காயடிக்கப்பட்ட தமிழனை, புலிகள் கூறுவது போல் 'வோட்டர் மார்க்" மூளைகளையே பாசிசம் உற்பத்தி செய்கின்றது. மனிதனின் பகுத்தறியும் அறிவையே மறுப்பதும், உருட்டல் மிரட்டலை மனித உணர்வாக வளர்ப்பது, நேர்மையற்ற சமூக நடத்தையை மனிதப்பண்பாக கொள்ள வைப்பதுமே பாசிசத்தின் தேர்வு.
அப்பாவி மக்கள் மேல் திணிக்கும் இந்த மனிதத்தன்மையற்ற பாசிச நியாயவாதங்கள், அபின் உண்டவர்கள் போல் புத்திபேதலித்தவர்களை உருவாக்குகின்றது. மதப்பிரச்சராம் போல், இதன் தர்க்கவாதத்தில் நாணயம் எதுவுமற்று அனைத்தையும் அப்படியும் இப்படியும் திரித்துப் புரட்டுகின்றது.
தமிழினம் சந்திக்கின்ற மனித அவலம், அந்த அழிவில் இருந்து மக்களை மீட்பதற்கு வழி தேடுவதற்கு பதில், குதர்க்கமாகவே வாதிட்டு தமிழினம் அழிவதற்கு துணை போகின்றனர். இதற்குள் கருத்தை வைப்பவர்களும், வாதிடுபவர்களும், தாம் இன்று வாதிட்டது நாளை தவறு என்று தெரிகின்ற போதும் அதற்காக மனம் வருந்துவது கிடையாது. அதற்காக வெட்கப்படுவது கிடையாது. மாறாக அலட்டிக் கொள்ளாது, புதிய பாணியல் நியாயப்படுத்தி அதை வாதிடுவதும் அரங்கேறுகின்றது.
தமிழினத்தின் இன்றைய அவலம் பற்றிய செய்திகள், அது சார்ந்த பிரச்சாரங்கள் அனைத்தும் புலியின் பாசிசத்தின் பிரச்சார எல்லைக்கு ('வோட்டர் மார்க்") உட்பட்டதே. அவர்கள் விரும்பியதும், விரும்பியவாறு புனையப்பட்டதும், அனைத்தும் அவர்களின் குறுகிய தேவைக்கு உட்பட்டதே.
வன்னியில் புலிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள மக்கள் பலியாக வேண்டும் என்பதும், அதை வைத்து தமிழினத்தை அணிதிரட்ட வேண்டும் என்பதும் புலிகளின் சொந்தத் தேர்வு. இதுவில்லாமல் புலிகள் இன்று நடத்திய எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்க முடியாது. மக்கள் பெருந்தொகையாக கொல்லப்பட்ட வேணடும் என்பதும், அதை வைத்து பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்பதும், புலிகளின் தேர்வு. இந்த வகையில் மக்களை பேரினவாத குண்டுக்குள், புலிகள் விரும்பியே பலியிட்டனர்.
புலம்பெயர் தமிழர் மத்தியிலும், தமிழக தமிழர் மத்தியிலும் புலிகள் பிரச்சாரம் செய்ய இதுவே உதவியது. இதற்காக புலிகள் திட்டமிட்டு உருவாக்கிய மனித அவலம் தான், இன்றைய காட்சிகள். இதன் பின்னணியில் தான் பேரினவாத வெறியாட்டம் நடக்கின்றது. இங்கு இதை சிங்கள பேரினவாதம் செய்கின்றது என்றால், அதை உருவாக்கியவர்கள் புலிகள். இதன் மூலம் புலி தன்னைப் பாதுகாக்க முனைகின்றது. மக்களையல்ல.
இங்கு மனித அவலத்துக்காக கதறும் மனிதர்கள், இதன் பின்னுள்ள உண்மையை புரிந்து கொள்ள முடியாத வகையில், பாசிசம் சமூகத்தை மூளைச்சலவை செய்கின்றது. புலிகள் மக்கள் அரசியலை செய்து பிழைக்க முடியாது. மனித அவலத்தை உற்பத்தி செய்தே பிழைக்கும் நிலை. இதை 'கேனைத்"; தமிழன் உணராது இருத்தலே, புலியின் அரசியல் அத்திவாரமாகும்.
உலகத்தமிழனை 'கேனயனாக" கருதும் பாசிசம்
தமிழன் என்றால் எதைச் சொன்னாலும், அதை இரை மீட்பதே அவனின் பண்பு என்பதை புலிகள் தம் பாசிச பிரச்சாரகர்களுக்கு இனம் காட்டியுள்ளனர். அதை புலிகளின் மைய இணையங்களில் ஓன்றான நிதர்சனம் டொட் கொம் 'சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சமர்ப்பணம்" என்ற அறிக்கையில் தெளிவுபடுத்துகின்றது.
'முந்திக்கொண்டு செய்தி போடுவதிலும் வோட்டர் மார்க் அடிப்பதிலும் தமிழ் தேசிய ஊடகங்கள் - மக்களின் அவலங்கள் தொடர்பான செய்திகள் நம்பகத்தன்மையை இழக்கின்றது" என்ற தலையங்கத்தில் 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்பதால் தமிழ் தேசிய ஊடக செய்திகள் நம்பகத்தன்மையை இழக்கிறது வெளியுலகத்துக்கு செய்திகள் போய்சேருவதிலும் வெளிக்கொணர்வதிலும் வெளி நாட்டு ஊடக நிறுவனங்கள் பின் நிற்கின்றன. வெறுமனே தமிழர்களுக்கு மட்டும் செய்திகளும் புகைப்படங்களும் காணொளிகளும் வோட்டர் மார்க்குடன் ...சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சமர்ப்பணம்
சாராம்சமாக இது சொல்லும் செய்தி என்ன? மனித அவலத்தை காட்டி தமிழனை ஏமாற்றி பிழைக்க முனைந்த புலிக்கு, உலகத்தை ஏமாற்ற முடியாது தோற்றுப்போனார்கள் என்பது தான். அவர்கள் ஏன் என்று அவர்களாக கண்டுபிடித்த காரணம், மனித அவலத்தை காட்டி தமிழனுக்கு செய்த பொய் பிரச்சாரத்தை தமிழனல்லாத வெளிநாட்டவனுக்கு எடுத்துச் சென்றதே காரணம் என்று நம்புகின்றனர்.
புலிகள் என்ன கருதுகின்றனர்? தமிழனுக்கு இது தான் சரி, வெளிநாட்டவனுக்கு இது சரியல்ல. இதை செய்கின்ற 'சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சமர்ப்பணம்" மாக கூறுவது என்ன' வெறுமனே தமிழர்களுக்கு மட்டும் செய்திகளும் புகைப்படங்களும் காணொளிகளும் வோட்டர் மார்க்குடன்.." உங்கள் கற்பனைகளைத் தொடருங்கள். வெளிநாட்டவருக்கு 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்பதால் தமிழ் தேசிய ஊடக செய்திகள் நம்பகத்தன்மையை இழக்கிறது" எனவே அதை அவனுக்கு செய்யாதீர்கள்.
இங்கு மனித அவலம் பிரச்சாரப் பொருளாக, அது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதன் மேல் கற்பனைகள், இட்டுகட்டல்கள், பொய்கள் பொழியப்படுகின்றது. இந்த வகையில் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்கள் நம்பும் வண்ணம், அவர்களை ஏமாற்றும் வண்ணம் 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்ப"தை புலிப் பாசிசம் மறுக்கவில்லை, அதைச்செய்கின்றது. அதைச் செய்யவும்; கோருகின்றது! சரி எப்படி?
பி.இரயாகரன்
11.02.2009
தொடரும்