04232021வெ
Last updateசெ, 20 ஏப் 2021 6pm

எஜமானுக்காக குலைக்குதுகள், 'ஜனநாயகம்" பேசும் நாய்கள்

தமிழ்மக்களைக கொன்று குவிப்பதை ஊக்குவிக்கும் கொலைகாரர்களின் நடிப்புத்தான், புலியெதிர்ப்பு  'ஜனநாயகம்".  தமிழ் மக்களை கொன்று குவிக்கும் அரசுக்கு எதிராக போராடாது, புலிகள் தமிழ் மக்களை பணயமாக வைத்திருப்பதை கண்டிக்கவும் தூற்றவும் முடியாது. ஆனால் இதைத்தான் அரசு சார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" செய்கின்றது.

 

இலங்கையில் அரசுடன் கூடி நிற்கும் கூலிக்குழுக்கள் முதல் புலம்பெயர் புலியெதிர்ப்பு பேசும் 'ஜனநாயகம்", தமிழ் மக்களை அரசு கொல்வதைக் கண்டு கொள்ளக் கூடாது என்கின்றது. இதற்கு அவர்கள் பெறுவது பதவிகள், பட்டங்கள், நாலு சில்லறைகள். இவர்கள் மூடி மறைக்கும் தமிழ்மக்களின் மரணங்களே, இவர்களின் பிழைப்புக்கான அரசியல் அடித்தளம். அரசுக்கு எதிராக இதை கண்டித்தால், இவர்கள் அனுபவிக்கும் 'ஜனநாயகம்" என்ன என்பதை அவர்களே தெரிந்து கொள்வார்கள். 

 

இங்கு புலிகள் பலி அரசிலை நடத்தி தாம் தப்பிப்பிழைக்க முனைகின்றனர் என்றால், அரசு சார்பு புலியெதிர்ப்புக் கும்பல் பலியை எடுக்கும் அரசை ஆதரித்து, எலும்புகளை நக்குகின்றனர்.

 

இப்படி கொலைகார ஈ.பி.டி.பி, உட்படுகொலைக்கு புகழ்பெற்ற புளாட், இந்தியக் கைக்கூலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ், கூலிக் கும்பலான ரெலொ, அரச எடுபிடிகளான கருணா-பிள்ளையான் கும்பல், அலுக்கோசு ஆனந்தசங்கரி  முதல் இவர்களுக்கு பாய்விரித்து விடும் தேனீ இணையம் வரை, புலிகள் மக்களை பணயமாக வைத்திருப்பது தான் பிரச்சனை என்கின்றனர். மற்றும்படி அரசு மக்களை கொல்வது பிரச்சனையில்லை என்கின்றனர். இது இவர்களின் அரசியலின் படி, தமது பிழைப்பை நடாத்த ஏதுவான 'ஜனநாயக"த்துக்கான கொலை.

 

நாட்டில் புலியின் இருப்புத்தான், 'ஜனநாயக"த்திற்கு ஆப்பு என்கின்றனர். மற்றும்படி அரசல்ல என்கின்றனர். புலி இல்லாமல் போனால், நாட்டில் 'ஜனநாயகம்" வந்துவிடும் என்கின்றனர். அது மக்களின் உரிமைகளை வாரி வழங்கிவிடும் என்கின்றனர். அவர்கள் எஜமானன் போடும் எலும்புக்காக, இதை சொல்லுகின்றனர், செய்கின்றனர். இவர்களின் பிரச்சாரங்கள், இவர்களின் வழிகாட்டல் எல்லாம் இதற்குள்தான் அடங்கியிருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமை என்பது, அவர்களின் சொந்த சுதந்திரமான செயல்பாடுகளல்ல. இதுதான் இந்த 'ஜனநாயக" வாதிகளின் அரசியல். இதை யார் மீறினாலும், அதற்கு வேட்டு வைப்பவர்கள் தான் இவர்கள்.

 

எந்த தமிழ் மக்களின் 'ஜனநாயகத்தை" தாம் கோருவதாக கூறுகின்றனரோ, அந்த மக்களை இவர்களின் எஜமான்கள் கொல்வதை இந்த நாய்கள் விசுவாசமாக வாலாட்டி, அதை 'ஜனநாயகமாக" குலைத்துக் காட்டி நக்குகின்றன. குலைப்பதுதான் இங்கு 'ஜனநாயகம்". இதை மூடிமறைக்கவே, புலிகளிடமிருந்த தப்பி வரும் மக்களை, கொலைகாரர்கள் வாரி அரவணைப்பதாக காட்டும், பிரச்சார காட்சிப் படங்கள் மூலம் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இந்த பிரச்சார காட்சிப்படங்கள் தான், இவர்களின் 'ஜனநாயகத்தின்" எல்லை. தாமே உற்பத்தி செய்த மனித அவலத்தை, இதன் மூலம்  மூடிமறைக்கின்றனர். அதைப் புலிகள் செய்வதாக காட்டி, அதைத் தாம் நிவர்த்திப்பதாக காட்டி, மனிதாபிமான வேஷம் போடுகின்றனர். நாய்கள் எல்லாம் வாலாட்டி குலைக்கின்றன.

 

கொல்லப்படும் ஒவ்வொருவரும், காயமடையும் ஒவ்வொருவரும், அங்கு வாழமுடியாது தப்பி வரும் ஒவ்வொருவரும், சிங்கள பேரினவாதம் வீசும் குண்டுகளால்தான் என்பதும், மிஞ்சியிருந்த தாம் வாழ்வையும் இதனால் தான் இழந்தனர் என்பதும் தானே உண்மை. இப்படி மனித அவலத்தை உருவாக்கிவிட்டு, அதற்கு வேஷம் போட்டு, அதை 'ஜனநாயகம்" என்று இன்று கூவி விற்கின்றனர். இதைக் கவ்விக் கொண்டுதான், அரசுசார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசுகின்றது. இனி இவர்கள் தமிழ்மக்கள் வாக்கு போடுவதே 'ஜனநாயகம்" என்று, கடை விரிக்கும் காலத்தை நோக்கி புல்லரித்துக் கிடக்கின்றனர். எலும்புத் துண்டுக்குப் பதில் சதையுடன் கூடிய எலும்புக் கனவுடன், இந்த மக்களுக்கு 'ஜனநாயகம்" வருகின்றது என்கின்றனர். இதைத்தான் புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களுக்கு பரிசளிக்க, இந்த அரசு சார்பு புலியெதிர்ப்புக் கும்பல் காத்துக்கிடக்கிறது.   

 

புலிகள் மனித அவலத்தை உற்பத்தி செய்து "பேரினவாத" கொடுமையைக் காட்ட, அரசு சார்பு புலியெதிர்ப்பு அவர்களை தாம் அரவணைப்பதாக காட்டி, 'ஜனநாயகம்" பேசுகின்றது. தமிழ்மக்களை கொல்பவனும், கொல்லுவிப்பவனும், தமிழ் மக்கள்மேல் செய்கின்ற அரசியல் வேஷங்கள் தான் இவை.  

 

இங்கு பெருமளவில் மக்களைக் கொல்பவன் பேரினவாத அரசாக இருக்க, கொல்லுவிப்பவன் புலிகளாக இருக்கின்றான். மக்கள் இரண்டு கொடுமைகளை ஓரே நேரத்தில் அனுபவிகின்றனர். மக்களைக் கொல்பவனிடமிருந்து தப்பி போக, புலிகள் மக்களை அனுமதிப்பதில்லை. இதுதான்  அவர்கள் மேலான குற்றம். இங்கு கொல்பவன் அரசு. இங்கு கொல்வதற்கு உடந்தை தான் புலிகள். கொல்பவனல்ல.

 

இப்படி மக்களை கொன்று குவித்தும், அவர்களை காயப்படுத்தியும், அவர்களை வெளியேற்றுவி;க்கிற அரசு, அவர்களை தாம் அன்புடன் அரவணைப்பதாக காட்ட, மலிவான பிரச்சார விளம்பரத்தை கையாளுகின்றது. இதை அரசு சார்பு புலியெதிர்ப்புக் கும்பலோ, கவ்விக் கொண்டு குலைக்கின்றது. 

 

புலிக்கு நிகராக ஊர் உலகத்தை ஏமாற்ற, பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. ஊடகத்தை ஒடுக்கியபடி, காட்சிகளை வெளியிட்டு அதையே தமிழ் மக்களின் 'விடிவு" என்கின்றது. அரசு சார்பு புலியெதிர்ப்பு அதை தமிழ் மக்களுக்கான 'ஜனநாயகத்தின் விடிவெள்ளி" என்கின்றனர். 

 

இந்த பிரச்சார காட்சிப்படங்களுக்கு அப்பால், தமிழ் மக்களை களையெடுப்பதற்காக, திறந்த வெளிச் சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடத்தல், காணாமல் போதல், மற்றும் படுகொலைகளை செய்து, 'ஜனநாயகத்தை" மீட்கும் பாசிச பேரினவாத அரசு, அதை தப்பிவரும் மக்கள் மத்தியில் செய்யத் தொடங்கியுள்ளது. தப்பிவரும் மக்களை, இதற்காக அனைத்து வகையிலும் தனிமைப்படுத்தி, கண்காணிப்புக்குள் வதைக்கின்ற காட்சிகளையும், அந்த  மக்களையும் இந்த விளம்பர 'ஜனநாயகம்" கண்டு கொள்வதில்லை. 

 

அரசுசார்பு புலியெதிர்ப்பு, புலிகளை தமிழ் மக்களின் மாபெரும் வில்லனாக காட்டி, அரசின் படுகொலை முதல் அதன் இரகசியமான இனச்சுத்திகரிப்பு வரை மூடிமறைக்கின்றன. இன அழிப்பு யுத்தத்தை 'ஜனநாயகத்தின்" பெயரில் ஆதரிக்கின்றது. அரசின் தொடர் படுகொலையை நியாயப்படுத்த, இதை 'ஜனநாயகத்துக்கான" கொலையாக, 'ஜனநாயக" மூகமுடி போட்டு மூடிமறைக்கின்றனர். புலிகளின் பாசிசத்தின் இருப்பு என்பது, பேரினவாத அரசு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வழங்கத் தயாராகவில்லை என்பதுதான். இந்த அரசைத்தான், அரசு சார்பு புலியெதிர்ப்பு கும்பல் உச்சி மோந்து நிற்கின்றது. 

 

அரசு சார்பு புலியெதிர்ப்பு தேனீ இணையத்தில் அரச எடுபிடி ஒன்று எழுதுகின்ற 'புலிகளின் ஆயுத வன்முறையாலும் குள்ளத் தந்திரங்களாலும் தமது பிடியை தமிழ் பகுதிகளில் இழந்துவிட்ட ஏனைய தமிழ் விடுதலை இயக்கங்களும், ஏமாந்துபோன தமிழ் பொதுமக்களும் புலிகளுக்கு எதிராகப் போராடி, தமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட முடியாத ஒரு கையறு நிலைக்கே வந்திருந்தனர். சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையை விட, புலிகளின் தமிழ் பாசிச ஒடுக்குமுறையே தமிழ் மக்களின் தலைக்கு மேல் பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருந்தது." என்ற கூறி, பேரினவாதத்தின் இன அழிப்பை, இனச் சுத்திகரிப்பை  தமிழ் மக்களின் 'ஜனநாயக" வெற்றியை வாழ்த்துகின்றது. 'ஜனநாயக உரிமைகளை" கோரிய போராட்டம் நடத்தி தோற்றவர்களாம். யார்? இந்தியாவினால் வளர்க்கப்பட்ட மற்றைய கூலி குழுக்கள். இந்த குழுக்களே புலிக்கு நிகரான ஜனநாயக விரோதிகள். உள்ளியக்க படுகொலைகள் முதல் மக்களை அடித்து நொருக்குவதையே, இவர்கள் தம் சுதந்திர மண்ணில் தம் 'சுதந்திரமாக" அரங்கேற்றியவர்கள்;. அனைத்து இயக்கத்திடமும் ஜனநாயகத்தை கோரி போராடியவர்களை, உள்ளியக்க ஜனநாயகத்தைக் கோரியவர்களை கொன்று குவித்த கும்பலின் ஒருபகுதி தான், இந்த கொலைகார பேரினவாத அரசுடன் இன்று ஒன்றிணைந்து நிற்கின்றது. தம் வரலாற்றை திரிப்பதன் மூலமும், மக்களுக்காக என்றுமே போராடாத கும்பல், மக்களுக்கு துரோகம் செய்தபடி அரசை நக்க வைக்கும் வாதங்கள் தான் இவை.     

  

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் அரசை பாதுகாக்கும், இழிவான மலிவான வாதங்கள் இவை. அரசு தமிழ் மக்களுக்கு மறுக்கும் பேரினவாத உரிமைகளை பாதுகாக்க, இதனால் உருவான 'புலிப்" பயங்கரவாதத்தையும், மக்களுக்கு எதிரான புலிப் பாசிசத்தையும் ஒன்றுபடுத்தி, தனக்குத்தானே 'ஜனநாயக" வேஷம் போட்டு குலைக்கின்றனர். இப்படி அரசுக்கு பின்னால் நின்று குலைப்பது மட்டும் தான், இவர்களின்  அரசியல் எல்லை. இதற்கு அப்பால் மக்களுக்காக, சுதந்திரமாக ஒரு அடியைத்தன்னும் இவர்களால் எடுத்துவைக்க முடியாது. எஜமானின் சங்கிலிக்குள் நின்று, எஜமானுக்காக குலைக்குதுகள். 

 

பி.இரயாகரன்
07.03.2009


பி.இரயாகரன் - சமர்