ஒரு இனத்தின் அவலம், உலகின் கண்ணைத் திறக்கவில்லை. மனித அவலத்தை விதைத்தவர்கள், அறுவடை செய்தவர்களிடையே யார் இதற்கு உரிமையாளர்கள் என்ற எல்லைக்குள் உலகம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது.

 

எம்மக்கள் கேட்பாரின்றி, நாதியிழந்த சமூகமாக அடிமைகளாகி இழிவுக்குள்ளாகி  கிடக்கின்றனர். இதற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றவர்கள் கூட, ஏறெடுத்து பார்க்காத வக்கிரம். 'ஜனநாயகத்தை" மீட்பதாகவும், புலித் 'தேசியத்தை" பெற்றுத் தருவதாகவும் கூறித்தான், இந்த மனித அவலம் நியாயப்படுத்தப்படுகின்றது. இதற்குள் விதவிதமான பொறுக்கிகள். இலங்கை, இந்தியா, புலம்பெயர் சமூகம் வரை, இந்த மக்களை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழனே இப்படி என்றால், பேரினவாதத்தின் பின்னால் உள்ள சிங்களவர்கள் எப்படி மனித கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்?.

 

இப்படி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமும், அது உருவாக்கிய மனித அவலமும், சர்வதேசிய தன்மை பெறவில்லை. மாறாக வெறும் தமிழர் போராட்டமாக சுருங்கிப்போனது. போராட்டத்தின் குறுகிய தன்மையால், இதன் வலதுசாரிய பாசிசத் தன்மையால், ஒடுக்கப்பட்ட உலக மக்களின் அனுதாபத்தைக் கூட அது பெறத்தவறியது.

 

இதற்கு விதிவிலக்காக இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு காணப்பட்டது. தமிழர் என்ற அடையாளத்தின் அடிப்படையிலான ஒரு பின்னணியில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அமைப்பு வடிவம் பெற்று இருந்ததால், சர்வதேசியதன்மை பெற்ற போராட்டங்கள் விதிவிலக்காக நடைபெற்றது. இது புலியின் வலதுசாரியத்தையும் அதன் பாசிசத்தையும் ஆதரித்து நடைபெறவில்லை. மாறாக தம் சொந்த எதிரியை எதிர்த்து நடைபெற்றது. தம் எதிரி எப்படி ஈழத்தில் ஓடுக்க உதவுகின்றான், தலையிடுகின்றான் என்ற அடிப்படையில், ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அங்கு குரல்கள் எழுந்தது. 


 
இதற்கு அப்பால் ஒடுக்கப்பட்ட எம் மக்களின் போராட்டம் சர்வதேசிய தன்மை பெறத் தவறியது. இதற்கு புலிகளின் வலதுசாரி நிலைப்பாடும், அது கொண்டிருந்த பாசிசத் தன்மையும் தான் மிக முக்கியமான காரணமாகும். மறுபக்கத்தில் இடதுசாரிய தேசியப் போக்குகளை, புலிகள் முழுமையாக அழித்தனர். தப்பிப் பிழைத்த பகுதி கோட்பாட்டு  சீரழிவுக்குள் சென்று, வலதுசாரிகளாகவே மிதந்தனர்.

 

உண்மையில் எஞ்சிய இடதுசாரியத் தன்மை சிறியளவில் கூட, வலதுசாரிய போராட்டத்திற்கு சமாந்திரமாகக் கூட முன்னேறவில்லை. அப்படிக் காட்டிக் கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், 'ஜனநாயக" கோசத்தை வைத்து பேரினவாத பாசிச அரசை ஆதரிக்கும் இழிநிலைக்கு சென்றனர். அதன் உச்சத்தில், சிலர் பாசிச புலியை ஆதரிக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்தனர். இப்படி மக்களை சார்ந்து நிற்றல் என்பது, ஈழத்தமிழர் தரப்பினால் முற்றாக மறுக்கப்பட்டது. இப்படி மக்களுக்கான போராட்டம் என்பது தனிமைப்பட்டு, சர்வதேச சமூகத்தை நெருங்கக் கூட முடியவில்லை. எல்லாம் ஓரே விதமான வலதுசாரியத்துக்குள் மூழ்கி  முடங்கிப்போனது.  

 

இந்த நிலையில் நாம் மட்டுமே மக்களைச் சார்ந்து நின்று போராட வேண்டிய அவசியத்தை, விமர்சன ரீதியாக முன்தள்ளினோம். மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ரீதியில், பல்வேறுவிதமான  முத்திரை குத்தல்களுக்கு மத்தியில், அவதூறுகளுக்கு இடையில், நாம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எம் சக்திகுட்பட்ட எல்லைக்குள் போராட்டத்தை நடத்தினோம். சிறு துளியான எம் அசைவு மட்டும்தான், இந்த விடையத்தை முற்றாக மற்றொரு திசையில் அணுகக் கோரியது.

 

பலம் வளம் இரண்டும் வாய்ந்த இரண்டு புலி – அரசு சார்பு புலியெதிர்ப்பு நிறுவனங்கள், அவர்களின் பாரிய பிரச்சாரங்கள், இதையும் மீறி நாம் தனித்து நின்றோம். சமூக அங்கீகாரமில்லாத தனிமனித வாழ்க்கை முறை முதல், இதைச் சுற்றிய நிகழ்வுகள் வரை, போராட்டமின்றி மக்களுக்காக நிற்றல் என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது.

 

இன்றும் அரச மற்றும் புலியின் மனித விரோத செயலை எதிர்த்து, மக்களின் விடுதலையைப் பற்றி பேசுபவர்களாக நாம் மட்டும் உள்ளதை, சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இனம் காண்கின்றனர். ஆனால் நாமோ மிகக் குறுகிய ஒரு எல்லைக்குள், தனிமைப்படுத்தப்பட்டே உள்ளோம். இதற்கு வெளியில் தமிழ் மக்களையிட்டு எந்த அக்கறையுமற்ற நிலைதான், பொதுவாக ஈழத்து இலங்கைத் தமிழர் நிலையாகும்.

 

தமிழ் மொழி பேசும் மலையக மற்றும் முஸ்லிம் மக்கள், இதற்கு வெளியில் ஓதுங்கி வாழ்கின்றனர். இந்த வகையில் இந்த போராட்டம் குறுகியதாகவும், முஸ்லிம் மக்கள் மேல் வன்முறை கொண்ட ஒன்றாகவுமே பரிணமித்தது. இந்த நிலையில் சிங்கள் மக்கள் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. மொத்த சிங்கள மக்களையே இந்த போராட்டம் தன் எதிரியாக பார்த்தது.

 

மொத்தத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களிடையே போராட்டம் தனிமைப்பட்டுப்போனது. சொந்த இனத்தில் இருந்தும் தனிமைப்பட்டு போனது. தமிழரான மலையக மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, வடக்கு-கிழக்கு தமிழ் மக்களில் இருந்தும் கூட போராட்டம் தனிமைப்பட்டது.

 

வடகிழக்கு தமிழர் மத்தியில் அனுதாபத்தை பெறும் வண்ணம், போராட்டத்தை குறுக்கிக்கொண்டது.  அவர்கள் மேல் வன்முறை நிகழும் வண்ணம் வன்முறையைத் தூண்டி, அதைக் கொண்ட ஒரு போராட்டமாக புலிப் போராட்டம் குறுகிகொண்டது. அரசியல் ரீதியாக சுயநிர்ணய அடிப்படையிலான போராட்டத்தை கைவிட்டனர். தம் மீதான வன்முறை சார்ந்து போரட்டத்தின் மீது, அனுதாபம் கொண்ட உணர்வும் உணர்ச்சியுமாகவே போராட்டம் சுருங்கிப்போனது.

 

இந்த எல்லைக்குள் தான் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் எல்லை முடங்கிப்போனது. மண்ணில் வாழ்ந்தவர்களுக்கோ, தம் சொந்த அனுபவங்கள் படிப்படியாக இதை மறுதலிக்க தொடங்கியது. தம்மைச் சுற்றிய வாழ்வை கற்றுக்கொள்ளவும், அதனூடாக எதார்த்தத்தை புரிந்து கொள்ளவும் மக்களால் முடிகின்றது. புலம்பெயர் தமிழனுக்கு அது கிடையாது. மாறாக வீங்கி வெம்பிய மனநிலையில், உணர்வுக்கும் உணர்ச்சிக்குள்ளும் தன் சுயத்தைப் புதைத்துக்கொண்டான். அவர்கள் உருவேற்றும் வண்ணம், ஒருபக்க பிரச்சாரத்துக்குள் சிதைந்து போனார்கள். இதன் மேல் பொய்களும் புனைவுகளும் கொண்ட கற்பனைக்குள், இதை ஒரு குறுகிய எல்லையில் வைத்து எதிர்வினையாற்றினர்.

 

இவர்களால் சர்வதேச சமூகத்தை நெருங்க முடிவதில்லை. சிலருக்கு பணம், விஸ்கி, உணவு கொடுத்தும், தமிழர் வாக்கு உனக்குத்தான் என்று கூறியும், அவர்களை வளைத்து தமக்காக பேசவைத்தனர். இப்படி பேரம் பேசி அரசியல் செய்ய வைத்தனர். மற்றைய சமூகத்தை நெருங்கவும் அணுகவும் முடியவில்லை.

 

சொந்த மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்ட முடியாதவர்கள், வெறும் மந்தைகளைத் தான் அணி திரட்ட முடிந்தது. அப்படிப்பட்டவர்கள் எப்படி மற்றைய சமூகத்தை நெருங்கமுடியும்.

 

புலம்பெயர் தமிழர்கள் தனிமைப்பட்ட தம் வாழ்வுக்குள் முடங்கி, புலியின் மனிதவிரோத செயல்களை உருச் செய்கின்றவர்களாகி விடுகின்றனர். சுயமாக கற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைமுறையாகிவிட்டது. உணர்வுக்குள், உணர்ச்சிக்குள் அறிவிழந்து, தன் சொந்தப் போராட்டத்தையே சரியாக வழிநடத்த முடியவில்லை. இந்த மந்தைகள் தன் மக்களுக்காக வீதியில் இறங்கவில்லை. மாறாக  புலிக்காக இறங்கினர். தம் மக்கள் கொல்லப்படுவது ஏன் என்று தெரியாது, கொல்லப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கவே புலம்பெயர் மந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்.

 

தமிழ்நாட்டு தமிழர்களும், அவர்கள் போராட்டமும்

 

எம் போராட்டத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்ததில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. இதற்கூடாகவே அன்று முதல் இன்று வரை, இந்தியாவின் தலையீடு நிகழ்ந்தது.

 

எம் மக்களின் போராட்டம் மிக குறுகியதாக மாறவும், அது பாசிச வடிவம் எடுக்கவும், இந்தியாவின் பிற்போக்கு சக்திகளே மிக முக்கிய பங்கு வகித்தனர். இந்திய அரசு முதல் எம்.ஜி.ஆர் வரை இதற்காக உழைத்தனர். இன்று கோபாலசாமி, திருமாவளவன் முதல்  இந்திய கம்மியூனிஸ்ட் கட்சி வரை, இந்தப் பாசிசத்தை கொம்பு சீவி, இதில் தம் சொந்த அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். எம்மக்களின் அவலத்துக்கு, இந்த பிழைப்புவாதிகளின் தலையீடு மிக முக்கிய காரணியாக இருந்துள்ளது. புலிக்கு நிகராக, அக்கம் பக்கமாகவே எம் இனத்தை தமிழ் உணர்வின் பெயரால் அழித்தனர். தமிழ் மக்கள் தமக்காக போராடுவதற்கு பதில், புலியை தமக்கேற்ற ஒரு கூலிக் குழுவாக்கினர். புலியின் பாசிச அரசியலை, பிழைப்புவாத தமிழின உணர்வுக்கு ஊடாக இந்தியா வடிவமைத்தது.

 

எம் போராட்டத்தை புலிகள் பாசிசமயமாக்கி, அதை தமிழ் மக்களுக்கு எதிராக மாற்றினர். இதையே தமிழ்நாட்டு இனவுணர்வு பிழைப்புவாதிகள் இந்தியாவில் செய்தனர். புலிகள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுத்து, அதை தம் சொந்த புலிப்போராட்டமாக்கினர். இதையே தமிழ் நாட்டு பிழைப்புவாதிகள், தம் பிழைப்புப் போராட்டமாக்கினர்.

 

தமிழ் மக்களுக்காக புலிகள் என்றும் போராடவில்லை. அதேபோல் தமிழ் இனத்துக்காக, தமிழக பிழைப்புவாதிகள் போராடவில்லை. தம் தேர்தல் அரசியலுக்கு உட்பட்ட சவடால் அரசியலையே,  ஈழத்தமிழரின் ஆதரவாக கட்டமைத்தனர். தமிழ், தமிழ் உணர்வு என்பது ஈழ ஆதரவு உணர்வு அல்லாத தமிழகத்தின், தமது சொந்த அரசியல் தளத்தில் இவர்கள் கொண்டிருக்கவில்லை. சில பெரியாரிய கட்சிகளோ, ஈழ அரசியல் பின்னணியில் தம் இருப்பையே தக்க வைத்துள்ளன.

 

தமிழ் நாட்டு தமிழர், அவர்கள் சந்திக்கின்ற ஒடுக்குமுறைகள் மேல் இந்த பிழைப்புவாதிகள் செயலாற்ற முடிவதில்லை. ஈழத்தமிழரை ஒடுக்கும் பேரினவாதத்தை, புலிக்கூடாக பார்க்கின்ற குறுகிய எல்லைக்குள் அனைத்தையும் முடக்கி, இந்திய வல்லாதிக்கத்துக்கு உதவுதே இந்த பிழைப்புவாதிகளின் அரசியலாக உள்ளது.  

 

ஈழத் தமிழனை அன்று முதல் இன்று வரை புலிகள் கொல்வதை இட்டு அக்கறையற்றதும், அப்படி இல்லை என்றும் மறுக்கின்ற அரசியல் பித்தலாட்டத்தை செய்கின்றவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். இங்கு இவர்கள் ஈழத்தமிழன் என்பது, தம் பிழைப்புவாத அரசியல் எல்லைக்குட்பட்டதாக, அதேநேரம் ஈழத்தமிழனுக்கு எதிராக புலிக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

 

உண்மையில் இந்திய மேலாதிக்கத்துக்கு ஆதாரவாகவே இவர்களின் செயல்கள் அமைந்தன. இந்தியா தன் மேலாதிக்க நோக்கோடு ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுத்தபோது அதை ஆதரித்தவர்கள் இவர்கள். இப்படி எம் போராட்டத்தை, இந்திய மேலாதிக்க தேவைக்கு உட்படுத்தி, எம் மக்களுக்கு எதிராகவே அதை மாற்ற உதவியவர்கள் இவர்கள். இந்திய மேலாதிக்கத்தை ஆதரித்தது, இதன் அடிப்படையில் தான். இன்று புலியின் பின் உள்ள மக்கள் விரோத அரசியல், இந்தியா தன் மேலாதிக்க தன்மையை நிறுவ புலிக்கு ஆதரவாக நின்ற போது புலிக்கு கொடுத்தவை தான். இப்படி எம் போராட்டம் மக்கள் விரோத போராட்டமாக மாறும் வண்ணம், இந்தியா கொடுத்த ஆதரவு, இன்று புலிகளின் சொந்த அழிவாகவும் அழிப்பாகவும் மாறி நிற்கின்றது. இதன் பின்னணியில் தான், தமிழ்நாட்டு பிழைப்புவாதிகள், தம் பாராளுமன்ற கனவுடன் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை முன்தள்ளுகின்றனர்.

 

புலிக்கு வெளியில், ஈழத்தமிழன் மேல் எந்த சமூக அக்கறையும் இவர்களிடம் கிடையாது. புலிகளின் பாசிசம், ஈழமக்கள் மேல் ஏவிய அடக்குமுறையை இட்டு, எதையும் அலட்டிக்கொள்ளாதவர்கள் இவர்கள். இது தவறு, இதனால் போராட்டம் பின்னடைவை சந்திக்கும் என்ற விமர்சனத்தைக் கூட, இந்த பிழைப்புவாதிகள் நட்புடன் விமர்சனம் செய்தது கிடையாது. மாறாக புலி பாசிசத்தை சரி என்று கூறி, அதன் அழிவுக்கு வழிகாட்டியவர்கள். அன்று இந்தியா மேலாதிக்க நோக்குடன் தொடக்கிவைத்ததை, இன்றும் சரி என்கின்றனர். அதையே மீள செய்யக் கோருகின்றனர். 

 

நுணுக்கமாக பார்த்தால் இந்த பிழைப்புவாதிகள், இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக கோசத்தை வைத்து, ஈழத் தமிழனுக்கு ஆதரவாகப் போராடவில்லை.

 

மாறாக இந்திய மேலாதிக்கம் சரியானது, ஆனால் அதை ஈழத்தமிழனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கோரினர். இப்படி இந்திய மேலாதிக்கம் மூலம், ஈழத்தமிழனுக்கு சவக்குழியை இந்த பிழைப்புவாதிகள் வெட்டினர். அன்று இந்தியா தன் மேலாதிக்க தேவைக்காக ஆதரித்த போது, இவர்களுக்கான சவப்பெட்டியை இவர்களைக் கொண்டே செய்தது.

 

இதற்கு எதிர்நிலையில் தான், பு.ஜ, பு.க சேர்ந்தவர்கள் போராடினார்கள். இந்திய மேலாதிக்கத்தை, அதன் அனைத்து தளத்திலும் எதிர்த்தனர். இந்திய மேலாதிக்க ஆதரவு கூட, ஈழத் தமிழனுக்கு எதிரானது என்பதை, இதன் வரலாற்று போக்கில் அம்பலப்படுத்தினர். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்திய இவர்கள், புலிகளின் பாசிசம் முதல் அதன் அனைத்து மக்கள் விரோத செயலையும் எதிர்த்தனர். ஈழத்து மக்களுக்கு, தமிழக தமிழ்மக்கள் தான், தம் சொந்த அரசியல் மூலம் உணர்வு பூர்வமாக ஆதரவு தெரிவித்து போராட வேண்டும் என்பதை முன்னிறுத்தினர். அரசியல் கட்சிகளின் பிழைப்புவாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தினர். குறிப்பாக இந்த கட்சிகள் கொண்டிருந்த இந்திய மேலாதிக்க கண்ணோட்டத்தை, குறிப்பாக எதிர்த்துப் போராடினர்.

 

ஈழத்து தமிழ் மக்கள் தமக்காக தாமே போராட வேண்டும் என்பதை முன்னிறுத்தினர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய அதேநேரம், போராட்டத்தின் பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதை எதிர்த்துப் போராடினர்.    

 

ராஜீவ் கொலையின் பின் ஓய்ந்து போன அலை, புலிகளின் தோல்வி நெருங்க மீண்டும் தமிழகத்தில் போராட்ட அலையாக இன்று வெடித்துள்ளது. முன்னைய அலையில் பின் இருந்து பிழைத்த பிழைப்புவாதிகள் பலர், இன்று எதிர்ப்பு நிலையில் இதை ஒடுக்குபவராகிவிட்டனர்.

 

சிறிய பிழைப்புவாதக் கட்சிகள் இதை கையில் எடுத்து, வாக்குபெற முனைகின்றன. ஆனால் இதற்கு வெளியில் தன்னெழுச்சியான போராட்டங்கள், அரசியல் மயமாக்கல்கள் நிகழ்கின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்த பொதுப் போராட்டம், ஈழத்தமிழர் ஆதரவு தளத்தில் வளர்ச்சி பெறுகின்றது. புலிகள் பற்றிய நிலைப்பாடு விமர்சனத்துக்கு உள்ளாக்காமல், பிழைப்புவாத ஈழ ஆதரவு அரசியலை மறுத்து இது நிகழ்கின்றது.

 

இங்கு புலிகளின் அரசியல் தளம் நேரடியாக கேள்விக்குள்ளாகவில்லை. ஈழ ஆதரவு பிழைப்புவாத அரசியலுக்கு மாறாக, இயல்பாக தமிழின மற்றும் சர்வதேசியமும் ஒன்றிணைந்த ஒரே தளத்தில் இன்று போராட்டம் நடக்கின்றது.

 

இன்று ஈழ ஆதரவான அலை, இரண்டு பிரதான அணியாகி வருகின்றது.

 

1.பாராளுமன்ற பிழைப்புவாத அரசியல்

 

2.பாராளுமன்றமல்லாத புரட்சிகர அணிகள்

 

இந்த இரண்டு போக்கில் பாராளுமன்றமல்லாத அணிக்குள் இரண்டு பிரிவுகள் உள்ளது.       

 

1.வெறும் இன (தமிழ் தேசியவாதிகள்) உணர்வாளர்கள்,

 

2.சர்வதேசியத்தை முன்வைக்கும் சர்வதேசியவாதிகள்

 

பாராளுமன்ற பிழைப்புவாதிகள் படிப்படியாக அம்பலமாகி, வெறும் புலிக்குள் புலிகளைப்போல் முடங்கி வருகின்றனர். இவர்கள் அல்லாத பிரிவுகள் தான், தமிழ் மக்களின் நலனுடன் இணைந்து போராட முனைகின்றனர். இவர்கள் இந்திய அரசு மக்களின் பொது எதிரி என்ற அடையாளத்தைக் காட்டி, ஈழத் தமிழனுக்காகவும் தம் சொந்த மக்களுக்காகவும் போராடுகின்றனர். 

 

இங்கு இதை தெளிவான புரட்சிகர அரசியல் வழிக்குள் இட்டுச்செல்ல வேண்டும். இதை அங்குள்ள புரட்சியாளர்கள், இந்தப் போராட்டத்தை புரட்சிகர வழியில் நடத்திச் செல்வது அவசியமானது. வெறும் இன (தேசிய) உணர்வாளர்களை, நெறிப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.

 

அடுத்து நிகழவுள்ள புலிகளின் முழுமையான தோல்விக்கான காரணத்தை வைப்பது அவசியமாகும். இந்த தோல்வி இனவுணர்வாளர்களை விரக்தி, கையாலாகாத்தனம், அரசியல் துறப்பு, அரசியல் அராஜகம், குறுந் தேசியம், தனிநபர் பயங்;கரவாதம் என்று பலவாக சிதைக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதை நெறிப்படுத்துவது சர்வதேசியவாதிகளின் உடனடி அரசியல் கடமை.

 

தமிழகத்தில் போராட்டம் ஏன் தோற்றது? புலிகளின் போராட்டத்தின் தோல்விக்கான காரணம் என்ன? இந்த பகுப்பாய்வும், விமர்சனமும் உடனடித் தேவையாக அவர்கள் முன்னுள்ளது. இன்று புதிதாக அரசியல் மயமாகிக்கொண்டிருக்கும் சக்திகளின் முன்னால், இவை தெளிவாக வைக்கப்படுவது, அடிப்படையானதும் அவசிமானதுமான உடனடிப் பணியாக உள்ளது.

 

பி.இரயாகரன்
06.03.2009