05192022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

உயிரின் இயல்பு...

வாழ்க்கை என்பது - 
´நான் உயிர் வாழ வேண்டும்´ 
என்ற உறுதி மிக்க ஆசைதான் 
வாழ்க்கையாகிறது. 
இந்த ´மனவேகம்´ எல்லா 
உயிர்களிடமும் இயங்குகிறது... 
அதனால் போட்டி, பூசல், அழிவு என்று 
போர்க்காட்சியளிக்கிறது வாழ்க்கை. 
ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் 
இயங்கும் இச்சாசக்திக்கு 
இலட்சியம் என்பது கிடையாது... 
வரம்பும் கிடையாது... 
வெவ்வேறு உயிர்களின் 
இச்சாசக்திகளும் மோதுகின்றன. 
வெற்றி கிடைக்கிறது... 
சில வெற்றிகளுக்குப் பின் 
தோல்வி கிடைக்கிறது... 
சில தோல்விகளுக்குப் பின் 
வெற்றி கிடைக்கிறது... 
இதுவே உலகம், இதுவே வாழ்க்கை. 
இதை கடந்து செல்வதே உயிரின் குணம்."

* ஆர்தர் ஷாப்பனோர்

சில தத்துவங்களை படிக்கும் போது நமக்குள் சலிப்பு தட்டிவிடும். அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கில்லையா? அல்லது அவை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு கடுமையானவையா? என்ற ஆராய்ச்சியையெல்லாம் ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் மாக்கியவெல்லி போல மனித உணர்வுகளின் செயல்பாடுகளை ஆழ்ந்து கவனித்த விமர்சனத்தை வைத்தவர்களின் தத்துவங்கள் அப்பட்டமான யதார்த்த சிந்தனைகளை நோக்கியதாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அது போல் தான் ´ஜெர்மனைச் சேர்ந்த தத்துவஞானி ஆர்தர் ஷாப்பனோரின்´ தத்துவங்களையும் ஒதுக்கிவிட முடியாது.

வாழ்க்கையைப் பற்றி பல விசித்திரமான கசப்பான கருத்துக்களை சொன்னவர் ஆர்தர் ஷாப்பனோர். மனிதனை பற்றிய மதிப்பீடுகள் மிகவும் இழிவானதாகவே அவரிடம் இருந்து வெளிபடுகிறது. 

மனிதன் வேதனையின் படைப்பு; அவனுடைய ஆசைகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவச் செய்கிறது. ஒரு விருப்பம் நிறைவேறியதும் அவன் சலிப்படைந்து வேறொன்றின் மீது மோகத்தைத் திருப்புகிறான். உயிர் வாழ்வு என்பது அவனுக்கு தாங்க முடியாத சுமைதான். இடையிடையே துளித்துளி திருப்திகள் மின்னி மறைகின்றன. மரணம் தனி மனிதனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை. 

இப்படியெல்லாம் அதிரடியான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தவர் ஆர்தர் ஷாப்பனோர். 

உயிர்களின் பிறப்பு, வளர்ப்புகள் எல்லாம் அவற்றில் குடிகொண்டிருக்கும் இச்சாசக்தியினால் சாத்தியமாகிறது. உயிரின் விருப்பத்தின் ஆற்றல் காரணமாகவே கரு குழந்தையாக வளர்ச்சி பெறுகிறது. உயிர் விருப்பத்தினாலேயே செடி, சூரியனை நோக்குகிறது. மனிதன் உணவைத் தேடியும், துணையைத் தேடியும் குழந்தை வேண்டுமென்று பெரு விருப்பம் கொண்டு துடிக்கிறான். இது அறிவினால் அல்ல... இச்சாசக்தியால் நிகழ்வதாகும். வாழ்க்கை என்பது- நான் உயிர் வாழ வேண்டும் என்ற உறுதி மிக்க ஆசைதான் வாழ்க்கையாகிறது. இந்த மனவேகம் எல்லா உயிர்களிடமும் இயங்குகிறது. அதனால் போட்டி, பூசல், அழிவு என்று போர்க்காட்சியளிக்கிறது வாழ்க்கை. ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் இயங்கும் இச்சாசக்திக்கு இலட்சியம் என்பது கிடையாது. வரம்பும் கிடையாது. வெவ்வேறு உயிர்களின் இச்சாசக்திகளும் மோதுகின்றன; வெற்றி கிடைக்கிறது; சில வெற்றிகளுக்குப் பின் தோல்வி கிடைக்கிறது. சில தோல்விகளுக்குப் பின் வெற்றி கிடைக்கிறது. இதுவே உலகம் இதுவே வாழ்க்கை. இதை கடந்து செல்வதே உயிரின் குணம்.

உயிர்களின் மதிப்பீடு குறித்து ஆர்தர் ஷாப்பனோர் தத்துவக் கொள்கையின் அடிப்படை ´இச்சாசக்தி´யை கொண்டே வெளிவருகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், "என் ´இச்சாசக்தி´ பிறருடையதைவிட வலிமைமிக்கதாக இருக்க வேண்டும். வெற்றி அடைந்தே தீருவேன்" என்று நெஞ்சு உறுதியுடன் இருந்தால் நம் ´இச்சாசக்தி´யுடன் போட்டி போடும் மற்ற ´இச்சாசக்தி´கள் மங்கிபோய்விடும் என்கிறார். 

தன்னம்பிக்கை ´இச்சாசக்தி´யில் இருந்தே உருவாகிறது. விருப்பத்தில் உறுதியாக இருந்தால் அசைக்க முடியாத தன்னம்பிக்கை நம் ´இச்சாசக்தி´யில் உண்டாவது நிச்சயம். 

படிக்கும் போதே நமக்குள் இருக்கும் ´இச்சாசக்தி´ துள்ளியெழுகிறதல்லவா? மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகளில் நம் வாழ்வின் எந்த சூட்சமத்தையாவது கண்டுப்பிடித்தோமா? உங்களால் கண்டுபிடிக்க முடிந்திருந்தால் பக்குவப்பட்ட ´இச்சாசக்தி´ உங்களுக்குள் விழிப்புணர்வுடன் இருப்பதாக அர்த்தம். புரியாதவர்கள் மீண்டும் ஒருமுறை தத்துவத்தை வாசித்து பாருங்கள். 


தமிழச்சி
07/02/2009

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்