"சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணிய சாமிக்கு முட்டையடி !வக்கீல்களிடமிருந்து தப்பி நீதிபதியிடம் மேசைக்கு அடியில் ஒளிந்தார் சு.சாமி !
ஹைகோர்ட்டில் சு.சாமிக்கு ஸ்பெஷல் பூஜை!
“சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தவறு” என்று தீட்சிதர்கள் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணியசாமி.
எதிர் மனுதாரராக அதே நீதிமன்றத்தின் அறைக்குள் நின்று கொண்டிருந்தார் ஆறுமுகசாமி.
அந்தப் பக்கம் சுப்பிரமணியசாமியும் தீட்சிதர்களும்.
இந்தப் பக்கம் ஆறுமுகசாமியும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும்.
வெளியே ஈழப்பிரச்சினைக்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம்.
கொந்தளித்துக் கொண்டிருந்த நீதிமன்ற வளாகத்துக்குள் கறுப்புப் பூனைகளும் நூற்றுக் கணக்கான போலீசாரும் புடைசூழ அசட்டுத் தைரியத்துடன் நுழைந்தார் சு.சாமி.
நீதிமன்ற அறைக்குள் போலீசு நுழையக்கூடாது என்பதால் பூனை, எலியெல்லாம் வெளியே நின்றன. உள்ளே சாமி நுழைந்த்துதான் தாமதம், சு.சாமியின் மூஞ்சியை நோக்கிப் பறந்தன முட்டைகள். எழுந்தன முழக்கங்கள்.
“வேசம் போடுறா ஜெயல்லிதா
கொம்பு சீவுறான் இந்து ராம்
ஊளையிடுறான் சு.சாமி
ஊதிவிடுறான் துக்ளக் சோ
கொழுப்பெடுத்த பார்ப்பனக் கும்பல்
கொக்கரிப்பது கேக்கலியா
பார்ப்பனக் கும்பலின் கொட்டமடக்க
கொதித்தெழுவாய் தமிழகமே !”
ஜனவரி 26 அன்று ம.க.இ.க சென்னை வீதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள், நீதிமன்றத்தின் அறைக்குள் எதிரொலித்தன. கொதித்தெழுந்த்து தமிழகம்.
மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் மூஞ்சியில் வழிய, கவிச்சி வாடையுடன், கனம் நீதிபதிகளின் மேசைக்கு கீழே ஓடி ஒளிந்தார் சு.சாமி.
பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.
“என்ன நடக்கிறது இங்கே? கீப் தி டெகோரம்” என்று சத்தம் போட்டார்கள் நீதிபதிகள் மிஸ்ராவும் சந்துருவும்.
பூனைகளை உள்ளே அனுப்புங்கள் யுவர் ஆனர், என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி.
பூனைகள் நுழைந்தன.
“என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?” என்று சு.சாமியைக் கேட்டார்கள் நீதிபதிகள்.
“சிதம்பரம் வழக்கில் என்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார் சு.சாமி.
“சிதம்பரம் வழக்கின் மனுதார்ருடைய (தீட்சிதர்களுடைய) வக்கீல் எங்கே?” என்று கேட்டார்கள் நீதிபதிகள்.
அவர் ஏற்கெனவே எஸ்கே…ப். தீட்சிதர்களோ ஒரு ஓரமாக பம்மிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கை 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்கள் நீதிபதிகள். நீதிமன்றத்தின் உள்ளே முறைகேடாக நடந்து கொண்ட வக்கீல்கள் மீது விசாரணை நடத்துமாறும் போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
“கான்ஸ்டிடியூசனல் பெயிலியர். 356 இல் ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் அலறிக் கொண்டிருந்தார் சு.சாமி.
கடவுளே பெயிலியர் ஆகும்போது கான்ஸ்டிடியூசன் அப்பப்போ கொஞ்சம் பெயிலியர் ஆவதில் ஒண்ணும் தப்பில்லையே!
tail piece:
அது என்னான்னு கேட்டா…
சென்ற வெள்ளிக்கிழமையன்று சு.சாமி, சந்திரலேகா, விசுவ இந்து பரிசத் தலைவர் வேதாந்தம் ஆகியோர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு போனார்களாம்.
வழக்கில் சுப்பிரமணியசாமி ஜெயமடைவதற்காக
தில்லை நடராசப் பெருமானுக்கு
ஒரு மணி நேரம் ஸ்பெசல் பூஜை நடத்தி
பிரசாதமும் கொடுத்தார்களாம் தீட்சிதர்கள்.
ஈஸ்வரனே கைவிட்டுட்டானே…
சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பூஜை போடலாம்.
ஹை கோர்ட்டில் தமிழ்மக்கள் பூஜை போடக்கூடாதா?
இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.
இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி!