சு.சுவாமி எனும் பார்ப்பன வெறியனுக்காக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மண்டை உடைப்பு ! போலீஸ் வெறியாட்டம் !!

சுப்பிரமணிய சுவாமி எனும் பார்ப்பன பாசிஸ்ட்டை பலரும் ஒரு ஜோக்கரான கோமாளி என்றே மதிப்பிடுகின்றனர். ஆனால் நேற்று உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 மணிநேரம் போலீஸ் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்த பிறகாவது சு.சுவாமியின்

 பலமும் அவருக்காக இந்த அரசும், போலீசும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறி கொண்ட முறையில் சாமியாடும் என்ற உண்மையை நாம் அங்கீகரித்தாக வேண்டும்.

chennai-police-lawer

 

சிதம்பரம் கோவில் எனும் மக்கள் சொத்தை திமிருடன் சுரண்டியும் விற்றும் வாழும் தீட்சிதர்கள் எனும் பார்ப்பன கிரிமினல்களுக்காக வாதாட வந்த சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டை என்பது வழக்கறிஞர்களின் தன்னிச்சையான திட்டமிடப்படாத எழுச்சி. கடந்த இரு வாரங்களாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈழப்பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் சாலை மறியல், இராணுவ அலுவலகம் முற்றுகை, ரயில் மறியல் என தினமொன்றாய் நடத்தி வந்தார்கள். அன்றாடம் போராட்டமும், கைதுமாய் இந்த நிகழ்வு நடந்து வந்தது.

ஈழத்தில் தமிழ் மக்கள் வன்னியிலும், முல்லைத் தீவிலும் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் செய்திகளைக் கேட்டு கடந்த இருமாதங்களாக தமிழகமே கொதித்து எழும் போது வழக்கறிஞர்களும் அந்த எழுச்சியில் கலந்து கொள்வது என்பது நியாயமானது, அவர்களது ஜனநாயக உரிமையும் கூட. இந்த சூழ்நிலையில் ஈழத்தில் கொல்லப்படும் மக்களெல்லாம் புலிகள்தான், தீவிரவாதிகள்தான் என்று பாசிச ஓநாயைப் போல ஊளையிட்டுக் கொண்டிருந்த சு.சுவாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது என்று தெரிந்தும் அதை கேலிசெய்யும் விதமாக தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார்.

எல்லாரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யும் போது இந்த கொழுப்பெடுத்த பார்ப்பான் மட்டும் திமிராக வருகிறானே அதுவும் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்திவிட்டு அதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களையெல்லாம் தீவிரவாதிகள், ரவுடிகள் என்று சித்திரிக்கின்றானே என்று நியாயமான கோபத்தின் வெளிப்பாடுதான் சு.சுவாமிக்கு கிடைத்த முட்டையடி.

ஆனால் இந்த தற்செயலான நியாயமான நிகழ்ச்சியை வைத்து எல்லா ஊடகங்களும் சு.சுவாமயின் பின்னால் அணிவகுத்து வழக்குரைஞர்களை காறித்துப்பின். இதில் தினமணி போன்ற தமிழ் வகையறாக்களும், இந்து போன்ற ஆங்கில மேதாவிகளும் வழக்கறிஞர்களை ரவுடிகளென்றும், அவர்களது செயல் பொறுக்கித்தனம் என்றும் வசைபாடின. அந்த வசை தந்த வலியில் ஏற்கனவே முதுகுவலியால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் தமிழனத் தலைவர் கருணாநிதி மாபெரும் அதிர்ச்சி அடைந்ததாக நிதியமைச்சர் அன்பழகன் அறிக்கை விட்டார். முக்கியமாக யாரும் ஈழத்துக்காக தும்மினாலும், துவண்டாலும் தனது ஆட்சியை கவிழ்க்க சதி என்று அழுது புலம்பும் அந்தத் தாத்தா முட்டை வீச்சை வைத்து பார்ப்பன கும்பலும் அவாளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் என்ன ஆட்சி இது என துள்ளிக் குதித்த்தும் கடும் கோபம் கொண்டார்.

இந்த நாட்டின் அரசியல், மக்களின் வாழ்வு, என எல்லா நிகழ்ச்சி நிரல்களையும் தீர்மானிக்கும் சக்தி கொண்ட பார்ப்பனியக் கும்பலிடம் நல்லபேர் எடுப்பதற்கு உறுதி பூண்ட கருணாநிதி வழக்கறிஞர்களை கைது செய்வதற்கும் மண்டையை உடைப்பதற்கும் இன்னும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என போலீசுக்கு அனுமதி தந்தார். இதற்கு மேல் உத்தரவு போட்டது பார்ப்பன ஊடகங்கள்.

ஈழப்பிரச்சினையை கொச்சைப்படுத்தும் விதமாகவும் சம்பந்தம் இல்லாத வழக்கிற்கு ஆஜராகியும், போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை ரவுடிகளை என்றும் விடுதலைப் புலிகள் என்றும் தகுதியில்லாத பொறுக்கிக் கூட்டம் என்று ஆத்திரத்தை தூண்டும் விதமாக பேசிய சு.சுவாமி மீது நடவடிக்கையும், வழக்கும் எடுக்கப்படவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் சங்கம் எடுத்தமுடிவு. அதன் பிறகே முட்டை வீச்சுக்காக எல்லாரும் கைதாகலாம் என சங்கத்தில் பேசி முடிவு செய்தார்கள்.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்றமும், மாநில அரசும், போலீசும் சு.சுவாமியின் முட்டைக் கறையை துடைப்பதற்கான நடவடிக்களைத்தான் எடுத்து வந்தார்கள். முட்டை வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் இருபது பேரை கைது செய்வதற்கு எட்டு போலீசு படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வைட்டை நடந்து ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்றவர்களும் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அவர்கள் அத்தனைபேரும் உயர்நீதிமன்றத்தில்தான் இருந்தார்கள். அவர்கள் கோரிக்கை சு.சுவாமி மீதும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதுதான். அதை பேருக்கு செய்வதாக நாடகமாடிய போலீசு வழக்கறிஞர்களை கைது செய்வதற்கு துடித்தது. இப்படித்தான் இருதரப்பினருக்கும் மோதல் என்பது தற்செயலாக உருவானது. ஏற்கனவே நீதிமன்றத்தில் வந்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் அறவித்திருந்தனர். கருணாநிதி அரசும் அதையே செய்யப் போவதாக உறுதி அளித்திருநந்தது.

தள்ளுமுள்ளு ஏற்பட்ட அரைமணிநேரத்தில் உத்திரவு பெறவேண்டியவர்களிடம் அனுமதி பெற்ற போலீசு முக்கியமாக அதிரடிப்படையினர் வழக்கறிஞர்களை கண் மண் தெரியாமல் கொடுரமாகத் தாக்கத் துவங்கினர். நீதிமன்றப் பணியாளர்கள், பொதுமக்கள், நீதிமன்றத்தின் வெளிவளாகத்தில் இருந்த மக்கள் அனைவரும் நொறுக்கப்பட்டனர். கறிக்காக பாய்ந்து வரும் வெறிநாயைப் போல போலீசு குதறியது.

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த எல்லாக் கார்களும் போலீசால் நொறுக்கப்பட்டன. இரு சக்கர வண்டிகளும் உடைக்கப்பட்டன. வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், நீதிமன்ற கட்டிடங்களின் கண்ணாடிகள் அத்தனையும் பாக்கியில்லாமல் உடைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் போலீசு என்ன செய்யும் என நினைத்துக் கொண்டிருந்த சீனியர் வக்கீல்களும் அடிபட்டனர். இதுதாண்டா போலீசு என்பதை மக்கள் அறிந்திருக்கும் யதார்த்தத்தை பல வழக்கறிஞர்கள் பட்டுத் தெரிந்து கொண்டனர்.

இந்தக் கொடுமையை நிறுத்துமாறு நீதிபதிகளிடம் காரசாரமாக விவாதித்த வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று கையில் செங்கோலுடன் ( தாங்கள் வழக்கறிஞர்கள் அல்ல நீதபதிகள் என்று காட்டி எங்களை அடிக்க கூடாது என்பதற்காக ) வந்த மூன்று நீதிபதிகள் போலீசால் தாக்கப்பட்டனர். இந்தக் கொடுமையை கண்ட பிறகுதான் கையில் கிடைத்த கற்களை வைத்து சில வழக்கறிஞர்களும் போலீசைத் தாக்கத் துவங்கினர். ஆனாலும் போலீசின் வெறியாட்டத்தின் முன்னால் இந்த கல்லடி ஒன்றும் செய்ய முடியவில்லை.

நீதிமன்றத்தில் ஓடி ஒளிந்தவர்கள், அறைகளில் முடங்கியவர்கள் எல்லாரும் அடிபட்டார்கள். பல வழக்குகளுக்கு தண்டனை அளித்து தாங்கள்தான் நீதிபரிபாலனத்தின் கடவுள்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள் கூட அன்று போலீசு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் இத்தனை நடந்தாலும் ஊடகங்கள் எதுவும் போலீசைக் கண்டிக்கவில்லை. வழக்கறிஞர்களை பொறுக்கிகள் என எழுதிய தினமணி போலீசை பொறுக்கிகள் என இன்று எழுதவில்லை. வழக்கறிஞர்களில்  இடது தீவிர இயக்கத்தினரும், தமிழின வெறியர்களும், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வன்முறைக் கூட்டம்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என இந்து பத்திரிக்கை சு.சுவாமிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிறது.

நீதிபதிகளே தாக்கப்பட்டாலும் ஈழத்துக்கு குரல் கொடுத்த வழக்கறிஞர்கள் கொடுரமாக தண்டிக்கப் படவேண்டும் என்பதுதான் பார்ப்பன ஊடகங்களின் நிலை. கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அதையே வாந்தி எடுக்கின்றன. மொத்தத்தில் கருணாநிதி சரியான நடவடிக்கை எடுத்து விட்டார் என அவர்கள் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். இனி கருணாநிதி நிம்மதியாக முதுகுவலி சிகிச்சையை தொடரலாம்.

நேற்று மாலை வழக்கறிஞர்கள் போலிசால் அடிபட்டு மண்டையில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் சி.என்.என்.ஐ.பி.என் சேனலுக்கு பேட்டி கொடுத்த சு.சுவாமி இந்த வழக்கறிஞர்களின் மீதான நடவடிக்கை மிகவும் சரியானது என்றும் இந்த வழக்கறிஞர் கூட்டம் என்பது தரம்தாழ்ந்த மாமாப் பயல்களின் கூட்டமென்றும் நிதானம் கலந்த திமிருடன் பேசுகிறார்.

இப்போது சொல்லுங்கள் சு.சுவாமி எனும் அந்த பார்ப்பன பாசிஸ்ட்டை வெறும் கோமாளி என்று கூற முடியுமா?

மண்டை உடைப்பட்ட பல வழக்கறிஞர்கள் இன்று மருத்துவமனையில் இருக்க தமிழமெங்கும் வழக்கறிஞர்கள் இந்தக் கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். சு.சுவாமி மீதும், போலீசு மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனாலும் மத்திய, மாநில அரசுகளும், போலீசும், ஊடகங்களும், உச்சநீதிமன்றமும், சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டைக் கறையை துடைப்பதற்கு வழக்கறிஞர்களின் இரத்தம் தேவை என்கிறார்கள்.

ஈழத்து மக்களின் இரத்தம் சிங்கள இனவெறி அரசுக்குத் தேவைப்படுகிறது. ஈழத்து அவலத்துக்காக குரல் கொடுக்கும் சுயமரியாதை உள்ள தமிழ் மக்களின் இரத்தம் இந்திய அரசிற்கு தேவைப்படுகிறது. அதற்கு கருணாநிதி வெண்சாமரம் வீசுகிறார்.

இரத்தத்தை சுவை பார்த்திருக்கும் கழுகுகளும், ஒநாய்களும் வட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றிற்கு நாம் பலியாகப் போகிறோமா, இல்லை வேட்டையாடப் போகிறோமா?