தம் சொந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த, புலியின் பெயரால் தர்க்கம். புலியின் பாசிச வன்முறையைச் சார்ந்து, தமது சொந்த பாசிச வன்முறை மூலம் கொழுத்த திமிர்த்தனமான அரசியல் நடத்தைகள். இதுவே ஈ.பி.டி.பியின் அரசியல் அடித்தளம்.இதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிச் செய்யும் ஈ.பி.டி.பியின் மாமா அரசியலை நியாயப்படுத்த, உடனே புலியை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். இதன் மூலம் எமக்கு எதிராக, தமக்கு தாமே 'ஜனநாயக" வேஷம் போட்டுக்கொண்டு மோதுகின்றனர் பேடிகள்.


  
மக்களின் எதிரிகள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள், வேஷதாரிகள் என்பதை புரிந்துகொள்ள, அவர்களின் இந்தக் கூற்று சிறப்பான எடுத்துக்காட்டாக உள்ளது. 'தாயகத்தில் நின்று யாரது காலையும் நக்கிப்பிழைக்காமல் தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." தமிழ் மக்களின் எதிரியான ஈ.பி.டி.பியின் இந்தக் கூற்று, எமக்கு பல செய்திகளை சொல்லுகின்றது.

 

"இரயாகரன் போன்றவர்கள் வைப்பது தான் மக்களுக்கான சரியான அரசியல் என்பதையும், அது நடைமுறை கொண்ட அமைப்பாகி விட்டால், 'அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." என்று அச்சமும் ஆத்திரமும் கொள்கின்றது. இது நடந்து விட்டால், எல்லா மக்கள் விரோதிகளும், மக்கள் என்ற பெயரில் மக்களிடம் அரசியல் செய்யமுடியாது என்பதை எதிரிகளின் இந்தக் கூற்று தெளிவாக்குகின்றது.

 

தமிழ் மக்களின் எதிரியான ஈ.பி.டி.பி இந்த சரியான அரசியலை செய்யவில்லை என்பதையும், எனக்கு எதிராக இதை வைப்பதன் மூலம் ஏற்றுக்கொள்கின்றது. தாங்கள் நக்கிப் பிழைப்பதை ஏற்றுக்கொண்டு, நக்காமல் இருப்பது தான் சரியானது என்பதை இது சொல்லுகின்றது. தாம் மக்களுக்கு எதிராக நக்குவதை, அதை தாம் செய்யாமல் விடப் போவதில்லை என்று, தம் மாமா அரசியலை முன்வைக்கின்றது.

 

அரசுடன் கூடி நிற்கும் தமிழ் மக்களின் எதிரியான ஈ.பி.டி.பி, எமமைப் பற்றிய மதிப்பீட்டில் 'தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." என்று கூறுகின்றனர். எதிரியின் இந்தக் கூற்று, ஆம் நாம் சரியாக பயணிக்கின்றோம் என்பதைக் காட்டுகின்றது. அது நடைமுறைப் படுத்தினால், தம் கதி என்ன என்ற அச்சமே, இங்கு பேரினவாத கைகூலிகள் முன் தொங்கி நிற்கின்றது. 

 

எமது சரியான இந்தப் போராட்டத்தால் ஈ.பி.டி.பி எமக்கு எதிராக கொதித்துப் போயுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதத்துக்காக மாமா வேலை பார்க்கும் ஈ.பி.டி.பி கும்பல் மேலும் அம்பலப்படுவதால் 'சோம்பேறித் தத்துவவாதிகளின் வரட்டுச்சித்தாந்தம் சோறும் தராது! சுதந்திரமும் தராது!!" என்ற தலைப்பில் இதை புலம்பித் தள்ளியுள்ளது.

 

புலம்பும் போது 'தமிழ்மக்கள்" என்று, புலியைப் போலும் அரசைப் போலும் புலம்புகின்றது. மக்களை சார்ந்து நின்று போராட வக்கற்ற புலம்பல் கோஸ்டிகள், சிங்களப் பேரினவாதத்துடன் கூடி நின்று, மக்களுக்கு தாம் சோற்றையும் சுதந்திரத்தையும் தருவது பற்றி பிதற்றுகின்றனர்.

 

இவையல்லாத அனைத்தும் வரட்டுச் சித்தாந்தமாம். யாருடனாவது சேர்ந்து புலிகளை ஒழித்தல் தான், இந்த மாமா வேலை பார்க்கும் ஈ.பி.டி.பியின் மையமான அரசியல். இதற்கு அப்பால் அது எதையும் கொண்டிருக்கவில்லை.

 

காட்டிக்கொடுப்பு, கைக் கூலித்தனம், இதன் அடிப்படையிலான அடியாள் அரசியல். கொலை, கொள்ளை, கப்பம் என்று, புலிகள் செய்யாத அனைத்திலும் பங்கு அல்லது துணை உண்டு. இந்த அடிப்படையில் அதை செய்கின்றனர், ஆதரிக்கின்றனர், மூடிமறைக்கின்றனர். ஈ.பி.டி.பி மாமாக்களின் துணை இன்றி, வேறு யாரும் எதையும் தனித்து செய்யவில்லை. புலியின் எதிர்தளத்தில், எம் மக்கள் சந்தித்த சந்திக்கின்ற கண்ணீர் வரலாறுகள் இவை.

 

இன்று மனித அவலத்தை முன்னிறுத்தி புலி அரசியல் செய்கின்றது. மறுதளத்தில் மனித அவலத்தை உருவாக்கி அரசு அரசியல் செய்கின்றது. இந்த அரசின் தூண்களில் ஒன்று ஈ.பி.டி.பி. இப்படி மக்களை கொல்லும் கொலை அரசியலையே ஈ.பி.டி.பி. செய்கின்றது.  புலிகள் பலி அரசியலை நடத்துகின்றனர் என்றால், ஈ.பி.டி.பி சேர்ந்த அரசு தான் பலியை எடுக்கின்றது. தன் வெள்ளை வேட்டிக்கு பின்னால் போர்த்தி பாதுகாக்கும் டக்ளஸ்சின்; குரூர அரசியலே இதுதான். இது மட்டுமல்ல புலி செய்யாத ஆயிரம் ஆயிரம் படுகொலைகளின் பின்னணியில் இருப்பவர்களில், ஈ.பி.டி.பியும் ஓன்று. குறைந்தபட்சம் அதற்கு உடந்தை, துணை.

 

தன்னைப் போல் கருணா கும்பலையும், பிள்ளையானுக்கு எதிராக வழிகாட்டிய சதிகாரன். மந்திரி பதவியை எடுத்துக் கொடுத்ததுடன், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி பிள்ளையானை சிறுக சிறுக கொல்வது என்று தன் வழியை வழிகாட்டியவர். இப்படிப்பட்டவர் வெளி வேஷத்துக்கும், தம் சொந்த கூலிப்படைக்கு தீனி போடவும், கூலிக்கு ஆள் பிடிக்கவும் 'அபிவிருத்தி" அரசியல். இன்று கருணா கும்பலும் அதே அரசியல்.

 

இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதத்துக்கு மாமா வேலை பார்க்கும் ஈ.பி.டி.பி கோஸ்டியின் தனித் தலைவரும், அந்த கூலிக் குழுவின் சர்வாதிகாரியும் தான் டக்கிளஸ். இவர் தமிழ் மக்களை தின்று போட்டு எறியும் எலும்மை சுவைப்பவர்கள், ஈ.பி.டி.பிக்கு எதிரான  விமர்சனத்தைக் கண்டு கொதிப்பது புரிகின்றது. இதனால் இயல்பாக குலைக்கின்றனர். குலைக்கும் போது தம்மை இனம் காட்டமுடியாத புனைபெயரில் ஒளித்துக்கொண்டு, எம்மை பாரிஸ், லாச்சப்பலிலும், யாழப்பாணத்திலும் போய் போராடக் கோருகின்றனர்.

 

அவருக்கு நல்ல நம்பிக்கை பாரிஸ் லாச்சாப்பலில் புலிகளைக் கொண்டும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியைக் கொண்டும், இதற்கு முடிவு கட்டலாமென்று. இரண்டு பாசிசமும் இதைத்தான் எமக்கு கூறுகின்றது. வாருங்கள் அங்கே, எம்மண்ணில் வந்து சொல்லுங்கள், போராடுங்கள் என்கின்றனர். இப்படி ஆளையே தீர்த்துக் கட்டலாம் என்ற ஆர்வமும், அக்கறையும். அப்போது தான், தாம் நிம்மதியாகவும், எந்த எதிர்ப்புமின்றி தம் எதிர்ப்புரட்சியை 'ஜனநாயகம்" என்று பறைசாற்ற முடியும் என்று கனவு காண்கின்றனர்.   

 

அவர்கள் சரியாகவே தம் பாசிச வழிகளில் எம்மைப் பற்றிச் சிந்திக்கின்றார்கள். அங்கே வைத்து போட்டுத்தள்ளுவது தான், இந்த கோரிக்கையின் உள்ளடக்கம். எம் விமர்சனம், இவர்களின் சொந்த பாசிசத்தை அம்பலப்படுத்துவதையும், இவர்கள் அதற்கு பதில் சொல்லமுடியாது போவதும், இதனால் அங்கு போய் புரட்சி செய்யுங்கள் என்று ஊளையிட முனைகின்றனர். நீங்கள் எங்கள் நண்பனல்ல எதிரி. எதிரி அதைக் கோருவதன் நோக்கம் மிகத் தெளிவானது. எம் விமர்சனத்தை தடுக்க உதவும், உங்கள் ஆயுதங்கள் இவை.  

 

எங்கள் விமர்சனத்தின் அடிப்படையே, மக்களைச் சார்ந்து போராட மறுப்பது ஏன் என்பது தான்? இதுவல்லாத அனைத்தும், நீங்கள் எந்த வேஷத்தைப் போட்டாலும், நாங்கள் எந்த தவறை இழைத்தாலும், அவை அனைத்தும் மக்களுக்கு எதிரானது தான். உங்கள் நிலை அது தான். 

 

புலி பாசிசத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க பேரினவாதத்தின் கைக்கூலியாவது தான் எதார்த்தம் என்றால், அதை நியாயப்படுத்துவதும் அதற்காக குத்தி முனகுவதும் மாமா வேலை தான். அகத்தியன் என்ற பெயரில் நீ புலம்பெயர் நாட்டில் இருந்து, 'ஜனநாயகம்" பேசும் உன் வண்டவாளங்களும் எமக்குத் தெரிந்தது தான். புலம்பெயர் நாட்டில் வர்க்;கக் கண்ணோட்டமற்ற (மக்கள் சார்பற்ற) இலக்கியம், பெண்ணியம், தலித்தியம் என்று பல வேஷம் போட்ட கும்பலின் பின்னால் இருந்து மிதக்கின்ற, கைகூலிகள் தான் நீங்கள். அவை எல்லாம் நாதியற்ற அனாதைகளாகி, இன்று உங்களுடன் சேர்ந்து நாறுகின்றது.

 

இவர்கள் பேசிய பெண்ணியத்தின் நூலில் தொங்கியபடி, மாமா வேலைபார்க்கும் ஈ.பி.டி.பி பெண்ணியம் பற்றி எமக்கு பாடமெடுக்க முனைகின்றனர். சிங்கள இராணுவமும் நீங்களும் சேர்ந்து (ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்) தமிழ் பெண்களை நடத்துகின்ற ஆணாதிக்கம், மொத்த தமிழினத்துக்கு எதிரானது. அதை கண்டிக்கவும், துணை நிற்பதையும் ஆணாதிக்க அரசியலாகவே செய்வதே  மானம் கெட்ட பிழைப்பு. பாசிச சாக்கடைக்குள் குந்தியிருந்து மாமா வேலை மூலம் தொடர்ந்து பிழைக்க, பெண்ணியம் பற்றியும், ஆண்பால் பெண்பால் பற்றியும்; சாக்கடை விளக்கங்கள். 

 

எம்மையும், எமது விமர்சனத்தையும் தடுத்து நிறுத்த வைக்கும் விதண்டாவாதங்கள் இவை. இவர்களின் கவலை 'தாயகத்தில் நின்று யாரது காலையும் நக்கிப்பிழைக்காமல் தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." என்ற பயம். இதன் எதிர்நிலையில் உள்ள உண்மையும் இதுதான்.

 

இதை நாம் எம் மண்ணில் 1987 வரை செய்ய முனைந்து தோற்றவர்கள். பல நூறு பேர், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையை புலிகள் மட்டும் செய்யவில்லை. இந்த அரசியலுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி முதல் கொண்டு புலி வரை அடங்கும். இன்றும் அதே அச்சம். 'தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." என்ற அச்சம். இலங்கை அரசுடன் சேர்ந்த பின், எழும் நியாயமான அச்சம்.   

 

'தாயகத்தில் நின்று யாரது காலையும் நக்கிப்பிழைக்காமல் தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." இதை ஈ.பி.டி.பியோ, ஈ.பி;ஆர்.எல்.எவ்வோ என்றும் செய்தது கிடையாது. இதை கருவறுக்கவே, அன்று இந்தியக் கைக்கூலிகளாக, புலிகள் அவர்களை அழிக்க முன்னமே இதை முன்னின்று செய்தவர்கள் இவர்கள். பின் இலங்கை - இந்தியக் கைகூலிகளாக மாறி இன்று வரை அதைச் செய்கின்றனர்.

 

நாம் இங்கிருந்து செய்யமுனைவதை தடுக்க, இலங்கை அரசின் கூலிப்படையில் இருக்க முனைவதே எதார்த்தம் என்று அனைவருக்கும் கூறமுனைகின்றனர். தம்மை போல் இலங்கை அரசை நக்குவதைத் தான், தமிழ் மக்களின் விடிவு என்கின்றனர். இதற்குள் 'பெண்ணியம், ஜனநாயகம்" என்று தமக்கு வேஷம் போட முனைகின்றனர். 

 

எம்மண்ணில் எதார்த்த நிலைமை என்ன? புலிகள் பிரதேசத்தில் புலியல்லாத எந்த கருத்துக்கும் சுதந்திரமில்லை. அரச கட்டுப்பாட்டில் அரசின் கூலி குழுவல்லாத எந்தக் கருத்துக்கும் சுதந்திரம் கிடையாது. இது தான் எம் மண்ணில் எதார்த்தம்.

 

இந்த எதார்த்ததை மீறி 'தாயகத்தில் நின்று யாரது காலையும் நக்கிப்பிழைக்காமல் தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." என்ற உண்மையின் அடிப்படையில் ஒரு அமைப்பு உருவானால், அதன் முதல் எதிரிகளாக இருப்பதில் கூலிக்குழுவான ஈ.பி.டி.பியும் ஒன்றாக இருக்கும். ஈ.பி.டி.பி இதை அழிப்பதற்காக அரசுடன் சேர்ந்து நிற்கின்றது. இதை எல்லாம் எதிர் கொள்வது தான், எம் அரசியல் எதார்த்தம். இதில் இருந்து தான், எம்மையும் எம்மை சுற்றிய நிகழ்வுகளை நாம் எதிர்கொள்கின்றோம்.  

 

நாம் எங்கிருக்கின்றோம் என்பதல்ல, என்ன செய்ய முனைகின்றோம் என்ன செய்கின்றோம் என்பது அனைத்திற்கும் அடிப்படையானது. இதில் நாம் யாரினதும் கைக்கூலிகளல்ல. நாங்கள் புலியொழிப்பின் பெயரில் கொலைகாரர்களல்ல. சமூகத்தை பிச்சைக்காரராக்கிவிட்டு (இதை புலிகள் செய்யவில்லை, புலிகள் இதிலும் பிழைத்தனர்),  பிச்சையை போடும் பிழைப்பு அரசியல் செய்பவர்களல்ல. நாம் மட்டும் தான், மக்களின் உரிமைகளை வலியுறுத்தி போராடுபவர்கள்.

 

மக்களின் உரிமையை மறுக்கும் உங்கள் பிழைப்புக்கு தடையாக எம் கருத்துகள் இருப்பதால் 'நீங்கள் எழுதும் எழுத்துக்கள், அல்லது உங்கள் கற்பனாவாத கட்டுரைகள் எமது மக்களின் அரசியலுரிமையை நோக்கி ஒரு படியாவது உயர்த்திருக்கின்றனவா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்" என்று எம்மை பார்த்து கேட்கின்றீர்கள். நாங்கள் உங்களுடன் சேர்ந்து நக்க வேண்டுகின்றீர்கள். நீங்கள் சொல்வது போல் வைத்துக்கொள்வோம். ஏன் நீங்கள் மினக்கெட்டு புலம்பி அழுகின்றீர்கள். இதனால் உங்களுக்கு என்ன நட்டம். எம்மால் மக்களின் உரிமை உயராவிட்டால், நக்கி பிழைக்கும் பிழைப்புக்கு பங்கம் வராது தானே. பிறகு என்ன கவலை.

 

மக்கள் சேவை செய்வதாகவும், உங்களை நம்பும் மக்கள் இருப்பதாகவும் கூறி, எமக்கு அதை இப்படி கூறுகின்றீர்கள். 'இன்று நடுத்தெருவில் நிற்கும் எமது தாயகத்து குடிமகன் ஒருவரிடம் சென்று சொல்லுங்கள் மகிந்தவின் காலை நக்கிப்பிழைப்பவர்கள் குறித்து அவர்களுடன் பேசிப்பாருங்கள்." என்று கூறுவதைத்தான், அச்சொட்டாக புலிகளும் கூறுகின்றனர்.

 

மக்களை இரண்டு தரப்பும் நட்டாற்றில் ('நடுத்தெருவில்") வைத்துக் கொண்டு, மக்கள் தம்முடன் இருப்பதாக கூறுகின்றனர். மக்கள் அடிமைகளாக, கையேந்தி தம் பின்னால் வாழ்வதையே மக்களிடம் கேட்கக் கோருகின்றனர். வாழ்வை பறித்துவிட்டு, வாழ்வை கொடுப்பதாக கூறுவது தான் இந்த பாசிட்டுகளின் அரசியல். வெறும் புலிகள் தான், இதை பறித்ததாக கூறுவது, இந்த பாசிட்டுகளின் இருப்பு சார்ந்த உள்ளடக்கமும் நடைமுறையுமாகும்.  

  
 
'மகிந்தவின் காலை நக்கிப்பிழைப்பவர்கள் குறித்து அவர்களுடன் பேசிப்பாருங்கள்." ஆகாகா அருமை அருமை. மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று, பாசிட்டுகள் கதைவிடுவதும், அவர்களைக் கொண்டு ஊர்வலம் விடுவதும், அவர்களைக் கொன்று குவிப்பதும் உலகமறிந்தது. ஈ.பி.டி.பியின் புலியொழிப்பு அரசியல் என்ன? அதன் நடைமுறை என்ன? ஈ.பி.டி.பி 'ஜனநாயகத்தை" எப்படி புலியிடம் இருந்து மீட்கின்றது? சொல்லுங்கள். இதுவே மாமா வேலை செய்யும் புலியெதிர்ப்புக் கோஸ்டியின் அரசியலும் கூட.

 

அதுவோ புலியை மிஞ்சும் படுகொலை அரசியல்தான். வேறு எதுவும் அதனிடம் சொந்தமாக கிடையாது. இன்று இது புலியொழிப்பு மகிந்தா சிந்தனையாகும்.  

 

உடனே உங்கள் எதிர்ப்புரட்சியை ஏற்கக் கோருகின்றீர்கள். அதற்கு மக்களை சாட்சிக்கு அழைக்கின்றீர்கள். 'தாயகத்தில் வாழும் உங்கள் உறவுகளிடம் ஒரு முறை பேசிப்பாருங்கள். அந்த மக்கள் நீங்கள் கற்பனை செய்யும் உலகப் புரட்சிக்காகவா ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்?... நாளை நாங்கள் உயிர்வாழ முடியுமா என்ற ஏக்கம்!  நாளை எங்களுக்கு சோறு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு! இதுவே எமது மக்களின் ஏக்கங்கள். சுதந்திரத்திற்காக போராட புறப்பட்ட எமது மக்களை இன்று நிவாரணங்களுக்காக கையேந்த வைத்து, நடுத்தெருவில் அலையவிட்டதற்கு புலிகள் மட்டும் காரணமல்ல. இராயகரன் சிந்தனைகளும் தான் காரணம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பிழை என்று கூறினீர்கள்." எப்படித் தொடங்கி, எங்கு முடிகின்றது என்று பாருங்கள்.

 

மக்கள் உலகப் புரட்சி பற்றி ஏங்கவில்லை என்பது, எமக்குத் தெரியும். ஆனால் நீங்கள் கூறுவது போல், பேரினவாதத்தை நக்கி பிச்சை போடச் சொல்லி மக்கள் கோரவில்லை. நீங்கள் மக்களின் பெயரால் நக்குகின்றீர்கள். நாங்கள் மட்டும் தான் மக்களின் உரிமையை முன்னிறுத்துகின்றோம். இது உலக புரட்சியின் உள்ளடக்கமாக இருந்தால், அதைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.

 

'நாளை நாங்கள் உயிர்வாழ முடியுமா என்ற ஏக்கம்!" சரி யாரால், உங்கடை அரசால் தான். நாளை அவர்களை எப்படி எங்கே கொல்வது என்பதை நீங்கள் வீசும் செல், உங்கள் விமானம், கொலைகார குண்டர்கள் தீர்மானிக்கின்றனர். நாளைய வாழ்வு, உங்களால் தீர்மானிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் தான் புலிகள் தீர்மானிக்கின்றனர்.

 

'நாளை எங்களுக்கு சோறு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு!" டக்கிளஸ் பிச்சை போடும் அரசியலையா, மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் உழைத்து வாழவே விரும்புகின்றனர். உங்களைப் போல் கொலைகார கூலிக் குழுவாகி, அவர்கள் நக்கி வாழ விரும்பவில்லை. அவர்களின் உழைப்பையே சுரண்டி போடும் அரசின் பிச்சையை, மக்கள் கோரவில்லை. சோத்தையும், வாழ்வையும் பறித்துவிட்டு, புலியின் பெயரால் அவர்களை கையேந்த வைத்து அரசியல் செய்யும் பிழைப்புத்தான் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி வெட்டி அரசியல். இதன் வெளியே உள்ளே ரத்தமும் அழுக்கும்.

 

'சுதந்திரத்திற்காக போராட புறப்பட்ட எமது மக்களை இன்று நிவாரணங்களுக்காக கையேந்த வைத்து" அரசியல் செய்வது நாங்களல்ல. 'சுதந்திரம்" வேண்டாமென்றவர்கள் நீங்கள். புலியைச் சாட்டிக்கொண்டு, இலங்கை இந்திய அரசின் பின் சென்றவர்கள் நீங்கள். புலியைச் சொல்லி வாழ்வை அரசுடன் சேர்ந்து அழித்த நீங்கள் 'நிவாரணங்களுக்காக கையேந்த வைத்து" இன்று அதை வைத்து அரசிம்ல் செய்பவர்கள் நீங்கள். இதற்கு 'இராயகரன் சிந்தனைகளும் தான் காரணம்" என்று கூறிக்கொண்டு, இந்த 'நிவாரணங்களுக்காக கையேந்த வை"க்கும் அரசிம்லை பாதுகாக்க முனைகின்றீர்கள். வேடிக்கை தான் போங்கள்! 
 
இப்படி தாம் பேரினவாதத்தின் பின் இருப்பதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், 'இராயகரன் சிந்தனைகளும் தான் காரணம்" என்று கூறும் இவர்கள் இதற்கு மாறாக 'தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." என்று கூறுகின்றனர். புலியை ஆடு பொருளாக்கி மக்களை 'கையேந்த வைத்து" தமிழ் மக்களை அடிமையாக்க நடத்தும் பேரினவாத மாமா அரசியலை, இப்படி முரண்பாட்டுடன் நியாயப்படுத்த முனைகின்றனர்.

 

மக்களுக்கு எதிராக தாம் செய்ய துரோகத்தையே அர்த்தமுள்ளதாக்குகின்றனராம். அதாவது  'ஆனால் ஈழத்தை கைவிட்டவர்கள் இலக்கை கைவிடவில்லை. சாத்தியமானவற்றிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்." வேடிக்கையான மாமா வாதம். புலிகள் ஈழத்துக்காக போராடுவதாக கூற, இவர்கள் தாம் கைவிட்டதற்காகத் தான், சாத்தியமானதை பெறுவதற்காக கைக்கூலித்தனத்தை செய்வதாக கூறி நியாயப்படுத்துகின்றனர். 'அரசியல் தீர்விற்காக அயராது உழைத்து வந்திருக்கின்றார்கள்." புலிகளை நம்பிய மக்கள், இனி கைக்கூலிகளான தம்மை நம்பக் கூறுகின்றனர். இப்படி மக்களுக்கு பெற்றுத் தருவதை பற்றி பேசுகின்றவர்கள், மக்கள் தம் உரிமைக்காக போராடுவதை மறுப்பது தான், இந்தக் கயவர் கூட்டத்தின் அரசியல். தம்மை மக்களுக்கு மேலாக நிறுத்தி, மக்களின் உரிமைகளை பறித்து அவர்களை தம் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு, 'சாத்தியமானதை" பெற்றுத்தருவது பற்றி போதிக்கின்றனர். தம்மைப் போல் பிச்சை பெறுவது தான், சாத்தியமானது என்கின்றனர். மக்களையும் தம்மைப் போன்ற நிலையில் வைத்து இழிவுபடுத்துகின்ற வக்கிரம் இது.

 

மக்களை இழிவாடியவர்களிடம் 'சாத்தியமனவற்றிற்காக" இரப்பதாக கூறும் இந்த கைக்கூலிகள், அதை 'யாருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமோ அவர்களுடன்தான் அவர்கள் பேசி வருகின்றார்கள்." என்று கூறுகின்றனர். தாம் பேரினவாதத்துடன் கூடி, 'சாத்தியமனாது" என்ற பெயரில் தமிழ் மக்களை அடிமைப்படுத்துவதற்காகவும், அதை நியாயப்படுத்துவதற்காகவும் எமக்கு எதிராக கொதித்து எழுகின்றனர்.

 

ஈழத்தைக் கைவிட்டு, மக்களை காட்டிக் கொடுத்து, பேரினவாதத்தை நக்க வெளிக்கிட்டவுடன் என்ன சொல்லுகின்றனர்.

'அதற்கு பின்னர் கிடைத்த சந்தர்ப்பங்களின் போது கொண்டு வரப்பட்ட தீர்வு முயற்சிகளை எல்லாம் அரை குறை தீர்வு என்று கூறி நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு அழகான கட்டுரைகள் வரைந்தீர்கள். இதனால் நடந்தது என்ன?...யுத்தம்… பேரவலம்…அகதி வாழ்வு…இடம்பெயர்வு… பட்டினிச்சாவு…. இவைகள் தான். இன்று எமது மக்களுக்கு தேவையானது ஓர் அரசியல் தீர்வு. அதை பெறுவதற்கு மாறாக அரை குறை தீர்வுகள் என்று கூறி யுத்தத்தை நடத்த நீங்களும் தான் புலிகளை தூண்டி விட்டவர்கள். ஆனால் இன்று மரணங்கள் மலிந்து கிடக்கின்றன. இந்த மனிதப்படுகொலைகளுக்கு நீங்களும் தான் காரணமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்."

 

இப்படி குற்றம் சாட்டும் இவர்கள், அதை செய்யும் அதே பேரினவாத அரசுடன் நின்று தான் இதைச் சொல்லுகின்றனர். 'நடந்தது என்ன?...யுத்தம்… பேரவலம்…அகதி வாழ்வு…இடம்பெயர்வு… பட்டினிச்சாவு…." இதைச் செய்பவர்களே குற்றச்சாட்டை மற்றவன் மீது போடும் பாசிசக் கொழுப்பு. தாங்கள் போடும் எலும்பை, கவ்விக்கொண்ட, தமிழினமே அடிமையாய் இரு என்கின்றனர். இதை மறுத்தால் தாம் 'யுத்தம்… பேரவலம்…அகதி வாழ்வு…இடம்பெயர்வு… பட்டினிச்சாவு…." ஊடாக இனத்தையே அழிப்போம் என்று கூறுகின்றனர்.  பேரினவாத மாமா வேலை பார்க்கும் திமிர். புலிகளை நாங்கள் தான் விமர்சிக்க முடியும், நீங்களல்ல. இந்த இனப்பிரச்சனையை உருவாக்கியவர்களுடன் சேர்ந்து அதற்கு முண்டு கொடுக்கும் நீங்கள் தான் புலியின் இருப்பின் அத்திவாரமாகும். இதை வைத்து பேரினவாத அரசியல் செய்பவர்கள் நீங்கள். நீங்கள் பெத்துப் போட்டது தான் புலி. 

 

தமிழ் மக்களை ஓடுக்கும் பேரினவாதத்தின் தொங்குசதையான நீங்கள் எமக்கு கூறுகின்றீர்கள் 'உங்கள் அழகான கட்டுரைகள் எமது மக்களுக்கு சோறும் போடாது, சுதந்திரத்தையும் கொண்டுவராது" என்று. அதை தடுத்து தரமறுபவர்கள் நீங்கள். சுதந்திரத்தையும் சோற்றையும் அரசுடன் சேர்ந்து மறுத்த நீங்கள், தமிழ் மக்களை அடிமைப்படுத்துவதே உங்கள் அரசியல் என்பது நாம் அறிந்தது தான். புலியின் பெயரால் நீங்கள் செய்வது இதுதான். இதை தகர்ப்தே எமது போராட்டம். 'உங்கள் அழகான கட்டுரைகள்" ஆம் எம் சரியான போராட்டமும், அதை தரமறுக்கின்ற சிங்கள பேரினவாத பாசிசத்தின் எடுபிடிகளின் பாசிசத் திமிர் தான் 'சுதந்திரத்தையும் கொண்டுவராது" என்கின்றது. மக்களை அடிமையாக வைத்திருப்பது உங்கள் திட்டம், அது தான் இதை இப்படி  சொல்ல வைக்கின்றது. 

 

இப்படி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசின் பின் நக்கும் கூட்டம், எம்மிடம் கேட்கின்றது? 'எஐமான் போடும் எலும்பை பிடிப்பதா என்று கேட்கும் நீங்கள் சுதந்திர ஈழத்தை பெறுவதற்கு வழி காட்ட முடியுமா?....சும்மா கதை விடாதீர்கள்" என்கின்றீர்கள். நல்லது, அதை அடைய விடமாட்டீர்கள் என்பது தெரிகின்றது. மறுபக்கத்தில் நீங்கள் கூறுவது போல் நாங்கள் கதை விடுகின்றோம் என்று வைப்போம்;. எமது எழுத்தைக் கண்டு ஏன் கொதித்து எழுதுகின்றீர்கள். மக்களுக்கு உங்களைப் பற்றிய உண்மை எம்மால் தெரிந்துவிடும் என்ற அச்சமா!  'சும்மா கதை விடாதீர்கள்" என்று சொல்லும் நீங்கள் கதையை விடாது, 'சுதந்திர ஈழத்தை பெறுவதற்கு வழியைக் காட்ட"வேண்டியது தானே. உங்கள் பேரினவாத எஜமான் விடமாட்டார்களா? யாரை ஏமாற்றுகின்றீர்கள்!

 

உங்கடை கைக்கூலித்தனத்தை விட்டுட்டு வந்து, மக்களுடன் நின்று கதையுங்கள். அதை நியாயப்படுத்த பாசிசப் புலியை இழுக்காதீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள் 'பாசிசப்புலிகளின் ஏக பிரதிநித்துவக் கோட்பாடு என்பது தமிழ் அரசியல் தலைவர்களையும், சக இயக்க போராளிகளையும் அரசாங்கத்தின் பக்கம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது." வேடிக்கையாக இருக்கின்றது. புலிகள் உங்களை கைக்கூலியாக சொன்னார்களா? தமிழ்மக்களுக்கு எதிராக பேரினவாதத்துடன் கூடி நிற்கச் சொன்னார்களா? புலிப் பாசிசத்தை எதிர்க்க, அரச பாசிசத்தை தேர்ந்தெடுத்தது நீங்கள். மக்கள் சொல்லவில்லை, புலியும் சொல்லவில்லை. 

 

'ஆயதப்போராட்டம் என்று கூறிக்கொண்டு சகோதர அமைப்புகளை கருவறுத்து தெருவில் எறிந்து போராடும் பலத்தை உடைத்தவர்கள் புலிகள்" ஆம் உண்மை, அதற்காக எதிரியை பலப்படுத்துவதா நேர்மையான அரசியல் வழி. எங்கே இதைக் கற்றீர்கள். இந்தியாவிடமா!?  எதிரி தமிழ் மக்களை கொன்று போட உதவுவது, எப்படி சரியாகும். இப்படி புலியொழிப்பின் பெயரில் கொலைக்கு உதவி, கொன்று குவித்ததே கைக்கூலிகளின் வரலாறாக எம்முன்னுள்ளது.   

 

கைக்கூலிகளான நீங்கள் 'மறுபடியும் கூறுகின்றேன். யாரது காலை நக்கியாவது உங்களுக்கு பெட்டிக்கடை திறக்க வழி திறந்து வைப்பார்கள். இறுதியில் வந்து சேருங்கள். மலர்களை குதிரை மீது மட்டும் அமர்ந்து பார்ப்தை விட்டு கீழே இறங்கி நின்றும் பாருங்கள். உங்களது மார்க்சிசம் குறித்த உபதேசங்கள் எமக்கு தேவையில்லை. நாம் கற்றதும் பெற்றதும் மக்களிடமிருந்து" ஆகாகா மக்களிடம் கற்றது எதை? அவர்கள் என்ன உங்களைப் போல்  கைக்கூலிகளா? பேரினவாதத்தின் பின் நக்குவதை, மக்களிடம் இருந்தா கற்றீர்கள். கேடுகெட்ட பொறுக்கித்தனமான வாதம். 'பெட்டிக்கடை திறக்க வழி திறந்து வைப்பார்கள். இறுதியில் வந்து சேருங்கள்" என்று கூறுவது, ஏதோ தாங்கள் போராடி ஏதோ மீட்ட கதையை சொல்லுகின்றனர். சரி எதை மீட்டீர்கள்? எப்படி மீட்டீர்கள்?

 

புலிகளை தோற்கடித்தது நீங்களல்ல. மக்கள் தான் புலியை தோற்கடித்தனர். மக்கள் தோற்கடித்துவிட்ட போராட்டத்தின் மேல் ஏறி, சிங்கள பேரினவாதமும் கைக்கூலிகளான நீங்களும் சவாரி விடுகின்றீர்கள். நீங்கள் இதன் மேல் செய்ததெல்லாம், செய்து கொண்டிருப்பதெல்லாம் கொலைகளும், இன அழிப்பும் தான்;. இதன் மேல் நிறுவுவது  மறுபடியும் புலியை மிஞ்சும் ஒரு பாசிசம்;. இதன் தளபதி கோத்தபாய கூறுவது போல், 'தாம் அல்லாத அனைவரும் புலிதான்". இது தான் அங்கு ஜனநாயகத்தின் எல்லை.

 

புலியை ஒழித்ததும் மக்கள், நீங்களல்ல. வரலாற்றை தீர்மானிப்பதும் மக்கள் தான்.

'உங்களது மார்க்சிசம் குறித்த உபதேசங்கள் எமக்கு தேவையில்லை" உங்களுக்கு நாங்கள் உபதேசம் செய்தால், எம்மை நாம் கேவலப்படுத்தி விடுவோம்;. மாமா வேலை பார்க்கும் கைக்கூலிகளுக்கு, எப்படி உபதேசம் செய்யமுடியும். நீங்கள் மறுக்கும் மக்களின் உரிமையைப் பற்றி நாம் பேசுவதை, உங்கள் பாசிசத்தால் என்றும் தடுக்கமுடியாது. அது தான் மனித வரலாறாகும்.

 

இணைப்பு:

 

தம் கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த 'இந்தியாவின் கைக்கூலிகள் என்று அடுத்தவர்களை பார்த்து சேறடிக்கும் இவர்கள் தாம் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது. இந்தியாவை நேச சக்தியாக கொண்ட அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு. ஆனால் இராயகரன் சார்ந்திருந்த என்.எல்.எவ்.ரி அமைப்பினர் இந்தியாவிடம் ஆயுதப்பயிற்சி எடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின்படி இந்தியாவின் கைக்கூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா?...

இந்திய அரசிடமிருந்து பெற்ற அதே ஆயுதங்களை வைத்து, இந்திய அரசால் பயிற்றுவிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளிடமிருந்து இரயாகரன் சார்ந்த என்.எல்.எவ்.ரி அமைப்பினர் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்தனர்." என்ற குற்றச்சாட்டு, அடிப்படையில் என்.எல்.எவ்.ரி பதிலளிக்க வேண்டியது. நான் அந்த அமைப்பில் இருந்து 1988 இல் வெளியேறியவன்.  

 

அந்த அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் என்ற வகையில் இது பற்றி கருத்துக் கூறுவது அவசியம்.  நான் அந்த அமைப்பை தீர்மானிக்கும் நிலையில், ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவனல்ல. இருந்தபோதும் பயிற்சி பற்றிய விவாதம், மத்திய குழுவிற்கு விசுவால்  முன்வைக்கப்பட்டது. அவருக்கு நாபாவுக்கும் நீண்ட பல வருடமாக இருந்த உறவால், நாபாவின் தோழமையுடன் இது கோரப்பட்டது.

 

என்.எல்.எவ்.ரி மத்திய குழுவின் பெரும்பான்மை இதை நிராகரித்த போதும், இயக்கத்தின் தலைவராக இருந்த விசுவின் வேண்டுகோளுடன், கடுமையான நிபந்தனையுடன் இருவருக்கான பயிற்சி ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

இறுதியில் பயிற்சிக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் விரும்பாது இருந்தபடியால் இழுத்தடித்த நிலையில், பயிற்சிக்கு சென்றவர்களை பயிற்சி இன்றி நீண்ட காலம் தம் முகாமில் முடக்கினர். இறுதியில்  ஆயுதப்பயிற்சி இன்றி வைத்திருந்த பின், உடற் பயிற்சியுடன் முடித்துக் கொண்டனர்.

 

இந்த விவகாரத்தில் விசுவின் இது போன்ற நடைமுறைகள் தான், அவரின் பிளவு நடவடிக்கை வரை அவரை இட்டுச்சென்றது. இது என்.எல்.எவ்.ரி வரலாறு.

 

பி.இரயாகரன்
01.03.2009