தூங்கையிலே வாங்குகிற மூச்சு அது
சுழிமாறிப் பாய்கையிலே போனாலும் போச்சு"

 

தெரு வழியே பிச்சைக்காரன்  பாடிக் கொண்டு போகிறான். அவனுக்கென்ன சலிப்போ, புலம்பலோ அல்லது இவ்வளவு தான்டா வாழ்க்கை என்ற ஞானமோ? நல்ல அருமையான கருத்தை தான் தன் போக்கிலே சொல்லிப் போகிறான்.

 

எத்தனையோ விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். யோசித்து யோசித்து திட்டம் போடுகிறோம். எல்லாம் சரிதான். காரியம் கைக்கூடிவரும் போது நம்முடைய திட்டத்தின்படியா சூழ்நிலைகளிலும் தீர்மானிக்கப்படுகிறது? இடக்கு மடக்காக எங்கேயோ மாட்டிக் கொண்டோமோ என்று முழிபிதுங்க வைத்து விடும் சம்பவங்களும் நடப்பதுண்டு இல்லையா? அல்லது ஆளுக்கே சங்கு ஊதப்படும் சங்கதிகளும் நடப்பதுண்டு. "மனிஷன நேற்று தான் பார்த்துவிட்டு வந்தேன். இன்று ´அட்டாக்´கில் தூங்கும் போதே இறந்துவிட்டதாக செய்தி வந்தது" அதிர்ச்சியுடன் பேசுவான்.

 

நமக்கு ´தேமே´ன்னு வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் ஒட்டிக் கொண்டு இருந்தால் கூட மூச்சு நின்ற மேட்டர்களை கேட்கும் போது கொஞ்சம் கதி கலங்கி போய்விடுகிறோம். நமக்குள் இருக்கும் மேதை முழித்துக் கொள்கிறான். அப்படித்தான் பாரதியாருக்கும் வீட்டு திண்ணையில் ஏதோ யோசனையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

 

"தூங்கையிலே வாங்குகிற மூச்சு அது
சுழிமாறிப் பாய்கையிலே போனாலும் போச்சு"

 

சாதாரண பிச்சைக்காரன் அவன். படிப்பறிவு எதுவும் இல்லை. வாழ்ககையை புரிந்து வைத்திருக்கிறான். அவனுடைய வார்த்தைகள் பாரதியார் காதுகளில் விழுகின்றது. பாரதியாருக்கு யோசனையை தூண்டிவிட்டிருக்கிறது அவ்வாக்கியங்கள். கொஞ்சம் சிந்தனைக்கு பிறகு அதை வைத்து ஒர் கட்டுரையாக எழுதிவிட்டார். அது நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கட்டுரை.

 

ஏதேது இவன் இப்படி பாடிக் கொண்டு போகிறானே நினைத்திருக்க வேண்டும் பாரதியார். பராசக்தி மீது பற்றுக் கொண்ட மீசைக் கவிஞன் கட்டுரையில் கடைசியில் சொல்வார் :

 

"நாம் செய்ய மேற்கொண்டுள்ள காரியங்களை நிறைவேற்றி முடிக்கும் வரையில் நம்மை மரணம் ஒன்றும் செய்யாது. தெய்வம் காப்பாற்றும்." தனக்கே உரிய தெய்வபித்தில் கட்டுரையை முடிக்கிறார் யானையால் மிதிபட்டு செத்துப் போன பாரதியார்.

 

பாரதியாரின் சிந்தனைகளில் ஏதோ ஓர் அறியாமை இருக்கின்றது. பாரதியாரை விட பிச்சைக்காரன் பெரிய ஞானியாகத் தெரிகிறான் நமக்கு.


சில விஷயங்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. அதில் மரணமும் ஒன்று.


தமிழச்சி
28.01.2009