04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

உண்மைக்குள் உள்ள பொய்மைகள்

புலியெதிர்ப்பும், புலியிசமும் பேசும் உண்மைக்குள் உள்ள பொய்மைகள் அனைத்தும்,  மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையின் பாலான எந்த அக்கறையுமற்றதும், குறுகிய நோக்கத்துக்குட்பட்டதுமாகும். மனிதம் சந்திக்கின்ற அவலங்கள் உண்மையானது, எதார்த்தமானது. அதை கண்டு கொள்ளாத கூத்துகள் கோமாளித்தனமானது. இதற்குள் றீல்விட்டு எழுதும் புத்திஜீவிகள். உண்மையை ஒருபக்கம் அடமானம் வைத்துவிட்டு, நடிக்கும் நேர்மையீனம். 

இப்படி புலியெதிர்ப்பு பேசும் அரசியல் புலிகளின் தவறுகளை அடிப்படையாக ஆதாரமாக கொண்டு இயங்குகின்றது. இது தமிழ்மக்களின் எதிரியான அரசை ஆதரித்து, அதன் மனித விரோத செயல்களை நியாயப்படுத்தி, தமிழ் மக்களுக்கு முற்றும் எதிராக நிற்கின்றது. தமிழ் மக்களை புலியிடமிருந்து அரசுதான் மீட்க முடியும் என்கின்றது. 

 

புலியிசம் பேசும் அரசியல், தமிழ்மக்களுக்கு எதிரான அரசின் மக்கள் விரோத செயலை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரம் புலிகளின் மக்கள் விரோத செயலை ஆதரித்து, தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தன்னால் தான் தமிழ் மக்களை காப்பாற்ற முடியும் என்கின்றது. 

 

இப்படி இரண்டு பாசிச இசங்கள். இவை தம்மைத் தாம் ஒன்றின் எதிரியாக காட்டியபடி தமிழினத்தின் எதிரியாகவே இயங்குகின்றது. இதனடிப்படையில் பிரச்சாரங்கள், கட்டுரைகள். ஒரு பகுதி இழைக்கும் மனித துயரத்தை முன்னிறுத்தி, மறுதரப்பை பாதுகாக்கும் மனித விரோதமான மட்டமான அறிவுத்தனம்.

 

இப்படி தாம் ஆதரிக்கும் மனிதவிரோதத்தை பாதுகாக்க, மறுதரப்பின் குற்றங்களை அடிப்படையாக கொண்டு தம் அறிவின் மேன்மையால் அதை அம்பலம் செய்கின்றனர்.  இப்படி தம்மைத்தாம் புத்திஜீவிகளாக காட்டிக்கொள்ளும் புல்லுருவித்தனத்தின் ஊடாக வந்த ஒரு சிலரின் கட்டுரைகளை பாருங்கள். அது ஒருதரப்பை மட்டும், மக்களின் எதிரியாக காட்டுகின்றது. மறுதரப்பை இதன் மூலம் பாதுகாக்க முனைகின்றது.

 

கனடாவைச் சேர்ந்த  கற்சுறாவின் 'தெரிந்த உண்மைகளும் தெரியாத உண்மைகளும்."என்ற கட்டுரையும்,  பேரறுஞர் கல்லாநிதி கியூரியஸ் ஜி யின் 'நேற்று விழுந்த அடியில் இன்று முளைத்த 'பரிநிர்வாண" ஞானோதயமும்!  என்ற கட்டுரையும் புலியை விமர்சிக்கின்றது. இப்படி இரு கட்டுரையும் புலி பற்றி பேசுகின்ற பல விடையங்களோ உண்மையானவை தான். ஆனால் மறுபக்கத்தில் புலிகளுடன் சண்டை செய்கின்ற அரசு பற்றி, அதன் இனவொடுக்குமுறை பற்றி எதையும் சொல்வதில்லை. இரண்டு பாசிசத்தில் ஒன்றை மட்டும் தமிழ்மக்களின் எதிரி என்கின்றனர்.

 

இவர்கள் புலி பற்றி சொல்லவரும் செய்தியோ, புலியை அழிக்க அரசுக்கு உதவும் வண்ணம் அதை அம்பலப்படுத்துகின்றனர். தமிழ்மக்களுக்காகவல்ல. அவர்களின் சொந்த விடுதலைக்காகவல்ல. தமிழ்மக்களுக்கு எதிராக உள்ள அரசை, புலியைக்காட்டி ஆதரிக்க கோருகின்றனர். இந்த வகையில் புலிகளின் நடத்தைகளை, அதன் கோமாளித்தனத்தை, அதன் அலுக்கோசுத்தனத்தை தமக்கு சாதகமாக கொண்டு விமர்சிக்கும் இவர்கள், அரசின் பின் தமிழ்மக்களை அணிதிரளக் கோருகின்றனர். மாறாக, மக்களை தம் விடுதலைக்காக  போராடுவதைக் கோருவதில்லை. அதை தம் அரசியல் மூலம் மறுக்கின்றனர். இப்படி புலிக்கு நிகராக தம் மக்கள்விரோத நிலையை முன்னிறுத்துகின்றனர்.

 

இப்படித்தான் புலியெதிர்ப்பு இணையங்கள் முதல் மக்களை முன்னிறுத்தாத அனைத்து  அரசியல் கோமாளிகளும், சிங்கள பேரினவாத அரசுக்காக, புலிகளின் செயல்கள் பற்றி பேசுகின்றனர். புலியின் அரசியலை அடிப்படையாக கொண்ட, மற்றொரு பாசிசத்தின் முதுகெலும்பாக இவர்கள் உள்ளனர். 

 

மறுதளத்தில் பாருங்கள்.  புலிப்பினாமியான சேரன்  காலச் சுவடுக்கு எழுதிய கட்டுரை 'நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!" என்று மகிந்தாவின் பாசிசத்தை, புலிக்கு சார்பாக அம்பலம் செய்யும் கட்டுரை. இந்தக் கட்டுரையில் உள்ள வேடிக்கை என்னவென்றால், சேரன் மறுபடியும் தனது பொறுக்கித்தனத்தை இதில் காட்டியுள்ளான். இங்கு இந்தப் பொறுக்கி 'நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!" என்ற கோசத்தை பயன்படுத்தியது தான். இந்தக் கோசங்கள் 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விஜிதரன் கடத்தப்பட்ட போது வைத்தவை. விடுதலை இயக்கங்களுக்கு எதிராகவும், புலிக்கு எதிராகவும் வைக்கப்பட்டவை. இந்தக் கோரிக்கை, 'புலிகளை அரசியல் அனாதையாக்கும்" கோரிக்கையெனக் கூறி, புலிகள் ஒரு துண்டுபிரசுரம் மூலம் நிராகரித்த இருந்தனர். தமிழ் மக்களுக்கு இதை வழங்க முடியாது என்றனர்.

 

'நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!" என்ற அடிப்படையில் நாலு வார்த்தைகளை பேசியவர்களையும், எழுதியவர்களையும் புலிகள் கொன்றனர். இன்றுவரை, அதுதான் அதன் (புலி) இசம். 

 

இப்படியிருக்க, இங்குதான் சேரன் ஒரு பொறுக்கியாகி, இதைப் பயன்படுத்துகின்றான். புலிப்பினாமியாகியது முதல், புலிகளுடன் சேர்ந்து 'நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!" என்பதை தமழ் மக்களுக்கு மறுத்து நிற்கும் சேரன், அதை மகிந்தாவுக்கு எதிராக மட்டும் கையாளுகின்ற அற்பத்தனத்தை தன் கடடு;ரை மூலம் வெளிப்படுத்துகின்றான். இங்கு சேரன் தாங்கி நிற்கும் புலியிசம் 'நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!" என்பதை அனுமதிப்பதில்லை என்பது, அதைத் திரிப்பதும் தான் இன்றைய சேரனின் பிழைப்பாகும். இப்படி மக்களின் எதிரிகளாக உள்ள புலிகளிடம் 'நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!" என்று கோரவே கூடாது என்பதே இன்றைய சேரனின் அரசியல்நிலை.

 

இப்படி மொத்தத்தில் உண்மைக்குள் பொய்மைகளைக் கொண்ட பிழைப்புத்தனம், மக்களுக்கு எதிராகவே எங்கும் அரங்கேறுகின்றது. 

 

பி.இராயகரன்
22.02.2009
     


பி.இரயாகரன் - சமர்