புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை, மீண்டும் சிறை வைத்துள்ள பேரினவாத அரசு. அங்கு தெருநாயைப்போல் கல்லெறி வாங்கி ஒடியவர்கள், இங்கு மிருகக்காட்சி சாலையில் போல் நேரத்துக்கு பேரினவாத மணியடித்தால் உணவு. மற்றும்படி எங்கும் ஒரே சிறை தான். சுதந்திரமான நடமாட்டம் முதல் சுதந்திரமாக வாய் திறந்து கதைக்க கூட முடியாத மனித அவலநிலை.

இந்த மக்களின் வாழ்வையிட்டு எழும் கூச்சல்கள் கூட போலியானவை. இந்த மக்களின் பெயரில் புலிகளும் அவர்களின் பினாமிகளும் விரும்புவது என்ன? சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதித்து, இதன் மூலம் தமக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் நாலு குண்டு வெடிக்காதா என்பது அவர்கள் கவலை. இப்படி தமது ஆட்கள் மக்களின் பெயரில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற விருப்பம், கவலை.

 

மறுபக்கத்தில் இந்த திறந்தவெளி சிறையைக் காட்டி, வன்னியில் தாம் தடுத்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்காமல் இருக்க, நியாயம் கற்பிக்க உதவும் என்ற நம்பிக்கை. இதற்கு வெளியில் மக்களையிட்டு எந்த கவலையும் புலிக்கு கிடையாது. 

 

மறுபக்கத்தில் அரசு புலிகளின் ஊடுருவலைக் காட்டி, திறந்தவெளி சிறைக்கூடத்தில் மக்களை அடைத்து வைத்து வடிகட்ட முனைகின்றது. இதற்கு அப்பால் அவர்கள் மக்கள் என்பதையே, அது கண்டு கொள்வது கிடையாது. தமிழன் என்ற புறக்கணிப்பு, இன சுத்திகரிப்பு.

 

இப்படி தமிழினம் யாருமற்ற அனாதையாக, அவனவன் தேவைக்கு ஏற்ப இழிவாடப்படுகின்றான். அவர்கள் தமக்கு நடந்ததை வாய் திறந்து கதைக்க கூட இன்று இந்த நாட்டில் சுதந்திரம் கிடையாது. இப்படி அந்த மக்களின் கவலைகள் முற்றிலும் வேறு.

 

அவர்கள் தம் உற்றார் உறவினரை சந்திக்க முடியாமல் அழுகின்றனர். அவர்கள் தாம் விட்டு வந்த, பிரிந்து வந்த குடும்ப உறுப்பினர்கள் நிலை தெரியாது அல்லலுற்று தவிக்கின்றனர். ஒன்றாக புலியில் இருந்து தப்பி வந்தவர்களை பேரினவாத சிறையில் பிரித்து, ஒருவருக்கு மற்றவர் கதி தெரியாது தவிக்கும் மனங்கள். இறப்புகள், காயங்கள், எங்கு ஏது என்று தெரியாது போனவர்கள் கதியை எண்ணி புலம்பும் மனித இதயம். இதைவிட போலியான பொய்யான பிரச்சாரங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட, உளவியல் அச்சங்கள், பீதிகள், பிரமைகள். கொடுமையும் கொடூரத்தையும் கண்டும், அனுபவித்தும் வந்த சமூகத்தின் உளவியல் பாதிப்புகள். இவையெல்லாம் எல்லையற்றது. இதற்கு மேல் திறந்த வெளிச்சிறை. இதற்குள் வசதியற்ற வாழ்க்கைகள். கண்காணிப்புகள்.

 

 அச்சத்துடன் கூடிய இருண்ட வாழ்வு. எதிர்காலம் எதுவென்று தெரியாத பிரமை. மண்ணை, நிலத்தை, பொருளாதாரத்தை என எல்லாம் இழந்து தவிக்கும் வெறுமை. கையையும், காலையும் இழந்து தவிக்கும் கொடுமை. இவை எல்லாம் ஏன், எதற்கு என்று தெரியாது போன பிரமை பிடித்த வாழ்க்கை.  

 

இதைவிட மிக முக்கியமாக, அந்த மக்கள் தமக்கு நடந்ததை வாய் திறந்து சொல்ல அனுமதிக்காமை. தமது இந்த நிலைக்கு காரணமான குற்றவாளிகளை, சொல்லி புலம்பக் கூட அனுமதிக்காமை. உலகமும், தமிழினமும், மக்களின் எதிரிகளை இனம் காண, அந்த மக்களை சுதந்திரமாக பேச அனுமதிக்க வேண்டும். தம் உற்றார் உறவினரிடம் இந்த கொடுமைகளை சொல்லி புலம்ப அனுமதிக்க வேண்டும்.

 

காட்டுமிராண்டித்தனமான யுத்த அரக்கர்களையும், இதற்குள் தம்மை பலியாக்கிய காட்டுமிராண்டிகளையும் வெளிப்படையாக சொல்லித் திட்டவும், புலம்பவும் முடியாத வண்ணம், அந்த மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இப்படி தம் அவலத்துக் காரணமானவர்களை இனம் காட்டவுள்ள உரிமையை, இன்று இந்த திறந்தவெளி சிறைக்கூடங்கள் மூலம் சிறைவைத்து இருப்பது மன்னிக்க முடியாத மற்றொரு போர்க்குற்றம். இப்படி குற்றங்களை பரஸ்பரம் மூடிமறைக்கின்றனர்.

 

மக்கள் தமக்குள் புதைந்து வைத்துள்ள ஆயிரம் ஆயிரம் ஆறாத வடுக்கள், மறக்க முடியாத நெடுந் துயரங்கள், அதையொட்டிய  குற்றவாளிகள் பற்றிய கதைகளை, தம் சொந்தபந்தங்களுக்கு சொல்லக் கூட இந்த நாட்டில் சுதந்திரம் கிடையாது. தப்ப முன் அதே நிலை, தப்பிய பின்னும் அதே கதை. அங்கு வாய் திறக்க முடியவில்லை, இங்கு அதே பரிதாப நிலை. எங்கும் பாசிசத்தின் கோரப்பிடி. அதுவோ மனிதத்தை ஏறி மிதிக்கின்றது.

 

பி.இரயாகரன்
21.01.2009