''ஈழத் தமிழ்மக்களின் இறுதி இருப்பு கேள்விக்குறியாகும் போது அதற்கு பிறகு ஒரு புலியிருப்பு என்ன உள்ளது? நீங்கள் புலியின் இருப்பை விரும்பாத காரணத்தால் மக்கள் இருப்பையும் நிராகரித்து வந்துள்ளீர்கள்.

 


சிங்கள அரசின் இன அழிப்பில் வராத கோபம் உங்களுக்கு புலியில் ஏன் வருகின்றது? உங்கள் பதிவுகளை பார்க்கும் வாசகர்கள் அறிவார்கள் நீங்கள் விமர்சித்தது 98 வீதமும் புலிகளையே. அது உடையார்கட்டு குளமானாலும் சரி இன்றய தீக்குளிப்பானாலும் சரி.

ஏன் இந்த நிலை? உங்களை நீங்களே கேள்வி கேட்டுள்ளீர்களா? உங்கள் இந்த பதிவு ஒரு ஊக அடிப்படையே அன்றி உண்மைக்கு எந்த தரவும் கிடையாது. இந்த ஊகத்தின் அடிப்படை எது?

இந்த இனம் தன்னை தின்று வளர்ந்த இனம். ஆம் அது சாதியாக மதமாக வர்க்கமாக புத்தஜீவிதமாக தனது இனத்தை தானே தின்று வளர்ந்த இனம். இரையை தேடி புத்திஜீவிதம் அல்லது சாதியம் கலந்த புத்திஜீவிதம் தனது இனத்துக்குள்ளேயே செல்லும். சிங்கள கொடுமைகளை விமர்சிக்க முடியாத பல நூறு புத்திஜீவிகள் இறுதி வரை புலியை விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். அது தனது இனத்துள் தேடும் இரை. இந்த இனத்துக்கு உரிய பழக்கம் இது.

சாதி வர்க்கம் புத்திஜீவிதம் எதுவில் இருந்தும் வெளியேறியதாக சொல்பவனின் வார்த்தைகளில் எழுத்துக்களில் ஊகங்களில் தன்னினத்தை தானே வசைபாடுவதில் தன்னினத்துக்குள்ளே இரைதேடும் குணம் இருந்து கொண்டே இருக்கின்றது.

இந்த இனத்தில் இருந்து வந்தவர்களே புலிகள், ஏனைய இயக்கங்கள், கருணா, மாற்றுக்குழுக்கள், என்னும் எவரோ, நீங்களோ நானோ, அனைவரும் இந்த இனத்துக்குள் இருந்த வந்தவரே. நாம் எமது பங்கிற்கும் பழக்கவழக்கத்துக்கும் ஏற்ப எங்களை தின்கின்றோம். மிச்சத்தை சிங்களவன் தின்கின்றான். இறுதியில் புளிச்சல் ஏவறையாக தமிழனின் கதை முடிகின்றது? நிச்சயமாக இல்லை. எஞ்சியவர்கள் எமது வரலாற்றை வியாக்கியானம் செய்து தொடர்வாரக்கள். யாரும் கவலைப்படத் தேவையில்லை. "


இன்றிடம்பெறும் மக்களது அவலத்துக்கு யார் காரணம்?சிங்கள அரசு குண்டுகள் போட்டுக் கொல்வதற்கான அரசியலை மக்கள்மீது திணித்தவர்கள் புலிகளா அல்லது நாமா?மக்களது நலனில் கிஞ்சித்தும் அக்கறையற்ற புலிகளது பேரங்கள் உலகறிந்தது!இத்தகைய அரசியலை வைத்துப் பிழைப்பு நடாத்திய புலித் தலைமை வன்னியில் மக்களது குழந்தைகளைத் துடைத்து அள்ளிப் போருக்குள் திணித்துக் கொன்றதில் எவர் குற்றவுணர்வோடு இருக்கிறார்?புலிகள் செய்த மக்கள் விரோத அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகள் தம்மைத் தொடர்ந்தும் நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் மக்களின் பிணங்களோடு புலிகள் அரசியலை ஓட்டுகிறார்கள்.

இதுள் சிங்கள அரசு குறித்து ஓலமிடும் நீங்கள் எல்லோரும் முதலில் புலியினது மக்கள் விரோதப் பக்கத்தையும் அதே கண்கொண்டு(நாம் சிங்கள அரசை விமர்சிக்காததென்ற வரைவிலக்கணத்தைச் சொல்கிறேன்) பார்க்கவும்.நாம் இதைத்தாம்(இருதரப்பு மக்கள் விரோதப் போக்கை) செய்துவருகிறோம்.அழிப்போரைவிட்டு ஒதுங்குங்கள்.மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.அதற்காகச் சரணடைந்து சர்வதேசச் சட்ட எல்லைக்குட்பட்ட மன்னிப்புக்கு உடந்தையாக இருங்கள்.புலிப்பாணிப் போரினது ஐந்தொகையை மக்கள் அனுபவித்தது போதும்.

தமிழ்பேசும் இனத்தைக் வெறும் தமிழைவைத்து மதிப்பிடுவதற்கு முன் இந்தச் சமுதாயத்தில் நிலவும் அரசிலை மதிப்பிடவும்.இலங்கைச் சமுதாயம் வர்க்கமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே,வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியல் அடிப்படையாகிறது.புலிகள் தமிழர்களைத் தின்றதென்பது உண்மைதான்.ஏனெனில் அவர்களது வர்க்கத் தளத்துக்கு அது அவசியமாகவே இருந்தது.இலங்கை அரசை உங்கள் கருத்துப்படி நாம் விமர்சிக்கவில்லையெனும் கருத்து உண்மையாகவே இருக்கட்டும்.நீங்கள் புலிகளை எவ்வளவு வீதம் விமர்சித்துள்ளீர்கள்?

கண்டவர்கள்-நின்றவர்கள் எல்லோரும் துரோகிகளாகிய வரலாற்றில், புலிகள் செய்த படுகொலைகளைக் கேள்விக்குட்படுத்தி அந்த அமைப்பை மக்கள் விடுதலையைச் செய்யும் புரட்சிகரமான அமைப்பாக்குவதற்கான ஏதாவதொரு முயற்சியில்-அத்தகைய நிலையையொட்டி, விமர்சிக்க முடிந்ததா?அல்லது இதுவரை புலிகள் தமது தவறுகளைச் சுயவிமர்சனஞ் செய்தார்களா?

இன்றுவரைப் புலிகளது மிகக்கெடுதியான பக்கம் மக்களைக் கேடயமாக்கும் யுத்த வியூகம்வரை போயிருக்கிறது.

சும்மா சிங்களவன்,சிங்களவன் எனப் பிதற்றி மேலும் இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வைச் சிதைக்காமல் ,இலங்கையில் இனங்களுக்கிடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வு மலரப் பாடுபடவும்.

அப்போது,ஆளும் சிங்கள உடமை வர்க்கத்தைத் தோற்கடிக்குமொரு மக்கள் சக்தி உருவாகும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு,அந்நியர்களின் தயவில் "தமிழீழம்"காணப் புறப்பட்ட புலிகளின் இன்றைய நிலையில் இருப்பதையும் இழந்த கதைதாம் இனியும் தொடரும்.தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்தது புலிகளா அல்லது இலங்கை அரசா?

பம்மாத்து இனவாத அரசியலைச் சொல்லியே கால் நூற்றாண்டாகப் புலிகள் செய்த போராட்டம் எத்தனை ஆயிரம் தமிழர்களைப் பலிகொடுத்துள்ளது-எத்தனை ஆயிரம் தமிழர்களைத் துரோகி சொல்லிக் கொன்றிருக்கிறது?

தமிழர்கள் வன்னியில் மட்டுமல்ல,இலங்கை பூராகவும் வாழ்கிறார்கள்.அங்கே மக்களது உயிர்வாழ்வுக்கான ஆதாரங்களைப் புலிகள் வழங்கவில்லை.மாறாக,இலங்கை அரசே அதைச் செய்கிறது.அவ்வண்ணமே வன்னிக்கும் அரசுதான் இவற்றை இதுவரை செய்தது.அந்த வாழ்வாதாரத்துக்குக் கொடும்வரி விதித்து, மக்களைப் பொருளாதார ரீதியாகவும்-பௌதிகரீதியாகவும் சுரண்டியதைத்தவிரப் புலிகளது வரலாற்றில் என்ன மக்கள் நலன் உள்ளது?மக்களுக்குப் புலிகள் செய்த சமுதாய வளர்சிப்பணிகளில் ஒன்றாவது உதாரணமாகச் சொல்லத்தக்கதா?


புலிகளது மக்கள் நலத் திட்டத்தால் எத்தனை இலட்சம் மக்கள் பயன் அடைந்தார்கள்?


சுனாமி நிதிக்கு அரோகரா,

புலம்பெயர் மண்ணில் அறவிட்ட நிதிகளுக்கு அரோகரா,

அந்நிய நாடுகளின் நிதிகளுடாகப் புதுப்புது நிதியீடுகளோடு செட்டிலான பேர்வழிகள் ஆயிரம்.

இப்படி மக்களின் குரல்வளையை நெரித்தபடி,அதே மக்களைக் கேவலமாகப் பார்க்கும்"தன்னைத்தானே தின்னும் இனம்"என்பது புலிகளது அரசியல் பார்வையினது தொடர்ச்சியே!

மக்களை எந்தவுரிமையுமின்றி அடக்கியபடி போராட்டஞ் செய்து,இன்று தாங்களே அழிந்துபோகும்போது அதே மக்களைக் கேடயமாக்கி அவர்களுக்குள் இன்னும் அழிவைச் செய்ததுவரை புலிகளது மக்கள் நலச் செயற்பாடு விரியும்.

எனவே,நாமும் உங்களைப்போல் புலிகளைத் தேசியச் சக்தியாகவும்,அனைத்தும் உணர்ந்த பிரபாகரனைத் தேசியத் தலைவருமாக ஏற்றுக் காவடி தூக்கினால் உடனே தமிழீழம் மலர்ந்து மணம் வீசும் என்ன?

புலிகள் செய்தெல்லாம் பேரங்கள்-பேரங்கள்!மக்களது அவலத்தை வைத்துப் பேரம்,அரசியலை வைத்துப்பேரம்,போராளிகளை வைத்துப் பேரம்.இதன் பலாபலன் இன்று அடிமட்டப் போராளிகளைக் கொல்வதற்கு யுத்தத்துக்குள் திணித்துவிட்டுத் தலைமை எங்கோ தப்பிக்கொண்டுள்ளது.

வரலாற்றில் புலிகளது "மக்கள் நல அரசியல"; பதியப்படும்.


அப்போது, தமிழ்பேசும் மக்களின் இழி நிலைக்கு எவர் காரணமென்பதை வருங்காலச் சந்ததி உலகத்தில் ஒவ்வொரு மூலையிலிருந்தும் புரிந்துகொள்ள முனையும்.""சிங்கள அரசை விமர்சிக்க முடியாத பல நூறு புத்திஜீவிகள் புலிகளை விமர்சித்துக்கொண்ட இருக்கிறார்கள்..."என்கிறீர்கள்.

புலிகளை விமர்சித்த புத்திஜீவிகளுக்கு என்ன நடந்ததென்பதை வரலாறு நன்றாக அறியும்.இந்த இலட்சணத்தில் எவர் இலங்கையில் புலிகளுக்கெதிராக வாய் திறந்தார்?

வன்னியில் புலிகளது துப்பாக்கிக்கு முன் மக்களது இருப்புப் பூச்சிகளைவிட மேலானதாக இருந்ததாகச் சரித்திரமில்லை.ஆனால்,அதே பூச்சிகளது பிள்ளைகளை கட்டாயமாகப்பிடித்துக் களத்துக்கு அனுப்பிக்கொல்வதற்குப் பெயர் "ஈழப்போராட்டம்"-சிங்களவனோடு வாழமுயொது,தமிழீழம்தான்" எமக்குப் பாதுகாப்பு!கடந்த ஒரு தசாப்பதமாகக் குட்டித் தமிழீழமாகவிருந்த வன்னியில் மக்கள் ஒரு நேரக்கஞ்சிக்கு இலங்கை அரசை நம்பியிருந்ததைத் தவிரப் புலிகளால் என்ன செய்ய முடிந்தது?

இன்று, புலிகள் செய்வதும்,இலங்கை அரசு செய்வதும் ஒன்றே!இலங்கை ஆளும் வர்க்கம் தனது சொந்த இனத்தையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது.அது தமிழரையும் கொல்லும் என்பதை நாம் அறிவோம்.ஆனால்,நமக்குள் தோன்றிய புலிகள் நம்மையே கொல்வார்களென நீங்கள் நம்ப மாட்டாத சூழல் இருக்கே அதுதாம் இதுவரைப் புலிகளைத் தங்கு தடையின்றிக் கொலைகள் செய்யத்தூண்டியது.

இனியும்,மக்களுக்காச் சிந்திக்க முனையுங்கள்.இயக்கத்துக்காகவும்,அதன் ஏகத் தலைவர் வணங்காமுடிப் பிரபாகரனுக்காவுஞ் சிந்தித்து நம்மைப் புலிகள் கொல்வதைத் தமிழ்த் தேசியத்தால் நியாயப்படுத்த,மக்களைத் துணைக்கழைக்காதீர்கள்.

ஸ்ரீரங்கன்.