05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

மேற்கத்திய நாகரிகம் என்பது...

"நமது நாகரீகம் ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் தெளிவாகவே தெரிகிறது. இன்று மிஞ்சி இருக்கும் நாகரிகத்தில் தொடர்ந்து வாழ்வதில் நமக்குப் பாதுகாப்பு இல்லை. எனினும், நாம் இருக்கும் நாகரீகத்தின் மீதிக்கட்டமும் குப்பை கூளத்தின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது. அவையும் அடுத்த நிலச்சரிவில் நிச்சயமாக விழுந்துவிடத்தான் போகின்றது."
தமிழச்சி
14/02/2009


ஜெர்மனைச் சேர்ந்த சிந்தனையாரும், நோபல் பரிசு பெற்றவருமான ´ஆல்பர்ட் ஸ்வைட்ஜர்´ மனித நாகரீகத்தை கடுமையாக விமர்சித்தது பகுத்தறிவிலும், விஞ்ஞானத்திலும் முன்னோடியாக இருந்த மேற்கத்திய நாகரீகத்தை. ஐரோப்பிய, அமெரிக்க மக்களின் புதிய நாகரிகத்தைக் குறித்த கவலையின் வெளிப்பாடாகவே ஆல்பர்ட் வாதங்கள் இருந்தன. பொருளாதார வளர்ச்சி உலகத்தின் இதர பகுதிகளில் வாழும் எளிய மக்களிடமும், வளர்ந்து வரும் நாடுகளிடமும் ஒவ்வொரு ஆண்டும் கடனுதவி என்னும் பெயரில் வட்டிக்கு வட்டி என அநியாய வட்டிக்கு ஏய்ப்பு செய்வதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறது மேற்கத்திய நாடுகள். மற்றவர் பொருளாதாரத்தில் தன்நிலையை உயர்த்திக் கொள்ளும் அதிசயப்பேராற்றல் வாய்ந்த இந்த தேற்கத்திய நாடுகளின் அழிவுதான் அவர்களுக்கு அதிவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றதே தவீர, பொரளாதார முன்னேற்றம் ஒரு மாயத்தோற்றமே. இந்நிலையே தொடருமானால் தார்மீக வீழ்ச்சி எந்த நாகரீகத்தையும் அழித்துவிடும் என்று எச்சரிக்கிறார்.

மேற்கத்திய நாகரிகம் யுத்தம் என்ற பெயரில் இலச்சக்கணக்கான மனிதர்களை ஈவுஇரக்கமின்றிக் கொன்று அழித்து தான் நினைத்ததை சாதித்துக் கொள்கிறது. அதற்கு ஏதாவது ஒரு சப்பைக்கட்டு காரணம் கூட இருக்காது. எளியவன் மீது வலிந்து தாக்கும் அநாகரிகம் என்பது நெடுநாளைக்கும் தொடரும் சங்கதியாக இருக்கவிடாது. பொருளாதார மேம்பாடு வசதியான சொகுசு வாழ்க்கையில் வைத்திருக்கும் தன் நாட்டு மக்களை மனிதம் இல்லாத மாக்களாக வெறும் பகடைக்காய்களாகவே மாற்றி மேற்கத்திய நாகரிகம் வைத்திருக்கிறது.

விஞ்ஞான வாழ்க்கைக் கண்ணோட்டம் என்ற பெயரில் சமயம், பரிவு, அழகு என்னும் துறைகளையே மறந்து வாழ்க்கையின் மேடையாகிய இயற்கையைக் கசக்கிப் பிழிந்து அழித்து வாயுமண்டலத்தின் சமச்சீர் நிலையைக் குலைத்து ´சனி´யனை விலைக்கு வாங்கி வைத்திருக்கிறது மேற்கத்திய நாகரிகம். இன்னும் அதை மேற்கத்திய நாகரிகம் என்று வர்ணித்துக் கொண்டிருப்பது முட்டாள்தனம். இவையும் ஒருவித புராதனப் பழங்குடி மிலேச்சத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்ற சொல்தான் பொருத்தமுடையதாக இருக்கக்கூடும்.

அப்படியானால் என்ன செய்து மேற்கத்திய நாகரிக்ததை மீட்பது?

மக்களுடைய அடிப்படை எண்ணங்களில் அறவெழுக்க உணர்வை தூண்டிவிட்டால், மேற்கத்திய நாகரிகம் என்னும் வியாதி குணமாகி மாற்றம் ஏற்படலாம் என்கிறார் ஆல்பர்ட் ஸ்வைட்ஜர்.

என்ன ஆல்பர்ட் ஸ்வைட்ஜர் இப்படி சொல்லிவிட்டாரே! என்று விஞ்ஞானிகளிடம் கேட்டால்,

மேலைநாகரிகம் முதுமை கட்டத்திற்கு வந்துவிட்டது. அவையே தளர்ச்சியின் அறிகுறிகளாக ஆங்காங்கே வருகிறது. எந்த நாகரிக அமைப்பும் கடைசியில் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டியது தான் உலகநியதியாக இருக்கிறது. இதில் நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வயோதிக நாகரிகத்தின் செயல்பாடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அப்படியானால் மேற்கத்திய நாகரிகத்தின் அழிவு எப்படி ஏற்படக்கூடும்?

உலகத்தின் மற்றோர் பகுதியில் ஏதோ ஒரு பிரதேசத்தில் இருந்து வேறு மக்களிடம் இருந்து மாற்று நாகரிகம் தலைதூக்கக்கூடும். அந்த புதிய மக்கள் இனத்தில் இருந்து புதிய மக்கள் இனம் புதிய நாகரிகம் ஒன்றை உருவாக்கி மனித குலம் அழியாமல் காப்பாற்றப்படக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதற்கு முந்திய நாகரிகங்களும் இப்படிதானே அழிந்து புதிய மாற்றம் பெற்றன.

மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கம் இல்லாத மனித இனம் உலகத்தில் இல்லையா? என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றது. ´இல்லை, கண்டிப்பாக இல்லை´ ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதோ ஒருவிதத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கம் இருக்கிறது என்று அடித்துச் சொல்கிறார்கள் சமூக ஆய்வாளர்கள்.

அப்படியானால், "மேற்கத்திய நாகரிகம் என்பது அவ்வளவு மோசமானதாகவா போய்விட்டது" என்ற கேள்விக்குதான்..,

மனிதனின் நடத்தைகள் மட்டும் நாகரிகத்தின் அறிகுறி என்பது இல்லை என்னும் ஆல்பர்ட் ஸ்வைட்ஜர் விஞ்ஞானம், பொருளாதாரம் அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி அறஒழுக்க கோட்பாடுதான் உலக மக்களின் நலன்களையும், சமூக நலன்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியுமே தவீர, எந்த நாகரிகமும் மனித குலத்துக்கு பேரழிவுதான் என்கிறார் ஆல்பர்ட் ஸ்வைட்ஜர்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்