தலைவனே…!
இல்லை
நண்பனே…!
இல்லை
அண்ணணே...!


ஆம் அப்படிக் கூப்பிடத் தான் பிடித்திருக்கு
நான் உன்னோடு பேச வேண்டும்
அவசரமாக பேச வேண்டும்
இப்போதே பேச வேண்டும்
இப்போது பேசாவிட்டால்
எப்போதும் பேசமுடியாது…


அன்று…
உன்னை பேசியவன் தான்


நேற்று...
உன்னை பேசியவன் தான்


இன்றும் கூட...
உன்னை பேசுபவன் தான்


ஆனால் இப்போது
நான் உன்னோடு பேசவேண்டும்
என் தாய் துடிதுடித்து கதறுகிறாள்
உன்னையும் என்னையும் சுமந்தவளெடா
துடிதுடித்து கதறுகிறாள்
அவளுக்காக...
நான் உன்னோடு பேச வேண்டும்


உன்னைப் பார்த்து பல முறை
பெருமிதம் கொண்டவள்….பெருமைபேசியவள்…
தலைக்கனம் கூட அப்பப்ப வந்து போனது அவளுக்கு
தன் எதிரிகளை தன் மகன்
விரட்டி விரட்டி கலைக்கிறான்
என்ற தலைக்கணம்-எதிரியை
பலதடவைகள் மண்டியிட வைத்துவிட்டான்
என்ற தலைக்கனம்
உலகமே தன் மகன் புகழ் பாடுகிறார்களே
என்ற தலைக்கனம்
இன்று
துடிதுடித்து கதறுகிறாள்
அவளுக்காக...
நான் உன்னோடு பேசவேண்டும்


அன்றும் கதறினாள்...!
தன் பிள்ளைகளை… உன் சகோதரர்களை..
நீ கொல்லும் போதெல்லாம்...
தன் பேரப்பிள்ளைகளை
நீ கொல்லும் போதெல்லாம்...
தன் உறவுகளை… உன் இரத்தங்களை...
நீ கொல்லும் போதெல்லாம்...
உன் துப்பாக்கியின் திசை திரும்பிய போதெல்லாம்
துடிதுடித்தவள்...!
இன்றும் அவள் துடிதுடிக்கிறாள்...
உனக்காக துடிதுடிக்கிறாள்
உன் உயிருக்காக துடிதுடிக்கிறாள்
உன்னை இழந்துவிடுவேனோ என்று துடிக்கிறாள்
அதற்காக தான்...
நான்உன்னோடு பேச வேண்டும்


கண்ட கண்ட நாய்கள் எல்லாம்
கேலி பேசுகிறது… ஏளனம் செய்கிறது…
கால் நக்கி பதவியை வைத்திருப்பவன்
பேரினவாதத்தின்
கால்களை…
இந்திய ஆக்கிரமிப்பு வெறியனின்
கால்களை…
அந்த நாய்...!
கேலி பேசுகிறது… ஏளனம் செய்கிறது…
பிச்சை போடுகிறானாம்
இரண்டு ரூபாய்
பிச்சை போடுகிறானாம்
அம்மா தாயே…. அம்மா தாயே…
உன் குரல்
அவன் வாசலில்
உன் குரல்
அம்மா தாயே… அம்மா தாயே…
உன்னைப் பெற்றவள் துடிதுடிக்கிறாள்
இதைக் கேட்டது முதல்
அவள் துடிதுடிக்கிறாள்
அதற்காக தான்...
நான் உன்னோடு பேச வேண்டும்


உன்னை சுமந்த வயிற்றிலே தானே
என்னையும் சுமந்தாள்
என் தாய் துடிதுடிக்கிறாள்
அதற்காக தான்...
நான் உன்னோடு பேச வேண்டும்
அவள் கதறுகிறாள்
என் மகன் சாகக்கூடாது
எதிரி காலில் வீழ்ந்துவிடக் கூடாது


அவள் கதறுகிறாள்
அவன் அழிக்கப்பட வேண்டியவனில்லை
மாற்றப்பட வேண்டியவன்
புலம்பிப் புலம்பிப் கதறுகிறாள்


அண்ணா...!
நீ மாற்றப்பட வேண்டியவன்
நீ அழிக்கப்பட வேண்டியவனில்லை
நீ மாற வேண்டியவன்
அழிய வேண்டியவனில்லை
போ… இப்போதாவது போ…
மக்களிடம் போ….
நம் தாய் பெற்ற மக்களெடா
நம் சகோதரர்களெடா
அவர்களோடு பேசு…
மனம் திறந்து பேசு
கடந்தவைகளைப் பேசு
நடந்தவைகளைப் பேசு
உண்மையை பேசு
நேர்மையை பேசு
நீ அறிந்து கொள்ளாதவைகள் தான்
இப்போதாவது தெரிந்துகொள்
தேவைகளைப் புரிந்து கொள்
உன்னை மாற்றிக் கொள்
அவர்களோடு பேசு...அவசரமாகப் பேசு…
உன்னோடு வருவார்கள்…
உன்னை தமக்குள் கொண்டு வருவார்கள்
நீ வாய்திறந்தால்…!
நிச்சயமாக வருவார்கள்…
அவர்களோடு வா..
நெடும் பயணம் வா..
நீண்டபயணம் வா..
அவர்கள் உன்னோடு வருவார்கள்
நடக்காததை சொல்லவில்லை
நடந்ததை சொல்கிறேன்
அவர்களோடு வா..
தொடர் பயணம் வா..
நான் உன்னோடு பேச வேண்டும்


அன்று...
நடந்ததை தான் சொல்கிறேன்-இன்று
ஆயுதங்கள் தான் மாறிவிட்டது- இன்று
ஆயுதங்கள் தான் சுதந்திரம் பெற்றுவிட்டது
மக்கள் மாறவில்லை,
மக்கள் வாழ்வியல் மாறவில்லை,
மாற்ற வேண்டும்...
நீ தான் மாற்ற வேண்டும்...!

அதற்காகத் தான்...
நான் உன்னோடு பேச வேண்டும்


நீ ஆயுதங்களை நம்பினது போதும்
மக்களை நம்பு...ஒடுக்கப்படும் நம் மக்களை நம்பு...
அவர்கள் தான் உன்னோடு வருவார்கள்
வா… அவர்களோடு வா…
நீ வரும் போது நானிருப்பேன்
கிளிநொச்சியில்…இல்லை,
யாழ் மண்ணில் நின்று கொண்டிருப்பேன்
நான் உன்னோடு பேச வேண்டும்


என் கனவு…
இது என் கனவு…
இது என் ஏக்கமும் கூட...


நான் உன்னேடு பேச வேண்டும்…


நான் உன்னேடு பேச வேண்டும்…


தேவன்
06.02.2009