05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

புரட்சித் தீ!

தாய் நாட்டிற்காக...

இறப்பதென்பது

மிகவும் அழகானது. தாய்

நாட்டிற்காக...

 

 

ஊர் முழுவதும் இதே பாடல்கள். ஆக்ரோஷமாக எழுச்சியாக விளிம்புநிலை மக்கள் பாடிக் கொண்டு திரிந்தனர். இறப்பதற்கும் தயாராகி விட்டார்கள் அவர்கள். "எமக்கான வாழ்வுரிமை இல்லாத மண்ணில் அவ்வுரிமையை பெறப் போராடுவோம்; அல்லது செத்தொழிவோம்.

 

 வீனர்களை போல் மௌனிகளாக இனியும் பொறுத்துப் போவதா...?" கோபக்கனம் தெறிக்க கேள்வி கேட்டார்கள். அந்த மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தியது புரட்சி சங்கங்கள், நல்ல தலைமைகள், புரட்சி பத்திரிக்கைகள் மக்களை தேசபக்தர்களாக ஆக்கிவிட்டிருந்தது. இன்னொரு பக்கம் ஆளும்வர்க்கம் எழுச்சியில் மிரண்டுபோய் கிடந்தது. பணக்காரர்கள் பகல் நேரங்களில் வெளியே நடப்பதற்கு பயந்து வீடுகளின் உள்ளேயே பதுங்கிக் கொண்டிருந்தார்கள். திரைச்சீலைக்கு வெளியே நடப்பதை பார்க்கக்கூட பயந்து தங்கள் மாளிகை ஜன்னல்களை மூடிவைத்திருந்தனர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

 

உலகில் முதல் முதலாக உருவாகிய மக்கள் புரட்சி மன்னராட்சிக்கு எதிராக பாரிஸ் மாநகரில் இப்படித்தான் ஆரம்பித்திருந்தது. புரட்சி புரட்சி எங்கும் புரட்சி வார்த்தைகள். இளைஞர்களுக்கு அந்த பருவத்தில் காதல் வரும் என்பார்கள். பிரெஞ்ச் இளைஞர்களுக்கோ புரட்சி தீ கனலாக எரிந்துக் கொண்டிருந்தது. ஊரெங்கும் சுதந்திரக் கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம் தேசீய கீதங்கள். ஆளும்வர்க்கத்தினருக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் ஒருவேளை உணவாக மதியம் ரொட்டியையும், உருளை கிழங்கையும் சாப்பிட்டு மாலை நேரங்களில் நகரங்களில் பல இடங்களில் நடைப்பெற்ற புரட்சி சொற்பொழிவகளை விடியவிடிய கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவை நல்ல தெளிவையும், ஆன்ம பலத்தையும் கொடுத்திருந்தது.

 

****


பாரீசில் முதல்முதலாக உலகில் வேறு எங்குமே மக்களிடம் காண முடியாத புரட்சி என்னும் சிந்தனை இப்படியாகத்தான் உருவாகிக் கொண்டிருந்தது. இதற்கு நேர்மாறாக மற்றொரு சம்பவமும் நடந்துக் கொண்டிருந்தது.

 

19-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் பல சிறிய நாடுகளாக இருந்தவைகளை ஒன்றிணைத்து ஜெர்மனி நாடாக்கி வல்லரசு அந்தந்தை உருவாக்கிய பிஸ்மார்க் என்னும் அயோக்கியன் ஒவ்வொரு நாட்டுக்கு இடையிலும் கலகம் மூட்டி போர் செய்ய தூண்டிவிடுவதும், இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு பொருளாதார சேதத்தில் முழிபிதுங்கி நிற்கும் போது; இரண்டு நாடுகளையும் தன் கைக்குள் போட்டு அடிமையாக்கிக் கொண்டு அடுத்த நாடுகளை தாக்குவதும், அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமாக இருந்த ராஜதந்திரி பிஸ்மார்க் 1866-ஆம் வருடத்தில் ஆஸ்திரியா நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். பிஸ்மார்க்குக்கு பிரான்ஸ் மீது ஒரு கண். அப்போது பிரான்சில் மன்னன் மூன்றாவது நெப்போலியன் (ஐஐஐ-Nயிழடநழn 1808-1873) ஆட்சியில் இருந்தான். ஒரு பக்கம் உள்நாட்டு மக்களின் புரட்சி முழக்கங்கள். இன்னொரு பக்கம் பிஸ்மார்க் பிரச்சனை.

 

சில காலமாக எதிர்பார்த்த போர் வந்தே விட்டது. 1870- இல் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் போர் தொடங்கியது. ஜெர்மனியில் பலத்தை தவறாக கணித்துவிட்டான் மூன்றாம் நெப்போலியன். ஸெடான் (ளுநனயn) என்னும் இடத்தில் மூன்றாம் நெப்போலியனும், படை வீரர்களும் வசமாய் மாட்டிக்கொண்டார்கள். கைதிகளாக வைத்திருந்தான் பிஸ்மார்க். மன்னனே அடிமையாகிவிட்டான். என்ன செய்வது? மீண்டும் குடியரசு உருவாயின. அவர்கள் பிஸ்மார்க்கோடு சமாதானம் செய்ய விரும்பினர். ஆனால், நடந்த கூத்துவேறு. மிகக் கேவலமான நிபந்தனைகளை முன்வைத்தான் பிஸ்மார்க். அதனால் குடியரசு சேர்ந்தவர்கள் யுத்தத்தை தொடர தீர்மானித்தார்கள்.

 

போதிய படைபலம் இல்லை. பொருளாதார பலம் இல்லை. அதுவுமில்லாமல் பிஸ்மார்க் பாரிஸ் நகரத்தை சூற்றிலும் தன் படைகளை நிறுத்திவிட்டான். அதுவும் இல்லாம் பாரிஸ் நகரத்திற்குள் உணவுப் பொருட்கள் உட்பட எதுவும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எத்தனை நாட்கள் மக்கள் உணவில்லாமல் இருப்பார்கள். கடைசியில் குடியரசு பிஸ்மார்க்கிடம் சரணடைந்தது. யுத்தம் செய்வதை நிறுத்திக் கொண்டது. பிஸ்மார்க் விதித்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக் கொண்டது.

 

***

 

ஜெர்மன் கட்டுப்பாட்டுக்குள் பாரிஸ் வந்தது. இதில் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. நிலையான அரசாங்கம் என்று எதுவும் இல்லை. என்ன செய்வது? எப்படி மக்களை வழிநடத்துவது? மன்னராட்சியை ஆதரித்த சிலர் தேசியசபை ஏற்படுத்தி அதன் மூலமாக ஓர் அரச பரம்பரையை மறுபடியும் ஸ்தாபிக்க முயன்றார்கள். தங்களுடைய முயற்சிக்கு தடங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் போர் வீரர்கள் பலரை தந்திரமாக அழித்தனர். மக்களிடையே ஜனநாயத்தை ஏற்படுத்த முயன்றுக் கொண்டிருந்தவர்களுக்கு பெரும் ஆத்திரத்தை கொடுத்தது. யாரும் மக்கள் நலன்களில் அக்கரை காட்டவில்லை. அதிகாரத்தை யார் வைத்துக் கொள்வது என்பதிலேயே போட்டி இருந்தது. இத்தனைக் கூத்துக்கும் மத்தியில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் ஏற்பட்டது.

 

ஆம், 1871-இல் மார்ச் மாதத்தில் இன்னொரு புரட்சிகர மாற்றம் ஏற்பட்டது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. "பாரிஸ் கம்யூன்" (Pயசளை ஊழஅஅரநெ) என்ற நிர்வாகத்தை ஏற்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் மக்கள். அதில் இருந்தவர்கள் அனைவரும் தொழிலாளர்கள். ஏழைகள் விளிம்புநிலை மக்கள்.

 

அதிர்ச்சி, பேரதிர்ச்சி! பொது ஜனங்கள் அரசாங்க கட்டிடங்களுக்குள்ளும், அரசாங்க நிர்வாகத்திற்குள்ளும் புகுந்துவிட்டார்கள். முடியரசுவாதிகளுக்கும், ஏகபோக உரிமைக்காரர்களுக்கும் எதிர்பாராத புரட்சி. விளிம்புநிலை வர்க்கம் அரசாங்கத்தை பிடிப்பதா? என்ற கோபம்.... ஸெடான் யுத்தத்தில் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலையான போர் வீரர்களின் துணையுடன் பாரிஸ் நகரத்தில் ´பாரின் கம்யூன்´ கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிக்குள் நுழைந்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ள ஆரம்பித்தது. பெண்கள், குழந்தைகள் வித்தியாசமின்றி நடந்த வரலாற்று படுகொலைகள் அவை. 1871-இல் மே மாதத்தில் ஒரே வாரத்தில் 35000- பொது மக்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். பாரிஸ் முழுவதும் பிணக்குவியல்கள், ரத்த ஆறுகள்....... ஐரோப்பாவையே நடுக்கச் செய்துவிட்டது இச்சம்பவம்.

 

பாரின் கம்யூன் புரட்சி முடியரசு ஆதரவாளர்களாலும், பணக்கார வர்க்கத்தினாலும் கொடுரமாக அழித்தொழிக்கப்பட்டது. புரட்சி தீ யொன்றை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பு செய்துவிட்டது கொடுரமாக.

 

இக்கொடுர சம்பவம் குறித்து சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் கமிட்டியில் பல கருத்து வேறுபாடுகளை உருவாக்கின. பாரீஸ் கம்யூனின் பலாத்காரச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது என்றும், மற்றோர் சாரர்கள் தொழிலாளர்கள் இயக்கம் வெற்றி பெற கொலை, கொள்ளை முதலியவைகள் மார்க்கமில்லையென்றும், இன்னோர் சாரார் பாரீஸ் கம்யூனின் செயல் நியாயமானது என்றும் ஆளுக்காளு ஒவ்வொரு அபிப்பிராயத்தை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

 

இச்சம்பவங்களை வெறுப்புடன் நோக்கிய மார்க்ஸ் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் பெயரால் பாரிஸ் கம்யூன் எழுச்சியைப் பற்றி அறிக்கையை வெளிட்டார்.

 

"ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டும், கட்சி பேசிக் கொண்டும் இருப்பதற்கு இது நேரமல்ல, பாரிஸ் எழுச்சியானது தொழிலாளர்களின் எதிர்ப்புச் சக்திக்கு அறிகுறியாய் இருக்கிறது. தொழிலாளர் சமூதாயத்திற்கு யாரார் விரோதிகள் அவர்களுடைய உண்மையான கோலம் என்னவென்பவற்றை மேற்படி எழுச்சி எடுத்துக்காட்டிவிட்டது." பரிகாசஞ்செய்த மார்க்ஸின் எழுத்துக்களின் அழுத்தங்கள் அவை நேர்மையான விமர்சனம்.

 

"தாய் நாட்டிற்காக...
இறப்பதென்பது மிகவும் அழகானது
தாய் நாட்டிற்காக...
இறப்பதென்பது மிகவும் பெருமைப்படத்தக்கது...
தாய் நாட்டிற்காக...


லட்சியத் திட்டங்களை செயல்படுத்துவதே நம் உறுதியானது...."

 

பாரிஸ் கம்யூன் புரட்சியில் இறந்தவர்களின் கல்லைறையை தாண்டிச் செல்லும் இளைஞர்கள் பாடிக் கொண்டு செல்கிறார்கள் கண்கள் கலங்க....


அங்கே புரட்சி தீ விதைக்கப்பட்டிருக்கிறது. அவை விருட்சகமாக உயிர்த்தெழும் நாட்களுக்காக புதைகுழிக்கு வெளியே ஆவேசத்தோடு காத்திருக்கிறது மனித சக்திகள். 


தமிழச்சி
04.03.2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்