05192022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

நாட்டுடமை ஆக்க தகுதியில்லாத பெரியாரியம்!

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கி இருக்கிறது. நாட்டுடமை ஆக்கும் அளவுக்கு சுந்தர ராமசாமி என்ன செய்துவிட்டார் என்ற வாதத்தை ஒருபக்கமாக வைத்துவிட்டு, ´சோழியன் குமுடி சும்மா ஆடாதே´ என்ன நடந்திருக்கும் என்று புலன் விசாரனையை ஆரம்பித்தால் வழக்கம் போல் அரசியல் தலையீடும், ஆப்பும் வைக்கவே எடுக்கப்பட்ட முயற்சியாக தெரிகிறது. 
காலச்சுவடுக்கு வைத்த ஆப்பாகவும், சுந்தர ராமசாமி குடும்பத்தினரிடம் எந்த அனுமதியும் பெறாமல் செய்யப்பட்ட சதியாகவும் நாட்டுடமையின் தரம் இருக்கிறது. குறைந்தபட்சம் எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் கூட தகவல் சொல்லாமல் அறிவித்திருக்கும் தமிழக அரசின் யோக்கியதை எப்படி இருக்கிறது பாருங்கள்?

எழுத்தாளரின் வாரிசும் காலச்சுவடு உரிமையாளருமான கண்ணன், "காலச்சுவடு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது" என்று அறிக்கை விட, பத்திரிக்கைகளில் ´நாட்டுடமை´ குறித்து விவாதங்களும், சர்ச்சைகளும் எழ, தமிழக அரசு சுந்தர ராமசாமியின் எழுத்துக்கள் நாட்டுடமையாக்க சிபாரிசுதான் செய்யப்பட்டது. இன்னும் முடிவு செய்யவில்லையென ஒதுங்கிக் கொண்டது. 

என்னாயிற்று கலைஞர் ஆட்சிக்கு? உருப்படியாக தமிழ் சமூகத்திற்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் தீவிர கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறதா என்ன? 

"பெரியார் எழுத்துக்களை நாட்டுடமையாக்குங்கள்" என்று எத்தனை கோரிக்கைகள் இதுவரையில் வைக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச பதில் கூட அளிக்கவில்லை தமிழக அரசு. இன்னொரு பக்கம் ´மானமுள்ள´வரின் காமெடி எல்லை மீறிபோய்க் கொண்டிருக்கிறது. 

1925- இல் இருந்து 1938- வரையில் ´குடிஅரசு´ தொகுதிகளில் இருந்த பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் பெ.தி.க வெளியிட ஆரம்பிக்க, ´மானமிக்கவரு´க்கு கோபம் வந்து வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றதும், பெ.தி.க. நூல்களை நாங்கள் முன்னேயே வெளியிட்டு விட்டோம் என்று ´பெப்பே´ காட்டியதும், "விடுவேனா மக்கா, லட்சங்கள் நஷ்ட ஈடாக கொடு!" என்று லட்சியத்திற்கு விலை வைத்ததும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. 

சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பலவகையான புத்தகங்கள். பலநாட்டு அறிஞர்களின் புத்தகங்கள்கூட கிடைக்கிறது. ஆனால், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் புத்தகங்கள் ஒன்று கூட அங்கு இல்லை. இதைக் குறித்து சில இலக்கியவாதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த போது கூட ´மானமுள்ளவர்´ சொல்கிறார் :

"எங்களுக்கு இருக்கின்ற ஓர் அச்சம், தயக்கம் எல்லாம் யார் வேண்டுமானாலும் பெரியார் புத்தகத்தை வெளியிடலாம் என்று சொல்லி அவருடைய சொற்களைப் புரட்டி மாற்றிப் போட்டு விட்டால் இப்பொழுது ராமாயணத்திலே ஒரு பதிப்பிலே வந்ததுகூட, அடுத்த பதிப்பிலே இல்லை- எடுத்து விடுகிறார்களே! அதுபோன்ற நிலை பெரியாருக்கு, பெரியாரின் எழுத்து, பேச்சு நூல்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலைதான். எங்களுக்கு இப்பொழுதுகூட பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கி, பணம் பெறவேண்டும் என்ற எண்ணம் எல்லாம்கூட ஒன்றும் கிடையாது."

என்னும் ´மானமுள்ளவர்´ பெரியார் எழுத்துக்களை தாராளமாக நாட்டுடமையாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், இரண்டு நிபந்தனைகள் என்கிறார். அந்த நிபந்தனைகளையும் கொஞ்சம் பாருங்கள். 

ஒன்று, பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கிய பிறகு அதிலே இருக்கிற ஒரு சிறு சொல், புள்ளி, கமாவைக்கூட மாற்றக்கூடாது- மாற்றினால் அங்கே பெரியார் இருக்க மாட்டார். திரிபுவாதம் நுழைந்துவிடும்.
 
இரண்டாவது, நாட்டுடைமையாக்கப்படுகின்ற பொழுது பெரியார் கொள்கையை ஏற்ற ஒரு அரசாங்கம் இருக்கும் பொழுது எல்லோரும் பெரியார் நூல்களை வெளியிடுவார்கள்.

இரண்டு காரணங்களும் எப்பேர்பட்ட சிந்தனை? பெரியார் மறைந்து 36- ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரியாருடைய எழுத்துக்கள் அச்சடப்படாதவை ஏராளமானவை இருக்கின்றன. இந்நிலையில் ´மானமுள்ளவர்´ புள்ளி, கமாவை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். புள்ளி, கமாவில் திரிபுவாதம் வந்து விடும் என்று சொல்பவருக்கு.... 

இதே நிபந்தனைகளை வைத்து தமிழக அரசிடம் பெரியாருடைய எழுத்துக்களை நாட்டுடமையாக்கச் சொல்லலாமே! எதற்கு போலித்தனமான வார்த்தைகள்? பெரியாரின் சிந்தனையை மறைத்து வைத்துக் கொண்டு அல்லது எதையும் அச்சுக்குள் அனுப்பாமல் தன்னுடைய ´வாழ்வியல் சிந்தனை´களை பரப்பிக் கொண்டிருக்கும் ´மானமுள்ளவரு´க்கு காமக்களையோ, புள்ளிகளையோ பாதுகாக்கும் யோக்கியதை எப்படி இருந்து விடக்கூடும்? அப்படி பாதுகாக்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்? 

இந்த கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க ´நாங்களெல்லாம் மானமற்று, சுரணையற்று போய்விட்டோமே´ என்று குமுறுவதா? "இதே நிலை நீடிக்குமானால்..." என பொங்கி எழுந்து எச்சரிக்கை விடுவதா? 

பெரியாரின் வாரிசுக்கள் என்று சொல்லிக் கொள்ளும் கலைஞரின் தராதரம் இன்று எந்த அளவில் தரம் தாழ்ந்து போய்கிடக்கிறது என்பதையும், இடக்கு மடக்கான போலித்தனங்களையும், தன்னுடைய தனிப்பட்ட விரோத உணர்வுகளையும் இலக்கியத்தில் கூட திணிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுமல்லாமல், பெரியாரிய எழுத்துக்களை ´மானமுள்ள´ சிலரின் சொந்த நலன்களுக்கு பங்கம் ஏற்படாதிருக்க பெரியாரியத்தின் தரத்தை தாழ்த்தவும், இழிவுபடுத்த முயலும் முயற்சியாகவே நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. 

எழுத்தாளர் சுந்தரராமசாமியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் முயற்சியால் ஈ.வெ.ரா. ராமசாமியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் தகுதியில் இல்லை என்பதை காட்டுவதாக எடுத்துக் கொள்வதா? இல்லை தகுதிகள் பெரியாரியத்திற்கு இருக்கிறது. நாட்டுடமையாக்கிவிட்டால் சிலரின் வயிற்றுப்பாட்டுக்கு திண்ணடாட்டமாகிவிடும் என்பதால் நாட்டுடமையாக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்னும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இருக்கிறதா?தமிழச்சி
20/02/2009 

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்