பிரான்சில் 'சமூகப் பாதுகாப்பு அமைப்பு" என்ற பெயரில் மார்ச் 7ம் திகதி, நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள போராட்டம், அதில் தமிழ்ப்பிரதிநிதிகளின் கோசம் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றொரு கபடமுயற்சியாகும். ஆங்கிலம் பிரஞ்சில் ஒன்றையும், தமிழில் வேறு ஒன்றையும் முன்வைத்து, இதில் கலந்து கொள்ளும் பிரஞ்சு மக்களை ஏமாற்றும் சதி முயற்சியுடன் இது ஆரம்பமாகின்றது.
இவர்கள் வைத்துள்ள கோசமோ வேடிக்கையானது. சமகாலத்துக்கு பொருத்தமற்ற வகையில், விடையத்தை திரித்து, சொந்த சந்தர்ப்பவாதத்துடன், இடதுசாரிய வேஷத்தைக் கலந்து அவிக்கின்றனர். அப்படி அவர்கள் வைத்த கோசங்கள் தான் இவை.
1. இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
2. இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!
3. அராஐகம் படுகொலைகள் காணாமல் போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
4. பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
5. பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
6. பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!"
என்கின்றது.
இன்று இலங்கையின் நிலைமையுடன், மக்களின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்பற்ற வகையில், கோசத்தை அள்ளித் தெளிக்கின்றனர். அரசையும் சமாளித்து, புலியையும் தடவி போராட அழைக்கின்றனர்.
'இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!" என்றால், அங்கு ஒரு போராட்டமும், அதனடிப்படையிலான வன்முறையுமேயுள்ளது. இது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை முதல் ஜனநாயக உரிமை வரை இதற்குள் அடங்கும். இந்த அடிப்படையின் எல்லைக்குள் தான், அங்கு வன்முறையுள்ளது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மறுப்புத்தான், அங்கு மக்கள் விரோதமான வன்முறை வடிவில் உள்ளது. அந்த உரிமையைக் கோராமல் போடும் அரசியல் வேஷம், மறுபக்கத்தில் 'பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!" என்று இங்கு உள்ள தமிழனை ஏமாற்ற கோசம். அங்குள்ள மக்களிள் சுயநிர்ணயத்தைக் கோராது, இடதுசாரிய மோசடி.
அடுத்து 'ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!" என்றால், இது என்ன மாங்காய்? அந்த சுதந்திரம் தான் என்ன? வாக்குப் போடுவதா? தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத நிலையில், தமிழ்பேசும் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைவதும் ஐக்கியப்படுவதும் சாத்தியமில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணயம் என்பது, அந்த மக்களின் ஜனநாயக உரிமை. அதை அங்கீகரிக்காத சிங்களத் தொழிலாளி, பிரஞ்சுத் தொழிலாளியும், எப்படி தமிழ்மக்களிடம் ஐக்கியத்தைக் கோரமுடியும்? நாங்கள் அதைக் கைவிட்டு கோருகின்றோம் என்றால், அதின் பின் இருப்பதோ சந்தர்ப்பவாதம் தான். அடிப்படையில் பேரினவாதம் தான்.
பி.இரயாகரன்
06.03.2009