நெதர்லாந்தில், ஒரு காட்டுப்பகுதியில், கைவிடப்பட்ட "நேட்டோ" இராணுவமுகாம் ஒன்று, இப்போது அகதிமுகாமாக இயங்கிக் கொண்டிருந்தது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, உலகம் மாறிக் கொண்டிருந்த காலம் அது. அந்த அகதி

 முகாமில் வசித்த அகதிகளில், என்பது வீதமானவர்கள் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சோமாலியா, பொஸ்னியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளை பேசும் மக்கள், ஆனால் எல்லோரையும் இஸ்லாம் என்ற மதம் இணைத்திருந்தது.



அல் கைதா பற்றியோ, அல்லது இஸ்லாமிய அரசியல் பற்றியோ, அன்று வெளியுலகில் அதிகமானோர் அறிந்திருக்கவில்லை. அதனால் அந்த அகதிகளில் பலர், சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றி கொடுத்த விளக்கங்கள் பல எனக்கு புதுமையாக இருந்தன. அவர்களில் எல்லோரும் இஸ்லாமியவாதிகள் அல்ல. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களில் (முன்னாள்) மார்க்சிஸ்டுகள் இருந்தனர். பொஸ்னியாவில் இருந்து வந்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி நான்கு வசனங்களுக்கு மேல் எதுவும் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. அதேநேரம் ஈரானில் இருந்து வந்த பலர், மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டவர்களாக, மதச்சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைந்தனர். எது எப்படி இருப்பினும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, நெதர்லாந்து அரசாங்கம் அகதி அந்தஸ்து வழங்கியது. இவ்வாறு ஒரு சில வருடங்களில் மட்டும் இலட்சக்கணக்கான பன்னாட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

11 செப்டம்பர் 2001 க்கு பிறகு உலகம் தலைகீழாக மாறியது. எந்தப் புற்றுக்குள் எந்த தீவிரவாதி இருக்கிறான் என்று, ஊடகங்களும் அரசாங்கங்களும் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தன. என்ன ஆச்சரியம்? ஒரு காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தவர்க்கெல்லாம், தங்க அனுமதித்த அதே அரசு, இப்போது சந்தேகக்கண் கொண்டு பார்த்தது. அல் கைதா, தாலிபான் உறுப்பினர்கள் என்று சிலரை, ஊடகங்கள் புலனாய்வு செய்து வெளியிட்டன. அதே நேரம், ஒரு சிலர் முன்னாள் அரச, இராணுவ அதிகாரிகள் என்றும், கைதிகளை சித்திரவதை செய்தவர்கள் என்றும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், சில மனித உரிமை அமைப்புகள் குட்டையைக் கிளறி விட்டன. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும், நெதர்லாந்து அரசாங்கம் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டது.

"அடடா, இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பாவி வெள்ளையனை ஏமாற்றி விட்டார்களா?" என்று உடனே ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். மேற்குலக நாடுகளின் "அகதிகள் அரசியலைப்" புரிந்து கொண்டவர்களுக்கு, வெள்ளையன் குடுமி சும்மா ஆடாது என்ற விடயம் தெரியும். மேற்கு ஐரோப்பாவில், அமெரிக்க அரசுடன் நெருங்கிய உறவைப் பேணி வரும் நெதர்லாந்து அரசாங்கம் அப்போதிருந்தே அகதிகளை ஏற்றுக்கொள்ளும் காருண்யவானாக காட்டி வந்துள்ளது. பொஸ்னியா சென்று பேரூந்து வண்டிகளில் முஸ்லீம் அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். இந்த சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அகதிகளுக்கு இரங்கிய அதே அரசின் சமாதானப் படையை சேர்ந்த அதிகாரி, செர்பிய படைகள் முஸ்லீம்களை கொன்று போட அனுமதித்த விடயம் வெளியே தெரிய வர சில காலம் எடுத்தது.

இன்னொரு விதமாக சொன்னால், அகதிகள் உருவாக காரணமானவர்களே, அவர்களை ஏற்றுக் கொண்டனர், பொஸ்னிய யுத்தம் முடிந்த பிறகு அனுப்பியும் வைத்தனர். இதே கதை தான் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடந்தது. இந்த நாடுகளைச் சேர்ந்த கைதிகளிடம் இருந்து, உள்நாட்டு இராணுவ/அரசியல்/பொருளாதார இரகசியங்களை, விலை மதிக்க முடியாத தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அவற்றில் எல்லாமே சரியானவை அல்ல என்பது வேறு விடயம். உதாரணத்திற்கு, சதாம் அணுகுண்டு வைத்திருந்த கதை, தமது தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வைக்க, சில ஈராக்கிய அகதிகள் கூறிய பொய் என்பது பின்னர் தெரிய வந்தது. அதே போல, இஸ்லாமிய எதிர்ப்பு போராளியாக காட்டிக் கொண்ட சோமாலிய "வீரப் பெண்மணி" ஹிர்சி அலி, புகழ் தேடி இட்டுக் கட்டிய கதைகளை, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று புட்டுப் புட்டு வைத்தது.

வருகிற அகதிகள் எல்லாம், தான் குறிப்பிட்ட ஒரு அரசாங்கத்தில், அல்லது இயக்கத்தில் பெரிய பதவியில் இருந்ததாக கதை விடுவார்கள் என்பது, அவர்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு தெரியாத சங்கதியல்ல. உண்மையிலேயே அப்படியான நிலையில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த அகதியை விசாரிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரி அந்த நாட்டைப் பற்றி தன் நாட்டு வெளிவிவகார அமைச்சு தொகுத்த அறிக்கையை வாசித்திருப்பார். (சில நேரம் விசாரணை நடக்கும் இடத்திலும் இந்த அறிக்கையை வைத்திருப்பார்). அதனால் விசாரிக்கப்படும் அகதி, வழக்கமாக தெரிந்த நபர்களை அல்லது இடங்களைப் பற்றி அதிகமாக தெரிவிக்கும் போது, அந்த அகதியிடம் இன்னும் கறக்கலாம் என நினைத்துக் கொள்வர். கவனிக்கவும், முதலில் விசாரிப்பவர் எப்போதும் குடிவரவு அமைச்சில் வேலை செய்யும் சாதாரண அதிகாரி தான். ஆனால், குறிப்பிட்ட அகதியிடம் இருந்து இன்னும் நிறைய தகவலைப் பெறுவதற்காக, இன்னொரு விரிவான விசாரணைக்கு அழைக்கப்படுவார். அந்த விசாரணையை செய்வது அனேகமாக புலனாய்வுத்துறையை சேர்ந்த அதிகாரியாக இருப்பார். அகதிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் தகவல்களை பிறகு என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் இதுவரை தெரியாது. தஞ்சம் கோரிய அகதியின் சொந்த நாட்டு அரசிற்கு அறிவிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்த போதிலும்.... தகவல்கள் பரிமாறப்படுவதாக சில அகதிகளுக்கு உதவும் நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

மேற்குலக நாட்டு அரச புலனாய்வுப்பிரிவு, சில அகதிகளை தமக்கு வேலை செய்யுமாறு கேட்ட சம்பவங்கள் பல உள்ளன. அவ்வாறு ஒத்துக் கொள்ளும் போது, அவரது நாட்டை சேர்ந்தவர்களை வேவு பார்த்து சொல்லுமாறு பணிக்கப்படுவர். அந்த சேவைக்கு பணம் வழங்கப்படலாம், அல்லது அந்த அகதிக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அகதி அந்தஸ்தோ, அல்லது பிரசா உரிமையோ வழங்கப்படலாம். வேவு பார்க்க மறுப்பவர்களின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப் போவதாக பயமுறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. ஆகவே எதுவும் சாத்தியமே.

இனி மீண்டும் இஸ்லாமிய நாடுகளின் அகதிகளைப் பற்றிய விடயத்திற்கு வருவோம். பெருந்தொகையாக இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது ஏன் என்ற புதிருக்கான பதில் சில வருடங்களில் தெரிய வந்தது. முதலில் சர்வதேச (வாசிக்கவும்: அமெரிக்க) தலையீட்டினால், பொஸ்னியாவில் யுத்தம் நின்று, சமாதானம் ஏற்பட்டது. போரினால் அழிவுற்று எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு அகதிகள் வற்புறுத்தப்பட்டனர். மீள்குடியேற்றத்திற்கு சிறு தொகைப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். புகலிடம் கோரிய நாட்டிலேயே தங்குவோம் என பிடிவாதம் பிடித்தவர்களுக்கு, அனைத்து சட்ட வழிகளும் அடைக்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் என்ன நடந்தது என்பதை நான் இங்கே அதிகமாக விபரிக்க தேவையில்லை. அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த அந்த நாடுகளில், மொழிபெயர்ப்பாளராகவும், பிற அரச கருமங்கள் ஆற்றுவதற்கான ஊழியர்களாக, மேற்குலகில் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் அகதிகளின் சேவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த கடமை அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் இயக்கங்கள், அவர்களை துரோகிகளாக பார்த்தன. சில நேரம் தாக்குதல்களில் கொள்ளப்படலாம் என்ற ஆபத்திற்கு மத்தியில் தான் அவர்கள் பணி புரிய வேண்டியுள்ளது. உண்மையில் சில பேர் தாமாக விரும்பிப் போயிருக்கலாம். இருப்பினும் குறிப்பிட்ட தொகையினருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒரு பக்கம் தஞ்சம் கோரிய நாட்டில் விரட்டுகிறார்கள், மறுபக்கம் சொந்த நாட்டில் கொல்கிறார்கள். எங்கே போவது?

-- தொடரும் --