புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்த சமாதானம்! எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இதை ஆராய முனைகின்றோம். இடைவிடாத அரசியல் கொந்தளிப்புகள், நிலைமைகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் குழப்புகின்றன. எமது மாறாத கண்ணோட்டத்தையும், பார்வையையும் அதிரடியாகவே திகைப்பூட்டி திணற வைக்கின்ன்றது. ஒரு புரட்சி அல்லது அழிவில், இவை அதிரடியாக நிகழக் கூடியதுதான்.
அதனடிப்படையில், எம்மை நோக்கி ஒரு தோழர் எழுப்பிய கேள்விகளைப் பார்ப்போம்.
'புலிகள் ஆயுதத்தைக் கீழே வைப்பது தொடர்பான உங்கள் கருத்துக்களைப் படித்தேன். இதில் எனக்குக் குழப்பமான விடயம் ஒன்று உண்டு. புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது ஒன்றே சாகும் மக்களைக் காக்க இருக்கும் ஒரே வழி என்று நான் சிந்தித்து வருகிறேன். இந்த முடிவுக்கு நான் வரக் காரணங்களாக அமைவன,
1. இனி புலிகளால் போராடி மீள முடியாதளவுக்கு பலமான முற்றுகை இடப்பட்டிருக்கிறது.
2. புலிகள் இறுதி ஆள் வரை போராடி மடிவோம் என்று எழுப்பும் கோஷத்துக்கு பின்னால் உள்ள அவலம் மறைக்கப்படுகிறது. இந்த இறுதிவரை போராடி மடியப்போவது யார்? புலிகளால் கட்டாயமாக இணைத்துக்கொள்ளப்பட்ட, அரைகுறைப் பயிற்சியுடன் துப்பாக்கி திணிக்கப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள பிள்ளைகள் தானே? இன்னும் அம்பதாயிரம் இளைஞர்கள் இருப்பதாக, பொட்டர் எழுதிய போலிக் கரும்புலிக்கடிதம் சொல்கிறது. அவர்களையும் சாகடிப்பதைத்தான் கடைசி வரை போராடுவதென புலிகள் அர்த்தப்படுத்துகிறார்கள்.
3. இந்தப் பிள்ளைகளின் பெற்றோரும் உறவினரும் இந்த பாசப்பிணைப்புக் காரணமாகவும், இதிலுள்ள அபாயம் காரணமாகவும் வன்னியை விட்டு வர அஞ்சி, விரும்பாமல் இருக்கின்றனர். போராடி மடிவதில் அவர்களும் அடங்குவர்.
4. புலிகள் கையில் ஆயுதங்களுடன் இறுதி வரை போராடிக்கொண்டிருக்க, 'பாதுகாப்பாக" வெளியேற்றப்படும் மக்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள்? இது பெரும் மனித அவலத்துக்கே கொண்டு சென்று சேர்க்கும்.
5. புலிகள் ஆயுதம் வைத்திருப்பதை குற்றம்சாட்டியே இன்று 'பயங்கரவாதத்துக்கு" எதிரான போர் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த முன்னெடுப்பின் பின்னால் இயங்கும் அரசியல் தொடர்ந்து இயங்கவும் இந்த ஆயுதங்கள் வாய்ப்பாக அமைகின்றன.
இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்து, அதனூடாக பெறக்கூடிய "சமாதானம்" போன்ற ஒன்றைப் பயன்படுத்தி மக்களை அரசியல் மயப்படுத்துவதே அழியும் மக்களைக் காக்கும் வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்."
இவை அனைத்தும் அங்கு சிக்கியுள்ள அப்பாவி பொது மக்கள், புலி ஆதரவு குடும்பங்கள், கட்டாய பயிற்சிக்கு உள்ளாகிய சண்டை செய்ய விரும்பாதவர்கள்; நலன் சார்ந்த, சமூக அக்கறையின் பாலானது. இவற்றை நிராகரிக்க முடியாது. இவர்களை பணயம் வைத்துத்தான் புலிகளின் பலி அரசியல் நடக்கின்றது.
இதில் இருந்து இவர்களை விடுவித்தல் உட்பட, அவர்களின் பாதுகாப்பை நாம் கோருகின்றோம். இவர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு புலிகளிடமே உண்டு என்பதையும், நாம் தெளிவுபடுத்துகின்றோம். இதை நிராகரிக்கும் அனைத்து விளைவுக்குமான பொறுப்பு, புலிகளைச் சாரும்.
'புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக்கையளித்து, அதனூடாக பெறக்கூடிய "சமாதானம்" போன்ற ஒன்றைப் பயன்படுத்தி" என்ற ஒன்று நிகழாவிட்டால், அழிவு நியாயமா!? இல்லை, இதற்குள்ளாக மட்டும் விடையத்தை அணுகமுடியாது. நிபந்தனையற்ற சரணடைவையையும், இதே காரணத்தினால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா!? புலிகள் உருவாக்கி பாதுகாக்கும் அவலத்தை மையப்படுத்தி, அரசியல் நிலைப்பாட்டை நாம் தீர்மானிக்க முடியாது. மொத்த தமிழ் மக்களின் நலன் ஊடாக, அனைத்தையும் ஆராய வேண்டும்.
இங்கு அரசியல் வரையறைகள் உண்டு. அது முழுமைக்கும் பொருந்தும். எமது கருத்துகள் அனைத்தும் அரசியல் நிபந்தனைக்கு உட்பட்டது. மக்களைச் சார்ந்து போராடுதல் என்ற குறைந்தபட்ச நிபந்தனைக்கு உட்பட்டது.
இங்கு நாம் தீர்மானிப்பவர்களல்ல. அதுபோல் புலிகள் மட்டும் தீர்மானிப்பவர்களல்ல. இதனுடன் தொடர்புடைய பலரும் தீர்மானிக்கின்றனர். இதில் அளவு, பண்பு வேறுபாடுகள் உள்ளது.
எம் நிபந்தனை என்பது, அனைத்துக்கும் அடிப்படையானது. மக்களை சார்ந்து நின்றுதான், எதையும் அணுகமுடியும். 'நிபந்தனையுடன்" என்றால், அது மக்கள் நலன் சார்ந்ததாக மட்டும் இருக்க வேண்டும். இல்லாத வரை, அதுவும் மக்களுக்கு எதிரானதுதான். புலிகளின் பாசிச அரசியல் கட்டமைப்பில், இதுவும் சாத்தியமற்ற ஓன்றுதான். புலிகள் மக்களைச் சார்ந்து தம்மை சுயவிமர்சனம் செய்யாது எதைச் செய்தாலும், அவை அனைத்தும் மக்களுக்கு எதிரானதுதான்.
இங்கு எம்மை நோக்கி சிலர் எழுப்பிய கேள்வி ஒன்றை சுட்டிக்காட்ட முனைகின்றேன். புலிக்கான எமது வேண்டுகோள்கள் மூலம், அவர்களை திருத்த முனைகின்றீர்களா? என்று கேட்கின்றனர். புலிகளை நன்கு புரிந்து, இனி அவர்களின் இருப்பே அழிவாக உணருகின்றவர்கள் முன்னால், இது எம் மீதான அவர்கள் விமர்சனமாகின்றது.
புலியைத் திருத்துவது எம் வேலையல்ல. மாறாக இதற்கூடாக புலிகளுக்குள் உள்ள மக்கள் நலன் சார்ந்த பிரிவினரை, உண்மையான விடுதலையின் பால் அக்கறை கொண்ட சக்திகளை சிந்திக்கத் தூண்டவும் அதன் அடிப்படையில் செயல்படவும் கோரிய ஒரு தெளிவை உருவாக்க முனைகின்றோம். எம் கருத்துகள் சிந்;தனைகள் எம்முடன் முடங்காது, உண்மையாகவே போராடிக் கொண்டிருக்கும் சக்திகளை நெருங்கி சொல்ல முனைகின்றோம். அதில் மக்கள் சார்ந்து நிற்க கூடியவர்களுடன் கூடிய, ஒரு உரையாடலை நடத்த முனைகின்றோம்.
இந்த வகையில் தான் ஆயுத களைவு தொடர்பான எமது நிலைப்பாடும். மக்களைப் பற்றி புலிக்குள் சிந்திக்க முனைபவர்கள் முன், எமது வாதம் உள்ளடக்க ரீதியாகவே இருக்கும். அந்த முரண்பாட்டின் அம்சம். புலிகளின் தோல்வியின் அடிப்படையே அதுதான். எம் வாதம் அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும், சரியாக சிந்திக்கத் தூண்டும்.
மறுபக்கத்தில் புலிகள் மக்களைப் பலியிட்டே அரசியல் செய்ய முனைகின்றது. இதற்கு ஊடாகத்தான் அனைத்தையும் புலிகள் கையாள்வார்கள். இதற்கு மாற்றாக உள்ள தீர்வு தான் என்ன? சரி இதற்குள் புலிகளின் தீர்வு என்ன? அவை சில வரையறைக்கு உட்பட்டது.
1. மக்களை புலிகள் விடுவித்தல்
2. அரசு யுத்தத்தை நிறுத்தல்
3. எந்த வழியிலாவது, யாரிடமாவது சரணைடைதல் 1. நிபந்தனையின்றி 2. நிபந்தனையுடன் உதாரணமாக தீர்வு
4. யுத்தத்தை புலிகள் வெல்லுதல்
5. முற்றுகையை உடைத்து வெறியேறுதல்
இப்படி உள்ள தீர்வுகள் எவையும் நடைமுறைக்கு வரும் சாத்தியப்பாடுகள் அற்றவனவாக அல்லது இழுபறி கொண்ட ஒன்றாக காணப்படுகின்றது. இவை அனைத்தும் புலிகள் தம்மை சுயவிமர்சனம்; செய்து தம்மை மாற்றாத வரை, மக்களுக்கு எதிரானது. இவை எம் சக்திக்கு அப்பாற்பட்டு நிகழ்கின்றது.
இங்கு நீங்கள் எழுப்பும்; கேள்வி, நிபந்தனையுடன் கூடிய சரணடைவைப் பற்றியது. நிபந்தனையற்ற சரணடைவை நாம் எப்படி பார்ப்பது? இரண்டும் ஒன்று தான். அது துரோகத்தை அடிப்படையாகக் கொண்டது. துரோகத்தை செய்வதன் மூலம் மக்களை காப்பாற்றக் கோருவது அபத்தம். அதைவிட மக்களை விடுவிக்கலாம். மக்களை காப்பாற்றவே இப்படி சரணடைய முடியும் என்றால், மக்களை விடுவித்துவிட்டு போராடுங்கள். இங்கு துரோகத்துக்கும், அதை நியாயப்படுத்துவதற்கும் எந்த இடமுமில்லை.
மக்களை விடுவிக்காமல் பணயம் வைத்து சரணடைதல் என்பது, அதைவிட துரோகம். இப்படி துரோகம் செய்து அரசியல் செய்தால், தமிழ் மக்கள் மீள முடியாது. துரோகமும், நசிந்து வாழ்தலும் தான், தமிழ் மக்கள் தலைவிதியாகிவிடும்.
'நிபந்தனையுடன்" என்றால், மக்களின் அடிப்படை உரிமையுடன் அல்லாத எதையும், எந்த மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புலிகள் மக்களின் உரிமையை முன்வைத்து, அதற்காக சரணடைய மாட்டார்கள். மக்களுக்கு துரோகமிழைக்கத்தான் சரணடைவார்கள்.
மக்களின் பாதுகாப்பை வைத்து புலிகள் அரசியல் செய்வதுபோல், நாம் செய்யமுடியாது. அவை புலிகளின் பாசிச அரசியல் நிபந்தனைக்குட்பட்டது. அதற்குள், அதற்கேற்ப கருத்துரைத்தால், அவை அனைத்தும் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். மக்களுடன் இல்லாத புலிகள், சுயவிமர்சனம் செய்யாமல் எடுக்கும் எந்த முடிவும், மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் எதிரானதாகவே அமையும். இதனடிப்படையில் தான், இதை எதிர்த்து எதிர்வினையாற்றுகின்றோம்.
பி.இரயாகரன்
28.02.2009