கடந்த நவம்பர் 27-ஆம் தேதியில் மரணம் அடைந்த முன்னால் பிரதமர் வி.பி.சிங் குறித்து அமைக்கப்பட்ட "புனித பிம்ப எழுத்துக்கள்" தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு "சமூகநீதிக் காவலர்", "பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர்" என்ற கற்பிதம் இருக்கின்றது. இந்நிலையிலேயே, புதிய ஜனநாயகத்தில் "காக்கை குயிலாகாது" என்ற தலைப்பில் மாற்று விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரியார் முழக்கத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன், "வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்" என்ற தலைப்பில் கடுமையான எதிர்விணை செய்திருக்கிறார். "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" இது என களப்பணிகளில் ஒன்றிணைந்து செயல்படும் தோழமை அமைப்பான ம.க.இ.க. வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "வி.பி.சிங் அவர்களை, குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கிறது ம.க.இ.க." என்கிறார் தோழர் விடுதலை இராசேந்திரன்.
இதன் மூலம் சகதோழர்களை "பச்சைப் பார்ப்பனியத்தின் அடிதாங்கி"களாக குற்றவாளிகளாக்க முற்பட்டது குற்றமில்லையா? சோ- சு.சாமி- ஜெ-க்களுக்கு இக்கட்டுரை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்கிறவர் தங்கள் சகதோழமை அமைப்பை "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" என்று விளித்துக் கூறும் போதும் இரட்டடிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் தோழர் விடுதலை இராசேந்திரன் ஏற்றுக் கொள்ள வேண்டும். 
தந்தை பெரியாரை மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்கு எவ்வளவு உரிமை பகுத்தறியும் மனிதர்களுக்கு இருக்கின்றதோ அதே உரிமை முன்னால் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் மறுஆய்வுக்குட்படுத்த உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது நமது மாற்றுக் கருத்துக்களை எதிர்விணையாக்க வேண்டுமே தவிர மறுஆய்வு செய்வதே தவறு என்கிற வாதத்தை நாம் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். இவை நம் கொள்கைக்கு எதிரானது என்பதை உணர்ந்து கொள்வோம்.  
மேலும் சக தோழமை அமைப்பை "பச்சைப்பார்ப்பனீய பார்வை" என்று தோழர் விடுதலை இராஜேந்திரன் கூறியது கண்டிக்கப்பட்டத்தவை என்பதற்காகவும், வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம் என்னும் கட்டுரையில் பல இடங்களில் நடுநிலை தவறி கருத்துச் சருக்கல் இருப்பது நம் பகுத்தறிவு கொள்கைக்கு முரணானது என்பதாலும், நாளை நம் கொள்கை, கோட்பாடுகள், செயல்பாடுகள் தடம்மாற ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஓர் அமைப்பின் நம்பகத் தன்மையை வீழ்த்திவிடுவதற்கு காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற பதற்றத்தாலும், நாம் நம்மை ´சுயவிமர்சனம்´ செய்துக் கொள்ள, சகதோழர்களின் எதிர்விணையை ஒரு வாய்ப்பாக உபயோகித்துக் கொள்ளுவோம் என்பதற்காகவே எழுத முற்படுகிறோம்.
"காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு" என்பதை மட்டும் மையப்படுத்தி தோழர் விடுதலை இராசேந்திரன் வி.பிசிங் நடத்தையை கணிக்க முற்பட்டால் அது தவறாக கணிப்பில் முடியும் என்பதையே நாம் இங்கே சுட்டிக் காட்ட முற்படுகிறோம். 
ஒருமுறை தந்தை பெரியாரிடம் ஏன் காங்கிரசில் இருந்து வெளியேறினீர்கள் என்று கேட்ட பொழுது, "நான் ஏன் காங்கிரசில் இருந்து விலகினேன் என்பதைப்பற்றி எழுதும் முன், நான் ஏன் காங்கிரசில் சேர்ந்தேன் என்பதைப்பற்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கும் முன் எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக் காட்டுவது அவசியமாகும்" என்றார். (ஆதாரம் : "தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை" என்னும் நூல். பக்கம் :1) 
அதேப்போல், வி.பி.சிங் காங்கிரசில் சேரும் முன் என்ன செய்துக் கொண்டிருந்தார், எப்படி இருந்தார் என்பதையும், நாம் ஆய்வுக்குட்படுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை மட்டும் வைத்து வி.பி.சிங் சிறப்புத் தன்மையை பேசுவதை நிறுத்துவோம்.
அடுத்தது பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை  பிறப்பித்தவர் என்னும் பெருமையை, புகழாரத்தை வேறு அமைப்புகளோ அரசியல்வாதிகளோ முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு அடைமொழிளாக்கி பாராட்டு பத்திரம் கொடுக்கலாம். பெரியாரியவாதிகளான நாம் அப்படி பேசலாமா? என்னும் வினா எம்முள் எழுகிறது. 
அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கிய சமூகவாதியான தந்தை பெரியார் ´ஓட்டுப்பொறுக்கிகள் அரசியல்வாதிகள்´ என்று விமர்சித்ததையும் மறந்துவிடக்கூடாது. வி.பி.சிங் அவர்களும் ஓர் அரசியல்வாதி என்பதையும், பிரதமர் பதவி என்பது இனாமாக கொடுப்பது இல்லையென்பதையும், அந்த உயர்ந்த பதவியை அடைய ´மகாத்மா´வாக இருந்தால் மட்டும் முடியாது என்பதையும் கவனத்திற்கொள்வோம். 
உலகம் முழுவதிலுமே அரசியல் என்றால் குளறுபடிதான் என்றாலும், நம் இந்திய அரசியல் அளவுக்கு அதிகமாகவே தங்களுக்கு தேவையான உரிமைகளை ஜனநாயகத்தின் பேரால் அனுபவிப்பவர்கள் என்பதையும் கவனத்திற்கொள்வோம் என்பதுடன் சகதோழமை அமைப்புக்களை விமர்சிக்கும் போது ஒன்றுக்கு பலமுறை நம் விமர்சனம் நடுநிலைமையானதா என்று சிந்தித்து எதிர்விணை செய்வோம். 
இக்கட்டுரைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :
விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது! 
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4772:2009-01-08-20-51-14&catid=278:2009&Itemid=30
வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் ´புதிய ஜனநாயகம்´ விடுதலை இராசேந்திரன்
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.phphttp://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.php
தமிழச்சி
05/03/2009