உங்கள் அழிவை நோக்கி, உங்கள் வழியில் நீங்கள் நகர்கின்றீர்கள். உங்கள் வழிகள், இதை தடுத்து நிறுத்தாது. தற்கொலைக்குள் நீங்கள் மட்டுமல்ல, மக்களையும் சேர்த்து அழைத்துச் செல்லுகின்றீர்கள். தயவு செய்து இதை நிறுத்துங்கள். 

உங்கள் இருப்பு நீடிக்க வேண்டுமென்றால், உங்கள் போராட்டத்தை தமிழ்மக்கள் போராட்டமாக மாற்றுங்கள். போராட்டத்தை உங்கள் நலனில் இருந்தல்ல, தமிழ் மக்கள் நலனில் இருந்து திரும்பிப் பாருங்கள்.

 

இதன் மூலம் நீங்கள் இழைத்த தவறுளை திருத்துங்கள். நீங்கள் எந்த மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றீர்களோ, அவர்களைப் பாதுகாக்க முனையுங்கள். அவர்களை சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மக்களின் உரிமைகளை, உங்கள் பெயரில் தோற்கடிக்க அனுமதிக்காதீர்கள். இந்தத் தவறை புரிந்து, அதைத் திருத்துங்கள். 

 

இன்று மரணிக்கும் மக்கள் எங்களுடையதும், உங்களுடையதும் இரத்த உறவுகள். சொந்தங்கள் பந்தங்கள். இவர்களைப் பலியிட்டா, நீங்கள் உங்கள் பாதுகாப்பை பெற வேண்டும். சொல்லுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பாதுகாப்பை பெற்றுவிடுவீர்களா!? உலகம் உங்களுக்காக இறங்கி வந்துவிடுமா? இல்லை. நிச்சயமாகவில்லை. தயவு செய்து இந்த வழியை கைவிடுங்கள்.

 

இலக்கற்ற போராட்டத்தை நடத்தாது, இலக்குடன் கூடிய போராட்டத்தை நடத்துங்கள். கிடாயை வளர்த்து, வேள்வியில் பலியிடுவதைப் போல் மக்களை பலியிட்டு போராடுவதை நிறுத்துங்கள். அவர்களை உங்கள் குழந்தைகளாக, தாய், தந்தையராக மதித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள். தயவு செய்து அதைச் செய்யுங்கள்.

 

மக்களை கொல்ல உதவும் அலுக்கோசு வேலையை பார்க்காதீர்கள். இதன் மூலம் விடுதலையை அடையமுடியாது.  உங்கள் கழுத்தை சிங்கள பேரினவாதம் நெரிக்கின்றது என்பது உண்மை. இதில் இருந்து மீள முடியும். ஆனால் அது மக்களைப் பணயம் வைத்தல்ல, அவர்களின் பிணத்தை காட்டியல்ல.

 

மாறாக மரபார்ந்த உங்கள் வரட்டு இராணுவக் கண்ணோட்டத்தை கைவிட்டு, முற்றுகையை உடைத்து அதில் இருந்து புதிய பிரதேசத்துக்கு வெளியேறுங்கள். இது கூட உங்கள் சுயவிமர்சனத்துக் உட்பட்டதுதான். ஒன்றுக்கு மேற்பட்ட உடைப்பின் ஊடாக, உங்கள் படையை பல கூறாக்கி எதிரியின் பின்புலத்தை பாதுகாப்பற்றதாக மாற்றுவதன் மூலம், முற்றுகையின் முதல் படியை தகர்க்கமுடியும். மக்களைப் பணயமாக வைத்து பலியிடுவதன் மூலம், முற்றுகையை தளர்த்திவிட முடியாது. இது வெற்றியளிக்காது. இதைவிட்டு வெளியில் வாருங்கள், முற்றுகையை தகர்த்து வெளியேறுங்கள். 

 

இதன் மூலம் எதிரியின சுற்றிவளைப்பையும், அதன் நோக்கத்தையும் உடனடியாக தகர்க்க முடியும். ஆனால் நீங்கள் நீடித்து நிற்கவும், போராடவும் வேண்டுமென்றால், கடந்தகால நிகழ்கால உங்கள் நடத்தைகளை சுயவிமர்சனம் செய்யவேண்டும். மக்களுக்காக போராடுவதுடன் அனைத்தையும் மக்கள் நலனில் இருந்து, பார்க்க முனையவேண்டும். மக்கள் மக்களுக்காக போராடுவதன் மூலம், தவறான கடந்த கால வரலாற்றை மாற்றமுடியும்.

 

இன்று மக்கள் பலியாவதை தடுத்து அவர்களை பாதுகாக்க விரும்பினால் அது புலிகளால் முடியும். அதுபோல் தம் கடந்தகால நிகழ்கால தவறுகளை சுயவிமர்சனம் செய்தால்,  ஒரு போராட்டத்தை பாதுகாக்க முடியும். அதை செய்யக் கோருகின்றோம்.    

 

பி.இரயாகரன்
21.02.2009