04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

புலிப்பினாமியாகி வரலாற்றை திரிக்கும் கனடா தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்)

10 வருடத்துக்கு முன் மக்களின் விடுதலையை முன்னிறுத்திய கனடா தேடகம், இன்று புலிக்கு பின்னால் ஓடுகின்றது. அன்று புலிகள் பல்வேறு நெருக்கடிக்களை சந்தித்து வந்த தேடகம், இன்று அவர்களின் லேபல் அமைப்பாக மாறி அறிக்கை வெளியிடுகின்றது.

இப்படி மக்களுக்காக முன்பு குரல் கொடுத்த பலர் ஒன்றில் புலியாக அல்லது அரசு சார்பாக மாறி நிற்கின்றனர். இதைத்தான் முன்பு புலி கோரியது. துரோகி அல்லது தியாகி என்றது. இதையே நவீன பாசிட் கோத்தபாயவும் அண்மையில் கூறினான்;. ஒன்றில் நீங்கள் புலி அல்லது அரசு சார்பானவர்கள், இதற்கு வெளியில் எதுவுமில்லை என்றான். இதையே இன்று பலர் தம் சொந்த நடவடிக்கை மூலம் நிறுவி வருகின்றனர்.

 

ஆழ்ந்த உறக்கத்தில் போன தேடகம், திடீரென நித்திரையால் எழும்பி ஐயோ தமிழ் மக்களை கொல்லுகின்றனர் என்று புலம்புகின்றனர். தம் தேடக லேபலை பயன்படுத்தி, புலிப் பினாமியாகி அறிக்கை வெளியிடுகின்றனர். இதுவரை தமிழ் மக்கள் அழியவில்லiயா? இன்று மட்டும் தானா அழிகின்றனர். எம்மினத்தின் அழிவு வரலாற்றை திரிக்கின்றனர்.

 

இவர்கள் வெளியிட்ட அறிக்கை, இலங்கை இந்திய அரசின் இனவழிப்புக்; கொள்கையை கண்டித்திருந்தால் நாங்களும் உடன்படமுடியும். ஆனால் அது, இதன் மூலம், புலிக்கு வக்காலத்து வாங்குகின்றது. கடந்த வரலாற்றில் மக்களுக்காக போராடி மடிந்தவர்கள் எல்லார் மீதும் காறித் தூற்றி, அவர்களை கொன்ற புலிக்கு வக்காலத்து வாங்குகின்றது. 

 

இந்த கேடுகெட்ட அரசியலைப் பாருங்கள்; 'தமிழர் சுயநிர்ணயத்துக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது" என்கின்றனர். இப்படி புலிகள் சுயநிர்ணயத்துக்காக போராடுவதாகக் கூறி, புலியாகி புலிக் கதை சொல்லுகின்றனர். புலிகளால் கொல்லப்பட்டவர்கள் சுயநிர்ணயத்தை கோரியதும், அவர்கள் கொல்லப்பட்டதும் எம் வரலாறு. புலிகள் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தை மறுத்து, பாசிசமாகிய கதையையே இந்த அறிக்கை மறுதலிக்கின்றது.

 

இந்திய வல்லாதிக்க அரசும் இலங்கைப் பேரினவாதமும் எம் மக்களின் எதிரி என்பதும், சுயநிர்ணயம் என்பது எம் மக்களின் உரிமை என்பதும், இவர்கள் முன் தம் புலி அறிக்கையை சரிசெய்ய உதவும் வெறும் சொற்களிலான கொள்கையாகின்றது. சுயநிர்ணயத்தை புலிக்கு பொருத்தி, அதை திரித்து புரட்டுகின்றனர். கடந்த பல பத்து வருடமாக மக்கள் சொல்லவொண்ணாத் துயரத்தை அனுபவித்த போது, எந்தக் கருத்தையும் முன்வைக்காதவர்கள், திடீரென நித்திரையில் புரளும் போது இப்படித்தான் அரற்றமுடியும். 

 

புலிகள் போராட்டம் 'சுயநிர்ணயத்துக்கானது" என்பது லேபல் தேடகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு. இந்த இலட்சணத்தில் 'ஈழத் தமிழர் ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடும் இந்திய தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் நாமும் கரம் கோர்க்கின்றோம்" சுத்த மாங்காய் மடையனாய் கதை சொல்லுகின்;றனர். நடக்கும் போராட்டம் 'ஈழத் தமிழர் ஆதரவாக" அல்ல, அவர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசின் செயலுக்கு, புலிகள் உதவுவதை ஆதரித்து நடக்கின்றது. தமிழ் மக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை இந்திய அரசின் இனவழிப்புச் செயலை எதிர்ப்பது என்பது, தமிழ் மக்களை பாதுகாக்கத்தான் என்றால், மறுபக்கத்தில் தமிழ் மக்களை பாதுகாக்க புலிகள் என்ன செய்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்;. இலங்கை இந்திய அரசுக்கு எதிராக கோசம் போடுவது மட்டும்தானா? அவர்களை கொன்று அரசியல் செய்யும் புலிகள், ஈழத் தமிழருக்கு எதிராக இருப்பது தெரியவில்லை.

 

புலி லேபல் தேடகத்தின் அடுத்த திரிபை பாருங்கள். 'தேசிய விடுதலைப் போராட்ட தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஆயுதமுறையில் வெற்றிபெற்று பெரும்பான்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகினார்கள். இந்திய அரசு தனக்கு சாதகமான அரசியல் குழுக்கள் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் இல்லையென்ற காரணத்தால் சகோதர படுகொலைகளை ஊக்குவித்தது. இயலாமல் போன போது இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாகக்கூறி தனது படைகளை அனுப்பி புலிகளுடன் யுத்தம் என்ற போர்வையில் தமிழ் மக்களை கொன்றழித்தது."

 

லேபல் தேடகம் புலியானவுடன், ஓரே முரண்பாடு. 'சகோதர படுகொலைகளை ஊக்குவித்தது" இந்தியா, 'போராட்ட தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டி"யில் புலிகள் ஈடுபட்டது. இந்த திரிபு, புலியை பாதுகாத்து இந்தியாவை மட்டும் இதன் குற்றவாளியாக்க முனைகின்றது. இந்த சகோதரப் படுகொலையை இந்தியா நடத்தியதாக, வெறுமனே காட்ட முனைகின்றது. முதலில் தலைமை போட்டியில் புலிகள் வென்றதாக கூறும் இந்த அறிக்கை, அதை சகோதரப் படுகொலையாக இந்தியாவே தன் சார்புக் குழுவினூடாக செய்வித்தாக கூறுகின்றது. பச்சையான மோசடி. புலிகள் இந்தியா வின் கூலிக்குழுவாக பயிற்சி பெற்றதும், அமெரிக்காவின் ஆசிபெற்று பாசிசமாகியது வரலாறு. இதுவே முரண்பாட்டின் அரசியல் அடிப்படை. இதன்மேல் தான் தனிமனித சர்வாதிகார, மக்கள் விரோதங்கள் அரங்கேறின. புலிகள் உள்ளிட்ட அனைத்தும் கூலிக் குழுக்கள். தேடகம் கதை சொல்வது போல் புலியல்லாதவை மட்டுமல்ல.


 
புலி சொல்வது போல் கூறும் லேபல் தேடகத்தின் நிலைப்பாட்டை பாருங்கள். 'இயக்கம் தடை செய்யப்படுவதற்கும், சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த நாடுகள் பின்வாங்குவதற்கும் இந்தியாவே பின்னணியிலிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான ஆதரவுடன் பணம், தள, ஆயுத உதவிகளை வழங்கிய இந்திய அரசு இன்று எமது போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது." புலிகளை தடை செய்ய இந்தியா நின்றது என்பது, இரண்டு விடையத்தை மறுக்கின்றது.

 

1. ஏகாதிபத்தியம் புலியை ஆதரிப்பதாகவும், இந்தியா தான் இதை தடை செய்வதாகவும் கூறுகின்றது. ஏகாதிபத்திய தன்மையை, அதன் சதியை இந்தியாவாக்கி மறுக்கின்றது.

 

2. புலிகள் இதற்கு காரணமல்ல என்று கூறுகின்றது. புலிகளின் நடவடிக்கை இதற்கு ஊக்கமாக இருந்ததை அதன் பாசிசத்தையும் இது மறுக்கின்றது.

 

இந்தியா புலியை இன்று அழிப்பதற்கு மட்டுமல்ல, அன்று உதவியின் பெயரால் வளர்த்து அழிப்பதற்கும் தான் உதவியது. இன்றைய 'ஈழத் தமிழர் ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடும் இந்திய தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் நாமும் கரம் கோர்க்கின்றோம்" என்ற போராட்டங்கள், இந்தியாவையும் ஏகாதிபத்தியத்தையும்  தமக்கு உதவக் கோருகின்றது. அதை நிராகரித்தல்ல. இந்தியா இலங்கை அரசின் ஊடாக மட்டும் அழிக்கவில்லை, புலியை ஆதரித்து வளர்த்த தன் சொந்த அரசியல் ஊடாகவும் அழிக்கின்றது. இந்தியா அரச வடிவிலும், புலி வடிவிலும் இருந்துதான் தமிழ் மக்களை அழிக்கின்றது. லேபல் தேடகம் புலியாக மாறி, தமிழ் மக்களுக்கு எதிராக புலிக்கு ஆதரவாகி அறிக்கை விடுகின்றது. தமிழ்மக்கள் தமக்காக போராட எதையும் அது வழிகாட்டவுமில்லை, எதையும் சொல்லவுமில்லை.  

 

பி.இரயாகரன்
20.02.2009


பி.இரயாகரன் - சமர்