சென்னைக்கு அருகே இருக்கும் பொன்னேரி என்ற ஊரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் 20 பேர் ஈழத்திற்காகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தாக்கிய போலீசின்

 

காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் கடந்த வெள்ளிக் கிழமை 20.02.09 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் வினவில் வந்த “போலீசு மக்கள் மோதலல்ல, ஈழத்திற்கு எதிராக பார்ப்பன பாசிச பேயாட்டம்!” என்ற கட்டுரைக்காக வெளியிடப்பட்ட போலீசின் வெறிக்குப் பொருத்தமாக ஓநாயாக சித்தரித்த கருத்துப்படத்தை டிஜிட்டல் பேனரில் பெரிதாக பிடித்தவாறு தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.

 

tamilnadu-police

 

இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட பொன்னேரி போலீசு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தங்களது ஒநாய் படத்தைப் பார்த்து கோபம் கொண்டது. வலுக்கட்டாயமாக தோழர்களின் பிரச்சாரத்தை நிறுத்திய போலீசு அவர்கள் வைத்திருந்த மெகாபோன், டிஜிட்டல் படம், பேனர் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு முன்னணியாக இருந்த ஐந்து தோழர்களை கைது செய்து போலீசு நிலையத்திற்கு கொண்டு சென்றது. பின்னர் “கூட்டம் கூடி கலகம் விளைவித்தல், அரசிற்கு எதிராக கலகம் செயதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்” இன்னும் பிணையில் வரமுடியாத அளவிற்கு பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு நீதிபதியின் முன்னால் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் தோழர்கள் அடைக்கப்பட்டார்கள்.

 

வழக்குறைஞர்களின் போராட்டம் நடைபெறுவதால் நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில் போலீசு தந்திரமாக தோழர்களை கடும் பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. இதைப்பற்றி விசாரிக்கச் சென்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களையும் போன்னேரி போலீசு திமிருடன் நடத்தியிருக்கிறது. “உயர்நீதிமன்றத்திலேயே வழக்குரைஞர்களை அடித்து நொறுக்கி விட்டோம் பொன்னேரியில் என்ன செய்யமுடியும்?” என்ற திமிர்தான். அடுத்து இந்தக் கருத்துப் படம் போலீசின் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது என்றால் அந்த முட்டாள் போலீசு இந்தப் படத்தை யார் வரைந்து வெளியிட்டார்கள் என்று விசாரித்து வினவு மீது வழக்கு போடட்டும். இந்தப் படத்தை வைத்து பிரச்சாரம் செய்த அந்த தோழர்களை ஏன் கைது செய்யவேண்டும்?

 

மற்றபடி வினவின் கருத்துப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் தோழர்கள் போலீசுடன் பிரச்சினை வந்தால் இதை வெளியிட்டது வினவு என்று எங்களது தொலைபேசி எண்ணைக் கொடுக்கவும். இத்தகைய பிரச்சினைகளை நாங்கள் சட்டரீதீயாக எதிர்கொள்கிறோம். வினவு ஒன்றும் தலைமறைவாக தளம் நடத்தவில்லை. போலீசு ஓநாய்களைப் பற்றி தொடர்ந்து மிகச்சரியான விதத்தில் படங்களை வெளியிடுவோம். அதை எங்களது தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்துவார்கள். போலீசு இதை வெறியுடன் தடுப்பதற்கு முயன்றால் மக்கள் ஆதரவுடன் முறியடிப்போம். அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்.

 

மற்றபடி சு.சுவாமி மீது முட்டை வீசியதால் கருத்துரிமைக்கு ஆபத்து வந்துள்ளதாக புலம்புவர்களுக்கு இந்த செய்தியை காணிக்கையாக்குகிறோம்.

 

போலிசு ஒநாய்களை வெறுப்பேற்றிய அந்தப் படத்தை இங்கே மீண்டும் வெளியிடுகிறோம்.

 


chennai-police-lawer