12022022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

முதலாவது சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனம்!

FIRST INTERNATIONAL

1848-இல் ஐரோப்பா கண்டத்தில் முதல் முதலாக மக்கள் போராட்டம் நடந்து கிளர்ச்சிகள் மூர்க்கத்தனமாக அரசாங்கத்தினால் அடக்கப்பட்ட காலம். மக்கள் சோர்ந்து போய்விட்டார்கள். புரட்சி வார்த்தைகள், சிந்தனைகளை தேசத்துரோகமாக கருதி கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதால் மக்களிடம் அரசாங்கத்திற்கு எதிராக பேசவும், சிந்தக்கவும் கூட பயந்தனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்த தொழிலாளர் வர்க்கங்கள் தொடர்ந்து செயலிழந்து இருக்க விரும்பவில்லை. தொழிலாளர் வர்க்கம் மட்டுமே தன் வாழ்வுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்தது. அதனால் தன்னை வலுப்படுத்திக் கொள்ள பல நாடுகளிலும் தங்களுக்கென்று தனித்தனியாக தொழிற்சங்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நாடுகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னோடியாக இருந்ததும் மற்ற நாட்டு தொழில் சங்கங்களுக்கு ஓர் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தது. தொழிற்சங்கம் வளர்ச்சியினால் தான் தொழிலாளர்களுக்குள் ´வர்க்க ஞானம்´ உண்டாக காரணமாக இருந்தது என்பதும் மிகைப்படுத்தலான வார்த்தைகள் கிடையாது. தொழிலாளர் பிரச்சனைகள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான பிரச்சனைகளையே சார்ந்திருந்தது. வாழ்க்கை நிலைமை சமூதாயத்தில் தொழிலாளர்களுக்கு  அந்தஸ்தும் தொழிலாளர்களை சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நிலைமையும் நலனும் சுரண்டுபவனும் சுரண்டப்படுகிறவனுக்குள்ளும் நடக்கும் உரிமை போராட்டங்களாகவே இருந்தன.

சுரண்டப்படுகிற வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரமற்ற நிலையும் அடக்கி வைக்கப்படும் நிலையும், தங்கள் வாழ்வாங்கு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையையும், தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளே எல்லா நாடுகளிலும் வர்க்கப்போராட்டங்களாகவும், தொழிலாளர் பாதுகாப்பு சங்கங்களாகவும் பெருகிக் கொண்டிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள் தங்களுக்குள் தொடர்புகளையும், கலந்துரையாடல்களையும் ஏற்படுத்திக் கொள்ள முன்வந்தன. தங்கள் நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்ற தொழிலாளர் சங்கங்களுடன் பகிர்ந்து கொண்டன.

1848- இல் கிளர்ச்சி அடக்கப்பட்டதற்கு பின் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலாளர்களும் பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்களும் கலந்து பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தின. ருஷ்ய ஜார் மன்னன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போலந்து நாட்டில் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்ட போது மிகக் கொடுரமான முறையில் மக்கள் கிளர்ச்சியை அடக்கினான். ஏராளமான உயிர்சேதங்கள் ஏற்பட்டிருந்தன. அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் தங்கள் நலன்களை முன்வைத்தே போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தன. முதல் முதலாக இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ருஷ்ய ஜார் மன்னன் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தன. தங்கள் நாட்டு அரசாங்கம் ஜார் மன்னனைக் கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடத் தொடங்கியது. தொழிலாளர் போராட்டங்கள் முதல் முறையாக அரசியல் போராட்டமாக மாறியது ஜார் மன்னனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடத் தொடங்கியதில் இருந்து தான்.

ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக தொழிற்சங்கங்கள் இருந்த போதும் எல்லா நாடுகளும் சேர்ந்து தலைமை ஸ்தாபனம் தொழிலாளர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தை உணரத் தொடங்கி இருந்தது. இத்தீர்மானத்திற்கு இங்கிலாந்து தொழிற்சங்கங்களும் பிரான்ஸ் தொழிற்சங்கங்களும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.


1864-இல் செப்டம்பர் 24-ஆம் தேதி மாட்டின்ஸ் ஹால் என்ற இடத்தில் முதல் முதலாக ஒரு கூட்டம் நடைப்பெற்றது. இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் இத்தாலி பெல்ஜியம் போலந்து நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மன் தொழிலாளர்களின் பிரதிநீதியாகக் கார்ல் மார்க்ஸ் கலந்து கொண்டார். ´சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத்தின் விதிமுறைகள்´ தயாரிப்பதற்காக 51- நபர்கள் கொண்ட கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டதும் அன்றுதான். அக்குழுவில் கார்ல் மார்க்ஸீம் இருந்தார். 51- நபர்கள் அடங்கிய குழுவில் 50- பேர்கள் தயாரித்த சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் விதிமுறைகளும், கார்ல் மார்க்ஸ் தனியாக தயாரித்த விதிமுறைகளும் பார்க்கப்பட்டு கார்ல் மார்க்ஸ் தயாரித்த விதிமுறைகளை கமிட்டி ஏற்றுக் கொண்டது.

கார்ல் மார்க்ஸ் அந்தளவு அக்கறையாக அனுபவத்தையும், சமூகச் சூழலையும் இணைத்து மிகத் தீவிரமாக தொழிலாளர் நலன்களுக்காக சிந்தித்தவர். முதலாவது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் உருவாகி ஸ்பானத்தின் விதிமுறைகளும் அக்ககூட்டத்தில் உருவாக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தானத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலவகைத் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துவதும், எல்லா நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்கள் நலன்களுக்காகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களும் மற்ற நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளவும், தொழிற்சங்கம் பின்தங்கிக் கிடக்கும் நாடுகளில் புத்துயிர் கொடுத்து ஆர்வத்துடன் செயல்பட வைக்கவும் பாடுபட்டது.


தமிழச்சி
12/02/2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்