Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மூன்று தசாப்த காலங்களாக வீரவார்த்தைகளிலும், வெற்றித்தலைக்கனத்திலும் ஓட்டிய தமிழீழப் போராட்டம், புலம்பெயர்நாடுகளிலும் ஈழமண்ணிலும் மக்களை மந்தைகளாக்கி அலைய வைத்ததைத் தவிர சாதித்தது ஒன்றுமில்லை.

 ஆயிரமாயிரம் போராளிக ளையும் அப்பாவிமக்களையும் பலி கொடுத்து, மக்களோடு; இருந்ததையும்; இழக்க வைத்து மக்களை அனாதைகளாக வீதிவீதியாக அலையவிட்டு இன்று அர்த்தமற்று போய் வன்னிக் காட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளது இந்த ஈழப்போராட்டம்.


மனிதகுலம் என்றுமே அனுபவிக்கக் கூடாத அசுர அவலத்தில் சிக்கி நாளாந்தம் நூற்றுக் கணக்கில் மனித உயிர் இழப்புக்களுக்குள் நின்று தவியாய் தவிக்கும் மக்களின் உயிர்களை தங்கள் பாதுகாப்பு அரணாக்கி கொண்டு வடமாராட்சியில் ஒப்ரேசன் லிபரேசன், ஜெயசிக்குறு என்று வீரம் பேசிக் கொண்டிருக்கிறார் யோகி அண்ணா.


யாருக்காக இந்த வீர விளக்கம். வன்னியில் செத்துக் கொண்டிருக்கும் மக்களை சிரிக்க வைக்கவா அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை குளிர வைக்கவா...?


நீங்கள் கூறியது போல் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து இராணுவ ரீதியில் பல வெற்றிகளைத் ஈட்டியதும் இழந்த சில பிரதேசங்கள் மீட்டெடுக்கப்பட்டதும் உண்மையே. உலக வரலாற்றில் முப்படைகளையும் கட்டியமைத்த ஒரேயொரு விடுதலைப்போராட்ட இயக்கம் தமிழீழப் விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசும் பல வெளிநாட்டு ஊடகங்களும் கூட ஏற்றுக்கொண்டது உண்மையே. இந்தளவிற்கு இராணுவபலம் பொருந்திய உங்கள் போராட்டம், வன்னிப் பிரதேசத்தில் ஓர் மூலைக்குள் தள்ளப்பட்டது எப்படி...?

 

 இன்றைய உங்கள் பேரிழப்பிற்கு எது காரணம்...? உங்களோடு எஞ்சியிருக்கும் சிறு இருப்பபை இன்று பாதுகாத்துக் கொள்வதற்காக புலம்பெயர் மக்களிடம் வீதிப் போராட்டங்களைத் தூண்டிவிட்டு, உலகநாடுகளின் அழுத்ததை இலங்கை அரசின்மீது ஏற்படுத்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது...?


இதனை சிந்தித்து பார்க்க உங்களுக்கு நேரமில்லையா, விருப்பமில்லையா அல்லது தெளிவான அரசியற் சிந்தனை இல்லையா?


இதுவொரு தற்பாதுகாப்பிற்கான பின்வாங்கல் என்று கூறுவதால் மொத்த தமிழ் சமூகத்தை ஏமாற்றிவிட முடியுமா...?


நீங்கள் கூறுவது போன்று வன்னித்தடையை உடைத்து வந்து மீண்டுமொரு போராட்டத்தால் இன்னுமொரு இருபதினாயிரம் மாவீரர்களையும் பல்லாயிரம் அப்பாவி மக்களையும் இழக்க வேண்டுமா...?


கூட்டு மொத்தமாக தமிழ் சமூகத்தையேஅழித்தொழிக்க வேண்டுமென்பதா உங்கள் விருப்பம்...?


போராட்டத்திலே பின்னடைவும் இழப்புகளும் தவிர்க்க முடியாதது தான். அதற்காக இழப்புக்களும் அழிவுகளுமே போராட்டமாகிவிடாது.


நீங்கள் இன்று வன்னியை விட்டு வெளியில் வந்தாலும் மீண்டும்; இன்றைய வன்னி நிலைக்குத் தான் நீங்கள் தள்ளப்படுவீர்கள். உங்களால் மக்கள் போராட்டமொன்றை கட்டி அமைக்க முடியாது என்பதை கடந்த காலத்தில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையா? நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இதுதான் உண்மை. உங்கள் பார்வையில் துப்பாக்கிகளும், ஆட்லெறிகளும், குண்டு வீசும் விமானமும், நவீன ஆயுதங்களும் மட்டும் தான் மேலோங்கி நின்றது. இதைத் தவிர வேறெதையும் நீங்கள் சிந்திக்கவில்லை.


வலுவுள்ளவர்களை எங்களோடு வரும் படி நீங்கள் கேட்டுக் கொண்டுள்ளீர்கள், மக்களிடம் வலுவையும், போராட்ட சிந்தனையையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்க உங்களிடம் என்ன அரசியல் வேலைத்திட்டம் இருந்தது…..இருக்கின்றது...?


தேனிசைச் செல்லப்பாவின் பாடல்களும், குப்புசாமியின் பாடல்களும் தான் உங்கள் அரசியல் வேலைத் திட்டமா...? கலை மக்களுக்கானது, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல சிறந்த ஊடகம் கலை என்பது உண்மையே. ஆனால், புலம் பெயர்ந்த மக்களிடம் கட்டுக்கட்டாக பணம் திரட்டப் பயன்படுத்தலாம் என்ற குறுகிய பார்வை மட்டும் தான் உங்களோடு இருந்தது.


உங்களின் மற்றுமொரு நடவடிக்கை தலைவரின் மாவீரர்நாள் உரை. புலம்பெயர்ந்த மக்களின் ஆதங்கம் எதிர்ப்பாகிவிடாமல், புலம்மக்களைக் குளிர வைக்க பாலா அண்ணாவும் நீங்களும் இணைந்து ஆரம்பித்து முன்னெடுத்த வேலைத் திட்டமே தவிர வேறெதுவுமில்லை.


கொஞ்சமாவது மனச்சாட்சி இருந்தால் உங்கள் கடந்த காலத்தை சிந்தித்து பாருங்கள். உங்களை நீங்களே சுயமாக விமர்சித்து உங்கள் தவறுகளை ஆய்வுக்கு உட்படுத்துங்கள். அப்போது தான் இன்றைய அழிவிற்கும் பின்னடைவிற்குமான காரணம் புரியும். மக்களை வரச்சொன்னால் எப்படி வருவார்கள்…


மக்கள் உங்கள் மேல் அன்போ அக்கறையோ செலுத்துமளவிற்கு மக்களோடான உங்கள் அணுகுமுறை இருந்ததா...? இந்த 30 வருடத்தில் நீங்கள் மக்களோடு வளர்த்துக் கொண்டது முரண்பாடுகளே ஒழிய உடன்பாடுகள் அல்ல. மக்களிடம் முரண்பாடை வளர்த்து கொண்டால் எப்படி மக்கள் போராட்டத்தை கட்டி அமைக்கமுடியும். முதலில் மக்கள் உங்களை நம்ப வேண்டும். அதற்கு பாத்திரமாக அன்பாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களோடுள்ள முரண்பாடுகளை பேச்சில் அறிவுபூர்வமாக தீர்த்து கொள்ள வேண்டுமேயொழிய ஆயதத்தினால் அல்ல… உங்கள் துப்பாக்கி மூளையால் புதியபுதிய முரண்பாடுகளை தான் மக்களோடு ஏற்படுத்த முடிந்ததே ஒழிய அவர்களை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. மக்களை தமிழ்திரைப்படம் பார்ப்பது போன்று வெறும் பார்வையாளராக மட்டும் வைத்திருந்தது மக்கள் தவறில்லை உங்களது அரசியல் வறுமைதான் அதற்கு காரணம்.


இனவெறி பிடித்த சிங்கள அரசையோ, இந்திய ஆக்கிரமிப்பாளனையோ, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையோ எதிர்க்கும் வலிமை உங்கள் நவீன ஆயுதங்களிடம் மட்டுமில்லை. ஆயதங்களை வாங்கிக் குவிக்க எதிரியாலும் முடியும். எந்த எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுக்கும் சக்தி மக்களிடம் தான் உள்ளது. உங்கள் பாசிசப் போக்குத் தான் உங்களைத் இன்று தோற்கடித்தது.


இலங்கை, இந்திய அரசால் நீங்கள் தோற்கடிக்கப்படவில்லை. இரயாகரன் கூறியது போல் மக்கள் தான் உங்களைத் தோற்கடித்தது.


இன்றைய நிலையில் உங்கள் கடந்தகாலத் தவறுகளை நீங்கள் மக்கள் முன்வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேநேரம் வன்னி மக்களின் மேலதிக அழிவைத் தவிர்த்துக் கொள்ள உங்களால் தான் முடியும். உங்கள் இருப்பை பாதுகாப்பதற்கு உங்களையே துடைத்தெறிய முன்னிற்கும் இந்திய காங்கிரஸ் இடமோ அல்லது மேற்கத்தைய நாடுகளிடம் கையேந்துவதால் எந்தவித பயனுமில்லை…,


இப்போதாவது மக்களைப் பற்றி சிந்திக்க முயலுங்கள்… இல்லையேல் சரித்திரத்தில் நீங்கள் துரோகிகளாக பொறிக்கப்படுவது தவிர்க்க முடியாது என்பதே உண்மை நிலையாகும்.


20.02.2009.

தேவன்.