04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

உண்மைகளும்; கற்பனைகளும்

மிகவும் நெருக்கடிமிக்க வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்;. அதிரடியான அரசியல் நிகழ்வுகள் கூடிய ஒரு காலம். நாளை நாம் திட்டமிட்டபடி, வாழமுடியாது. இந்தியாவினால் அனைத்தும் இன்று தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்தியா  உருவாக்கிய புலி மற்றும் புலி அரசியல் ஊடாகவும், இலங்கை அரசின் ஊடான இந்திய அழித்தொழிப்புக்கு ஊடாகவும், எம் வாழ்வில் இந்தியா தலையிடுகின்றது.

 

எம் மக்களின் வாழ்வு முதல் மக்களின் சுயநிர்ணயஉரிமை வரை, இந்தியாவின் நோக்குக்கேற்ப அவை அழித்தொழிக்கப்படுகின்றது. இதை புரிந்து கொண்டவர்களை அன்று அழித்தனர். எஞ்சியவர்களை அரசியல் ரீதியாக சிதைந்தனர்.

 

இப்படி ஒரு சமூகத்தின் வெற்றிடம். மக்கள் சார்ந்த நிலைப்பாடுடன் மண்ணில் வாழ முடியாது வெளியேறியவர்கள், புலம் பெயர் மண்ணில் மாற்றுத் தலைமையாக மாறமுடியவில்லை. அரசியல் ரீதியாக சிதைந்தவர்கள் போக, மற்றவர்கள் நீண்டகால நோக்கில் தலைமை தாங்கவேண்டிய அரசியலை புறம்தள்ளி ஓதுங்கினர். இப்படியான நிலையில், அரசுடன் ஒரு பகுதி இணைந்தது. இப்படி எங்கும் இன்றைய வெற்றிடத்தை நிரப்பமுடியாத நிலை.  புலம்பெயர் சமூகத்தை தலைமை தாங்க, மாற்றுத்தலைமை கிடையாது. புலிகளோ இந்தியா கற்றுக்கொடுத்த தேசிய அரசியலை வைத்துக்கொண்டு, குண்டு சட்டிக்குள் முடங்குகின்றனர்.

 

இப்படி எங்கும் எதிலும் இந்தியாவின் பிடி உள்ளது. மக்களின் அவலத்தின் பின்னால் புலியூடாகவும், பேரினவாத அரசு ஊடாகவும் இந்தியாவே உள்ளது. இதை முழுமையாக புரிந்துகொள்ளாது, பகுதியாக புரிந்து கொள்ளும் மனநிலையில் மக்களை வைத்துள்ளனர்.  

 

இந்த நிலையில் உணர்ச்சிக்கும் அது உருவாக்கும் உணர்வுக்கும், மறுபக்கத்தில் அறிவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள். இலக்கற்ற, தெளிவற்ற போராட்டங்கள். அவையோ, தோல்வியில் முடிகின்றது. இந்த நிலையில் குற்றவுணர்வுடன், தெளிவற்ற இலக்கற்ற எல்லைக்குள், தனிமனித முரண்பாடுகள். கடமை, பங்களிப்பு என்று எதையாவது செய்ய எத்தனிக்கும், கண்மூடித்தனமான குறுகிய முடிவுகள்.  

 

இவை அனைத்தும் திட்டமிட்ட வகையில், குறித்த நோக்கில் மனிதமனங்களில் திணிக்கப்படுகின்றது. நாம் நாமாகவில்லை. இந்தியா நடத்தும் யுத்தம் முதல், இந்தியாவினால்  வளர்க்கப்பட்ட புலிப் பாசிச அரசியல் வரை, அவை எம்மை எம்மையறியாமலே ஆட்டிப்படைக்கின்றது. 

 

இப்படி தமிழ் தேசியத்தின் பெயரில் இந்தியா வளர்த்த புலிப்பாசிசம், அது உருவாக்கி வைத்திருந்த அதிகார மையங்கள் அனைத்தும், அதே இந்தியாவினால் இன்று அழிக்கப்படுகின்றது. அதன் சிதைவும் எம்மினத்தின் வாழ்வு மீதான, அதிர்வை உருவாக்குகின்றது.

 

தனிமனித அவலத்தை எல்லையற்றதாக்குகின்றது. இதைச் சுற்றிய நிகழ்வுகள். உண்மைகளும், மறுபக்கத்தில் பொய்கள். எது உண்மை எது பொய் என்று பகுத்தாய முடியாத மனச்சிதைவுகள். அதில் இருந்து முடிவுகள். ஒரு இனத்தின் அழிவை இப்படித்தான், இந்தியா திட்டமிட்டு நடத்தி முடிக்கின்றது. இதை எதிர்கொண்டு போராடும் ஆற்றல், எம்மினத்திடம் இன்று இல்லை. இதை புரிந்துகொண்டு போராடுமாறு, அனைவரையும் வேண்டுகின்றோம்.

 

பேரினவாத வடிவில் இருப்பதும் இந்தியா, புலி வடிவில் இருப்பதும் இந்தியா தான்;. ஒன்று தமிழ் மக்களுடன் அரசியல் வடிவில் அழிவு அரசியலாக நிற்கின்றது மற்றது எதிரி வடிவில் அழிப்பு அரசியலாக நிற்கின்றது. மயக்கம், தெளிவின்மை, உணர்ச்சி, பகுத்தாய்வின்மை, வழிபாடு, குருட்டு நம்பிக்கை என்று, எம்மினத்தின் மீதான அழிப்பை நோக்கி கடந்த 25 வருடமாக இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்னணியிலும்;  செயற்பட்டுள்ளது. இந்த வகையில் இதை புரிந்து, நாம் இந்தியாவின் பின்னணி அரசியல் தளங்கள் அனைத்தையும் எதிர்த்து, அதை இனம் காட்டி போராட வேண்டியுள்ளது. மக்களுக்கான மக்கள் போராட்டத்தை தடுத்து, அதை வளரவிடாது, முளையிலேயே கிள்ளியெறிந்த இந்தியா, இன்றும் பேரினவாத அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை உருவாகவிடாது தன் முனைப்பாக தன் அரசியலை புலி ஊடாக செய்து வருகின்றது.

 

பி.இரயாகரன்
15.02.2009
         

 


பி.இரயாகரன் - சமர்