1845- ஆம் வருட காலங்களில் ஐரோப்பா முழுவதும் பதட்டநிலையில் இருந்த காலங்கள். அதிலும் ஜெர்மன் நாட்டில் அதிக அளவு மக்கள் மீது அடக்குமுறை திணிக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தால் ´தீவிரவாதி´ என்று சிறையில் அடைக்கப்பட்டார்கள். அல்லது நாடு கடத்தப்பட்டார்கள். அப்படித்தான் மார்க்ஸ், ஏஞ்செல்ஸ் போன்றவர்களுக்கும் நடந்திருந்த நேரம்...
தமிழச்சி
08/02/2009



அந்நேரத்தில் தான் பொதுவுடமைக் கழகம் (COMMUNIST LEAGUE) உருவானது. மற்றும் நாடு கடத்தப்பட்டவர்கள் லண்டனிலும், பிரான்சிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாடு கடத்தப்பட்டோர் சங்கங்களையும் உருவாக்கி இருந்தனர். ஆனால், நாடு கடத்தப்பட்டோர் சங்கங்களில் தெளிவான கொள்கை இல்லை. அந்தந்த நாட்டு அரசாங்கத்தை திருப்திபடுத்தும் நோக்கத்திலேயே அவர்களுடைய செயல்பாடுகள் இருந்தன. தீவிரமாக செயல்பட நினைத்தவர்களுக்கு போதிய வாய்பின்மை இருந்தது. இப்படியே இதில் இருந்தால் எதையும் செய்துவிட முடியாது என்பதை உணர்ந்து அச்சங்கத்தில் இருந்து பிரிந்து "நியாயம் கோருவோர் சங்கம்" என்று புதிய அமைப்பை உருவாக்கினர். பெரும்பாலும் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டவை இவை. ஆனால், அதிலும் முற்போக்குச் சிந்தனைகள் என்று பெரியதாக எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏனெனில் உண்மையின் நிலவரம் அப்படி. கடுமையான கண்காணிப்புடன் இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக செயல்பட போதிய மனவுறுதியின்மை அல்லது தெளிவின்மை அவர்களிடம் இருந்திருக்கின்றது. 

மார்க்ஸ் நியாயம் கோருவோர் சங்கத்தில் நாடு கடத்தப்பட்ட பிரஜை என்னும் முறையில் தொடர்பு கொண்டார். அச்சங்கத்தில் கடிதப் போக்குவரத்துக்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மார்க்ஸிக்கு கொடுக்கப்பட்டது. செயல்திறன் உடைய மார்க்ஸ் பொதுவுடமை கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு எந்த செயல்திறனும் இன்றி இருந்த சங்கம் எதற்கும் பயன்படாது என்று சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார். "இயக்கம் என்பது இயங்குவது" என்று லண்டனில் இருந்த தலைமைச் செயலகத்திற்கு கடிதம் மூலம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். 

சில காலத்திற்கு பின் தலைமைச் செயலகம் மார்க்ஸ் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. மார்க்ஸை சந்தித்துப் பேச முக்கியமான ஒருவரை அனுப்பியது. மார்க்ஸ் பொதுவுடமையை அடிப்படையாக முன் வைத்து கூறிய செயல்பாடுகள் அரசாங்கத்தை எப்படி அனுகுவது மக்களிடம் பொதுவுடமை கொள்கைகளை எப்படி பரப்புரை செய்வது, பரவலாக்குவது, சமூகத்தில் பொதுவுடமை செயல்பாடுகளை எவ்விதத்தில் முன்னெடுத்துச் செல்வது போன்றவற்றை விளக்கினார். மார்க்ஸின் வார்த்தைகள் அவர்களுக்கு திருப்திகரமாகவும், உருப்படியான செயல்பாடுகளாகவும் இருந்ததால் நியாயம் கோருவோர் சங்கம் "பொதுவுடமைக் கழக"மாக மாறியது. 

பொதுவுடமைக் கழகத்தில் அடிப்படைக் கொள்கைகள் புதியதாக உருவாக்கப்பட்டது. சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. ஜனநாயகம் என்பது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஏற்ற சட்டதிட்டங்கள் அவற்றில் இருந்தன. எல்லாவற்றையும் மாற்றியமைத்த பின் லண்டனில் முதலாவது பொதுவுடமை கழகத்தின் மாநாடு நடைப்பெற்றது. அதில் மார்க்ஸால் கலந்து கொள்ள முடியவில்லை. ஏஞ்செல்ஸ் கலந்துக் கொண்டார். 

1847- இல் நவம்பர் டிசம்பர் மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுவுடமை கழகத்தின் சார்பில் மாநாடு நடைப்பெற்ற போது மார்க்ஸ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் சங்கத்தின் விதிகள் சட்டதிட்டங்கள் பற்றி இறுதியாக தீர்மானிக்கப்பட்டன. பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையை தயாரித்து வெளியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டன. அப்பொறுப்பை மார்க்ஸ் ஏஞ்செல்ஸ் இருவரிடம் கொடுக்கப்பட்டது. இவை மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த இருக்கும் மானிட உயிரைப் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளாக வடிவெடுத்தது. அதுதான் கம்யூனிஸ்ட் அறிக்கை.