய காலத்தில், புலிகள் நடத்திய படுகொலைகள் 500 முதல் 1000 வரையிலானது. இதன் பின் புலிகள் நடத்திய மூதூர் தாக்குதல், பொது மக்களின் பஸ் மீதான தாக்குதல்கள் என்று இதுவரை அண்ணளவாக 1000 பேரளவில் தான் கொல்லப்பட்டனர். மிஞ்சிப் போனால் 2000 பேர்.

 

இதற்கு மாறாக யுத்தத்தின் பின், சிங்கள பேரினவாதம் 10000 பேரளவிலான தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளது. கடத்தல், காணாமல் போதல் முதல் குண்டு வீசி கொத்துகொத்தாக கொல்லுதல் வரை, இந்த படுகொலை பட்டியல் நீண்டது, நீள்கின்றது. ஒரு இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக, இனச் சுத்திகரிப்பாக நடத்தும் சிங்களப் பேரினவாத அரசின் நடவடிக்கையைத் தான், அரசுசார்பு பலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" என்று கூறி ஆதரிக்கின்றனர். 

 

தமிழ் மக்களை படுகொலை செய்து புலியை ஒழிப்பதைத்தான், இவ்வளவு காலமும் தம் 'ஜனநாயக" அரசியலாக வைத்தும் வந்தவர்கள். இதற்கு வெளியில் அல்ல.

 

பி.இரயாகரன்
08.03.2009